ஏக்கம் நிறைந்த வாழ்வு ஒவ்வொரு நாளும் எப்போது இந்த முகமூடியைக் கிழித்தெறிவோம் என்ற ஆசையில் முகங்களை தடவிய விரல்கள் என்றுமே நினைவிருக்கிறது. ஏன் இந்த முகமூடி இவ்வளவு கனமாக இருக்கிறது என்று  ஒவ்வொரு நாளும் கண்கள் தளும்ப கண்ணீரை தேக்கி வைத்த நாட்களும் உண்டு. இந்த முகமூடி நானாக விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்டதில்லை இந்த முகமூடி இந்த சமூகம் என் மீது திணிக்கப்பட்ட திணிப்பு.திணிப்பு என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கலாம் ஆனால் இந்த திணிப்பை உருவாக்கியது இதற்கான காரணம் கரு எல்லாம் இந்த சமூகம் தான் . என்னுடைய ஒவ்வொரு எழுத்துக்களிலும் சமூகத்தைப் பற்றிய சாடல் அதிகமாக இருக்கிறது என்று என்னுடைய அபிமானிகள் கூறுவார்கள். இங்கு நான் இரண்டாகப் இருக்கிறேன் என்று வாழ்வதற்காக அல்லது பிச்சை எடுப்பதற்காக அல்லது இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் என்னுடைய அடையாளத்தை தேக்கி வைத்துக் கொள்வதற்காக ஒரு சமூக கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அந்த கட்டமைப்புக்குள் வாழ்ந்து கொண்டு அந்த கட்டமைப்பில் இருந்து தன்னை மெருகேற்ற அல்லது தான் சார்ந்திருக்கும் சமூகம் அல்லது தான் சார்ந்திருக்கும் குடும்பத்தை முன்னேற்ற பாடுபடுபவர்கள் என ஒரு சமூகமும். மேலே சொன்ன எந்த விதமான கட்டமைப்புகளுமற்று காதல் காமம் என்ற ஒற்றை வார்த்தையில் இந்த கட்டமைப்பு இல்லாமல் வாழும் மற்ற சமூகம் என்று இரண்டாக  நான் இச்சமூகத்தை இரண்டு பிரிவாக பார்ப்பேன்.

 

அனைத்து விதமான சமூக கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு காதலையும் காமத்தையும் ஏதோ ஒரு வழியில் கலாச்சாரத்தின் துணைகொண்டு கொண்டாடுபவர்கள் ஒரு பிரிவு என்றால் தன்னுடைய காதல் இந்த அடையாளத்தில் தான் உள்ளது என்று ஒவ்வொரு முறையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி போராடி அல்லது அவர்களால் அவர்களுக்கே தெரியாமல் எங்கள் முகங்களில் மாற்றிவிட்ட முகமூடியுடன் திரியும் மற்ற சமூகமும் என்றுமே ஒன்று கிடையாது.இந்த மாதிரியான சமூகநீதி சமநிலையற்ற ஒரு சமூகத்தில் மிகக் கனமான முகமூடியுடன் வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு இந்த முகமூடியைக் கழற்றி எறிய ஏதோ ஒரு நாள் தேவைப்பட்டது. ஏன் இந்த முகமூடி இவ்வளவு கொடூரமாக உள்ளது. ஏன் இந்த முகமூடி இவ்வளவு கனமாக உள்ளது.

ஏன் எனக்கு மட்டும் இந்த முகமூடி உள்ளது என்று ஒவ்வொரு தருணமும் ஏங்கித் தவித்து கண்ணீரை பொத்திக்கொண்டு வெகு இயல்பாக நடப்பது என்பது நடை பிணத்திற்கு சமம். அனைத்திற்கும் ஒரு விடிவு காலம் வராதா இந்த கணம் நிறைந்த முகமூடியைக் கிழித்து எறிய மாட்டேனா என்று காத்திருந்த நேரங்களில்தான் ஈ நான் இங்கு உள்ள பால் சிறுபான்மை மக்களின் போராட்டங்களையும் அவர்களின் முன்னெடுப்புகளையும் ஒருபோதும் அவர்களுடன் இணைந்து அவர்களுடன் அவர்களுக்காக கைகோர்த்து அவர்கள் அவர்களுடன் நானும் ஒரு நபர்தான் என்ற பேராவலுடன் என்று நான் போராட்டங்களில் கலந்து கொண்டதே இல்லை ஏனென்றால் இதற்கும் சொல்லுவேன் இந்த பயத்திற்கும் சொல்லுவேன் அதற்கும் இந்த சமூகம்தான் காரணம். பேரணிகளில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.2019 ஜூன் 31 தேதியில் ஏன் அவ்வளவு குறிப்பாக பெங்களூருவில் இருந்துஎன்ன நடந்து விடும் என்று பார்த்துவிடலாம். என் சமூக மக்கள் கூடும் அந்த நிகழ்வில் என்னுடைய எழுத்தைக் கூட நான் தெரிவிக்கக் கூடாதா. கண்டிப்பாக இந்த கணம் நிறைந்த முகமூடியைக் கழற்றி அங்கு எரித்து விடுவேன் என்ற நம்பிக்கையில் கிளம்பி சென்னைக்கு வந்தேன். ஆசைகள் தழும்ப முகம் நிறைய ஒப்பனைகள் செய்தவாறு அன்று சுயமரியாதை பேரணியில் கலந்து கொண்டேன். அடடா கணம் நிறைந்த இந்த முகமூடி என் ஒப்பனைக் பின்னால் சுருங்கி ஒழிந்துவிட்டது. என் கால்கள் நடனமிட தொடங்கியது எங்கள் என் கைகள் பறை இசைக்க ஆவல் கொண்டது. இடுப்புகள் நெளிந்தது உதடுகள் கன்னங்களை முத்தமிட்டது. யார் என்று தெரியாத அவர்களின் கரங்களை எல்லாம் கோர்க்க ஆயத்தமானது என் விரல்கள். கூச்சலிட்டு என்னுடைய குரல் Happy Pride என்று சத்தமிட்டது. ஐயோ என்னுடைய முகமுடி எங்கே சென்றது என்று ஞாபகமில்லை ஆனால் மிக இலகுவாக நான் உணர்ந்தேன் கனமில்லாமல் நான் உணர்ந்தேன்..27 வயது நிரம்பிய நான் அன்று தான் பிறந்தது போல் அன்று தான் சுவாசித்து போல் அன்று தான் இவ்வுலகில் என் இருப்பு உள்ளது போல்  உணர்ந்தேன். எத்தனையும் முரண்கள் அங்கு கூடிவர்களுடன் இருந்திருக்கக்கூடும்  இருப்பினும் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் பாலினம் பாலியல் ரீதியாக இந்த சமூகத்தால் ஒதுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்டு தூக்கி எறிய பட்டவர்கள். ஆம் நானும் தூக்கி எரிய பட்டவன். ஆண் குறிகளால் சபிக்கப்பட்டவன். மீண்டும் பிறந்தேன் இவ்வுலகில் ஏதோ ஒரு மூலையில் எனக்கான அடையாளம் இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டேன். வானவில்லை உடுத்த ஆரம்பித்தேன் உதடுகள் வர்ணங்கள் பூச ஆரம்பித்தேன். மீசைக்கு மேலுள்ள மூக்குத்திக்கு ஏன் இங்கு இவ்வளவு அடக்குமுறை என்று யோசித்து ஆண் குறி வைத்த நான் மூக்குத்தி இடுவதால் என்ன என்று இந்த சமூகத்தை பார்த்து கேட்டேன்..  கேள்விகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது இந்த சமூகம் மெத்தனமாக வாயைப் பொத்திக் கொண்டே உள்ளது. அவர்கள் காதுகளில் கத்திக்கொண்டே இருப்பேன் ஏன் எனக்கு முகமூடி போட்டீர்கள் என்று. நான் கழட்டி எறிந்த முகமூடியை ஒவ்வொரு பால் சிறுபான்மை மக்களும் கழட்டி எறிய வேண்டும். எரிவது மட்டுமல்லாமல் அந்த முகமூடிகளை எரித்து நசுக்க வேண்டும். உங்களின் சமூகம் உங்களுக்காக அனைத்து கட்டமைப்புகளை உருவாக்கியதோடு எங்களுக்கான முகமூடிகளையும் அந்த கட்டமைப்புகள் சேர்த்து உருவாக்கியுள்ளது. அதற்கான வேலைகளை என்னளவில் செய்ய ஆயத்தமானேன். சுயமரியாதை ஆனேன்.. முகமூடிகள் கழற்றி சுதந்திரக் காற்றை சுவாசித்தவாறு சுற்றி திரிகிறேன். அனைவருக்கும் சுயமரியாதை மாத வாழ்த்துக்கள்.

 

-அழகு ஜெகன்

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன