என்றும் போல் அன்றும் என் இன்ஸ்டாகிராம் ஃபீட்-ஐ (Instagram feed) ஸ்க்ரோல் (scroll) செய்துகொண்டிருந்தேன். அந்தப்பதிவு கலவி பற்றிய ஒரு கவிதை. ஆனால் என் கண்ணை, அதைத் தாண்டி இன்னும் ஈர்த்தது அதன் கீழிருந்த ஒரு கமெண்ட் (comment). அது கிட்டத்தட்ட இவ்வாறு இடப்பட்டிருந்தது, “ஒரு ஆணின் வாழ்வை முழுமை ஆக்குவது ஒரு பெண்ணே, அவ்வாறு ஒரு பெண்ணின் வாழ்வை முழுமை ஆக்குவதும் ஒரு ஆணே. அப்படி நோக்கின் கலவி தான் நம் ஒவ்வொருவர் வாழ்வையும் முழுமை ஆக்குகிறது”. எனக்கு மெல்லிய அதிர்ச்சி, இதைப் படித்ததும். என் முதல் எண்ணம் இதுவாக இருந்தது, “இன்னும் என்னென்னத்தான் இந்தச்சமூகம் ஒருவரின் உறுப்பை வைத்து நிர்மாணிக்கும் என்று”. உறுப்பை வைத்துப் பாலினம், ஒரு சாராரின் உறுப்பில் மட்டும் கற்பு, குறித்த உறுப்பிருக்கும் சாரார் அழுதல் கூடாது, இவ்வுறுப்பிருத்தல் வீரம், மற்றது மென்மை, மயிர் வளர்க்கலாமா என்பதற்கும் உறுப்பு, எவ்வாகனம் எச்சாரார் ஓட்டலாம் என்பது கூட உறுப்பை வைத்துத்தான். இன்னும் எத்தனை எத்தனையோ. மிகச்சாதாரணமாய் நாம் கடந்துபோகும் இது போன்ற விடயங்கள் குயிர் (queer) மக்களின்மேல் நடத்தப்படும் எவ்வளவு பெரிய வன்முறை.
என்று திருந்துமோ இந்த மானுட இனம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த கமெண்ட்-ஐ (comment) இட்டவர் ally ஆக இருக்க வாய்ப்பே இல்லையா என்ற கேள்வி உதித்தது.
“இருக்கலாம்” என்று பதில் மொழிந்தது மனம்.
“ஏன் இருக்கலாம்?”
“இந்த மனவெண்ணம் நம்முள் ஊறிப்போன ஒன்று. இது அவர் அறியாமலேயே கூட வெளிக்கொணரப்பட்டிருக்கலாம்.”
மனம் சொல்லியது சரியெனப்பட்டது.
இப்படி இச்சமூகம் ஸ்டீரியோடைப் (stereotype) செய்து வைத்திருக்கும் பலதில் ஒன்று “முழுமை”. இவ்வுலகில் ஏன் முழுமை என்றொன்று இருக்க வேண்டும். அப்படியே அது ஒரு ஓரமாய் இருந்து விட்டுப்போனாலும் அது ஏன் கலவியாய் இருக்க வேண்டும். செக்ஸ் எடுகேஷன் (Sex Education) தொடரில் ஒரு வசனம் வரும், “Sex doesn’t make us whole”. அதாவது “கலவி ஒருவரை எந்நிலையிலும் முழுமை ஆக்காது”. அதுதான் எத்துணை உண்மை. அது அவ்வாறு ஸ்டீரியோடைப் (stereotype) செய்யப்பட்டிருப்பதால் மட்டுமே தன்னை அறியாமல் ally-யாய் இருக்கும் ஒருவரால் கூட இப்படி ஒரு கருத்தை மிக மேம்போக்காக்காய் சொல்ல முடியும், பலரால் இதை மிகச் சாதாரணமாய் கடந்தும் போக முடியும். போயும் போயும் குயிர் (queer) மக்கள் சிறுபான்மை, ஒடுக்கப்பட்டவர்கள் தாமே.
பற்பல உடைக்கப்படவேண்டிய ஸ்டீரியோடைப்-களில் (stereotype), இம்முழுமையும் உண்டு. அதன் முதல் படி, புனிதம் கலைத்தல். ஒடுக்கப்படுகின்றவை அவ்வொடுக்குமுறைக்குள்ளாகவே இருக்க, சமூகம் பயன்படுத்திடும் கோல் “புனிதம்”. ‘என் கடவுள் புனிதம், நீ தீட்டு. நீ என் கோவிலுள் நுழைந்தால் என் கடவுளின் புனிதம் கெடும்’. இதைத்தானே காலம் காலமாய் பிதற்றி ஒடுக்கப்பட்டிருக்கிறோம், ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதே கதை தான் இம்முழுமையிலும்.
ஒரு சிஸ்-ஹெட் (cis-het) நபரிடம் “உங்கள் வாழ்வின் நோக்கம் என்ன?” என்று வினவினால், அதில் சதத்தில் தொண்ணூற்றைவர் “என் பெயர் நிலைத்திருக்க வருங்கால சந்ததியாய் ஒரு குழந்தையை விட்டுச்செல்வது” என்பர். இதிலேயே நமக்கு பல முரண்கள் இருப்பினும், தற்சமயம் நாம் நோக்க வேண்டியது, அப்படி ஒரு வாழ்நாள் கடமையை முடிக்க யோனிக்குள் குறி புகுத்தும் கலவி ஒரு கோல் ஆகியமையால் அது புனிதத்தன்மையைத் தானாய் அடைந்து விடுகிறது. அதை எவரோ புனிதப்படுத்தி என்னமோ செய்து விட்டுப்போகட்டும் என்று நம்மால் ஒதுங்கி நிற்றல் ஆகாது. ஏனெனக்கேட்பின் ஒன்று புனிதத்தன்மையை அடையும் பொழுது, அதைச் சார்ந்த, பிறர் ஏற்காத விடயங்கள், பாவங்கள் ஆகின்றன. அதாவது யோனிக்குள் குறி புகுத்தும் கலவி தாண்டி, தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் ஆசைகள் ஒரு பொருட்டாய்க்கூட மதிக்கப்படுவதில்லை. அதனிலும், அதை பாவமாய் முத்திரைக்குத்தப்பட்டு, அப்படி இருப்பவர் நோயுற்றவர் போல் நடத்தப்படுவதும், அதை குணமாக்க மருத்தவரால் முடியும் என நம்பப்படுவதும், மருத்துவரால் இயலாமல்போயின், ஆண்டவனால் முடியுமெனப்படுவதும், தன்னைப் போலவே ஒரே வாழ்க்கையை உடைய அம்மாந்தர்க்கு, தான் இழைக்கும் எத்தகைய கொடூரம் என்பதை என்றுணருமோ இந்தச் சமூகம்.
ஆதலால் நாம் உரக்கச்சொல்ல வேண்டியது, கலவி புனிதமன்று. பசிக்கு உண்ணுதல் போலவே அதுவும். அவரவர்க்கு விரும்பிய உணவை அவரவர் உண்ணட்டும். இதிலும் மாட்டிறைச்சி அரசியல் வேண்டாமே!!
அதன் பொருட்டு நாம் முன்னமே செயலாற்றி இருக்க வேண்டியது, இப்பொழுதாவது தொடங்க வேண்டியது, உரையாடல். அவ்வுரையாடலை வீட்டில் இருந்துத் தொடங்க வேண்டும். நம்முன் சந்ததியினரின் தலையில் அறையப்பட்டவற்றை மாற்றுதல் மிகக்கடினம். ஆதலால் நாம் பச்சை மரமாம் குழந்தை மனதிலிருந்து தொடங்க வேண்டும். அவர்களுக்குக் கலவியை “புனிதமாய்” ஏதோ ஒரு அறைக்குள் அடைக்காது, வீட்டு அலமாரியில் வைப்போம். அதன் பக்கங்களை புரட்டட்டும். கேள்வி தோன்றின் வினவட்டும். நம்முடன் விவாதிக்கட்டும். அவர் பாலினத்தை அவர் ஆராயட்டும், அவர் தேர்ந்தெடுக்கட்டும். அந்தச் சுதந்திரத்தை(?!) அவர்களுக்குக் கொடுப்போம். அவ்வாறு செய்யின், இது இவ்வளவு தான் என்பதுணர்வர். அப்புனித பிம்பம், சுக்குநூறாக உடையும். அவர்மூலம் அதன் வீரியம் விரியும்.
அதற்கு முன் நாமதில் தெளிதல் அவசியம். அதனினும் அவசியம் நம் வீட்டில் அந்த உரையாடல் நிகழும் சூழலை உருவாக்குதல். நினைத்ததை மொழியும் சூழல். அது உருவாகின் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து நிகழும்.
400-500 வார்த்தைகளில் சொன்னதை ஒற்றை வரியில் சொல்லலாமென்றால் இப்படிச் சொல்வேன் நான். “அன்பு போதாது, பேரன்பு செய்யுங்கள்”.
-பரதன்
