படபடக்கும் மும்பை சாலையில் சிவப்பு விளக்கு எரிய. மிடுக்காய் சென்ற வாகனம் அனைத்தும் வேறு வழியின்றி பச்சை விளக்கு எப்போது எரியும்?! என அனைவரும் காத்துக்கொண்டிருந்த வேளையில், அனைத்து இரைச்சல்களுக்கும் , மத்தியில், இருகைகளை வேகமாக ஒன்றின் மீது ஒன்றாக அடிக்க எழும் ஓசையை எழுப்பி கூட்டத்திற்குள் நுழைந்தாள் ஜீவா.
அவள் மற்றவர்களிடம் எந்த மொழியிலும் பேசவில்லை. அவள் மொழி என்னவென்றும்?! அவள் ஏன் இங்கே வந்திருப்பாள்?! என்றும் அவளின் தோற்றம் கூறியிருக்குமோ..?!. பலர் இவளின் வருகையை எதிர்பார்த்தும் காத்திருந்தோர் போல, கைகளில் சில்லரை காசுகள் கொண்டு வரவேற்பது, அவள் அவர்கள் முன் வந்து கைகளை தட்டும் முன்னரே காசை அவளிடம் கொடுக்க ஆரம்பித்து ஆசிர்வாதம் வாங்க கூட விருப்பம் இல்லாமல் சிக்னலையே பார்த்து கொண்டிருந்தனர்…
சில்லறைகளை அவசரமாக வாங்கி, இந்த முனையிலிருந்து அந்த முனைக்கு மாறும் நேரத்தில் பச்சை விளக்கு எரிய ஆரம்பித்து அனைத்து வாகனங்களும் சீரிப்பாய்ந்தது…
வாங்கிய காசுகளை உள்ளே வைத்த வண்ணம் அடுத்த சிவப்பு விளக்குக்காகக் காத்திருக்கும் போது. கருப்பு கண்ணாடி அணிந்து, மிடுக்காய் சட்டை பேண்ட் உடுத்திய ஒருவர், வலது கையில் ஊதுபத்தி பாக்கெட்களை வைத்து கொண்டும் இடது கையை அவர் அமர்ந்திருந்த பைக்கின் பின்னால் உள்ள கம்பியை பிடித்தவாறும், அவரை வைத்து வாகனம் ஓட்டும் இளைஞனிடம் சிரித்து பேசி கொண்டிருந்தார்…
அவருடையாக மகனாக இருக்கும் என்பதை பார்த்தாலே தெரியும் அளவுக்கு இருவரின் முகமும் ஒன்றாயிருந்தது…
ஜீவாவின் மனமோ அவளின் கடந்த வாழ்க்கையையும் நினைபடுத்தியது.
இரயில்வே துறையில் கான்டிராக்டராக இருந்த அப்பா. அவளுடன் பிறந்த 4 அண்ணன் 2 தம்பிகளை நினைத்து பார்த்தாள்…
அவளின் சிறு வயதில் அவளுக்கு ஏற்பட்ட பல இன்னல்களும், துன்பங்களும் அவள் கண்முன் வந்து போனாலும், அந்த இளைஞனின் கண் செயல்படாத அப்பாவை நினைத்த அவள். “எனக்கு என்ன பாகம் உடம்பில் செயல்படவில்லை?!. நான் நன்றாக தானே இருக்கிறேன்?!. அப்படி இருந்தும் ஏன் நான் இங்கு கையேந்தி நின்று எனது வாழ்வை தொடரவேண்டும்?!
என்னாலும் ஏதாவது ஒரு வேலை பார்த்து வாழ முடியுமே. அப்போ எதற்கு இந்த கையேந்தி பிச்சை எடுக்கும் நிலை…?!”.என்று ஒரு முடிவோடு கிளம்பி தமிழகம் திரும்பினால் ஜீவா….
இங்கு வந்தந்தும். ஒரு டைல்ஸ் கடையில் வேலை கேட்டு கிடைத்து அந்த வேலையை திருப்திகரமாக செய்துகொண்டிருக்கும் சமயத்தில். அவளை பணியமர்த்தியவர் இறந்து போவதால், அவளின் வேலை பறிக்கப்பட்டு வெளியேறுகிறாள்.
திமோத்தமி என்கிற ஒரு சமூக சேகவரின் பேரன்பு கிடைத்து. அவர் ஜீவாவிற்கு சமூக சேவைகள் குறித்து எடுத்துரைக்கிறார்.
மேலும் வை ஆர் ஜி கேர் என்ற அமைப்பில் இணைந்து, community advicer board member ஆக அமர்த்தப்படுகிறாள்.
அப்போது HIV பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் புராஜெக்ட் சென்று கொண்டிருந்தது, அதில் சிறப்பாக பணியாற்றிய ஜீவா எய்ட்ஸ் நோய் தடுப்பூசி அமைப்பிலும் மெம்பராக இருந்து, எய்ட்ஸ் நோய் தடுப்பதை பற்றி மக்களிடையே விழிப்புணர்வுகளை கொண்டு சேர்த்தாள்.
இவ்வாறு தொடர்ந்த ஜீவாவின் பயணம், முதல்முதலில் தமிழ்நாடு அரவாணிகள் சங்கம் நிறுவனத்தில் 1500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்க தொடங்கி, பல நிறுவனங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.
தொடர்ந்து பணியாற்றி வந்த ஜீவா, 2006 ஆம் ஆண்டு “திருநங்கை உரிமைக்காக நாம் போராட வேண்டும்” என்று முடிவெடுத்து, Transgender Wright’s association அமைப்பை தொடங்கி, திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்காக உதவி செய்து அவர்களின் வாழ்வினை உயர்த்த பாடுபட்டார்…
மத்திய அரசு திருநங்கை மற்றும் திருநம்பிகள் வாழ்வில் முன்னேற அவர்களுக்கு படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கில் புராஜக்ட் ஒன்றை வெளியிட்டது. அதன் மூலம் திருநங்கை மற்றும் திருநம்பிகள் வாழ்வினை உயர்த்த உதவி செய்து வருகிறார் ஜீவா.
மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் விருதுகளை பெற்றுள்ள ஜீவா அவர்களை பேராளுமை என்று அழைப்பதில் பால்மணம் மின்னிதழ் மிகவும் பெருமிதம் கொள்கிறது .
-அருன்தர்சன்