ஒன்பதாம் வகுப்பில் கணிதபாட விடைத்தாள்களை ஆசிரியர் கொடுத்துகொண்டிருந்தார், அவரின் கண்ணிய குரலில், “வழக்கம் போல நூற்றுக்கு நூறு மார்க் நம்ம காளிதாஸ்” என்றதும் அனைவர் முன்பும் மிகுந்த பெருமையோடு காளிதாஸ் நடந்து வந்து தனது கணித விடைத்தாளை பெருத்த கைதட்டலோடு வாங்கி சென்றான். அடுத்த மார்க் பேப்பரை கொடுக்க, “next மார்க் ஒன்பது ஒன்பது, வேறயாரா இருக்கும் நம்ம ஒன்பது தான்” என்று ஆசிரியர் ஏளனம் செய்ய. மாணவர்கள் அனைவரும் “ஒன்பது ஒன்பது ஒன்பது ஹா ஹா” என்று அலறினர். விஜயன் தான் அந்த மாணவன், கணிதத்தில் நூற்றுக்கு ஒருமார்க் கம்மியாக தொன்றுற்று ஒன்பது மார்க் எடுத்தும் கூட எழுந்து போயி பெருமையாக வாங்க முடியாத நிலைமையில் அந்த வகுப்பில் கூனிக்குறுகி தன் தலையை நிமிர்தக்கூட முடியாது அப்படியே அழுது கொண்டிருந்த விஜயனுக்கு இது புதிதல்ல தினமும் நடக்கும் ஒரு வன்கொடுமையே, இங்கு ஆசிரியர் மாணவர்கள் என்று அனைவர்க்கும் மாணவன் விஜயனே கேலிக்கை நபர். ஒரு மாணவன் தொன்றுற்று ஒன்பது மார்க் வாங்கியும் கூட அழுகவேண்டுமா? ஆம் அப்படியான பள்ளி சூழலில்தான், தன் பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகள் பலர் படித்து வருகிறார்கள் மன்னிக்கவும் பாதித்துவருகிறார்கள்.
எனது பள்ளியில் இப்படி எல்லாம் இல்லை என்று பெருமை கொள்ள யாராலும் முடியாது. கண்களை மூடி யோசித்து பாருங்கள் உடலில் சில நளினங்கள் கொண்ட மாணவன் உங்கள் வகுப்பில் இருந்திருப்பான். அவனே உங்கள் அனைவர்க்கும் ஒரு கேலிபொருள். அவனை நீங்களோ உங்கள் நண்பர்களோ கேலிசெய்திருப்பீர், அடித்திருப்பீர், உன் ஜட்டிக்குள்ள எப்படி டா இருக்கும் என்று அவமான செய்திருப்பீர். இங்கு இது பல விஜயனுக்கு நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் இதனை யாரும் பெரிய விஷயமாக கண்டுகொள்வது இல்லை அல்லது இதற்கான புரிதல் யாருக்கும் இல்லை. புரிதல் ஒன்றே பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளுக்கான (Gender Non-Conforming Children) ஒரு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும்.
பள்ளியின் புரிதல்கள் :
எங்கள் கற்போம் கற்பிப்போம் அமைப்பிலிருந்து பள்ளிகளில் பாலியல் கல்வி கற்பிக்கும் பொழுது நாங்கள் அனைத்து குழந்தைகளிடமும் அனைவரும் சமம் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். உங்கள் நண்பர்களை அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் உங்களை விட மாறுதலாக இருக்கும் நண்பர்களை எக்காரணத்தைக் கொண்டும் கேலி கிண்டலுக்கு உள்ளாக்ககூடாது, வன்கொடுமை செய்யக்கூடாது என்ற புரிதலை ஏற்படுத்துவது மிகவும் கடினம் என்றாலும் ஒரு சமயத்தில் குழந்தைகள் தனது பள்ளி நண்பர்களை அவர்கள் இருப்பது போலவே ஏற்றுக் கொள்கிறேன் என்ற புரிதலுக்கு மிகவும் சீக்கிரமாக வருவதுண்டு. ஆனால் இந்த மாற்றமும் இந்த புரிதலும் அங்கே பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஏற்படுத்துவது மிகவும் கடினம்என்பதை பலமுறை நாங்கள் உணர்ந்தது உண்டு.
ஒரு அமர்வில் Gender Non-Conforming Children-பாலியல் கல்வியைப் பற்றி session எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒரு ஆசிரியர் எழுந்து இதெல்லாம் “Against the Nature இயற்கைக்கு எதிரான ஒரு விஷயம் இந்த விஷயத்தை நீங்க சொல்ற மாதிரி அப்படியே Accept பண்ணனும்னு சொன்னீங்கன்னா இதையே எல்லா குழந்தைகளும் பார்த்துட்டு தப்பான வழிக்கு போயிருவாங்க இந்தமாறி லூசுத்தனம் பண்ற பசங்கள உடனே அதட்டி திட்டி அடித்து ஒழுக்கமாக கொண்டுவருவது நம்முடைய பொறுப்பு தானே” என்று தன்னுடைய முட்டாள்தனமான புரிதலை எல்லாரும் முன்பும் வெளிப்படுத்தினார். இது அந்த ஒரு ஆசிரியர் மட்டுமல்ல நாங்கள் சந்திக்கும் பல ஆசிரியர்களிடம் இதே தப்பான புரிதல் உண்டு. கட்டுரையின் தொடக்கத்தில் விஜயனின் கணித ஆசிரியரும் அப்படிதான். அவரை பார்த்து மற்ற மாணவர்களும் அவரை போலவே ‘சார்ரே கிண்டல் பண்றாரு நாம பண்ணாலும் நம்மள ஒன்னும் சொல்லமாட்டாங்க”’ என்ற நம்பிக்கையில் பல விஜயன்களை கேலிக்கையாக்குகிறார்கள். பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளுக்கான Safe Space உருவாக்கித்தருவதன் முதற்கட்ட பொறுப்பை ஆசிரியர் மேல் நாங்கள் வைக்க விரும்புகிறோம். ஏனென்றால் அனைத்து பெற்றோர்களும் படித்தவர்கள் அல்ல ஆனால் அனைத்து ஆசிரியர்களும் படித்தவர்களே. அவர்கள் நினைத்தால் மாணவர்களை தடையற்ற கல்வி பெற வழிவகைசெய்ய இயலும். இந்த புரிதல் ஆசிரியர் வழி பெற்றோரிடம் செல்ல வேண்டும் பின்பு உடன் பிறந்தோர், உறவினர்கள் என்று ஒரு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கிகொடுக்க முடியும்.
பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகள் (Gender Non-Conforming Children) :
உனக்கு ஆம்பள புள்ளைய? இல்ல பொம்பள புள்ளையா? என்று கேட்கும் ஒரு Binary உலகத்தில் தான் அனைத்து குழந்தைகளும் பிறக்கிறார்கள் நான் ஆணா? அல்லது பெண்ணா? நான் எந்த பாலினம் இந்த இருவேறு பாலினம் தவிர்த்து மற்றவை இல்லையா? நான் யார்? எனது உடலும் எனது மனதும் எதை நோக்கி செல்கின்றது என்ற புரிதல் குழந்தைகளுக்கு வளரிளம் பருவத்தில் (Adolescent Age) தான் தெரியவரும். அதாவது ஆணுறுப்போடு பிறக்கும் குழந்தைகள் ஆணாகவும், பெண்ணுறுப்போடு பிறக்கும் குழந்தைகள் பெண்ணாகவும் உணரும் தருணம் அது என்று நாம் நினைக்கிறோம் ஆனால் இப்படியாகத்தான் அனைத்து குழந்தைகளும் உணரவேண்டும் தன் பாலுறுப்போடுதான் தனது எண்ணமும் மூளையும் ஒருசேர அமையவேண்டும் என்ற பைனரி திங்கிங் (Binary Thinking) இந்த உலகத்தில் பெரும் அளவில் இருக்கிறது. அப்படியாக இல்லாமல் ஒரு சில மாற்றங்களோடு தன்னுடைய பாலினம் எது என்று தேர்வு செய்ய ஒரு சரியான நிலையற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள்தான் Gender Non-Conforming Children. அவர்களுடைய உடலும் மனதும் வேறுவேறு எண்ணங்களை அவர்களுக்கு தெரிவிப்பதால் அவர்களுக்கு தனது மனதும் உடலும் ஏன் ஒருசேரவில்லை? எனக்கு ஏன் மற்றவர்களை போல் எனது எதிர்பாலினம் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை என்ற மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பார்கள்.
பொதுவாக வளரிளம் பருவத்தில் (Adolescent) குழந்தைகளுக்கு தன் உடல் எதைப்பற்றியது தன் உடலில் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகிறது நான் எந்த பாலினம் எனக்கு யாரை பார்க்கும்போது ஈர்ப்பு ஏற்படுகிறது இந்த மாதிரியான குழப்ப நிலையில் தான் இருப்பார்கள் அவர்களுக்கு முன்கூட்டியே நாம் எந்த ஒரு நிலையிலும் தன் உடல் சார்ந்த புரிதலை எக்காலத்திலும் எந்த ஒரு படிப்பிலும் ஏற்படுத்தாதது இந்த ஒரு குழப்பத்திற்கான காரணம் ஆகும்.
தன்னுடைய பாலினம் எது என்று ஒரு கட்டத்தில் அறிந்துகொள்ளும் குழந்தைகளே தன் உடல் எதை நோக்கி செல்கின்றது என்ற குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பார்கள் அப்படி இருக்கையில் தனது பாலினம் எது என்ற தேர்வு நிலையற்ற நிலையில், யாரை பார்க்கும்போது எனக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது என் உடலில் உள்ள மாற்றமும் என் மூளை சொல்லும் விஷயங்களும் ஏன் ஒரு சேரவில்லை என்ற ஆழ்ந்த குழப்பத்தில் இருக்கும் இந்த குழந்தைகளுக்காக அந்த வயதில் நாம் ஏற்படுத்தி கொடுக்கும் சூழல் பாதுகாப்பானதா? இல்லை கண்டிப்பாக இல்லை. அவர்களை திட்டுவது அடிப்பது மற்றவர்கள் முன்னால் அவர்களை உடல்சார்ந்து மனம்சார்ந்து வன்கொடுமை செய்து அவர்களை கேலிப்பொருளாக உருவாக்குகிறோம். இந்த குழந்தைகளுக்கு அதிகபடியாக பாலியல் வன்கொடுமை நடக்கிறது என்பதே உண்மை. அவர்களை இந்த சமூகம் உனக்கான சமூகம் அல்ல என்று ஒரு மலை உச்சிநுனியில் அவர்களை நிற்க வைக்கிறோம் கிழேகுதிக்க சொல்லி, அமைதியாத பார்த்துகொண்டு இருக்கிறோம்.
அரசும் அதன் அதிகாரிகளும்;
மக்களுக்கான மாற்றம் என்பது அரசு இல்லாமல் முழுமை பெறாது. மேல் கண்டவாறு பள்ளியில் இந்த குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழல் இப்படியாக இருக்க அரசு துறைகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தக்கூடிய துறைகளை சார்ந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கையில் அது இன்னும் வேடிக்கையாக உள்ளது. “இந்த மாறி இருக்கற குழந்தைகளுக்கு ஏதாது ஊசி போட்டு மாற்ற முடியுமா?” என்ற நிலைபாட்டில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு எப்படி புரியவைப்பது இது Non-Reversible Process என்று. அனைவரும் மோசமில்லை என்பது போன்று கடந்த ஏப்ரல் மாதம் 2022 நடைபெற்ற மானிய கோரிக்கை கூட்டத்தில் “திருநங்கைகள் திருநம்பிகளாக உணரக்கூடியவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக பள்ளியிலேயே கவுன்சிலிங் வழங்கப்படும்” என்று சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். திருநங்கைகள் திருநம்பிகள் ஆக உணரப்படும் குழந்தைகள் என்று சொல்லுவதே இங்கு தவறான ஒரு விஷயம் தான் ஏனென்றால் தனது பாலினம் எது என்று தேர்வு நிலையற்ற குழந்தைகளாக இருப்பவர்கள் அனைவரும் திருநங்கை திருநம்பி ஆக மாறுவது இல்லை இங்கே குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பது ஒருபக்கமிருக்க குழந்தைகளுக்கான பள்ளி சூழல் எப்படி இருக்கிறது குழந்தைகளை சார்ந்து உழைக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் துறை சார்ந்த அலுவலர்கள் அதிகாரிகளுக்கும் இங்கு முதல் கட்டமாக கவுன்சிலிங் தேவைப்படுகிறது என்பதே உண்மை. ஒரு குழந்தை பாலின தேர்வு நிலையற்று இருக்கும்போது அவர்களை சுற்றியிருக்கும் சூழலை பாதுகாக்க வேண்டும் இப்படிப்பட்ட குழந்தைகள் கண்டறியும்போது அவர்களுக்கான Safe Space பள்ளியிலும் குடும்பத்திலும் எப்படி உருவாக்க வேண்டும் என்று முதற்கட்ட கவுன்சிலிங் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே நாங்கள் எடுத்து வைக்கும் ஒரு வேண்டுகோள். கடந்த ஜூன் மாதம் Pride Monthதில் அரசு வெளியிட்ட ஒரு IEC போஸ்டர் மூலம் இந்த தலைப்பை பற்றி பேச அரசு முன்னெடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த வரவேற்புகள் அனைத்தும் பெற்றோர் ஆசிரியர்கள் அனைவரையும் மாற்றத்தை நோக்கி அழைத்துசென்று தான்யார் என்று ஆரோக்கியமாக Self explore (தன்னை ஆராய வாய்ப்பு) பண்ண குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் முதல் வரிசையில் நின்று பாராட்டி கைதட்டுவது நாங்களாகவே இருப்போம்.
இப்படி தனது பாலின தேர்வுநிலையற்று இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு விதத்தில்தான் பெற்றோர்கள் முடிவுகள் எடுப்பர். ஏற்பது (அ) மறுப்பது (Being Accepted or Not Being Accepted). அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொண்டுவிட்டால் அவர்களுக்கான எதிர்காலத்தை ஒரு மனிதம் வாய்ந்த சூழலாக ஏற்படுத்திவிட்டோம் என்று பெருமிதம் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு அந்த குழப்பத்திற்கு பதிலளிக்காமல் அந்த குழந்தைகளை நாம் Accept பண்ணாமல் அதாவது ஏற்றுக் கொள்ளாமல் போனால் என்ன செய்வார்கள்? நம்மால் நம் குடுபத்திற்கு ஏன் அவமானம் என்று வீட்டை தாண்டி செல்வார்கள். வீட்டை தாண்டி செல்லும் குழந்தைகளை யார் வேணாலும் எப்படி வேணாலும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இவர்களை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தவும் அல்லது அவர்களை வன்கொடுமை செய்யவும் வாய்ப்புகள் அதிகம். அதையும் தாண்டி அவர்கள் தங்களையே வெறுத்து தன்னையே காயப்படுத்தி கொள்வார்கள். இந்த உலகம் உனக்கானது அல்ல என்று எல்லாவிதத்திலும் வன்கொடுமையை திணித்த உங்களை விட்டு தூரம் செல்ல மலையின் நுனியில் நின்று தன் கழுத்தில் தானே கத்தியை வைத்திருக்கும் குழந்தை என்ன செய்யும்? நீங்கள் அறிந்ததே!.
இந்த உலகம் எல்லாருக்குமான உலகம் அப்படியிருக்கும்போது இந்த உலகத்தில் பிறந்து ஒரு மனிதனாக வளர நினைக்கும் அனைவருக்கும் இந்த உலகத்தில் தன் விருப்பம் போல் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. எப்போதும் குழந்தைகளின் உரிமை மனித உரிமைதான். அவர்களை அவர்களாக வளர விடுவோம் அன்போடு நாம் அவர்களுக்கான வாய்ப்புகளை கொடுப்போம் வாழவிடுவோம். குழந்தைகளுக்கான உரிமை எப்போதுமே அவரை சுற்றி இருக்கும் நபர்களிடம் இருக்கிறது அதை குழந்தைளை பிச்சை எடுக்க வைத்து அவர்களுக்கு கொடுப்பது அதிகபட்ச வன்கொடுமை. குழந்தைகளுக்குத் தேவையான உரிமைகளை அவர்கள் வாய்விட்டு கேட்பதற்கு முன்னே பாதுகாப்பாக அவர்கள் கையில் கொடுத்து வைப்பதே மிகவும் நல்லது.
இப்படி குழந்தைகளின் பெற்றோர் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் புரிதலை ஏற்படுத்துவதற்கு ஒரே வழிதான் அது “அனைவருக்குமான பாலியல் கல்வி (Inclusive Sexuality Education)”. அதை ஒரு ஊன்றுகோலாக எடுத்து எல்லா குழந்தைகளுக்கும் இவ்வுலகம் சமமானது என்பதை தெரிவிப்போம். கற்போம் கற்பிப்போம்.
எழுத்து :
கற்போம் கற்பிப்போம்,
7904023250

whoiscall
01/10/2023 at 9:35 காலை
Cheers