அறியாசனம்
பதின்பருவத்தில்,
ஊக்கிகளின் உற்பத்தியில்
உடலில் ஏதோ
நிகழ்ந்தேறிக் கொண்டிருந்தது.
எதுவோவொன்று எம்மிடம்
எதையோவொன்றைக் கூற
எத்தனித்துக் கொண்டிருந்தது
என்பதுமட்டும் புரிந்தது.
ஆனால், என்னவென்றுதான்
எமக்கெங்கிலும் புரிந்தபாடில்லை..
கொஞ்ச நாளிலேயே
கம்மலிட்டேன்,
கொலுசிட்டேன்,
பொட்டிட்டேன்,
பொடவையிட்டேன்…
அவ்வளவேதான்!
அறையிலிருந்து வெளியேற்றி
ஆடையெல்லாம் உறுவியெடுத்து
ஆளுக்கு நூறடிவீதம்
அடித்துமுடித்து முறித்துப்போட்டனர்!
நாய்போல் நாதியற்று
அம்மணமாய் கிடந்தவளைத்
தூக்கிவிட ஆளில்லையெனினும்
கூச்சலிட ஆளிருந்தது!
ஒன்பதென்றும்
அஜக்கென்றும்
ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட
பட்டப்பெயர்கள் எமக்கு!
எம்காலுக்கீழிருந்து
கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் அழகுமகன்கள் எவனுக்கும்
தெரியாது,
அப்பட்டப்பெயர்களின் மேல்
அறியாசனமிட்டு இன்றுநான்
அமர்ந்திருக்கிறேன் என்பதெல்லாம்….
இரண்டாம் கட்டம்
நேற்று முன்தினம்
நடுராத்திரி மூன்றுமணியளவில்
நானும் அவளும்
கலவிப் பூண்டோம்.
உங்களைப் போலல்லாமல்
தெரியாமல் கொஞ்சம்
அதிகமாகவே காதலுடன்
பூண்டுவிட்டோம் போல..
ஆனந்தத்தின் எல்லையில்
கண்ணீர் பெருக்கெடுத்தது..!
தடவி பார்த்து
டிஷ்யூ தட்டுப்படாததால்
தன் தலைமுடிக்கொடுத்து
தட்டுத்தட்டாய் புரண்டோடிய
தண்ணீரைத் துடைத்துவிட்டு
திரும்பிப்பார்த்து கேட்டால்,
“நீயொரு கவிதாயினிதானே!
நம்காதலின் சிறப்புகூறு”யென்று…
சற்றும் சிந்திக்காமல்
சட்டென பதிலளித்தேன்,
“ஓர் ஆணுடன்
பெண் சேர்கையில்
ஒட்டுமொத்த புவியே
முழுமையடையுமெனில்,
ஓர் பெண்ணோடு
பெண்ணே சேர்ந்தால்
புவியென்ன புவி
புவியிருக்கும் பால்வீதியே
முழுமையடையும்” என..!
அவளும்
சற்றும் சிந்திக்காமல்
சட்டென கட்டியணைக்க
எம்மிரண்டாம் கட்டம்
எப்படியோ காரசாரமாய்
துவங்கியது…
