திருநர் மக்களின் உய்வில் இடஒதுக்கீட்டுக்கான தேவை – ஓர் ஆய்வு
இந்தியாவில் ஏறத்தாழா 10 லட்சம் திருநாள் மக்கள் வாழ்வதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இதுவும் கூட, தன்னைச் சமூகத்தில் திருநர் ஆக வெளிப்படுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை மட்டுமே. இன்னும் பலர் சமூக அழுத்தங்களின் காரணமாகத் தன்னை சுயபாலினத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ள இயலாத நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
திருநர் மக்களின் வாழ்நிலைகள் பெரும்பாலும் நாட்டின் மூலைமுடுக்ககளிலேயே ஊசலாடுகின்றன. எந்தவொரு வேலைவாயுப்புகளும் மறுக்கப்படும் நிலையில், பிச்சை மற்றும் பாலியல் தொழில்களிலேயே தள்ளப்படுகின்றனர். தகைசால் கல்வியும், தொழில்நுட்ப அறிவும் குறைவாக இருப்பது, இந்தப் பிரச்சனையின் முக்கியக் காரணமாக அறியப்படுகிறது.
திருநர்கள், வளரிளம் பருவத்திலேயே தங்கள் உடலும் மனமும் வேறு வேறாக இருப்பதை உணர்கின்றனர். இது பெரும்பாலும் பள்ளிப் பருவமாகவே இருந்து விடுகிறது. அவர்களுள் ஏற்படும் மாற்றங்கள் மற்ற சிறுவர், சிறுமியருக்குப் புரியாத மற்றும் கேலிக்குரிய ஒன்றாக ஆக்கப்படுகிறது. தெளிவு, தைரியம் மற்றும் பாதுகாப்பு தர கடமைப்பட்டுள்ள ஆசிரியர்களும், போதிய விழிப்புணர்வின்மையால் தன் மாணவ, மாணவயினரிடம் எழும் மாற்றங்களை அறிவியல் கண் கொண்டு தெளியவைக்க முயல்வதில்லை. எனவே, பெரும்பான்மையான திருநர் குழந்தைகள் கல்வியின் ஆரம்ப நிலையிலேயே வெளியேற வேண்டிய அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். எந்தவித ஊக்கமோ, நம்பிக்கையோ கொடுக்க வேண்டிய அரசும் இதுநாள் வரை வாளாவிருக்கிறது.
2014-ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் ‘NALSA vs ஒன்றிய அரசு” வழக்கில் அளித்த தீர்ப்பில் திருநர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசைப் பணித்தது. “மற்ற சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்படுவது போன்றே திருநர்களுக்கும் உரிய இடஒதுக்கீடு முறைகளை கல்வியிலும் மற்ற அரசுசார் பணிகளிலும் கொடுக்கப்படவேண்டும்” என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மையின நலவாரியம், ஏற்கனவே உள்ள பின்தங்கிய வகுப்பினருக்கான (OBC) 27% இடஒதுக்கீட்டின் கீழ் திருநர்களையும் சேர்த்துப் பயன்பெறத்தக்க வழிவகைகளைப் பரிந்துரைத்தது. ‘திருநர் மசோதா 2019’-ல் இப்பரிந்துரைகள் சேர்க்கப்படும் முன்னரே ஒன்றிய அரசால் கைவிடப்பட்டது. முக்கியமாக, இதன் காரணமாகவே இடஒதுக்கீடு போன்ற எந்தவொரு பயனுறு அம்சங்களுமற்ற ‘திருநர் மசோதா 2019’-ஐ எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அண்மையில், July 6, 2021 அன்று நாட்டிலேயே முதன்முதலாக திருநர் மக்களுக்கு 1% கிடைமட்ட இடஒதுக்கீட்டை (Horizontal Reservation) கர்நாடக அரசு அறிவித்தது. இதன்படி open competition உட்பட அனைத்து வகையினங்களிலும் திருநர் மக்களுக்கு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 1% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
திருநர் இடஒதுக்கீட்டில் இன்றைய ஒன்றிய அரசின் நிலைப்பாடு நம்பிக்கையளிப்பதாக இல்லை. பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நடத்தப்பட்டாலும் திருநர் மக்களின் குரல் இன்றுவரை பாராளுமன்ற அவைகளில் எதிரொலிக்கவில்லை.
இடஒதுக்கீட்டில் கொடுக்கப்படவேண்டிய சதவீதம் குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள இன்றைய நிலையில், திருநர்கள் எண்ணிக்கை குறித்த தெளிவான விவரங்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுவரை வெளியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்கள் பலவற்றிலும் ஆண், பெண் என்ற இரு தெரிவுகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. இவை ‘பால்’ சார்ந்த தெரிவுகளே அன்றி, ‘பாலினம்’ சார்ந்தவை அல்ல. பாலினம் என்ற இரீதியிலேயே மாற்று பாலினத்தோர் இந்தியாவில் திருநர் என்று அறியப்படுகின்றனர். எனவே அரசு கணக்கீடுகள் மற்றும் விவர ஆவணங்களில் மாற்றுப்பாலினத்தோரும் சரியாக அடையாளப்படுத்த வாய்ப்பளிக்கப்படும் வரை அவர்களுக்கான சரியான இடஒதுக்கீட்டின் சதவீதமும், ஏன் இடஒதுக்கீடுமே கூட எட்டாக்கனியாகவே தெரியும்.
சாதி இரீதியில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பலவும் இடஒதுக்கீட்டின் மூலமே இன்று ஓரளவுக்கேனும் முன்னேற்றம் காண்பது சாத்தியமாகி உள்ளது. இந்தச் செங்குத்து இடஒதுக்கீட்டையும் (Vertical reservation) தாண்டி கிடைமட்ட இடஒதுக்கீட்டுக்கான பேச்சுகள் மற்றும் விவாதங்கள் இன்று மேலோங்கியுள்ளன. ஒடுக்கப்பட்டோருள்ளும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளான பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருடன் திருநர்களையும் இணைத்து அவர்களுக்கான இடஒதுக்கீடு முறைகளையும் ஒன்றிய அரசு நெறிமுறைப்படுத்த வேண்டும்.
கல்வியே சமூகத்தின் திறவுகோல். அந்தக் கல்வியானது சரியான முறையில் அனைத்து பிரிவு மக்களையும் சென்றடையச் செய்வதில் அரசானது முனைப்புக் காட்ட வேண்டும். இதன் மூலமாகவே வேலைவாய்ப்புகளிலும் பால், பாலினப் பாகுபாடுகள் கலையப்படும். இதன் முன்னோட்டமாக கிடைமட்ட இடஒதுக்கீட்டில் திருநர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சதவீதம் குறித்த ஒரு திறந்த உரையாடல் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கல்வியும் பொருளாதார சுதந்திரமுமே சுயமரியாதை சுகவாழ்விற்கான அடித்தளங்கள். காலங்காலமாக ஒடுக்கப்படும் திருநர் சமூகம் உய்வு கொள்ள இடஒதுக்கீடே இன்றைய நிலையில் சரியான ஓர் துவக்கப்புள்ளியாக அமையும்.
இந்தப் புரிதலை உரையாடல்கள் மூலமும், போராட்டங்கள் மூலமும் ஆட்சியாளர்களுக்கு உருவாக்குவோம். மேலும், நிச்சயமாக ஓர் நாள் வெல்வோம்.
தோழமையுடன்,
மீனாமகன்.
