கல்விக்கு வயது தடையாய் இருப்பது ஏன்?

 

சமீபத்தில் நான் மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றேன். அது எனக்குப் பெருங்கனவு. வாழ்க்கையில் பல இன்னல்களுக்குப் பிறகு, 36 வயதில் மேல்நிலைப் பட்டயம். நான் திருநங்கையாதலால், என் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, தனித்து வாழ வேண்டிய நிலை. அதனால் படிப்பைத் தொடர முடியாமல், பணிக்குச் செல்லத் தொடங்கினேன். அந்த 10-15 வருடங்களில், என்னுடன் சேர்ந்து பட்டதாரி ஆக வேண்டும் என்ற கனவும் கூடவே வளர்ந்தது. அதை நனவாக்க வேண்டி சில முன்னெடுப்பக்களை எடுக்கத் தொடங்கினேன். முதலில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி. பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு. போதிய பணமில்லா காரணத்தினால், என்னால் பயிற்சி நிலையங்களில் பயில இயலவில்லை. ஆகையால் முதல் சில முயற்சிகளில் தோல்விக்குப் பின்னே, சுய முயற்சியால் படித்து தெளிந்து, இந்த ஆண்டு மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளேன்.

 

தேர்வு முடிவை பார்த்த சமயம், நான் என் கனவை நெருங்கி விட்ட மகிழ்ச்சியை உணர்ந்தேன். இன்று நான் முழு நேரம் கல்வி கற்பதற்குரிய பொருளாதார சூழலில் உள்ளேன். ஆதலால், நேர விரயம் செய்யாமல் கோயம்புத்தூரிலுள்ள சில கல்லூரிகளில் இளங்கலை (பி.ஏ அல்லது பி.காம்) பிரிவினில் சேர விண்ணப்பிக்கத் தொடங்கினேன். கல்லூரிகளிலிருந்து பதில் வந்தன, எனக்கு 36 வயதாதலால் என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பாடாதென்றும். 25 வயது என்ற உச்சு வரம்பு இருப்பதாயும்.

 

பெண் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண் கல்வி என்று மணிக்கொரு முறை பேசும் இதே இந்திய நாட்டில் தான், கல்விக்கு வயது வரம்பாம்.

 

இள வயதிலேயே கல்வி பயில எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இளமையில் பலருக்கு வாழ்வதே பெரும் போராட்டம். அதில் கரையேறி, கல்வி பயில விழைகையில், அதற்கு வழிவகை செய்வதில் என்ன பிரச்சினையோ?

 

எந்தச் சட்டத்தின் படி என் உரிமை பறிக்கப்படுகிறது? எந்த அரசியல் சாசனம் அவர்களுக்கு இந்த உரிமையை கொடுத்தது?

-ஊர்வசி (மொழிபெயர்ப்பு- பரதன்)

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன