வாங்க…வாங்க…

படிப்பறிவில்லா பரதேசி முண்ட நான் பட்ட கதையைக் கேட்க வந்திருக்கீங்களா

பார்த்தவர் எல்லாம் வாய் பிளக்க இந்தப் பாலாபோன பதுமை கேடுகெட்ட போன சேதி கேக்க வந்து இருக்கிறீர்களா…?!

வாங்க வாங்க…

அக்கா அக்கா உங்களத்தான் என்னோட கதை வேணுமா

அண்ணே அண்ணே உங்களத்தான் உங்களுக்கு கேட்கணு தோணுதா
அட சொல்லுங்க அண்ணே

அடப் போங்க

நானே சொல்றேன்..

பச்ச நெல்லு பூப்பூக்க பதமா நடந்துவர
பார்ப்போரெல்லாம் கண் உறுத்த. பட்டுக்கு மடிப்பு நோகாம.. பருத்திக்கு பஞ்சமில்லாம..
எட்டுக்கும் எம்பாட்டு கேட்க
இடி இடித்து மழ பேஞ்சும் உடலு உருகாம.. உத்தமீனு பெயரெடுத்து‌ கொலுசுக்கு குறவில்லாம குலுங்கக் குலுங்க நடந்து வந்தேன் …

இந்த பொம்பளையை திருநங்கைனு சொன்னாங்க..
அரவானி சொன்னாங்க..
சரி அதை விடுங்க…
உலகம் ஆயிரம் சொன்னாலும்..
இந்த ஒத்த உசுரு மொத்த சனங்க மத்தியில நின்னு வாழனும் எனக்கு தெரிஞ்ச மகுடமாட்டம் ஆட போனேன்..
நாலு காசு பார்த்து அரை வயிறு கஞ்சியாவது ‌
யாரையும் அழுத்தாமல் குடிக்கணும்னு புதுசு புதுசு நான் மகுடம் ஆடினேன்..
காலனியில் பொறந்த புள்ள நானு
நீலநிறம் புடிச்ச பொண்ணு நானு.
அம்பேத்காரே முழு அர்த்தம்னு இந்த பொது சனத்துக்கு சொல்ல இன்னும் ஒசர குதித்து குதித்து ஆடினேன்

இந்த பாழாப் போன மனசுக்கு பாசத்தை கொடுக்க யாருமில்லை
வேட்டியை உருவி சேலை கட்டுனப்போ பச்ச தண்ணி ஊத்த யாருமில்லை அத்தனை அழுது தீர்த்து..
அர வைத்து கஞ்சிக்காக மகுடம் ஆடினேன்..

ஆட்டம் ஆட ஒருநாள் அந்த ஊருக்குப் போயிருந்தேன்

இடுப்பு வளைவ பார்த்து ஒருத்தன் சிரிச்சு நின்னான்

இந்த அர்ப்ப மனசு அவ மேல ஆசை வச்சாச்சு..

அவனும் என் மேல ஆசை வச்சான்..

இந்த திருநங்கை ஆட்டக்காரிய‌ ஒரு குடியான வீட்டுப் பையன் விரும்புறானு ஒரு யோசனையும் இல்லை
காதலா என்னானு தெரியல அவ மேல ஆச வெச்சேன்..
முழுசா நம்பிக்கை வைத்தேன்..
நாள்பூரா பேசினேன்..
எதிர்காலம் நல்லா இருக்கும்னு ஆசைப்பட்டேன்

அப்பப்ப வீட்டுக்கு வருவான்
ஆசையா நாலு வார்த்த பேசுவான்

இந்தப் பாவிமக சிரிக்கி அன்னைக்கும் அதேமாதிரி நெனச்சுட்டு இருந்தேன் ‌‌

என் வீட்டு வாசல்ல நின்னு உதயா உதயா சொல்லி கூப்பிட்டான் ‌…

ஐயோ ஆசை ஆசை வச்சவன் இம்புட்டு இம்புட்டு பாசமா கூப்பிடுறானு

கலஞ்ச அரிசியையும் கொதித்த ஒலையையும் பாதியில் விட்டு வாசல்ல போய் நின்னேன் ..

இந்த சிறுக்கிக்கு அப்பவும் தெரியல…

வெளியில வந்து பார்த்தா ஆசை வச்ச ஆம்பளையோட அப்பனும் ஆத்தாளும் ஆங்கோர்ம்மா நின்னுட்டு இருந்தாங்க…

என்னா ஒத்த வார்த்தை பேச விடல‌..

ஏண்டா 9 பயலே ‌….

உனக்கு ஏன் புள்ள கேக்குதா….?னு

மல்லிகைப்பூ கோர்த்து வச்சு மணமணக்கும் என் முடிய தரத்தர தரையிலே இழுத்துப்போட்டு அடிச்சா.

என் நெஞ்சில் ஏறி ஓங்கி ஒரு மிதி மிதிச்சா.. அந்த கேடுகெட்ட சிறுக்கி

நா ஆச வச்ச ஆம்பளையோட ஆத்தாகாரி …

அவங்க அப்பன்காரன் மட்டும் சும்மாவா இருந்தான்…
என் மகனோட படுத்த ஈனசாதி ஒம்போது என்னோட வந்து படுடா பொட்டனு கூப்பாடு போட்டு என் குறுக்களயே மிதிச்சான்

நான் ஆசைப்பட்ட யோக்கியன்….

அயோக்கிய நாய் என்னைய ஏரெடுத்து பாக்கல.

ஐயோ என்ன விடுங்களேன்….
நான் என்ன பாவம் செஞ்சேனு இப்படி அடிக்கிறீங்க‌.

ஐயோ வலி தாங்கலையே என்ன விட்டுருங்க சாமிகளா கெஞ்சினே…

கூப்பாடு போட்டேன் …

 

கொஞ்சம் கூட இரக்கம் காட்டாத அந்த பொம்பள..
ஓடிவந்து என் மூஞ்சி மேல மூத்திரத்தை பேஞ்சு… இருந்து நீ பொறந்த சாதிக்கு ஏன் மயன் கேட்குதானு கேட்டா.‌‌.‌

இடிந்து நொறுங்கி போய் கிடக்கேன்
உடம்பு பூராம் காயம் ரத்தம் வழிந்து ஓடுது ‌‌…

உங்களுக்கு மனசு நோகலையா உங்களுக்கு மனசு நோகலையா

அரவைத்து கஞ்சிக்கு படுறபாடு…

திருநங்கையா இந்த உலகத்தில் பிறந்து படுற பாடு….

பொம்பளையா, திருநங்கையா மட்டுமில்லை..
ஒரு தலித்‌ திருநங்கையாக‌ நா படுற பாடு உங்களுக்கு கேட்கலையா…?
சொல்லுங்க ‌..

எத்தனை கஷ்டம் தான் ..
ஏன் திருநங்கை காதலிக்கக் கூடாதா…
ஏன் தலித் திருநங்கை காதலிக்கக் கூடாதா.. சொல்லுங்க…
ரத்தமும் சதையும் எலும்பும் கலந்து பரந்த உடம்பு தான நாங்களும்.. உங்க அன்பையும் மரியாதையையும் தான் நாங்கள் கேட்டோம். ஆனா நீங்க குடுக்குற தெல்லாம் அவமரியாதை..

காதல் என்ற பெயரில் எங்கள ஏமாத்தாதீங்க ஆம்பளை பொம்பளை எங்களை விட்டுடுங்க நாங்க ஆடி பொழச்சு கிறோம்.

எங்களுக்கு இந்த உலகத்தில் வாழ எல்லா தகுதி இருக்கு…

 

-அழகு ஜெகன்

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன