சுயமரியாதை மாதம் !

ஆண்டு முழுக்க

நாள் நேரம் நிமிடம் நொடியெல்லாம்

சுயமரியாதை நிறைந்திருக்க !

ஏன் இந்த மாதம் மட்டும் !

இந்த மாதத்தில் ஒலித்தது

பால்புதுமையின் உரிமைக்குரல் !

இதே மாதத்தில் தொடர்ந்து

ஓயாமல் ஒலிக்கிறது

அதே உரிமைக்குரல் !

உரக்கப் பேசியவர்கள்

உரிமைக்குரல் வீசியவர்கள்

விளிம்பு நிலை உயிரின்

வலியை கொண்டு சேர்த்தவர்கள்

வலிமையை உணர வைத்தவர்கள்

அனைவரையும்

திரும்பி பார்க்கிறோம் !

அவர்கள் களைந்து

கடந்து வந்த முட்கள்

நிறைந்த பாதையில்

இன்று நாங்கள்

பெருமிதத்துடன்

பீடுநடையிடுகிறோம் !

முட்கள் களைய களைய

பிற்போக்கு விதைகளால்

முளைத்துக்கொண்டே

இருக்கிறது பாதை நெடுகிலும் !

எங்கள் இரத்தப்போக்கு

அவ்வளவு பிடித்திருக்கிறதா

என்ன ?

அவர்களின்

வியர்வைத்துளியின்

ஊடே உட்புகுந்த கதிர்கீற்றில்

ஒளிர்கிறோம்

வானவில்லாய் நாங்கள் !

ஆனால் கண்ணீர் துளிகள்

ஓய்ந்த பாடில்லை !

எங்கள் கண்ணீர் உங்களுக்கு

உவர்க்கவில்லையா ?

நீங்கள் அடுக்கடுக்காய் பேசும்

பிற்போக்கு மதமொழிகள்

அருவருக்கத்தக்கவை !

அடிப்படைவாத மனநோய் !

உடலுக்கு ஒவ்வாவதவை

வெளியேறுகிறது மலமாய் !

அறிவுக்கு ஒவ்வாதவையும்

மலமே !

அதிகம் சேர்த்துக்கொள்ளாதே !

மலத்தில் இருக்கும் புழுவளவேனும்

மூளையிருப்பின்

பழமைவாதம் சலவை செய் !

மூடச்சமூகமே

சமதர்மத்தை கட்டியணைக்க

தகுதிபெறு !

இந்த கொண்டாட்டம்

இந்த இராஜபாட்டை

எங்களுடையது !

சமதர்மத்திற்குறியது

பாலின பாகுபாடில்லாதது

முத்தங்களும் அணைப்புகளும்

நிறைந்தது !

ஆடல் பாடல் ததும்பியது !

இயற்கையால்

தூரிகை தீட்டப்படும்

வானவில்லின் இருப்பை

மழைநீர் உறுதிசெய்கிறது !

தீட்டும்போது துளித்துளியாய்

தெறித்த விந்துக்களாம்

நாங்கள் ! ஆம்

மத சாதிய இன வர்ணத்தில்

அடங்காத

அனைவருக்கும் பொதுவான

அழகியல் சமத்துவமாம்

வானவில்லாய்

பூமிதனில் ஒளிர்கிறோம் !

விண்ணிலிருந்து வழிந்தொழுகி

வீதியில் கரைப்புடண்டோடி

காட்சியளிக்கிறோம்

இதே மாதத்தில் !

தடுத்து நிறுத்த நிறுத்த

அடுத்தடுத்த அடியில் முன் நகர்வோம் !

– அக்னி பிரதீப்

 

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன