2018 ஆம் ஆண்டு செப்டம்பர் ஆறாம் நாள் தன்பாலீர்ப்பாளர்களுக்கு எதிரான சட்ட பிரிவு 377ஐ உச்ச நீதிமன்றம் குற்றமற்றதாகியது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயம். அதற்குமுன்னரே 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் இச்சட்டபிரிவை உச்ச நீதிமன்றம் நீக்கி 2013லேயே மறுபடியும் குற்றமாக்கியதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் (2010), அலிகார் பல்கலைக்கழகத்தில் மராத்தி துறையில் பேராசிரியராக பணிபுரிந்த டாக்டர். ஸ்ரீனிவாஸ் ராமசந்திர சிராஸ் அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படமே அலிகார். 2016 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் ஹன்சல் மேத்தா.  இஷானி பானர்ஜியின் ஆராய்ச்சியுடன் அபூர்வா ஆஸ்ரானியின் எழுத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

 

படத்தின் தொடக்கத்தில் சிராஸ் தன் இல்லத்தில் தன் நண்பருடன் நெருக்கமாக இருந்த தருணத்தை இரு மர்ம நபர்கள் (பத்திரிகையாளர்கள்) படம் பிடிக்க, அக்காணொளி வேகமாக பரவி, அவர் தான் பணிபுரியும் அலிகார் பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்படுகிறார். அவரது தனி மனித உரிமை மீறப்பட்டதை கருத்தில் கொள்ளாது அவரது பாலீர்ப்பயே குற்றம் சாட்ட அவருக்கு உதவ முன்வருகிறார் பத்திரிகையாளர் தீபு செபாஸ்டியன். அவரைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்களும் வழக்கறிஞர்களும் அவருக்கு சார்பாக வர பல்கலைகழகத்தில் நடக்கும் அரசியலை வெளிக்கொணர்ந்து அவரது அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதே கதைகளமாக அமைகிறது.

 

எஸ் ஆர் சிராஸ் பாத்திரத்தில் வரும் மனோஜ் பாஜ்பய் அப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.   அவர் பாடல்களை ரசித்து கேட்கும் விதம் அக்காட்சிகளைப் பார்க்கும் நமக்கும் களிப்பூட்டும். அவரது மொழி பற்று, கவிதைகளின்பால் கொண்ட காதல், வாழ்க்கையின் மேல் கொண்ட புரிதல் அனைத்தும் அழகாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் தீபு செபாஸ்டியன் பாத்திரத்தில் வரும் ராஜ்குமார் ராவின் துள்ளலான நடிப்பு காண்போரைக் கவரும். சிராஸ், தீபு இடையிலான நட்பு படத்திற்கு மேலும் எழில் சேர்க்கிறது. சிராஸ் அவர்களின் இசை ரசனையைப் போன்றே படத்திலும் இசை இரண்டறக் கலந்திருக்கிறது. கதை பாத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்ச்சியும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபு தன் தோழியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சியின்னூடே சிராஸ் அவரது நண்பருடன் நெருக்கமாக இருக்கும் தருணத்தை காட்சியமைத்திருப்பது, எதிர்பாலீர்ப்பாளர்களின் காதலையோ கூடலயோ ஏற்றுக்கொள்ளும் இச்சமூகம் தன்பாலீர்ப்பாளர்களின் காதலின், கூடலின் அழகியலை உணர மறுப்பதேனோ என்ற கேள்வியை நம் அனைவரின் மனதிலும் எழ வைக்கும்.

 

அலிகார் – திரை விமர்சனம் – அணு பாரதி

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன