பிற்போக்கான மனநிலை கொண்ட மக்களிடம் குயர் சார்ந்த புரிதல் ஏற்படுத்துவது
இந்த கட்டுரை முழுக்க முழுக்க என் தனிப்பட்ட பார்வை. இதில் நீங்கள் உடன்படலாம், மறுக்கவும் செய்யலாம். முதலில் குயர் சாய்ந்த புரிதல் ஏற்படுத்துவது தொடர்பாக நுழையும் முன், முற்போக்கு மற்றும் பிற்போக்கு என்கின்ற சொற்களுக்கான எனது கருத்தியல் நிலைபாட்டை முன் வைக்க விரும்புகிறேன். இந்த பொதுச் சமூகம், எதனையெல்லாம் முற்போக்கு என்கிறது, எதுவெல்லாம் பிற்போக்கு என்கிறது என்ற நிலை அறிய வேண்டும். முற்போக்கு மற்றும் பிற்போக்கு என்பது, கருத்தியலோடு நின்று விடுவதில்லை. அது வாழ்ந்த வாழ்க்கை சூழல் மற்றும் வாழவிருக்கும் சூழல், சுற்றியுள்ள மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையது. இதில் Degree of Rationalism என்ற சொற்றொடரை பயன்படுத்த விரும்புகிறேன். அனைவரிடத்திலும் இந்த இரு வகையான மனநிலை இருக்கவே செய்கிறது. இதில் முன்னே சொன்னது போல அந்த பகுத்தறிவு விகிதமே மாறுபடுகிறதொழிய, அனைவரிடத்திலும் முற்போக்கு மற்றும் பிற்போக்கு இரண்டும் இணைந்தே செயல்படுகிறது. இதுவே சிக்கலாக உள்ள நிலையில், மற்றொரு சிக்கலொன்று உள்ளது. இந்த இந்தியா என்ற தேசம், அனைத்து அரசியல் தலைவர்களும் சொல்லிக் கொள்வது போல, ஜனநாயக, மதச்சார்பற்ற, மக்களாட்சி நாடாக உள்ளாதாக நாமும் கற்பனை செய்தது கொள்வோம். நமக்கு வேறு வழியில்லை. கற்பனை செய்தாக வேண்டிய கட்டாயம் நமக்குண்டு. மூச்சுப் பிடிக்க தேசிய கீதம் பாடுகிறோம். போதும் சலித்துவிட்டது. இன்னும் படிக்க வேண்டிய அரசியல் நிறைய இருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள முகப்புரையின் அவசியம் தேவையுள்ளது.
“இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறைடாண்மையும் சமநலச் சமுதாயமும் சமயச்சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும், தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புரிமையினை வளர்க்க்வும் உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசியலைப்பு பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி நமக்கு நாமே வழங்குகிறோம்”
இந்திய அரசியலமைப்பு Article 14, 15, மற்றும் 21 ஆகியவை அறியச் செய்தலே முதல் விழிப்புணர்வு பிரச்சாரமாக கருதுகிறேன்.
சட்டத்தின் முன் அனைவரும் சமன்மை
சமயம், சாதி, இனம், பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதலுக்குத் தடை.
உயிருக்கும் உடல் சார் உரிமைகளுக்கும் பாதுகாப்பு
இந்த அடிப்படை உரிமைகள் பிரச்சாரம் செய்தலே, புரிதல் ஏற்படுத்தும் முதல் பணியாகும். மேலே குறிப்பிட்டது போல, பகுத்தறிவு விகிதம் மாறுபட வேண்டும். இந்திய நாடென்பது, சமய, சாதி மற்றும் குல வழக்கம் ஆகிய பிற்போக்கு செயல்களால் பிண்ணிப் பிணைந்ததாகவே இருக்கிறது. மூட வழக்கத்தில் ஊறி உழன்று கொண்டிருக்கும் பிற்போக்கு கருத்தியல் மக்களை சிந்திக்கச் செயவதென்பது பெரும் சாவாலான செயலாகவே உள்ளது. குயர் மக்களைச் சார்ந்த புரிதலை ஏற்படுத்தும் முன்னர், தனி மனிதனுக்குரிய உரிமைகள் மற்றும் மாண்பு பற்றிய புரிதல் பெற வேண்டும். சமயம், சாதி, இனம், பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவைக் கடந்து தனி மனிதனை மனிதத்துடன் நடத்தும் எண்ணம் பிறத்தல் வேண்டும். இதை உணரச் செயதலே இங்கு பெரும்பாடாக உள்ள நிலையில், குயர் மக்களின், வாழ்வியல், அவர்கள் மீது நடத்தபடும் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை ஒடுக்குமுறை, பொருளாதார, வேலைவாய்ப்பில் சம்மின்மை ஆகிய பல சிக்கலில் மூழ்கியிருக்கும் மிகச் சிறுபான்மை குயர் மக்களுக்கான பாலின அரசியலின் புரிதல் ஏற்படுத்துவது மாபெரும் சிக்கலாக உள்ளது. இத்தனை புரிதலையும் இந்த பொதுச் சமூகத்திற்கு ஏற்படுத்த வேண்டுமெனில், முதலில் குயர் மக்கள் தங்களை சுற்றி நடக்கும் பாலின அரசியலின் புரிதல் பெறவேண்டும். அப்போது தான் நமக்கான தீர்வுகள் காண முடியும். நமக்குள்ளே நடக்கும் அடக்குமுறைகளையும். ஒடுக்குமுறைகளையும் களையவேண்டும். நமது வாழ்வியல் பொதுச் சமூக மக்கள், அதாவது Cis-Het மக்களின் வாழ்வியலை பிரதியெடுத்தலாகாது. அந்த பிரதியெடுத்தலிலே, மீண்டும் அதே பிற்போக்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக படிநிலை ஏற்றத்தாழ்வு வாழ்வியலே தேர்வு செய்து விடுகிறோம். அன்று தோன்றியதை எல்லாம் எழுதியும் சொல்லியும் வைத்துப் போனதாலேயே, பகுத்தறிவில் பின்னாலில் இருக்கிறோம். சிந்தித்துவிடவே கூடாது என்பதற்கான அஸ்திவாரம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னமே செய்துவிட்டார்கள். இப்போதும் அதையே ஆயுதமாய் எடுத்திருக்கிறோம். குயர் மக்களின் வாழ்வியலை எழுதியும் சொல்லியும் ஆவணப்படுத்துவது அவசியம். இன்று, எழுதியும் சொல்லியும் வைத்திப் போனாலே பிற்காலத்துல் பிற்போக்கு ஒழிய, முற்போக்குடன் நமது எழுத்தின் மீது விவாதம் நிகழும். பெரியாரும் அம்பேத்கரும் சொன்னது போல, காலத்திற்கேற்ப, வாழ்வியலுக்கேற்ப எழுத்தும் சொல்லும் பரிணமிக்க வேண்டும். இதுவே பிற்போக்கு களைவதற்கான முக்கிய பணியே. குயர் மக்களின் இருப்புக்கான ஆவணங்கள், ஆய்வுகள் இருந்தாலும், மதத்தின் பால், குல வழக்கத்தின் பால், குயர் மக்களின் மீது இழிவு வாரி இரைத்துகொண்டே இருக்கும் இந்த பொதுச் சமூகம். இனிவரும் வருங்கால மக்களுக்கான நல்ல எதிர்காலம் அமைய, அவர்களை குறி வைத்து, பகுத்தறிவுடன் கிளர்ந்தெழச் செய்வதே சாலச் சிறந்த செயலாகும். Social Conditioned ஆன மக்களை மீண்டும் புதுபிக்கச் செய்வதென்பது உளவியல் ரீதியாகவே கடினமான ஒன்று. இந்த நவீன இணைய உலகத்தின் சக்தியுடன், வருங்கால இளையத் தலைமுறைகளை, கறக்ச் செய்வதே நலம்.

Storm
22/03/2023 at 4:36 காலை
தோழர் அக்னி பிரதீப் அவர்களின் கருத்துகள் என்னை கிளர்ச்சிக்கு உள்ளாக்குகிறது… அவர் கூறியது போல பொது சமூகம் ஆக பிற்போக்கு சக்தியும் சிந்தனைகளும் வழிந்து நாறுகிறது….
வருங்கால சமூகம் இதில் மூழ்கி விடாது பார்த்து கொள்ளும் கடமையை நமதாக வரித்துக் கொண்டதற்கு நாம் பெற்ற அனுபவங்களை நமக்கு அள்ளித் தருகிறார் தோழர்… வாழ்த்துக்கள் 🥰