இருபாலீர்ப்பு (Bisexuality)

இருபாலீர்ப்பு (Bisexuality) என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பாலினங்கள் மீது காதல் அல்லது பாலியல் ஈர்ப்பு இருப்பது. உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி “இருபாலீர்ப்பு விழிப்புணர்வு” நாளாக அறியப்படுகிறது. அன்று இருபாலீர்ப்பாளர்களை கொண்டாடவும், பாலீர்ப்பு பற்றி மக்களுக்கு அறிவுப்பரப்படுகிறது.

 

பொது சமூகத்தால் எப்போதும் இருபாலீர்ப்பு மக்கள் ஏதோ குழப்பத்தில் இருப்பவர்கள் போலவும், முடிவு எடுக்கத் தயங்கும் மனிதர்கள் போலவும் பார்க்கப்படுகிறோம். எதிர்பாலீர்ப்பாளர்கள் தவிர அனைவருமே இந்தச் சமூகத்தால் ஒடுப்பட்டவர்களாகத் தான் இருக்கின்றோம். அவர்கள் காதல் மட்டுமே தெளிவானது, அழகானது போலவும், ஓர்பாலீர்ப்பு, இருபாலீர்ப்பு, பலர்பாலீர்ப்புக் (pansexual) காதல், அறியாத குழப்பத்தால் வருவது போலச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் தவறு. இனி வரும் இளைய பால்புதுமை தலைமுறையினர் மற்றும் பால்புதுமை குழந்தைகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

 

பல சொல்லப்படும் முற்போக்குவாதிகள் கூட, சில நேரங்களில் இருபாலீர்ப்பாளர்களை எப்போதும் ஒன்று ஓர்பாலீர்ப்பாளராக இருக்க வேண்டும் அல்லது எதிர்பாலீர்ப்பாளராக இருந்தாக வேண்டும் என்று தங்களுக்குச் சுலபமாக இருக்கப் பெயர் தெளிவுக்காக வற்புறுத்துகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால், நாங்கள் இருபாலீர்ப்பாளர்கள் என்று ஏற்கனவே எங்களை பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிவு செய்து விட்டோம்.

 

ஒரு இருபாலீர்ப்பாளருக்கு முதல் முறையாக, ஒரே பாலினத்தவர் மீது காதல் அல்லது காம ஈர்ப்பு ஏற்படும் போது கடந்த காலத்தில் வேறு காதல்கள் இருந்திருக்கும் பட்சத்தில், இவ்வளவு நாள் வாழ்வில் எதிர்பாலினத்தவர் மீது கொண்ட காதல் எல்லாம் பொய்யானது என்று நம் கடந்த காதல்கள் மேல் நமக்கே அவநம்பிக்கை வரும். அல்லது இப்போது புதிதாக வந்திருக்கும் இந்தக் காதல்/ ஈர்ப்பு பொய்யோ என்று தோன்றும். இந்தச் சந்தேகத்தில் இருந்து நம்மை நாமே பல சுய ஆய்வுகள் (self- exploration) செய்து, மீண்டு வந்து, நம் பாலீர்ப்பை நாம் முழுதாக ஏற்றுக்கொள்ளும் தருணம் தான், இனி சமூக ஒடுக்குமுறையினால் நம் காதலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று தைரியம் தோன்றும்.

 

பொது சமூகத்தைப் பொருத்தமட்டில் இருபாலீர்ப்பாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கின்றனர். ஆனால் பால்புதுமை சமூகத்தை பொருத்தமட்டில் இருபாலீர்ப்பாளர்களுக்கு என்று சில சலுகைகள் (privilege) உண்டு என்று சொல்லலாம். சில இருபாலீர்ப்பாளர்கள் எதிர் பாலினத்தவர் மீது காதல் கொண்டு அவரையே வாழ்க்கைத் துணையாய்த் தேர்ந்தெடுத்து வாழலாம் (Straight-passing Bisexual). அவர் சில சமூக ஒடுக்குமுறைகளில் இருந்து விலகியே இருக்கலாம். அது முழுவதுமாக தனிப்பட்ட நபரின் விருப்பம். ஆனால் அப்படி ஒரு வாழ்வை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அவர்கள் மீண்டும் மீண்டும் தங்களுக்குள் இருக்கும் வேறு பாலினத்தவர்களின் மேல் வரும் காதலையும் உரக்கச் சொல்லிக்கொண்டே இருந்தாலொழிய அவர்கள் பால்புதுமை என்று பார்க்கப்படுகிறார்கள். இதனால் straight-passing Bisexual மக்கள் தங்கள் பாலீர்ப்பை மீண்டும் மீண்டும் சமூகத்திற்கு நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

 

முடிவாக, இங்கு இருபாலீர்ப்பாளர்களிளுள்ளே பல வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சமமாக நடத்தப்பட வேண்டும். வரும் தலைமுறை இருபாலீர்ப்பாளர்கள் பொது சமூகத்தாலும் சரி, வானவில் சமூகத்தாலும் சரி, எந்த ஒரு ஒடுக்குமுறைக்குள்ளும் சிக்காமல், தங்கள் இஷ்டம் போல் வாழ வேண்டும்.

 

-ஹரிணி பிரியா

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன