சுயமரியாதை பேரணி என பெயர் வரக் காரணம் என்ன அதற்குப் பின்னாலான வரலாறு என்ன ?
முன்பெல்லாம் ‘வானவில் பேரணி’ என்றுதான் இந்த பேரணிக்கு பெயர் இருந்தது. ப்ரைட் (Pride) என்பதற்கு தமிழில் பெருமை என்று பொருள். ஆனால் அது ஆணவத்தினால் பெருமிதம் கொள்வது என்பது ஆகாது, சமூகத்தின் பார்வையில் இப்படி இருப்பது கேவலம் என்ற நிலையிலிருந்து விலகி எங்களுக்கு இப்படி இருப்பது பெருமையே என்று சொல்வதுதான். அதாவது நம்முடைய அடையாளத்தை நினைத்து தலை நிமிர்ந்து நடப்பது. வரலாற்று நிகழ்வில் தமிழக அரசியலில் ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கம் என்று சொன்னால் அது பெரியாருடைய சுயமரியாதை இயக்கமும் ஒன்று. “சுயமரியாதை இயக்கம் அனைவரும் சமம் என்று சொன்னது. மேலும் சாதிய அடக்குமுறைக்கு எதிரானது. இந்த சுயமரியாதை இயக்கம் என்னை வெகுவாக கவர நம்முடைய வானவில் பேரணிக்கு ஏன் சுயமரியாதை பேரணி என பெயரில் மாற்றம் செய்யக்கூடாது என தோன்றியது. இதை ஒற்றை சார்பு கொள்கையுள்ள மக்களிடம் பெயர்மாற்றத்தை குறித்து சொல்லும்போது அதை ஆமோதித்து உபயோகிக்கலாம் என்று சொன்னார்கள். அன்றிலிருந்து வானவில் பேரணி என்பது மனித வண்ணங்களின் பேரணி மட்டுமல்ல, இது சுயமரியாதைக்கான பேரணியாகவும் மாறியது. பெயர் மாற்றப்பட்ட அதே சமயம் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் வந்தது. அதையெல்லாம் தாண்டி சுயமரியாதை பேரணி என்ற பெயர் நிலைத்து நிற்கிறது.
கார்ப்ரேட் நிறுவனங்களில் ஜுன் மாதங்களில் மட்டும் இந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருப்பது போல் விமர்சையாக கொண்டாடி, பிற நாட்களில் அவர்கள் காட்டும் மாற்றத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
நீங்கள் ஏன் இந்த பிரைட் மாதத்தை மட்டும் கொண்டாடுகிறீர்கள் மற்ற மாதங்களில் ஏன் கொண்டாடுவதில்லை என்று பால்புதுமையினரே என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் நான் சொல்வது சமூகத்தின் ஓர் அங்கமாய் நாம் இருக்கிறோம் என தெரிய படுத்துவதற்காகவே இதைச் செய்கிறோம். இந்த ஒரு மாதத்தில் மட்டும் இதை செய்வதில்லை , வருடம் முழுவதும் இதற்காக நாம் வேலை செய்கிறோம். அது பிறரின் கண்களுக்கு புலப்படுவதில்லை. ஒரு காலகட்டத்தில் கார்ப்பரேட்டுகள் பால்புதுமையின மக்களுக்கு வேலையே தராமல் , அவர்களின் அடையாளம் தெரிந்தால் அவர்களை வேலையை விட்டு தூக்கிய நிகழ்வுகளெல்லாம் நடந்துள்ளது. ஆனால் இப்போது இந்த செயல்பாடுகளில் சிறிதளவு மாற்றம் வந்திருக்கிறது. இந்த மாற்றம் எப்படி வந்ததென்றால் இந்த மாற்றத்தை LGBTQ மக்கள் தான் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுமட்மில்லாமல் Pride
month க்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அதனாலேயே நாம் கொண்டாடுகிறோம். ஒரு நிறுவனத்தில் மாற்றம் கொண்டுவர பல முயற்சிகளோடு கூடிய பணமும் தேவைப்படும். கலாச்சாரம் மாற வேண்டும் , அதற்கு முறையான பயிற்சிகளும் , கற்றல் விழிப்புணர்வு கலந்துரையாடல்களும் வகுப்புகளும் நடைபெற வேண்டும்.
அடுத்தபடியாக வெறும் லோகோவை (Logo) மாற்றுவது – ஆரம்ப காலகட்டத்தில் பெரிய நிறுவனங்கள் இதை செய்தார்கள். இந்த முயற்சி வரவேற்கத்தக்கதாக இருந்தது இதன் மூலம் மக்களின் பார்வையை தங்களின் பக்கம் ஈர்த்துக் கொண்டார்கள். வெகுஜன கம்பனிகள் அதை மட்டுமே தான் செய்துகொண்டிருந்தார் , அதைத் தாண்டி அவர்கள் ஏதும் செய்யவில்லை , இந்த நிலையில் தான் அந்தமாதத்தில் மட்டும் இவர்கள் வானவில்லின் லோகோவை மாற்றுவது பிரச்சினைக்குரிய விஷயமாக மாறியது. இப்படி செய்வது நம்முடைய சமுதாயத்திற்கு எந்த உதவியும் செய்யாது அப்படி செய்யவும் கூடாது
வெறும் கவனத்தை ஈர்ப்பதற்க்காக பால்புதுமையின மக்களுக்கு ஆதரவளிப்பதாக காட்டிக்கொள்வது கண்டிக்கத்தக்கது. ஒரு கம்பெனியில் வருடம் முழுக்க சரியான சம்பளம் LGBTQ மக்களுக்கு கொடுக்க வேண்டும், அவர்களை நடத்தும் முறை, சம்பள உயர்வு, இதையெல்லாம் சரியாக செய்ய வேண்டும் அப்படி தவறும் பட்சத்தில் இந்த நிலைமையினை நாம் வெளியே கொண்டுவர வேண்டும். இவற்றையெல்லாம் செய்யாமல் வெறும் ஜூன் மாதத்தில் மட்டும் வானவில் கொடியை மாற்றுவது புகைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது லோகோவை மாற்றுவதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
Pride month -ல் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?
பல நேரங்களில் பால்புதுமையின மக்களே சமூகத்தில் நமக்கு முழு உரிமை இல்லாத போது எதற்கு இவ்வளவு வண்ணமயமாக உடைகளை அணிந்து ஆட வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் இது ஒரு போராட்டம் தான். நமக்கான தேவைகளை முன்வைக்கிற இடமாகத்தான் இந்த பேரணி இருக்கிறது. சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்று காட்டுகிற ஒரு இடமாக இந்த பேரணியை பார்க்க வேண்டும். பொது சமூகத்தில் நமக்கான இடம் என்பது கிடையாது , எங்கோ மறைந்தோ ஒளிந்தோ அல்லது ஓரமாக வாழ வேண்டிய நிலைதான் இருக்கிறது. இந்நிலையில் நாம் ஒரு தெருவை ஆக்கிரமித்து நடந்து போகும்போது அதுவே கொண்டாட்டமாக இருக்கும். ஒரு போராட்டம் செய்யும் பொழுது அழுதுகொண்டே செய்யவேண்டுமா என்ன, வருடத்திற்கு ஒருநாள் நடக்கப்போகும் அந்த போராட்டத்தில் நாம் அடக்கி வைத்திருந்த சந்தோஷம் துக்கம் நம்முடைய இருப்பு இவற்றை வெளிக்காட்ட அழுகையை மட்டும் பயன்படுத்தாமல் அழகாக வண்ணமயமாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சியோடு செல்வதே இந்த பேரணிக்கு அழகாய் இருக்கும்.
LGBTQ மக்களின் நலனுக்காக இலக்கியம் சார்ந்து பயணிக்கிறீர்கள்? இலக்கியம் சார்ந்து ஏதாவது மாற்றம் நடந்திருக்கிறதா? பால்புதுமை மக்களை சார்ந்து நிறைய எழுத்துக்கள் வர ஆரம்பித்திருக்கிறதா?
இலக்கியம் சார்ந்து மட்டும் நான் பயணிக்கவில்லை ,நிறுவனங்கள் வேலை இடங்கள் சார்ந்தும் நிறைய வேலை செய்திருக்கிறேன். இலக்கியமானது அதற்கு பிறகு ஆரம்பித்ததுதான். 2012-2013 காலகட்டத்தில் LGBTQ மக்களுக்கான இலக்கியம் என்று பார்க்கும்பொழுது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் எழுதினார்கள். அப்படி தமிழில் எழுதினாலும் எழுதும் ஆட்கள் மிகக் குறைவாகவே இருந்தனர். அதாவது ஒரு உண்மையான ஆவணமானது மிகக்குறைவாகவே இருந்தது. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு அனுபவத்தை மொழிபெயர்த்திருப்பார்கள். சில நேரங்களில் தெருவில் நம் மக்கள் நடத்தும் போராட்டங்களை கூட செய்திதாளில் போட மாட்டார்கள். அந்த எழுதும் இடத்தில் நாம் இருந்தால் தான் எழுத முடியும் என தோன்றியது. எழுத்து வடிவத்தில் LGBTQ மக்ளுக்கான ஆவணங்கள் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படவில்லை. அப்படி எழுத்து வடிவத்தில் ஆவண செய்யப்பட்ட ஒரு சிலவும் என்ஜிஓ -க்கள் மூலமாகத்தான் நடந்ததுள்ளது. பெரும்பாலும் புகைப்படங்கள் நம்முடைய கைபேசியில் எடுப்பதால் புகைப்படங்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டிருந்தது, ஆனால் எழுத்து என்று பார்க்கும்போது நிறைய எழுதப்படவில்லை. அந்த இடத்தில் யார் எழுதுகிறார்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று நான் தேடும்போது தான் ,நாமே இதை செய்ய வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்தேன். தமிழில் எழுத வேண்டும் என்று நினைக்கும் போது நமக்கான சரியான இடங்கள் இல்லாமல்தான் இருந்தது. தமிழில் எழுதும் போதுதான் அதற்கான வார்த்தைப் பயன்பாடு , என்ன வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும் என்று தெரியும். மொழிபெயர்ப்பு என்பது அதன் உண்மை தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்றுதான் எழுத்தாளர்கள் விரும்புகிறார்களே ஒழிய சூழலை சார்ந்து என்ன சொல்லாடல்கள் பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லாமல் இருப்பதும் எங்களுக்கு தெரியவந்தது. மேலும் இது சார்ந்த கலந்துரையாடல்களை ஆராய்ச்சிகளையும் மொழி சார்பாக மேற்கொண்டோம் . எங்கள் இணையதளத்தில் உள்ள பால்புதுமை மக்கள்களை உள்ளடக்கிய வார்த்தைகளை பயன்படுத்தும்போது பால் புதுமை மக்களுக்காக எழுதப்படும் கட்டுரைகள் இலக்கியங்கள் செம்மை படுவதாகவும் மொழி தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது. மேலும் இலக்கியத்திற்காக முதன்முதலில் நடைபெற்ற குயர் இலக்கிய விழாவில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு பார்வை கிடைத்தது. பல படைப்புகள் சமர்க்கிப்பட்டது. இணையதளங்களின் குயர் மக்கள் தங்கள் கவிதைகளையும் படைப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள். முந்தைய வருடங்களை ஒப்பிடும்போது இலக்கியத்தில் மக்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளது.
நன்றி
தொடர்ந்து இலக்கியத்திலும் மேலாண்மை துறையிலும் பால்புதுமை மக்களாக பால்புதுமை மக்களுக்கு செயலாற்றி வரும் மௌலி அவர்களை பால்மணம் மின்னிதழ் உளமார பாராட்டுகிறது.
-நிவேதா