தமிழ் சினிமாவில் பால்புதுமையினர்.
“இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது, புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல வழக்காடும் நானும் புதுமையானவனும் அல்ல!” என்று தொடங்கும் பராசக்தியின் பிரபலமான டயலாக்கினை போல இன்று நீங்கள் படிக்கவிருக்கும் கட்டுரையின் சாராம்சம் அவ்வளவு ஒன்றும் புதுமையும் அல்ல அதனை புரிந்துகொள்ள முடியாத அளவு கடினமும் அல்ல.
தமிழ் திரையுலகில் பால்புதுமையினர் (LGBTQAI+) எவ்வாறு முன்னிறுத்தப் படுகின்றனர் என ஆராய்ந்து பார்த்தால் அதில் கனிசமான அளவு கேலிகளுக்காகவும், பகடிக்காகவும் மட்டுமே என்பது சற்றே வேதனைக்குரிய ஒரு தகவலாகவே நமக்கு வந்துசேர்கிறது. நகைச்சுவை எனும் கலையில் பல்வேறு வகையான பிரிவுகள் இருந்தும் சக மனிதர்களின் உடல் ஊனம், அவர்களின் பாலியல் என அனைத்தையும் கேலிக்குள்ளாக்கும் “ட்ரோல்” வகை நகைச்சுவைகளின் வருகை தமிழ் சினிமாவில் கால் வைக்கத் தொடங்கிய காலம் முதலே பிரச்சினை தொடங்குகிறது.
1993இல் சரத்குமாரின் கட்டபொம்மன் படத்தில் பிரபலமான ரைஸ் மில் “காமெடியில்” தொடங்கி , கம்பீரம்(2004), கோ(2011), அனேகன்(2015) என சிறிய சினிப்பெட்டுகளாக ஆங்காங்கே நகைச்சுவையை தூவிவிட பால்புதுமையினரையே இவர்கள் நாடினர். குயர் படங்களென தமிழில் பட்டியலிட முயன்றால் கண்டிப்பாக எல்லோரும் முதலில் குறிப்பிட நினைப்பது லோகேஷ் குமார் இயக்கத்தில் 2017இல் வெளிவந்த என் மகன் மகிழ்வன் (My son is gay). தலைப்பு முதற்கொண்டு நேரடியாக சொல்ல வந்ததை சொல்லிய திரைப்படம். ஆனால் எதிர்பார்த்தது போலவே தியேட்டரிகல் ரீலீஸ் என ஒன்று பெரிதாக இப்படத்திற்கு நிகழவே இல்லை. சமீபத்தில் தான் தமிழ் சுயாதீன திரைப்படங்களுக்கென ஒரு சிறிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. இந்த படம் வெளிவந்த சமயத்தில் எத்தனை பேருக்கு இத்திரைப்படம் சென்றிருக்கும் என நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
இது போன்ற வலிமையான கருத்துக்களை தாங்கிய திரைப்படங்களை மெயின்ஸ்ட்ரீம் எனப்படும் பெருவாரியாக தியேட்டர் செல்லும் படமாக அமைந்தால் இக்கருத்துக்கள் எளியோரை அடையமுடியும்.
இந்திய அளவில் ஏதேனும் தனித்துவமான நல்ல குயர் திரைப்படங்கள் இருக்கிறதா என ஆராய்ந்து பார்த்தால் மலையாளத்தில் 1978இல் வெளி வந்த ரண்டு பெண்ணுகள் என்கிற திரைப்படத்தை பலரும் குறிப்பிடுவர். அதுவே இந்திய அளவில் முதலில் சமபால் ஈர்ப்பு பற்றி வெளிவந்த படமெனவும் தரவுகள் கூறுகின்றன. பள்ளி பருவத்தில் உள்ள இரு பெண்களுக்குள் உண்டான இணக்கம், அன்பு, காதல் பற்றி பேசிய அந்த திரைப்படம் உண்மையாகவே அந்த காலக்கட்டத்திற்கு மிகப் பெரிய முயற்சியே. பாலிவுட்டில் பரவலாக இன்று வரை பல (நல்ல) குயர் படங்களை நம்மால் குறிப்பிட முடியும். இயக்குனர் ஹன்ஸல் மேஹ்தாவின் அலிகர்ஹ்(2015), டியர் டேட்(2017), ஃபயர் (1996) என சில நல்ல படங்களை நம்மால் அடிக்கோடிட்டு காட்டிவிட முடியும்.
மலையாளம், இந்தியில் மட்டும் இப்படிபட்ட உதாரணங்களா? தமிழில் எவ்வித நல்ல உதாரணங்களும் இல்லையா என கேட்டால், மலையாளம், இந்தியில் முன்னனி நட்சத்திரங்களான ப்ரித்விராஜ், நிவின் பவுலி, சோனம் கபூர், ஆயுஷ்மான் குர்ரானா போன்றோர் எந்த சலனமும் இல்லாமல் சமபால் ஈர்ப்பாலர்களாக நடிக்கும் ஒரு சூழல் இருக்கையில் பல நல்ல குயர் கதைகள் தியேட்டரில் பெருவாரியான மக்களை சேர்ந்தடைய தோதாக இருக்கிறது. ஆனால் இங்கோ நிலைமை அப்படி இல்லை. நல்ல கதையம்சம் என்பதை தான்டி பெருவாரியான இரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக வேண்டும் என்பது முதன்மையாக இருக்கிறது. முன்னனி நடிகர்களுக்கு விருப்பமே இருந்தாலும் இரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தயாரிப்பாளர்களே முடிவெடுத்தும் விடுகின்றனர்.
ஆக முன்னணி நடிகர்கள் நடித்தால் மட்டுமே தான் குயர் படங்களுக்கு எதிர்காலமா என நீங்கள் நினைக்கலாம். ஒரு நல்ல கருத்தை, சமூக மாற்றத்திற்கான கருத்தை கதையாக சொல்லுகையில் எவ்வித சமரசமும் இல்லாமல் அந்த கதையை சொல்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அக்கதையை பெருவாரி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது அவசியம். அதற்கு இந்த முன்னனி நடிகர்களின் பங்கு தேவை என இருந்தால் என்ன பெரிய தவறாகிவிட போகிறது என்பது எங்கள் கருத்து.
என்னதான் பாலிவுட், மாலிவுட்டில் குயர் படங்களுக்கு ஒரு இடமிருக்கிறது என இருந்தாலும் எப்படிப்பட்ட பார்வையில் அக்கதைகள் சொல்லப்படுகிறது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். பால்புதுமையினர் பற்றிய திரைப்படங்கள் பல சமயங்களில் ட்ராஜிக் வகை படங்களாக அதாவது சோகமான முடிவுகளை உடைய அல்லது தொடர்ந்து கஷ்டங்களை மட்டுமே அனுபவிக்கும் கதைளகளை பார்க்கமுடிவதாக ஒரு கருத்தை உலகம் முழுவதும் பலர் முன்வைக்கின்றனர். குயர் மக்களின் மன வேதனைகளை ஆவணப்படுத்துவது முக்கியம் தான் ஆனால் அவர்களது வேதனைகளை மட்டுமே வைத்து படம் தயாரிப்பது எதோ ஒரு வகையில் மக்களின் அனுதாப பார்வையை மட்டுமே திருப்பிவிடுவதாக மாறிவிடுகிறது. குயர் மக்கள் கடந்துவந்த பாதைகள் எவ்வளவு முக்கியமோ அதே போல் அவர்களது சந்தோஷ தருணங்களை முதன்மை படுத்தி கதைகள் உருவாக வேண்டும்.
அந்த வகையில் ஹிந்தியில் வெளிவந்த ஆயுஷ்மான் குர்ரானாவின் ஷுப் மங்கள் ஜியாதா ஸாவ்தான் (2020) ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எதனால் இப்படிப்பட்ட அனுதாப பார்வையில் மட்டுமே படங்கள் வெளிவருகிறதென ஆராய்ந்தால் நாம் மேல் சொன்ன பல நல்ல குயர் படங்கள் யாரால் எழுதப்படுகிறது யாரால் இயக்கப்படுகிறது என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
பல சமயங்களில் இத்திரைப்படங்கள் ஒரு ஹெடெரோ செக்ஷுவல் ஆண்/பெண் இயக்குனர் அல்லது எழுத்தாளரால் தான் இக்கதைகள் உருவாகிறது. என்னதான் நல்ல எண்ணத்தில் இக்கதைகளை உருவாக்கினாலும் ஏதோ ஒரு வகையில் எதிர்பாலின ஈர்ப்பும், பிறப்பில் கண்டறியப்பட்ட பாலினத்தை மட்டுமே கொண்டு வளர்ந்த ஒரு நபரால் முழு சதவீதம் குயர் மக்களின் பிரச்சினைகளையும் அவர்களின் மனக்குமுறல்களையும் புரிந்துகொள்வது சற்றே சிரமம் தான். ஒரு ஆதிக்க சாதி/இடைநிலை சாதியை சேர்ந்த இயக்குநர் சாதி எதிர்ப்பு பற்றின படத்தினை எடுப்பதிற்கும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இயக்குநர் சாதி எதிர்ப்பை பற்றிய திரைப்படம் எடுப்பதற்குமான வித்தியாசத்தினை போன்றது.
இச்சமயங்களில் தான் குயர் கலைஞர்களின் பங்கு அதி தீவிரமாக தேவைப்படுகிறது. வெளிப்படைரயாக தன்னை ஒரு குயர் இயக்குநராக அடையாளப்படுத்திக் கொண்டவர்தான் வங்காள இயக்குனரான ரிதுபர்னோ கோஷ். இன்றும் குயர் மக்களின் மத்தியில் திரைப்படத்துறையில் நீக்கமுடியாத ஒரு பெயர் அவருடையது. தான் வாழ்ந்த காலம் வரை அவர் இயக்கிய திரைப்படங்கள் பேசும் ஒரு குயர் பார்வையில் பால்புதுமையினரின் கதைகள் எப்படி வேறுபடும் என்பது.
மேலும் இந்தியாவில் வெளியான குயர் படங்களை பார்த்தவரை பல சமயங்களில் ஒரு மெட்ரோ நகரத்தை பின்புலமாக கொண்டு மட்டுமே பொருவாரியான படங்கள் வெளிவந்திருக்கிறது. மெட்ரோ நகர மக்களை பொருத்தவரை அவர்களுக்கு புரிதல் இல்லை அல்லது இருக்கிறது என்பது தான்டி குயர் மக்களின் இருப்பை பற்றி அவர்களது ஒன்றுபட்ட போராட்டங்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்கின்றனர். பால்புதுமையினர் பற்றிய கதைகள் ஒரு நகரத்தை பின்புலமாக கொண்டு வருவதை விட சிறு கிராமங்களையும், பெயரறியாத சிறிய டவுன்களையும் பின்புலமாக கொண்ட மிகவும் சாதாரணமான குடும்ப அமைப்பில் இருந்து வந்தவர்களின் கதைகளாக இருப்பது மேலும் இக்கதைகளை அம்மக்களிடம் கொண்டு சேர்க்கும். கணக்கில் வராத பல கௌரவக் கொலைகளும், கடைசி வரை வீட்டில் அடைத்து வைக்கப்படுபவர்களும் அதிகம் நம் நாட்டில். இக்கதைகள் அவர்களிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும்.
அவர்கள் இக்கதைகளை கண்டு உடனே மனத்திருந்தி விடுவார்களா?
நிச்சயம் இல்லை. ஆனால் இக்கதைகளும் பொதுவெளியில் பேசப்படுகிறது, இனியும் பேசப்படும் என்பதை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். அவர்களும் நம் விவாதங்களில் பங்கு கொள்ள வேண்டும். புரிய வைக்க முயற்சி செய்வோம்.
-நிதிஷ் மனோஹரன்.