சத்யா
(அத்யாயம் 6)
இதுவரை…
ஆதவன் தன் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றது போல ஒருவனை கண்டு (சத்யா), அவனை தொலைத்து சில பல நாட்களுக்கு பிறகு தேடி கண்டுபிடித்த பொழுது, பாவம் ஆதவனுக்கு ஒரு விபத்து, சத்யாவே ஆதவனை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினான். அடுத்த நாள் சத்யா, ஆதவன் வீட்டிற்க்கே வந்துவிட இருவரும் கொஞ்சம் கொஞ்சமாய் பேசி பழகி நல்ல நண்பர்களாகிவிட்டனர். சத்யாவுக்கு நிரந்தர வேலை இல்லை என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்க, ஆதவன் அவன் அப்பாவிடம் சொல்லி தெரிந்த இடத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்தனர். அந்த குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நாள் அன்று சத்யா வரவில்லை…
இனி
ஆதவனும் கடை முதலாளியும் சத்யாவுக்காக காதிருந்தனர்.
மணி 10:30… 10:40…. 10:50… 11:00
மணித்துளிகள் கரைந்துகொண்டே இருந்தது ஆயினும் சத்யாவை காணவில்லை.
ஓனர் ஆதவனிடம் “என்ன ஆச்சு மாப்ளே உன் பிரண்ட கானோம், கடை பேர் எல்லாம் கரெக்டா சொன்னியா, அடையாளம் சொன்னியா”
“எல்லாம் கரெக்டாதான் மாமா சொன்னேன் ஆனா ஏன் வரலைன்னு தான் தெரியல, நீங்க கோவிச்சுக்காதீங்க, அவனை நான் வச்சுக்குறேன், இது பத்தி எல்லாம் அப்பாகிட்ட சொல்லாதீங்க, அப்பா மேல எதுவும் கோவபடாதீங்க, பிளீஸ் மாமா”
“சரி பரவாயில்ல உங்கப்பங்கிட்ட வேற ஆளுக்கு வேலை கொடுத்தாச்சுன்னு சொல்லிக்குறேன், உங்க அப்பன கேட்டதா சொல்லு, ரொம்ப நாளாவீட்டு பக்கம் ஆளயே கானோம் அடுத்த ஞாயித்துக்கிழமை வந்துட்டு போ என்ன?”
“சரிங்க மாமா, அத்தைய கேட்டதா சொல்லுங்க” என கூறிவிட்டு கிளம்பிவிட்டான் ஆதவனும் சத்யா ஏன் வரவில்லை, அவனுக்கு என்ன ஆச்சு என யோசித்துக்கொண்டே தன் கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் ஏறி தனது கல்லூரிக்கு சென்றுவிட்டான். அன்றைய வகுப்பில் ஆதவனின் கவனம் சுத்தமாக இல்லை, அவன் மனது முழுக்க மூளை முழுக்க “ஏன் சத்யா நான் சொன்ன வேலைக்கு வரல?” என்ற கேள்வியும், “ஓரு வேளை இப்படி இருக்குமோ இல்லை ஒரு வேளை அப்படி இருக்குமோ, இல்லை ஒரு வேளை எப்படி வேணாலும் இருக்குமோ, எது எப்படி வேனாலும் இருந்துட்டு போகட்டும் ஆனா இப்படி மட்டும் இருந்துட கூடாது” என யோசித்துக்கொண்டே இருந்தான்.
அன்று மாலை கல்லூரி விட்டதும் வழக்கம் போல தனது அத்தை மகன் இளவேனில் படிக்கும் கல்லூரிக்கு சென்றான் ஆதவன். வழக்கம் போல அவன் காத்திருக்கும் அந்த டீக்கடையில் அமர்ந்து எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தையே கூர்மையாக்கி சத்யாவின் வரவை எதிர் நோக்கி இருந்தான். வந்தால் அவன் சட்டையை பிடித்து நாலு கேள்வி கேட்டுவிட்டு “இனி என் முகத்துலயே முழிக்காதே” என்று சண்டையிடுவதற்க்காக காத்திருந்தான். ஆனால் சத்யா வரவில்லை கிட்டதட்ட 2 மணி நேரம் கழித்து இளவேனில் அவன் நண்பர்களுடன் வந்தான். வந்து சில பல கதைகள் பேசிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு பேருந்து வந்து நிற்க்கும் பொழுதும் ஆதவனின் பேச்சு அந்த நண்பர்கள் குழுவுக்குள் இருந்தாலும் பார்வை கழுகு பார்வை, ஆதவனின் கவனம் முழுக்க எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் மேலேயே இருந்தது.
ஒருவழியாக கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு பேச்சு ஓய்ந்து, இளவேனிலின் நண்பர்கள் கல்லூரிவிடுதிக்கு செல்லலாம் என முடிவெடுத்து சென்றுவிட, அதில் ஒருத்தன் “இளா நீயும் வா, சீனியர்னுங்க வந்து பஞ்சாயத்து பன்னுறதுக்குள்ள நாம சாப்புட்டு கிளம்பிடலாம்”
“நீ முன்னாடி போ மச்சா, என் மச்சானை பஸ் ஏத்தி அணுப்பிட்டு வரறேன்” என கழண்டுக்கொண்டான் இளவேனில், ஆதவன் பக்கத்தி அமர்ந்து
“ஹேய் ஆதவா… மணி 7:00 க்கு மேல ஆகுது இருட்டிடுச்சு இன்னுமா நீ சத்யாவுக்காக காத்திருக்கே?”
“……”
“உன்னை தான் டா கேக்குறேன் பதில் சொல்லு….”
“….”
“டேய் இப்படி இடிஞ்சு போன செவுரு மாதிரியே உக்கார்ந்திருந்த என்ன அர்த்தம், உன்னை பார்த்தா ஏதோ கோவமா இருக்குறமாதிரியே தெரியுது”
“ஆமா டா நான் கோவமாதான் இருக்கேன் இன்னிக்கு அந்த சத்யா வந்தா லெப்ட் ரைட் வாங்க போறேன், அதுக்காக தான் இன்னும் வெயிட் பன்னிட்டு இருக்கேன்”
“பெருசா என்ன மோ நடந்துருக்கு, ஆனா என்ன நடந்துச்சுனு தான் தெரியல, நீ என்ன நடந்துச்சுனு சொன்னாதானே அதுக்கு என்னால முடிஞ்ச சொல்லியூசன் கொடுக்க முடியும்” ஆதவன் சத்யாவுக்காக அப்பாவிடம் சொல்லி ஒரு நிரந்தர வேலைக்கு சொல்லி வைத்ததில் ஆரம்பித்து இன்று காலை வரை சத்யா வராமல் போனது வரைக்கும் சொல்லிவிட
இளவேனில் பேச ஆரம்பித்தான், “டேய் நீ உன் நிலமையில மட்டும் நின்னு யோசிக்குறியே, அவன் நிலமையிலும் நின்னு கொஞ்சம் யோசிச்சு பாரு, அவனுக்கு என்ன எமர்ஜன்சியோ என்னவோ, இல்லாட்டி அவனுக்கா நீ இவ்வளவு தூரம் மெனக்கெடும் போது அவன் எப்படி வராம இருப்பான், நீ தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்காதே, ரொம்ப நேரம் ஆகிடுச்சு, இப்ப நீ கிளம்பினாத்தான் வீட்டுக்கு போக முடியும், அதனால நீ கிளம்பு, இல்லாட்டி மாமா உன்னைய காணோம்னு போலீஸ் வரைக்கும் போய் கம்ளெயிண்ட் பன்ன ஆரம்பிச்சுடுவார், இல்ல உன்னைய தேடிட்டு இங்கேயே வந்துடுவார்” என ஆதவனை இளவேனில் அவனால் முடிந்த வரைக்கும் சமாதானம் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
ஆதவனும் வீட்டுக்கு சென்றுவிட்டான். அவன் அம்மாவும் அப்பாவும் ஆதவனை காணவில்லை என்றதும் பதறி போய் தெரு முனையில் நின்றுகொண்டிருந்தனர், இந்த காட்சியைக் கண்ட ஆதவனுக்கு தான் தான் செய்த முட்டாள்தனத்தை நினைத்து நொந்து கொண்டான்.
ஆதவனின் அம்மா, “எங்க டா போன இவ்வளவு நேரமும், உன்னை காணாம நாங்க ரொம்ப பதறி போய்ட்டோம் டா”
“அம்மா, இன்னிக்கு திடீர்ன்னு எனக்கு கொஞ்சம் ஸ்பெசல் கிளாஸ் இருந்துச்சு, அதோட ஒரு அசைன்மெண்ட் முடிக்கவேண்டி இருந்துச்சு, அதனால ஹாஸ்ட்டல்லயே உக்காந்து முடிச்சுட்டு வரேன், அவ்வளவுதான், இதுக்கு போய் இப்படி பதட்டப்பட்டு தெரு முனை வரைக்கும் வந்து நின்னுக்கிடு இருக்கிங்களே” என சிரித்துக்கொண்டே மூவரும் அவர்களின் வீடு நோக்கி சென்றனர்.
ஆதவனின் அப்பா, “ஏன் டா எல்லாம் நல்ல விஷயம் தான் எனக்கு கிளாஸ் இருக்கு இன்னிக்கு வர லேட் ஆகும்னு ஒரு போன் பன்னி சொல்ல முடியாதான் அது தான் மூலைக்கு மூலை டெலிபோன் பூத் இருக்கு இல்லை, உங்க அப்பா பதறி அவ பதட்டம் எனக்கு வந்துடுச்சு, நீ மட்டும் இப்ப இந்த பஸ்ல வந்து இறங்காம இருந்தா, ஒன்னு நான் இன்நேரம் உன் காலேஜ் இல்லாட்டி இளாவோட காலேஜ் பார்த்துட்டு, அப்படியே போலீஸ்ல போய் கம்ளேயிண்ட் எழுதிக்கொடுக்கலாம்னு இருந்தேன்”
“நல்ல் வேலை நான் இந்த பஸ்லயே வந்தேன்” என மூவரும் பேசிக்கொண்டே வீடு நோக்கி நடந்து சென்றனர். இரவு உணவை சமைத்து சாப்பிட்டுவிட்டு மூவரும் உறங்கிவிட்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் ஆதவனுக்கு விழிப்பு தட்டியது, அன்று நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தான், இளா பேசிவை, அப்பா பேசியவை என எல்லாம் ஓடியது. இறுத்தியாக சத்யாவின் மேல் ஆதவனுக்கு இருந்த கோவம் கொஞ்சம் குறைந்தது. ஆனாலும் முழுவதாய் சமாதானம் ஆகவில்லை. நாள் தவறாமல் ஆதவன் இளவேனிலின் கல்லூரிக்கு மாலை நேரத்தில் வந்து சத்யாவுக்காக காத்திருப்பான், ஆனால் சத்யாவும் வரவில்லை, இந்த கண்ணாமூச்சி ஆட்டம் கிட்டதட்ட 15 நாளுக்கு தொடர்ந்துக்கொண்டே தான் இருந்தது. ஆதவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
சத்யாவை காணமல் ஆதவன் மிகவும் துடிதுடித்துபோய்விட்டான், சத்யாவின் மேல் ஆதவனுக்கு இருந்த கோவம் முழுவதுமாக கரைந்து காணமல் போயின அதற்க்கு பதிலாக சத்யாவை ஒரு முறையேனும் பார்த்துவிடமாட்டோமா என்ற ஏக்கம் அவன் மனதில் குடி கொண்டது.
கிட்ட தட்ட ஒரு மாதம் கழிந்திருக்கும் சத்யாவைக் காணாமல் ஆதவன் மிகவும் சோர்ந்து போய் வெளியே எங்கும் செல்லாமல், சரியாக சாப்பிடாமல் சரியாக தூங்காமல் இருந்தான். இதை கவனித்த ஆதவனின் அப்பா ஆதவனை அவன் அம்மாவுக்கு தெரியாமல் தனியே அழைத்து விசாரிக்க, ஆதவனும் எதுவும் இல்லை நான் நல்லாதான் இருக்கேன் என ஏதே காரணம் கூறி சமாளித்துவிட்டான். 10 நாட்களில் இளவேனில் ஆதவனின் வீட்டுக்கு வழக்கம் போல ஞாயிறு அன்றூ வந்திருந்தான். வழக்கம் போல மதியம் சாப்பிட்டுவிட்டு ஆதவன் உள்ளே சென்று உறங்கிவிட்டான்.
இள்வேனில் ஹாலில் அமர்ந்து டீவியில் ஓடிக்கொண்டிருந்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் திரைவிமர்சனத்தை பார்த்துக்கொண்டிருந்தன். ஆதவனின் அப்பா, ஆதவனின் நடவடிக்கை பற்றி கேட்டபொழுது, அவனும் ஏதோ சொல்லி சமாளித்துவிட்டான். இளவேனிலின் மனம் அரிக்கதொடங்கியது,
இளவேனில் யோசிக்க ஆரம்பித்தான் “இவனை இப்படியே விட்டா வேற ஏதாச்சும் நடந்துடப்போகுது என ஒரு வாரமாக யோசித்தவன் இறுதியில் இந்த சத்யாவை காணாம போனதுல இருந்து தான் இவன் இப்படி ஆகிட்டான் இப்பவே மாமாவுக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சுடுச்சு அவர் இதை ஸ்மெல் பன்னுறதுக்கு முன்னாடி இவனை கொஞ்சமாச்சும் கலகலப்பா மாத்தனும் அதுக்கு ரெண்டே ரெண்டு வழிதான் இருக்கும் ஒன்னு அந்த அட்ரஸ் அடையாளம் தெரியாத, அந்த சத்யாவை கூட்டிகிட்டு வந்து ஆதவன்கிட்ட பேச வைக்குறது, இல்லாட்டி ஆதவனுக்கு சத்யாவோட நினைப்பு வரவிடாம அவனை நாம பிசியாவச்சுக்கிறது, இதுல மொத சொன்னது கொஞ்சம் கஷ்டமான வேலை, ரெண்டாவது வேணா முயற்சிபன்னி பாக்கலாம் என ஒருவாரமாய் யோசித்து அடுத்த வாரம் ஞாயிறு அன்று இளவேனிலும் அவன் நண்பர்களும் ஆதவன் வீட்டிற்கு வந்து,
“மாமா இந்திரா தியேட்டர்ல விஜய் நடிச்ச துள்ளாத மனமும் துள்ளும் படம் போட்டுருக்கான், படம் நல்லா இருக்குனு பிரண்ட்ஸ் எல்லாம் போலாம்னு சொன்னாங்க, அது தான் அதவனையும் கூட்டிட்டு போலாம்ன்னு…”
ஆதவனின் அப்பா, “ஏன் டா மாப்ளே இது எல்லாம் எங்கிட்ட கேட்டுகிட்டு அவனை கூட்டிக்கிடு போக வேண்டியதுதானே” என்று கூறியதும். அதிரடியாக ஆதவனின் ரூமுக்குள் நுழைந்த இளவேனில் & கோ வம்புடியாக ஆதவனை கிளப்பி அழைத்துக்கொண்டு படத்துக்கு சென்றனர். ஒரு வழியாக படம் முடியவும் மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. மொத்த கூட்டமும் திரையங்கின் வாசலில் நின்றுக்கொண்டு “இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவம் இல்லை…” என்ற படலை பாடிக்கொண்டு இருந்தது. ஆதவன் & கோ மட்டும் அதற்க்கு விதிவிலக்கா என்ன? அதே நேரம் இளவேனிலின் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர் ஒருவர் அடுத்த காட்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு காத்திருப்பதை பார்த்த ஒருவன்
“டேய் இங்க பாருங்க டா, வெற்றி வாத்தி….”
“டேய் இங்க தான் டா பாக்குறான் டேய் தெரிச்சு ஓடுங்க டா…” என கூச்சலிட்டுக்கொண்டே ஆளுக்கு ஒரு மூளையாக தெரித்து ஓடிய இளவேனிலின் நண்பர்களுடன் இளவேனிலும் ஆதவன் காதில் “மச்சி அந்த பஸ் ஸ்ட்டாபுல நிக்குறேன் வந்துடு” என கடித்துவிட்டு கொட்டும் மழை என்றும் பாராமல் ஓடிவிட்டான். மழையும் நின்ற பாடு இல்லை. உடன் இருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தங்கள் வந்த சைக்கிள் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப ஆரம்பித்தனர். ஆதவனும் மெதுவாய் இளவேனில் கூறிய பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த சாலையில் அதிகமாய் ஆள் நடமாட்டம் இல்லை, அடுத்ததாய் வந்த இடது பக்க திருப்பத்தில் திரும்பிய பொழுது அங்கு சத்யா நிற்பதை கண்ட ஆதவன் அப்படியே திகைத்து நின்றான்.
அதற்கு மேல் அங்கு என்ன நடந்தது என தெரிந்துக்கொள்ள அடுத்த இதழ் வரை காத்திருங்கள் (தொடரும்….)
– இனியவன்
v