இதுவரை…

 

ஆதவன் தன் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றது போல ஒருவனை கண்டு (சத்யா), அவனை தொலைத்து சில பல நாட்களுக்கு பிறகு தேடி கண்டுபிடித்த பொழுது, பாவம் ஆதவனுக்கு ஒரு விபத்து, சத்யாவே ஆதவனை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினான். அடுத்த நாள் சத்யா, ஆதவன் வீட்டிற்க்கே வந்துவிட இருவரும் கொஞ்சம் கொஞ்சமாய் பேசி பழகி நல்ல நண்பர்களாகிவிட்டனர். இந்த விஷயத்தை தன் அத்தை மகன் இளவேனிலுடன் பகிர்ந்துகொண்டிருந்தான்.

 

இனி…

 

இளவேனில், “என்ன டா ஆதவா, பயங்கர சந்தோசத்துல இருப்ப போல, விட்டா இப்பவே துள்ளி குதிப்ப போல”

 

“ஆமா இருக்காதா பின்ன என் எல்லா எதிர்பார்ப்புகளையும் கொண்ட ஒருத்தனை பார்க்க மாட்டோமானு இருந்தேன், அப்படி பட்ட ஒருத்தனை எதேச்சையா பார்த்து, அவனை தொலைச்சு, ரொம்ப நாள் கழிச்சு அவன் கிடைச்சு, எனக்கு உதவி பன்னி, என் வீட்டுக்கே வந்து, இப்ப எனக்கு அவன் நண்பனா இருக்கான், இதுக்கு மேல உலகத்துல வேற என்ன சந்தோசம் இருக்க முடியும்”

 

“இது எல்லாம் சரி தான் ஆனா காதல்னு வரைக்கும் போகுமா, அப்படியே போனாலும் நிலைக்குமானு சந்தேகம் தான்”

 

“ஏன் டா ஒரு மனுஷன் சந்தோசமா இருக்க கூடாதே, உடனே உன் வேலைய காட்டுவியே”

 

“நீ கேட்ட கேளு கேக்காட்டி போ எல்லாம் உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்”

 

“ஏன் டா மாமா இப்படி கோவிச்சுக்குறே பொறுமையா சொல்லு”

 

“ஏன் டா கொஞ்சம் லாஜிக்கலா யோசிச்சு பாரு, உன்னோட எதிர்பார்ப்புக்கு பூர்த்தி பன்னுற மாதிரி ஒருத்தன் வந்தா போதுமே உடனே அவன் பின்னாடியே சுத்துவியே”

 

“என்ன டா சொல்லுறே?”

 

“ஆதவா உன்னக்கு எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கோ அதே மாதிரி தானே அந்த சத்யாவுக்கும் இருக்கும், அவனை பத்தி நீ யோசிச்சு பார்த்தியா”

 

“அட ஆமா, இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்லையே இதுக்கு தான் இளா வேணுங்குறது, நல்ல வேளை எனக்கு சொன்னே, இல்லாட்டி என் ஆசைக்காக நான் ஆசபட்டவனையே பலிகடா ஆக்க இருந்தேன், அதனால, இப்ப இந்த நிமிஷத்துல இருந்து, சத்யாவை ஒரு நல்ல நண்பனா தான் பார்க்க போறேன், கொஞ்சம் கொஞ்சமா பேசி பழகி நல்ல நண்பனா ஆக்கிகிட்ட பிறகு அவனுக்கும் என் மேல ஒரு விருப்பம் இருக்குனு தெரிஞ்சா மட்டும் தான் என்னுடைய காதலை சொல்லபோறேன் அதுக்காக எத்தனை வருஷம் ஆனாலும் சரி நான் காத்திருப்பேன் டா, என்னுடைய சத்யாவுக்காக நான் காத்திருப்பேன்”

 

இளா, “சரி இப்ப உன்னோட அடுத்த மூவ் என்ன”

 

“ஏன் டா நான் என்ன கொள்ளைக்காரனா, இல்லை நான் தான் கொள்ளையடிக்கவா போறேன், டேய் இது வாழ்கை டா காதல் டா இமோசன் டா”

 

அடுத்து வந்த நாட்களில் ஆதவனின் முட்டியில் அடிபட்ட காயங்கள் ஆற தொடங்கியது, திங்கட்கிழமை அன்று கல்லூரிக்கு சென்றான் வழக்கமான நண்பர்களை சந்திக்க மறந்தான் பாடங்களில் கவணம் செலுத்த மறந்தான். மதியம் அடுக்களையில் தாளித்துவிட்ட பொருளை கூட கருகவிட்டு, புரபசரிடம் கண்ணாபின்னாவென திட்டு வாங்கினான்.

 

வகுப்பில் ஆதவன் அருகே அமர்ந்திருக்கும் மாணவன் கமல், வகுப்பு முடிந்து வெளியே வந்ததும்

 

கமல், “என்ன டா ஆதாவா, என்ன ஆச்சு உனக்கு, கால்ல தானே அடிபட்டுச்சு மண்டையில இல்லையே”

 

“ஏன் டா இப்படி கேக்குறே?”

 

“இல்லை காலையில நேருக்கு நேர் பார்க்குற எல்லாருக்கும் குட்மானிங்க் வைப்பே, இன்னிக்கு அதையும் மறந்தாச்சு, என்னிக்குமே நீ அடுப்புல கருக விட்டதில்லை, இன்னிக்கு கருக்கிட்டே, என்ன டா நடக்குது இங்க, எதோ சரியில்லை”

 

“ஒன்னும் இல்லை டா, கொஞ்சம் உடம்பு சரியில்லை”

 

“அதெல்லாம் இல்லை, உன்னை தினமும் பாக்குற எனக்கு தெரியாதா, என்னமோ இருக்கு, ஒழுங்கா சொல்லிடு”

 

“சரி டா ரொம்ப நாளா பாக்கனும்னு நினைச்சுட்டு இருந்த ஒரு பிரண்டுதான் ஆக்சிடெண்ட் அன்னிக்கு பார்த்தேன், இன்னிக்கு மறுபடியும் பாக்க போறேன்”

 

“என்ன டா பிரண்டா இல்லை பிரண்டியா?”

 

“அது எல்லாம் ஒன்னும் இல்லை”

 

“பொலிவு முகத்துல கொஞ்சம் எக்ஸ்ட்டிராவே தெரியுதேனு பார்த்தேன், சரி சரி நான் எதும் சொல்ல, கோ எண்ட் எஞ்சாய் தி மொமெண்ட்”

 

ஆதவனும் வழக்கம் போல இளவேனிலின் கல்லூரி வாசலில் உள்ள அந்த டீக்கடை பெஞ்சில் அமர்ந்து எதிரே இருந்த பஸ் ஸ்டாப்பையே பார்த்துக்கொண்டிருக்க, அங்கு சத்யா வரவில்லை மாறாக இளவேனில் வந்து நின்றான். கூடவே இரண்டு நண்பர்களை அழைத்துக்கொண்டு வந்து நின்றான்.

 

ஆதவன், “இளா இது யாருடா புதுசா?”

 

“இவங்க ரெண்டு பேரும் தான் என் ரூம் மெட்ஸ்” என அறிமுகம் செய்து வைத்து அந்த இருவரும் காமெடியாய் பேசுகிறேன் என் ஆரம்பித்து அறுத்து எடுத்துக்கொண்டிருந்தானர், ஆதவனுக்கோ சத்யா எப்பொழுது வருவான் என்ற தவிப்பு ஒரு புறம் இருக்க, இவர்களின் பறக்கும் காமெடிக்கு சிரிப்பதா வேண்டாமா

 

“யாருடா இவனுங்க நேரம் காலம் தெரியாம…” என மனதுக்குள் நினைத்துக்கொண்டிருக்க, இளவேனிலுக்கு ஆதவனின் தவிப்பை நன்றாகவே புரிந்து, இங்கிதம் தெரிந்துகொண்டு

 

இளவேனில், “டேய் என்ன டா விட்டா இவனுங்க பேசிட்டே இருப்பானுங்க, டேய் வாங்க வார்டன் தேடுறதுக்குள்ள ஹாஸ்ட்டலுக்கு போலாம்” என தன் நண்பர்களை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.

 

இந்த கும்பல் கிளம்பிய சில நிமிடங்களில் ஒரு டவுன் பஸ் வந்து நிற்க அதில் ஒரு பெரிய கும்பலே இறங்க, அதில் சத்யாவின் முகம் தெரிகிறதா என தேடிக்கொண்டிருந்தான். பஸ்லிருந்து கடைசியாக அந்த சத்யா இறங்கினான். சுந்தர் சாலைக்கு இந்த புறம் இருந்து சத்யா என்று கை காட்ட சத்யா சுற்றும் முற்றும் தேடிக்கொண்டிருந்தான்.

 

ஆதவன், “சத்யா… இந்த பக்கம்… இந்தபக்கம்…” ஒருவழியா சத்யா சத்தம் வந்த திசையை நோக்க அந்த பக்கம் ஆதவன் இருப்பதை பார்த்து அவனை காண சாலையை கடந்து வந்தான் சத்யா

 

சத்யா, “ஆதவா, டேய் இங்க என்ன பன்னுறே?”

 

“இதோ இருக்கு பார் காலேஜ் இங்க தான் என் அத்தை பையன் படிக்குறான், அவனை பார்க்க தான் இங்க வந்தா, நீ இங்க இருக்கே, ஆச்சரியம் தான்”

 

“உன்னை பார்த்தா, ஆச்சரியபடுற மாதிரியே இல்லையே, ஏதோ எனக்காக காத்திருக்குற மாதிரியே இருக்கு”

 

“ஆமா நான் உனக்காக தான் காத்திருந்தேன்னே வச்சுக்கோயேன் இப்ப என்ன”

 

“சரி சரி கால் எப்படி இருக்கு காயம் ஆறிடுச்சா”

 

“ம்ம்ம்.. பரவாயில்ல, கொஞ்சம் கொஞ்சமா ஆறுது”

 

“உன் காலேஜ் படிப்பெல்லாம்?”

 

“ம்ம்ம் போகுது அப்படியே போகுது”

 

“உனக்கு வேலை எப்படி போகுது”

 

“ம்ம்ம்… போகுது…”

 

“ஏன் என்ன ஆச்சு”

 

“ம்ம்ம் இது புரட்டாசி மாசம் டா கல்யாண முகூர்த்தம் ஒன்னும் இல்ல, அதோட புரட்டாசி மாசம் ஆச்சா, கெடா வெட்டுகூட கிடையாது, அதனால ஏதோ கிடைச்ச வேலைக்கு போய்ட்டு இருக்கேன், நிரந்தரமா ஒரு வேலை கிடைச்சா நல்லா இருக்கும், நான் இருக்குற கஷ்டத்துக்கு”

 

“ஏன் அப்படி என்ன பிரச்சனை உனக்கு”

 

“அது தான் சொன்னேன் இல்ல, எங்க அக்கா, அவ மாமியார் கிட்ட சண்டை போட்டு வந்துட்டான்னு, சரி அவங்க மாமியார்கிட்ட போய் பேசி பாக்கலாமேனு போனா, இவ மேல ஏகப்பட்ட கம்பிளையண்ட் எனக்கு இப்ப இவ பிரச்சனையே பெரிசா நிக்குது”

 

“அதுவும் சரி தான் வீட்டுல இப்படி ஒரு நிலைமை இருக்கும் போது யார்னால தான் நிம்மதியா இருக்க முடியும்”

 

“ஆமா, முன்ன நான் மட்டும் தான் இருப்பேன், ஏதே வர வருமாணம் எனக்கு சரியாபோகும் ஏதோ கிடைக்குற காசை சேர்த்து வச்சு நோம்பி நொடினா அவளுக்கே செலவு பண்ணீடு இருந்தேன், இப்ப இவ கொழந்தையோட இங்க வந்துட்டா, நிறைய செலவாகுது, ம்ம்ம்ம் எல்லாம் நமக்கு வாய்ச்சது அப்படி, எல்லாம் என் தலை எழுத்து”

 

“சரி உன் வீடு எங்க இருக்கு?”

 

“இங்க தான் இந்த ரோடு தாண்டி அதோ தெரியுது பாரு அந்த சந்துக்குள்ள போய் மூணாவது ரைட் எடுத்தா நாலாவது வீடு, வா வீட்டுக்கு போகலாம்”

 

“இல்லை டா நான் கிளம்பனும் லேட் ஆச்சு, நான் தினமும் இங்க என் அத்தை பையன பார்க்க வருவேன் நாம மீட் பன்னலாம்”

 

“சரி பார்த்து போ…”

 

ஆதவன் பஸ் ஏறி கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டான். இது போலவே ஆதவனும் சத்யாவும் தினமும் சந்தித்து பேசி சிரித்துக்கொள்வார்கள் இது இப்படியே கிட்டதட்ட ஒரு மாத காலத்தையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. அதற்குள் இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு ஒன்று உருவாகி இருந்தது

 

இது இப்படி இருக்க ஒரு நாள் ஞாயிறு அன்று இளவேனில் ஆதவன் வீட்டுக்கு வந்திருந்தான் மதியம் அசைவ விருந்து தடல்புடலாக இருந்தது. சாப்பிட்டு முடித்துவிட்டு ஆதவன் அவன் அப்பா, அம்மா இளவேனில் நால்வரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க பேச்சு ஆதவன் மற்றும் இளவேனிலின் படிப்பு பக்கம் போனது. இருவரும் தாங்கள் நன்றாய் படித்து கொண்டிருப்பதாய் சொன்னார்கள்.

 

திடிரென ஆதவன், “அப்பா எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்…”

 

“அப்படி என்ன ஹெல்ப் உனக்கு…”

 

“எனக்கு ஒரு வேலை வேணும்”

 

“கேட்ரிங்க் காலேஜ் படிக்குற உனக்கு எதுக்கு வேலை”

 

“வேலை நான் எனக்குன்னு சொன்னேன்னா?”

 

அம்மா, “அப்புறம் வேற யாருக்கு”

 

“எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு, ஒரு நிலையான வேலை இல்லாம கிடைச்ச வேலை எல்லாம் செஞ்சுகிட்டு சுத்திக்கிட்டு இருக்கான், அது தான் அவனுக்கு உங்களுக்கு தெரிஞ்ச கடையில எதாச்சும் வேலை வாங்கி கொடுத்தா நல்லா இருக்கும்”

 

“சரி பையன் யாரு உனக்கு எப்படி பழக்கம் என்ன வேலை தெரியும் அவனுக்கு?”

 

“அப்பா, நான் ரோட்டுல அடிப்பட்டு இருந்தேன் இல்ல அப்போ அவன் தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் காப்பாத்தினான், அவன் பேர் சத்யா, அவன் நம்ப வீட்டுக்கு எல்லாம் கூட வந்திருக்கான், அம்மாவுக்கு கூட தெரியும்”

 

“ஆமாங்க, இவன் அடிபட்டிருந்தப்போ இவனை பாக்க இங்க வந்திருந்தானானாம், நான் பக்கத்து வீட்டுக்கு போயிருந்தேன், வந்த பையனுக்கு சாப்பிட கூட எதும் கொடுக்க முடியலை”

 

“சரி டா உன்னை நம்பி தான் அவன் வேலைக்கு ஏற்பாடு பன்னுறேன், ஆனா அங்கே போய் என் ஏதாச்சும் தப்பு தண்டா பன்னி என் பேரை கெடுத்துட போறான், சொல்லி வை..”

 

“சே சே அவன் அப்படி எல்லாம் பண்ணமாட்டான் பா ரொம்ப நல்ல பையன்” என் கூறவும் இளவேனில் ஆதவனை பார்த்து கண்டித்து சிரிக்க, ஆதவும் பதிலுக்கு உதட்டில் ஆள்காட்டி விரல் வைத்து அமைதியாய் இருக்க சொல்ல, இளவேனிலோ, கிண்டலாக சிரித்துக்கொண்டே இருந்தான்.

