அன்றொருநாள் ஆகாயத்து வாசிகளிடம் அளவாவியபடி இருந்தேன்…

 

இத்தணை ஆண்டுகளாய்க் கண்சிமிட்டிப் பார்த்துக் கண்டதன் சாரமென்வென்று கேட்டபோது…. அதே கண்சிமிட்டலையே பதிலாய்த் தந்தனர்..

ஆனாலும் அதிலிருந்த ஓரே இளிவரலை நான் வாசிக்காமலில்லை…

 

புன்னகைத்தது போதுமெனச் சொல்லி அடுத்த கேள்விக்குள் புகுந்தேன்..எரிச்சலோடு தான்…

 

அப்போது மனிதயினம் கட்டிய அத்தனை விடயங்களுக்கும் கூட இதே இளிவரல் தானோ விடை எனக் கேட்டபோது…சந்தேகமென்ன என்று சொல்வதுபோல அதே கண்சிமிட்டல் தான் பதிலாய்க் கிடைத்தது…

 

ஆகாயவாசிகள் கருதியிருக்கக் கூடும் என்னையோர் கிணற்றுத் தவளையென…

 

போகட்டும் இனிவரும் காலங்களில் உங்களை அடைந்து அந்த இளிவரலின் காரணத்தை நேரிலேயே கேட்பதுதான் மனிதயினத்தின் குறிக்கோளென மதப்போடு கூறினேன்…

ஆனால்…அதற்கும் கண்சிமிட்டல் தான்..

 

காரணம் தெரியவில்லை அப்போது ..

 

அண்ணம் தண்ணீர் இன்றி அனுதினமும் முதலாளிகளுக்காய் வற்றிச் சாகும் உற்ற தோழர்களைப் பற்றிக் கவலைப்படாமல் எங்கோயிருக்கும் என்னைக் கேள்வி கேட்க இங்கு வருகிறேன் எனச் சொல்கிறதே இந்த உயிரினம்…

என்பதாக இருக்கலாம்…

 

இல்லையேல்…

கல்வியுரிமையே சாதியையும் வர்க்கத்தையும் வைத்து மறுக்கப்படும் குழந்தைகளைக் கணக்கிலேயே கொள்ளாமல் செவ்வாய்க்கு கலமேவும் நம் வெறுவாய்களை எண்ணியதாலும் இருக்கலாம்…

 

எதுவாயினும்..

முடிவு செய்து விட்டேன்

ஆகாயவாசிகளைக் கேள்வியெதும் கேட்பதில்லையென…

 

இப்போதும் நாங்கள் அளவாளாவவே செய்கிறோம் அவ்வப்போது..

அதில் துயரங்களும் மகிழ்வுகளின் பரிமாறல்களும் நிகழ்ந்தாலும் குறிக்கோள்களும் குறியீடுகளும் மட்டுமே மாறியிருக்கின்றன

 

என் மனவோட்டங்களும் தான்…

 

– விவேக்

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன