ஆயா (தொடர்கதை)
*********************
(பாகம்-4)
(இதுவரை- சாரதாவின் குடும்பத்தையும் அவர்களின் குணங்களை பற்றியும் பார்த்தோம்..இனி…)
“வாங்க! வாங்க!” என்று அழைத்த குரலுக்கு சொந்தக்காரர்
என் அக்கா கௌரியின் மாமியாரான மரகதம்மாவின் குரல்தான்!
“ம்…வரேன் சம்மந்தி”என்று என் அம்மாவும் அப்பாவும் வணக்கம் தெரிவித்தனர்..
“என்ன சம்மந்தி… ரொம்ப நாளா இந்த பக்கம் ஆளையே காணோம்… உங்க பொண்ணையும் பேரக்குழந்தைகளையும் பார்க்க பிடிக்கலையா என்ன!?”
“ஐய்யோ! அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை சம்மந்தி… கொஞ்சம் வேல… அதான்….”
“ம்…யாருக்குதான் வேலை இல்லை…நான்கூட உங்க பையன் திருநங்கையா ஆனதாலதான் இந்த பக்கம் வரலையோனு நெனச்சேன்… ”
“…………..”என் அம்மாவும் அப்பாவும் மௌனமாக இருந்தார்கள்.
“போன வாரம்கூட உங்க பொண்ண அதான் சாரதாவ மார்க்கெட் சைடு பார்த்தேன்… எவ்வளவு அழகா அம்சமா இருக்கா தெரியுமா.!? என்னை பார்த்து ‘அத்தேனு’ ஓடிவந்து பேசினா… ஏதாவது குடிக்கசொல்லி கெஞ்சினா…நா வேண்டாம்னு சொன்னேன்..ஆனா சாரதா என்னை விடல…மல்லுகட்டி ஜீஸ் வாங்கி கொடுத்தா தெரியுமா!?”
மரகதம் அப்படி சொன்னதும் எங்க அப்பா அப்படியே எங்க அம்மாவ பார்த்து முறைத்து பார்த்தார்..
எங்க அம்மாவும் ‘கொஞ்சம் பொறுத்துகுங்க என்பதை கெஞ்சியவாறே சைகையில் சொன்னார்.
“சாரதா மாதிரி புள்ள…எங்க வீட்டுல இருந்தா….”
சட்டென்று கௌரி குறுக்கிட்டாள்..
“அத்தே… பக்கத்து தெரு பார்வதிஅம்மா வீட்டுல விசேஷமாம்.. நீங்க வந்ததும் உடனே வரச் சொன்னாங்க..”
“ஏன்டி…இதை மொதல்லயே சொல்ல கூடாதா!?”
“நீங்க எங்க சொல்ல விட்டீங்க!? அதான் வந்ததும் வராததுமா எங்க அப்பா அம்மாகிட்டேயே பேசிக்கிட்டு இருந்தீங்க”
“சரி…சரி…நா போயிட்டு வந்துடுறேன்.”
“ம்…சரிங்கத்த…”
“சம்மந்தி…போயி ரெஸ்ட் எடுங்க..நா போயிட்டு வந்துடுறேன்..”
“ம்…” இருவரும் தலையாட்டினார்கள்.
“ஏன்டி…கௌரி… என்னம்மோ உன் மாமியாரு என்புள்ளய வச்சி குத்திபேசுறாங்கனு சொல்ற.. அவங்க பேசுறத பாத்தா அப்படி தெரியலையே”
“ஆம்மா… அவங்கள பத்தி தெரியாதா!? நாம சரின்னு சொன்னா அவங்க தவறுனு சொல்வாங்க… நாம இல்லைனு சொன்னா அவங்க உண்டுன்னு சொல்வாங்க…”
“ஏன்டி… மங்களம்…சம்மந்தியை எதுக்கு உன்புள்ள மார்க்கெட்டுல பார்க்கனும்… அப்படியே பார்த்தாலும் ஏன் ஓடிவந்து பேசனும்… எவ்வளவு சொன்னாலும் அறிவே இருக்க மாட்டேன்குது உன் புள்ளைக்கு…”
“கரெக்ட்டா சொன்னீங்க அப்பா… நீங்க போனபிறகு இதையே மாத்திசொல்லி என்னை குத்திகாட்டி திட்டுவா”
“சரி..சரி… அப்பாவும் பொண்ணும் இந்த சேதியை இத்தோட விடுங்க… சும்மா சும்மா என்புள்ளய குத்தம் சொல்லாலலைனா உங்களுக்கு பொழுது போகாதே!!!”
“சரி… ரெண்டு பேரும் கைகால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்”
“ம்”என்று இருவரும் சென்றார்கள்.
பெட்ரோல் பங்க்-
“எவ்வளவும்மா பெட்ரோல்?”
“2லிட்டர் போடுங்க”என்றேன்.
“ஏன் சார்… பெட்ரோல் நாளுக்கு நாள் அதிகமாக்கி கொண்டே போறீங்களே… இப்படியே போனால்… எங்க கதி என்ன ஆகுறது..!? ”
“நாங்க என்னம்மா பண்றது!? நாளுக்கு நாள் விலைவாசி ஏறிகிட்டே போகுது… எத்தனை ஆட்சி வந்தாலும் விலைவாசியை குறைக்கிறேனுதான் சொல்றாங்க… ஆனால் குறையற மாதிரி தெரியால..”
பெட்ரோல் போடப்பட்டது..
ஹேன்பேக்கிலிருந்து ரூபாயை கொடுத்தேன்..
“காத்து எங்கப்பா அடிக்கிறது!?”
“அதோ அங்கே!” என்று கை நீட்டி சொன்னான்..
ஸ்கூட்டியை ஓட்டிசென்று நிறுத்தினேன்.. காத்தும் அடிக்கப்பட்டது…
“தேங்க்ஸ்”என்று ஸ்கூட்டியை கிளப்ப போனேன்..
“மேடம்…காசு..”
“எதுக்குப்பா!?”
“காத்து அடிச்சதுக்கு”
“ஏப்பா… எல்லா பெட்ரோல் பங்குலயும் காத்து அடிக்க இலவசம்தான்… நீங்க இங்கே வேலை பார்க்கிறீங்க…மாதமானால் சம்பளமும் வாங்குறீங்க…. இப்படி எல்லா இடத்திலயும் எல்லாரும் ஒரு ரூபாய்தானே ரெண்டு ரூபாய்தானே.. என்று நினைப்பதால்தான் இப்படி லஞ்சம் பெருகி போகிறது…”
“…………….”
“நீங்க மௌனமாக இருப்பதால் இந்த பிரச்சினை தீராது… ஆனால் குறைய வாய்ப்புள்ளது… எத்தனையோ ஆதரவற்ற இல்லங்கள் இருக்கிறது… அந்த இல்லத்திலிருந்து ஒரு உண்டியல் வாங்கி இங்கே வைத்தால்…. விருப்பமுள்ளவர்கள்… அதில் போடுவார்கள்… இப்படி சம்பளமும் வாங்கிகொண்டு இந்தமாதிரி சில்லறை தனமான லஞ்சத்தை உருவாக்கினால் காலப்போக்கில் அது மிகப்பெரிய விஷயமாக மாறக்கூடும்”
“மன்னிக்கவும் மேடம்…இனிமே நான் யாருகிட்டயும் காசு கேட்கமாட்டேன்… அப்படியே அவர்கள் கொடுத்தாலும் அதை வாங்காமல் நீங்க சொல்ற மாதிரி செஞ்சு உண்டியலை நீட்டுகிறேன்…”
“நன்றி”என்று கூறி ஸ்கூட்டியை கிளப்பினேன்.
ஸ்கூட்டியை நேராக எங்கள் திருநங்கைகள் அலுவலகம் இருக்கும் அமைந்தகரை இரயில்வே காலனி மூன்றாவது தெருவுக்குள் புகுந்தேன்.. அங்கே வேப்பமரத்தின் அடியில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு முதல் மாடிக்கு சென்றேன்.. அங்கே வாசல்படியில் “சகோதரன்”என்று பெரிய எழுத்தில் எழுதி இருந்தது..ஆம் LGBTQA மக்களுக்கான அமைப்பு அது.. சகோதரன் மற்றும் தோழி இந்த இரு அமைப்புகளும் திருநங்கைகளுக்கு மட்டும் இன்றி அனைத்து வகை மக்களுக்கும் சேவையாற்றி வருகிறது.. “வாடி…சாரதா…!என்னடி பெண்ணே! இந்த பக்கமே ஆள காணோம்… ஊருல இருக்கீயா!?” என்றார், சகோதரன் அமைப்பின் பொதுமேலாளர் ஜெயா ஆன்ட்டி அவர்கள்…
எங்கள் திருநங்கைகள் அனைவருமே அவரை “ஆன்ட்டி” என்றுதான் அழைப்போம்.
“இங்கதான் ஆன்ட்டி இருக்கேன் ஆசிரமத்துத்துல கொஞ்சம் வேல ஆன்ட்டி.. அதான் வர முடியால…”
“பரவாயில்லை சாரதா… உன்னைபத்தி எனக்கு தெரியாதா!?”
மதியவேளை-
“சாரதா…கை கழுவிட்டு வா…. எல்லாரும் சாப்பிடலாம்” என்றார் கிருஸ்டி மம்மி…
“பாம்படுத்தி மம்மி (திருநங்கை மொழியில் வணக்கம் என்று பொருள்)”
“ஜியோம்மா(திருநங்கை மொழியில் நல்லா இரு என்று பொருள்)”
“எப்படி மம்மி இருக்கீங்க!?”
“நல்லா இருக்கேன் சாரதா… நீ வந்ததும் நான் கூப்பிட்டேன்… ஆனால் நீ ஆன்ட்டிகூட பேசுனதுல கவனிக்கால”
“சாரி மம்மி..”
“பரவாயில்லை சாரதா…நீ போயி கை கழுவிட்டு வா… சாப்பிடலாம்…”
“ம்..”என்று சொல்லிவிட்டு கை கழுவ சென்றேன்..
கிருஸ்டி மம்மி என்னால் மறக்க முடியாத நபர்! அவர்கள் பார்த்து முழுதிருநஙகையாவள் நான்! எனக்கு சேலைக்கட்டிகொள்ள ஆசை… ஆனால் எனக்கு கட்டத்தெரியாது… பல தடவை எனக்காக சேலை கட்டி விட்டவர்….கத்து கொடுத்தவர்… சகோதரன் அலுவலகத்தின் கிழவி என்று சொல்லலாம்… ஏன் கிழவி என்று சொல்கிறேன் என்றால் ஆரம்ப காலத்திலிருந்து அங்கேயே இருப்பவர்! என்னை போன்று பல திருநங்கைகளை அந்த அலுவலகத்தில் கண்டவர்! அனுபவசாலி கிருஸ்டிமம்மி!
எங்கள் திருநங்கைகள் அலுவலகத்தில் தினமும் 25 திருநங்கைகளுக்கு மேற்பட்டோருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது… இங்கே பத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்… அவர்களுக்குத்தான் இது அலுவலகம்… என்னை போல பல திருநங்கைகள் இங்கே தினமும் வந்து ஓய்வெடுக்கிறார்கள்… அவர்கள் ஆடலாம் பாடலாம்…விளையாடலாம்… சில திருநங்கைகள் வீட்டோடு இருப்பார்கள்… சில திருநங்கைகள் ஆண் உடையில் வேலைக்கு செல்வார்கள்… அவர்கள் எல்லாம் தன் விருப்படியே இருக்க இங்கே வருவார்கள்… சகோதரன் மற்றும் தோழி அவர்களின் உணர்வை புரிந்துகொண்டு அவர்களின் மகிழ்ச்சிக்கு இடம் கொடுக்கிறது… இங்கே நமக்கு பிடித்த மாதிரி இருக்கலாம்… பெண்உடை அணியலாம்… மேக்கப் போட்டு கொள்ளலாம்….. பொழுதுபோக்குக்கு டிவி இருக்கிறது… விளையாட கல்லாங்காய், தாயம், ஆடுபுலி, சதுரங்கம் இப்படி பல விளையாட்டுகள் இங்கே இருக்கிறது… ஆறு வருசத்துக்கு முன்னாடி நானும் இங்கேதான் வேலை பார்த்தேன்…
சொல்லும்போதே என் கண்களில் கண்ணீரும் வந்து எட்டிபார்க்கிறது… இந்த கண்ணீருக்கு பின்னால் ஒரு சம்பவம் இருக்கிறது… அது என்னவென்று போக போகத்தான் உங்களுக்கு தெரியும்.. என் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம் அது!
“சாரதா..சாரதா…”
உங்களிடம் சொல்லிகிட்டே கை கழுவ வந்ததை மறந்துவிட்டேன்…
“வாம்மா சாரதா! ஆன்ட்டியை பார்த்ததும் எங்களையெல்லாம் கண்ணு தெரியாதே”என்று கிண்டலடித்தாள், அலுவலக உதவியாளரான மங்களம்… என் அம்மாவின் பெயர்.. அவர் எப்படி என்னை கவனிப்பாரோ அதே மாதிரி எப்பொழுது நான் வந்தாலும் என்னை விழுந்து விழுந்து என் அம்மாவை போலவே என்னை கவனிப்பவள் மங்களம்…
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மங்களா”
“சரி…சரி…வா சாப்பிடலாம்” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
திடீரென்று என் செல்போன் அழைத்தது..
அழைத்த செல்போனை ஆன் செய்தேன்…
“ஹலோ அம்மா சொல்லும்மா!?”
” என்ன பண்ற!?சாப்பிட்டியா!?”
“இப்பதாம்மா சாப்பிட போறேன்!”
“என்ன விசயம் அம்மா!?”
“இல்ல…உன் ஞாபகம் வந்தது… அதான் போன் செய்தேன்…உன் குரலை கேட்கனும்போல இருந்துச்சி”
“நான் நல்லா இருக்கேன்ம்மா…நீ எதை பத்தியும் கவல படாதே….போக போக எல்லாம் சரி ஆகிடும்… ஒரு ஆள் அப்பாவும் இதே மாதிரி என்கூட பேசுவாரு பாரு”.
“நீ சொல்ற மாதிரி நடந்தா எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் வேற எதுவும் இல்ல”
“நிச்சயமாக நடக்கும்மா…நீ தைரியமா இரு… உடம்பை பார்த்துக்கோ…”
“ம்…சரி சாரதா…”
“அப்பப்ப நானும் உனக்கு போன் பண்ணி பேசுறேன் ஓகேவா”
அம்மா கண் கலங்கினாள்…
“அழாதேம்மா… உம்புள்ளக்கி என்ன குறைச்சல்…நா நல்லா இருக்கேன்… நீ அழாம போயி வேலையை பாரு… அப்புறம் அப்பா வந்து உன்ன திட்ட போறாரு…”
“ம்…ஓகே… நீயும் உடம்பை பார்த்துக்கோ சாரதா” என்று போனை கீழே வைத்தாள்…
எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகரான உறவு வேறு எதுவுமில்லை….
(ஆயா வருவாள்)……