 

ஆதவனின் அப்பா இதை கண்டும் காணாது போல டெலிபோனை எடுத்து அதில் டயல் சுற்றி இரண்டு மூண்று போன் கால் செய்து பேசிவிட்டு, ஆதவனிடம் அமர்ந்து, “நான் பிரண்டு கிட்ட பேசிட்டேன், அவன் வர புதன் கிழமை காலையில 10:30 நம்ம பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல உள்ள சிரஞ்சீவி ரேடிமேட் கடையில துணி எடுத்து போடுற வேலை, மாசம் ஐந்தாயிரம் சம்பளம் காலையில 9 மணியில இருந்து 8 மணி வரைக்கும் வேலை, அங்க போய் என் பேரை சொல்ல சொல்லு சும்மா நாலு கேள்வி கேப்பான் அப்புறம் அப்பவே வேலைக்கு சேர்ந்துக்கலாம்” அப்பா மூச்சு விடாமல் கூறி முடித்தார்.

 

ஆதவனுக்கு தாங்க முடியாத சந்தோஷம் மீண்டும் அவன் அப்பா குறுக்கிட்டு, “டேய் ஆதவா மறுபடியும் சொல்லுறேன் அவன் எனக்கு குளேஸ் பிரண்டுனு உனக்கு தெரியும் இல்லை, அதனால அங்கே போய் ஏதாச்சும் கோக்கு மாக்கு பன்னி என் பேரை நாறடிச்சுட்ட போறான், இதுனால எங்க 25 வருஷ பிரண்ஷிப்புக்கு பங்கம் வந்துச்சு அப்புறம் என்னோட வேற ஒரு முகத்தை நீ பாக்க வேண்டி வரும்” என்று எச்சரித்தார்.

 

ஆதவனுக்கு தாங்க முடியாத சந்தோஷம் எப்பொழுது அந்த நாள் முடியும் அடுத்த நாள் விடியும், மாலை மலரும், சத்யாவை சந்தித்து இந்த விஷயத்தை கூறலாம் என கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு வழியாக அடுத்த நாள் மாலையும் வந்தது இளவேனிலின் கல்லூரி அருகே உள்ள டீக்கடையில் ஆதவன் சத்யாவுக்காக காத்திருக்க, அவனும் வந்தான் ஆதவனின் அப்பா கூறிய வேலை பற்றி கூற சத்யாவுக்கும் சந்தோஷம் தான்.

 

“ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஆதவா, இந்த உதவியை நான் என்னைக்குமே மறக்கமாட்டேன்”

 

“இது ஏன் நீ உதவியா நினைக்குறே இது என்னோட கடமை, எனக்கு தெரிஞ்ச வழியில நான் பன்னுறேன், மறந்துடாதே புதன் கிழமை, மெயின் பஸ்டேண்ட் பக்கத்துல, சிரஞ்சீவி ரெடிமேட்ஸ்ல 10:30 மணிக்கு வந்துடு, உனக்காக நான் அங்க காத்துக்கிட்டு இருப்பேன்” என கூறி இறுக்கத்தழுவிக்கொண்டு சென்றுவிட்டான் ஆதவன்.

 

 

புதன் கிழமை நாளும் வந்தது, காலை பத்து மணி முதல் ஆதவன் அந்த சிரஞ்சீவி ரெடிமேட்ஸ் கடை முன்பு காத்திருந்தான், 10:30 வரை காத்திருந்தான் சத்யா வரவில்லை, ஆனால் கடையின் ஓனர் வந்து “என்ன கண்ணு ஆதவா எப்படி இருக்கே, காலேஜ் எல்லாம் எப்படி போகுது, மாமாவா பார்த்து எத்தனை நாள் ஆச்சு, ஒரு நாள்ளாச்சும் மாமாவ பார்க்க கடை பக்கம் வந்திருக்கியா, துணி எடுக்கும் போது வரதோடு சரி இன்னிக்கு பிரண்டுக்காக வந்துருக்கே, வா உள்ள வந்து உக்காரு ஏன் இப்படி வெயில்ல காயுறே” ஆதவனை அழைத்து கடைக்குள்ளே அமர வைத்தார்.

 

மணி 10:30… 10:40…. 10:50… 11:00

 

மணித்துளிகள் கரைந்துகொண்டே இருந்தது ஆயினும் சத்யாவை காணவில்லை. சத்யா வந்தானா இல்லையா, மேற்கொண்டு அங்கு என்ன நடந்தது என தெரிந்துக்கொள்ள காத்திருங்கள் அடுத்த இதழ் வரை (தொடரும்)

 

– இனியவன்

 

 

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன