சமநிலைக்கு வருவீர்களா ?
நீள் பாதையில்
வாழ் நாள் கழிய
நடந்து கொண்டே
இருக்கிறோம் !
நோக்கமில்லாமல்
நடக்கவில்லை !
தாக்கமில்லாமல்
துளிர்க்கவில்லை !
துணிந்துவிட்டோம் !
நீங்கள் கட்டிவைத்த
பிற்போக்கு கலாச்சார
கட்டமைப்புச் சாலை
பள்ளம் மேடாக கிடக்கிறது !
எங்கள் செருப்புக் கால்கள்
மேடுகளை தேய்க்கிறது !
நாங்கள் உமிழும் எச்சில்கள்
பள்ளத்தை நிரப்புகிறது !
சாலையில் எச்சில்
துப்பாதீர்கள் ! என்கிறீர்களே ?
சாலை ஒழுங்காக உள்ளதா !
அப்போதாவது
சமநிலைக்கு வருவீர்களா ?
இது உங்கள் மேலுள்ள
வன்மம் அல்ல
சமதர்மத்திற்கான அழைப்பு !
இது எங்களின் சுயநலம் அல்ல
சமூகத்தின் நலம் !
நாங்கள் காதல் செய்யும்
ஒவ்வொரு கணமும்
கற்கால கலாச்சாரம்
கலைவதைக் காண்கிறோம் !
நாங்கள் காமம் செய்யும்
ஒவ்வொரு நொடியும்
கற்பெனும் மூடமெல்லாம்
குலைவதைக் காண்கிறோம் !
நீங்கள் எங்கள் மீது
வீசும் ஏச்சுக்களுக்கு
எங்கள் இதழ் சாயத்தால்
வண்ணப் பூச்சு
செய்துவிடுவோம் !
உங்கள் வார்த்தைகள்
எங்கள் உடலைக் கூராயும்
போதெல்லாம் !
பிறக்கமுடியாமல்
தாயின் யோனியில்
உள்ளேயும் வெளியேயும்
அலைவதைப் போல
ஒரு திணறல் !
ஒரு தவிப்பு !
ஒரு வலி !
கற்பனைக்கு கூட
சிந்தித்து பார்த்துவிடாதீர்கள் !
தாங்கவியலாது !
எங்கள் வாழ்வு
அத்துணை இரணங்கள்
உள்ளடக்கியது !
ஆனால் துவண்டு
போகவில்லை !
துணிந்தே எழுந்து நடக்கிறோம் !
– அக்னி பிரதீப்
