செவிகள் குயர் ஹெல்ப் லைன்ல நான் இன்டர்ன்-ஆ இருக்கேன். என் பேரு ஆனந்த் என்று அறிமுகம் செய்து கொண்டு பிரீத்திஷா பிரேம்குமாரிடம் அலைபேசி வழியே அளவளாவத் தொடங்கினேன். தன்னுடைய மாலைநேர பணியாரக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கவனித்துக்கொண்டே பேசினார் பிரீத்திஷா.
மொதல்ல என்னை பிரீத்திஷா பிரேம்குமார பேட்டி எடுக்கணும்னு சொன்னப்போ ஒருபக்கம் சந்தோஷமா இருந்துச்சி. இன்னொரு பக்கம், ஏற்கனவே உங்களோட பேட்டியெல்லாம் நெறைய யூடியூப்ல பாத்துருந்ததால நான் என்ன புதுசா கேக்கப்போறேன்னு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சி. நீங்க இப்படி ஒரு ‘நட்சத்திர தம்பதி’யரா இருக்கறத எப்படி பாக்குறீங்க?
இல்ல நட்சத்திர தம்பதியெல்லாம் ஒன்னும் இல்ல (புன்னகைத்துக்கொண்டே). இத ஒரு வாய்ப்பாவும் பாக்குறேன். மீடிய எங்கள கவர் பண்ணுதுன்னும் பாக்குறேன். இது வந்து என்னோட கம்யூனிட்டி பாக்கணும்னு நெனக்கிறேன் அதுதான். அதாவது, ஒரு திருநங்கை ஒரு ஆணை கல்யாணம் பண்ணும் போதும் சரி ஒரு திருநம்பி பெண்ண கல்யாணம் பண்ணும் போதும் சரி நெறய பிரச்சினை வரும். அப்படி இருக்கும் போது ஒரு திருநங்கை ஒரு திருநம்பியக் கல்யாணம் பண்ணலாம். ஆனா, அவங்களுக்குள்ள ஒரு கூச்சம் இருந்துகிட்டே இருக்கு. 2018ல தான் நாங்க டிசைட் பண்ணோம். சரி ஓகே, இந்த கூச்சத்த ஒடக்கணுங்கறதுக்காக இந்தியாவிலேயே ஃபர்ஸ்ட் ட்ரான்ஸ் கப்பிள்னு நாங்க மொத மொதல்ல கல்யாணம் பண்ணோம். அதுக்கபறம் கேரளாவில நெறய பேரு; தமிழ்நாட்டுல நெறய கல்யாணம். டிரான்ஸ் கப்பிள்ஸா இருக்கும் போது ஈக்குவாலிட்டி கெடைக்குது ஒரு சந்தோஷம் இருக்கு கூடவே. யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. ஃபேமிலியா இருக்கட்டும் இல்ல பப்ளிக்கா இருக்கட்டும் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கறதுனால இது என்னக்கு புடிச்சுது.
பிரீத்திஷா திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின்
திருமணத்துக்கு முன்னாடி பிரீத்திஷா ஒரு போராளியாத்தான் இருந்தா. இப்பவும் ஒரு போராட்டத்த்துல தான் இருக்கா. ஒரு சந்தோஷம் தான். திருமணத்துக்கு முன்னாடி தனியா சந்தோஷமா இருந்தேன். இப்போ திருமணத்துக்கு அப்பறம் ஹஸ்பண்ட் கூட சந்தோஷமாத்தான் இருக்கேன் (புன்னகை). எதையுமே தாங்கிக்கிற பக்குவத்த நான் ஏற்படுத்திக்குவேன் முடிஞ்ச அளவுக்கு. இதுவரைக்கும் எந்த பிரச்சின வந்தாலும் அத தாங்கிக்கிற பக்குவத்த நான் ஏற்படுத்தியிருக்கேன். எத்தன பிரச்சன வந்தாலும் அத எதிர்கொண்டிருக்கேன்.
தனிமைல இருக்கும்போது இருக்கற எதிர்பார்ப்பு இருந்துருக்கு திருமணத்துக்கு முன்னாடி. நானும் மனுஷி தானே? அப்போ எனக்கும் யாராவது வந்து நம்ம மேல அன்பு காட்டமாட்டாங்களா? நாமளும் ஜோடியா வெளிய போகமாட்டமா?-ங்கற ஏக்கம் இருந்துச்சி. ஆனா ஆண்கள் மேல ஒரு பெரிய பயமும் இருந்துச்சி. இவங்க எப்படி நம்ம மேல சிம்பதி கிரியேட் பண்ணுவாங்க? இவங்க கூட போனா நாம செலவு பண்றமாரி இருக்கும். அந்தமாதிரி இதுல எனக்கு உடன்பாடே கெடையாது. எனக்கு வந்து பணத்தக்குடுத்து அன்ப வாங்கறதுல உடன்பாடே கெடையாது. பிரேம கல்யாணம் பண்ணதுக்கப்பறம் எல்லாமே டோட்டலா சரியாயிடுச்சி.
ரெண்டு பேரும் எப்போ சந்திச்சிங்க? சந்திச்சதுலருந்து கல்யாணம் ஆகறவரைக்கும் இருந்த அந்த ஜர்னி எப்படி இருந்துச்சி?
ரெண்டாயிரத்தி பதினெட்டு மார்ச் எட்டுல கல்யாணம் பண்ணோம். அதுக்குமுன்னால ஒரு அஞ்சு வருஷமா நல்ல நண்பர்களா இருந்தோம். ஃபேஸ்புக் மூலமாதான் பிரேம் எனக்கு அறிமுகம் ஆனான். நல்ல ஒரு நண்பர்களா இருந்தோம். என்னோட ஃபேமிலி முழுக்கவே அக்சப்டட் சப்போர்ட்டிவா தான் இருந்தாங்க. பிரேமோட குடும்பத்துக்கு புரியாது இது. அதனால என்னோட ஃபேமிலியையும் கூப்படல எங்க கல்யாணத்துக்கு. என்னக்கி பிரேமோட ஃபேமிலி இத அக்ஸப்ட் பண்றாங்களோ அதுவரைக்கும் கூப்படறதா இல்லனு நாங்க ரெண்டு பேரும் தனியாத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போ பிரேமோட ஃபேமிலியும் பிரிஞ்சு அக்ஸப்ட் பண்ணிக்கிட்டாங்க. இப்போ ஒரு பிரச்சினையும் இல்ல.
உங்களப் பொருத்தவரைக்கும் திருமணம்னா என்ன நெனக்கிறீங்க?
ஹ்ம்ம். எப்படி சொல்றது? இணையர்கள் ரெண்டு பேருமே ஈக்குவலா இருக்கணும். அன்பப் பகிறணும். ஒரு ஆதரவு இருக்கணும். நல்ல ஒரு ஸப்போர்ட் கெடைக்கணும். புரிதல் இருக்கணும். இது எல்லாமே இருந்தா திருமணம் நல்லதுதான்.
நீங்க இப்போ சென்னைல இருக்கிங்க. நீங்க தங்கியிருக்க குடியிருப்புல அக்கம்பக்கத்துல இருக்கவங்ககிட்ட உங்களுக்கான ஏற்பு இல்ல பிரச்சனைகள் எதாவது இருக்கா?
நாங்க வந்து அப்பார்ட்மெண்ட்ல தான் இருக்கோம். மொதல்ல வந்து யாருக்கும் தெரில எங்களப்பத்தி. அதுக்கப்பறம், இந்த பேப்பர்லலாம் படிச்சிட்டு எல்லாருமே நல்லா ஸப்போர்ட் தான் பண்ணாங்க. எறநூத்தி அம்பது வீடு கொண்டது இந்த அப்பார்ட்மெண்ட். நாங்க இருக்கக் கூடாதுனு சிலர் பிரச்சின குடுத்தப்போ நான் கொஞ்சம் லீகலா மூவ் பண்ணேன். அது புடிக்காம இன்னும் நெறய பிரச்சின குடுத்தாங்க. குடுத்தாங்க, இன்னும் குடுத்துட்டுதான் இருக்காங்க. நான் சொன்னேன்ல பிரீத்திஷா இன்னும் போராளிதான்னு. இதவந்து சட்டப் பிரகாரம் நாங்க எதிர்கொண்டுட்டுத்தான் இருக்கோம். மத்தபடி பப்ளிக் வந்து ரொம்ப ஸப்போர்ட்டா தான் இருக்காங்க. எந்தவொரு இன்டர்வியூவிலியுமே சொல்றதுண்டு. நான் பப்ளிக்க ஒரு கண்ணாடி மாதிரிதான் பாப்பேன். கண்ணாடில, என்ன பண்றனோ அதுதான் பிரதிபலிக்கும். அதுதான் பப்ளிக்கும். நான் ஒழுக்கமா இருந்தேன்னா பப்ளிக் எனக்கு ஸப்போர்ட் பண்ணும். தப்பான இதுக்குப் போகும்போது ஸப்போர்ட் பண்ணாது. அதுக்கேத்த ரியாக்ஸன் தான் வரும்.
அரசாங்கத்துக்கிட்ட இருந்து ஆதரவு எப்பிடி இருக்கு?
எங்களோட கல்யாண ஸர்ட்டிஃபிகேட் இதுவரைக்கும் கெடைக்கல. நாங்களும் முடிஞ்ச வரைக்கும் போராடி பாத்தோம் அதுக்கு மேல முடியல விட்டுட்டோம். ரேஷன் கார்டு வந்து இப்போ டி.எம்.கே ஆட்சில கொஞ்சம் சீக்கிரம் குடுத்துட்டாங்க. ரேஷன் கார்டு, ஐடி கார்டு மத்ததுக்கெல்லாம் இப்போ வரைக்கும் பிரச்சின இல்ல. அரசாங்கம் வந்து நெறைய சலுகைகள் குடுக்குது அத அதிகாரிங்கதான் குடுக்கவும் மாட்டேங்கறாங்க, மதிக்கவும் மாட்டேங்கறாங்க. அது ஒரு பெரிய பிரச்ச்னையா இருக்கு. ரெண்டாயிரத்தி பதினஞ்சில சுப்ரீம் கோர்ட் ஆர்டர் குடுத்துருக்கு திருநங்கைகள் வந்து எம்.பி.சி கோடாவுல வரலாம் அப்படின்னு. ஆனா அதிகாரிங்க எனக்கு இதுவரைக்கும் அந்த ஸர்ட்டிஃபிகேட் குடுக்கல. அலையவிட்டுகிட்டே இருக்காங்க. அது பெரிய வேதனையா இருக்கு. அரசாங்கம் சலுகைகள் குடுக்குது அத அதிகாரிகள் எடுத்து பண்றதுக்கு ஒரு சோம்பேறித்தனம். பண்ண மாட்டேங்குறாங்க. எனக்கு தெரியாது எனக்கு தெரியாதுனு சாக்கு சொல்லியே சமாளிக்க ஆரம்பிச்சடறாங்க.
ஒரு திருநர் தம்பதி தத்தெடுக்க சட்டப்படி வழியில்லனு நெனக்கிறேன் நீங்க என்ன நெனக்கிறீங்க?
சட்டப்படி வாய்ப்பில்லதான். இன்னும் யாரும் எடுக்கல. நாங்களும் எடுக்கலாம்னு இருக்கோம். ரூல்ஸ் தெரியல. ஒரு கொழந்த கெடச்சா நல்லாதான் இருக்கும். நாங்களும் வளக்கலாம்னுதான் இருக்கோம். சட்டத்தப்பத்தி தெரியல. அதுக்கப்பறம் தேடறதுக்கான நேரம் கெடக்க மாட்டேங்குது. எங்களோட அத்தியாவசியங்களயே தேடி ஓடிகிட்டு இருக்கறதுனால இதுக்கு எங்களால நேரத்த செலவழிக்க முடியல. ஒருவேள நாங்க தேடியிருந்தா கெடைக்க வாய்ப்பிருக்குனு நெனக்கிறேன். ஆனா எதுவும் புலப்படல.
ஒங்களுக்குள்ள சண்டையெல்லாம் வருமா?
நெறைய வரும் (புன்னகையுடன்)
எதானால வரும்? எப்படி சமாதனம் ஆவிங்க?
எனக்கு அப்படியே எதிர்துருவம் பிரேம். அதனால நெறைய சண்ட வரும். சமாதானமும் ஆயிடுவோம். அவ்ளோதான். (புன்னகைத்துக்கொண்டே) ரொம்ப கேக்கக்கூடாது ஸீக்ரெட்ஸெல்லாம். நெறய சண்டவரும் அதுக்கேத்தாமாரி சமாதானமும் ஆயிடுவோம்.
திருநர் சமூகத்துக்கு என்ன சொல்லிக்க விரும்புறீங்க?
போராட்டம் தான் வாழ்க்க. ஆணா இருக்கட்டும் பெண்ணா இருக்கட்டும் போராட்டம் கண்டிப்பா இருக்கும். திருநர்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும். அந்த போராட்டத்த அவங்க எதிர்கொள்ள கத்துக்கிட்டாங்கன்னாலே கண்டிப்பா அவங்க வாழ்க்கைல ஜெயிப்பாங்க.
பொதுவா கப்பிள்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
கப்பிள்களுக்கு. ஹ்ம் என்ன சொல்றது. சண்டைகள் கண்டிப்பா வரும். ஏன் அந்த சண்ட வருதுனு யோசிச்சு பாத்தோம்னா சமாதானத்துக்கான வழியும் இருக்கும். சண்ட போடக்கூடாதுனு கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன். சண்ட போடலனா நாம இன்னும் வேற மாதிரி மன நிலைக்கு போயிடுவோம். சண்ட போடணும். சண்ட முடிஞ்சதுக்கு அப்பறம் அந்த சண்ட எதனால வந்துச்சி எதனால ஸால்வ் பண்ணலாம்னு புரிஞ்சிகிட்டாவே கண்டிப்பா இன்னும் இனிமையா போகும்.
– ஆனந்த்
