ஞாயிறு இரவு 10.15 மணி. நம் கதையின் நாயகியின் அறையில் மட்டும் விளக்கு வெளிச்சம். “என்மனத்தில் ஏன் இத்தனை எண்ணங்கள் ? நான் ஏன் இத்தனை மனஅழுத்தத்தில் இருக்கிறேன்?“, என்ற சிந்தையில் படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.
விட்டத்தை நோக்க, அறையை பேரமைதி சூழ்ந்தது. மின்விசிறியில் வழக்கத்தை விட அதிக சத்தம். தனிமையில் இரவைக் கழிப்பது அவளுக்குப் புதிதன்று. வாழ்க்கை அவளுக்கு இன்றுவரை அப்படித்தான் இருந்திருக்கிறது. இதுவும் கடந்து போகும் என்பதவளெண்ணம். அவள் ஆசைப்படுவதை அடைய வாழ்க்கை அவளை தயார்படுத்துகிறதோ என்னவோ.
கிறிஸ்துமசும் வந்தாகி விட்டது. இன்னும் சில நாட்களில் 2022. இவ்வுலகம் இயல்பு என்று நினைத்த பலவற்றை 2019-லிருந்து வழக்கொழித்துவிட்டது, கோவிட். எத்துணை மாற்றங்கள் தான் அன்றிலிருந்து. ஆனால் நானோ, இன்னும் “ஏன் அவள் என்னையும் என் காதலையும் நிராகரித்தால்? “ என்னும் கேள்வியிலேயே சுழன்று கொண்டுருக்கிறேன். தான் வேறொருவரை காதலிப்பதாக அவள் கூறி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. இருந்தும் மீளவில்லை நான். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழவே உருவெடுத்தவர்களென்றும், ஆதலால் அவளுடைய இந்தக் காதல் பல நாள் நீடிக்காதென்றும், அவள் தன்னைத் தானே பொய் சொல்லி ஏமாற்றிக்கொள்கிறாள் என்றெண்ணம்.
‘அவளைப் பற்றி எண்ணாதே’ என எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் ஒவ்வொரு முறையும் என்னுள் தோன்றும் ஒரே எண்ணம், “நானும் அவளும் சேர்ந்து வாழப்பிறந்தவர்கள்”. அப்படி தோன்றும் ஒவ்வொரு முறையும் என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொள்வேன். இப்படி ஒரு அதீத நம்பிக்கை இருப்பதனால், எனக்கு மனப்பிறழ்வேதும் இருக்குமோ என்று தோன்றுதல் எனக்கே இயல்பாகிவிட்டது. யார்தாம் இது போன்ற ஒரு எண்ணம் கொண்டு தன்னைத் தானே வருத்திக்கொள்ள முடியும்?
என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேனோ? இல்லாத ஒன்றிற்காக காத்திருக்கிறேனோ? இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டிருக்கும்பொழுதே, என்னுள் இருக்கும் குரல் விளம்பும், “ஆம் இல்லாத ஒன்று தான். இன்றுவரை இல்லாத ஒன்று. ஆயினும் நடக்கும்”.
என்னுள் எங்கிருந்து இக்குரல் மொழிகிறது? நான் என்னதான் செய்ய?
காத்திருந்து விரக்தி அடையவா?
அவள் தன் புது இணையுடன் செய்வதனைத்தையும் கண்டு களிக்கவா?
என்னுள் இருந்துகொண்டே, ஏன் இக்குரல் நான் இன்னும் துயரம் கொள்ள நினைக்கிறது?
நடந்ததை ஏற்று, கடந்து செல்லும் பலமில்லையோ எனக்கு?
நான் கடுமையாக உழைக்கிறேன். சமீபத்தில் பதவி உயர்வு கூட கிட்டியது. சக பணியளர்களின் நன்மதிப்பும், மரியாதையும் உண்டு. நான் நேசிக்கும், எனை நேசிக்கும் நண்பர்களுண்டு. சக மனிதருடன் பழக புறம் செல்லும் பழக்கமுண்டு. இசை கேட்டு நாட்கழிப்பேன். காலாற நடை செல்வேன். பொருள் வாங்க கடை செல்வேன். சில நாள் நானே சமைத்து உண்பேன். சில நாள் உணவகம் சென்று புசிப்பேன். நான் விரும்பியதை நினை நிறுத்தி செய்வேன். ஆயினும் என்னையறியாமல் அவள் என் நினைவிலேயே தான் இருப்பாள், இருக்கிறாள், ‘அவள்’ என்று தனியாய் ஒன்றில்லாது, அவளும் நானும் ஓருயிர் போல.
சிலரை நான் விரும்புவதாய் எண்ணி, பின் அது பாசாங்கென்றுணர்ந்து, அவர்மேல் எனக்கு காதலில்லை என்று அவர்களின் உணர்ச்சியோடு நான் விளையாடியதுண்டு. அந்தப்பாவமோ? நானும் மற்றவரை போல் மிகச் சாதாரண ஒரு பெண் தான் என்றும், இந்நினைவை கடந்து செல்லும் நேரமிது என்றும் நம்ப விழைகிறேன். பலநாளாயிற்று, ‘இது கடந்து போகும், இன்று அவளை நேசிக்குமளவு வரும்நாளில் காதலிக்கப்போவதில்லை’ என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ள ஆரம்பித்து. அது நிறைவேற வாரமாகலாம், மாதமாகலாம், வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் நாங்கள் எங்களிருவருக்காய்ப் பிறந்தவரில்லை என்பது மட்டும் பொய்யாக இருக்கட்டும்.
-மது