சிவாவும் சுந்தரும் சத்தம் கேட்டு அங்கிருந்து ஓடிவிட நினைக்க சிவா முதலில் சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்றான், அங்கே லைப்ரரியன் ராமலிங்கம் தூக்கில் தொங்குவதைப் பார்த்தான். சுந்தர் யாரோ தூக்கு போட்டுகிட்டாங்கடா என சிவா கத்த, சுந்தரும் அங்கு வந்தான். சிவா ராமலிங்கத்தின் கால்களை பிடித்துக்கொள்ள சுந்தர் அங்கிருந்த துருப்பிடித்த இரும்பு மேசையின் விளிம்பை உடைத்துக் கொண்டு புத்தக கபோர்டு மீது ஏறி கயிறை அறுக்க தொடங்கினான்.
கயிறோடு சேர்ந்து அவன் கையும் அறுபட்டது, ஏதோ அவனுடைய துரிதமான செயலால் கயிறு அறுபட்டது சிவாவால் பேலன்ஸ் செய்ய முடியாமல் ராமலிங்கத்தை பிடிக்க முயற்சிக்க, ராமலிங்கம் சிவாவின் மேல் விழ சிவாவின் முதுகு புறத்தை லேசாக கபோர்டு கீறி விட அவன் சட்டையும் ரத்தக் கறையானது. வேகமாக ராமலிங்கத்தின் கழுத்துக் கயிற்றை இரண்டு பேரும் நீக்கிவிட சுந்தரிட்ட சத்தத்தில் லைப்ரரியில் வேலை செய்யும் ஆள்களும் அங்கு வர ராமலிங்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .
மருத்துவரின் ஆலோசனைப்படி சுந்தரும் சிவாவும் ஒரு டிடி ஊசியும் தங்களுடைய காயங்களுக்கு மருந்தும் போட்டுக்கொண்டு ராமலிங்கம் அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவின் வெளியே நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒர் ஆணும் அவரோடு 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் மருத்துவமனையை அடைந்தனர். அந்த பெண் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பூப்போட்ட சேலையும், முகம் நிறைய மஞ்சளும், நெற்றி நிறைய குங்குமமும், தலை நிறைய பூவும் வைத்தபடி வந்து நிற்க அவர் தான் ராமலிங்கத்தின் மனைவி என்பது சிவாவிற்கு புரிந்தது. என்னவாயிற்று என வந்த ஆண் கல்லூரி பணியாளர் ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர் ராமலிங்கத்தின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கொஞ்சம் பேச சிரமப்படுவார் அதனால் அவரை பேச வற்புறுத்த வேண்டாம் என்றும் கூறிச் சென்றார்.
கல்லூரிப் பணியாளர் சிவாவையும் சுந்தரையும் காட்டி இவர்கள் தான் உங்க அப்பாவை காப்பாற்றியது என்று சொல்ல, அந்த ஆண் நன்றிகள் கூறினார், அப்போது அந்த ஆணிடம், அவர் தான் பிழைச்சிட்டாரே நான் கோவிலுக்கு போகணும் நைட்டு நீ பார்த்துக்க அம்மா நாளைக்கு காலையில வரேன் என்று சென்று விட்டார் அந்த பெண். நாங்களும் கிளம்பறோம் என சிவா, சுந்தர், கல்லூரி பணியாளர் அங்கிருந்து கிளம்பினர், வெளியே வந்த சிவாவிடம் என்னடா அவங்க புருஷன் செத்து பிழைச்சிருக்காரு அவங்க கோவிலுக்கு போறேன்னு போயிட்டாங்க என்றான் சுந்தர்.
டேய் நம்மலா யாரையும் ஜட்ஜ் பண்ண கூடாதுடா, சரி நீயும் நானும் எப்படி அவரைப் பார்த்தோம்னு கேட்டா எதுவும் உளறாதே, நான் செகண்ட் ஃப்ளோர்ல இருந்தேன், சிவா சத்தம் கேட்டு மேல ஓடினேன் என்று சொல்லு மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்றான் சிவா. சரி சீனியர் என்ற சுந்தர், நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லல எனக் கேட்க, நீ என்ன கேட்ட என்றான் சிவா, உங்களை காதலிக்கிறேன் என்று நான் சொன்னதுக்கு என்றான் சுந்தர். இங்க பாரு சுந்தர் வந்தமா படுத்தமா போனமான்னு மட்டும் இரு, தேவை இல்லாம யோசிச்சு நீயும் குழம்பி என்னையும் குழப்பாத என சிவா தன்னுடைய பஸ்ஸில் ஏறிச் சென்றான்.
என்னதான் சிவா சுந்தரிடம் அடுத்தவர்களை ஜட்ஜ் பண்ணக்கூடாது என்று சொன்னாலும் அவனுடைய மனதிலும் சுந்தரைப் போல் ஏகப்பட்ட கேள்விகள், அவை அனைத்திற்கும் தன் மனதிற்குள் விடை தேடிக்கொண்டே வீட்டை அடைந்தவனின் கைபேசி சிணுங்கியது. புது நம்பராக இருந்ததால் ஹலோ என்றான் சிவா எதிர்முனையில் சுதனின் குரல் கேட்டது சொல்லுங்க அண்ணா என சிவா சொல்ல கொஞ்சம் நம்ம பரும்பு முருகன் கோவில் வர முடியுமா சிவா, அருண் என்னை பிரேக்கப் பண்றேன்னு சொல்றான் என சுதன் சொல்லி போனை கட் செய்தான், சரியென ஒரு டீசர்ட் மற்றும் சாரத்தை கட்டிக்கொண்டு சிவா சுதன் சொன்ன முருகன் கோவிலை அடைந்தான்.
வாசலில் நின்ற சுதனிடம் என்ன அண்ணா ஆச்சு என்று கேட்க, வா சிவா நான் சொல்றேன் என அவனை கோவிலுக்குள் அழைத்துச் சென்றான் சுதன். அந்த கோயில் பொதுவாக சஷ்டி, தைப்பூசம், வருட பிறப்பு மற்றும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பூஜை செய்யப்படும் மற்ற நாள்களில் அவ்வளவு பிரசித்தி பெற்றது அல்ல. உள்ளே சென்ற சிவா அந்த கோவிலின் தென்மேற்கு மூலையில் இருந்த கிணற்றின் அருகில் அமர்ந்து இருந்த அருணை பார்த்தான். என்னவாம் அவனுக்கு என சுதனிடம் சிவா கேட்க நான் சுடலை மேட்டரை சொல்லிட்டேன்டா, அதனால நான் அவனுக்கு துரோகத்தை பண்ணிட்டேனாம், அதனால அவன் என்ன விட்டு போக போறானாம் என்றான் சுதன் அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க நான் ரெண்டு மணி நேரம் யோசி அதுக்கு அப்புறம் கூட உனக்கு இதே மாதிரி தோணுதுனா லெட்ஸ் பிரேக்கப் என்று சொல்லிட்டேன் என்றான் சுதன் .
சரிண்ணா இருங்க நான் வரேன் என அருண் அருகில் சென்றான் சிவா, என்னடா ஆச்சு என அருணிடம் கேட்க டேய் என்னால ஒரு சில விஷயங்களை ஏத்துக்கவே முடியல டா என்றான் அருண். எதைடா உன்னால ஏத்துக்க முடியல எனக் கேட்டான் சிவா, பின்ன என்னடா நான் கல்லுகுத்தியா இருக்கும்போது இவனுக்கு வேற ஒருத்தர் கேக்குதாடா, இப்போவே இப்படின்னா கொஞ்சம் வயசான அப்புறம் என்னோட நிலைமை என்ன? நான் படிக்க வேற இல்லை. நான் எதிர்காலத்துல இவனோட எப்படி வாழ என கேட்டவன் கண்ணில் கண்ணீரோடு சுதனின் மீதான வெறுப்பு சற்று அதிகமாகவே கசிந்தது.
சரிடா உனக்கு ரொம்ப பிடிச்ச படம் எது எனக் கேட்டான் சிவா, அதற்கு அருண் முதல் மரியாதை என்றான். ஏன் என்ற கேள்வியை கேட்டான் சிவா, சிவாஜிக்கும் ராதாக்குமான காதல் எப்படிப்பட்ட காதல். அது பிரதிபலிக்கிற மாதிரி எவ்வளவு அழகான பாடல்கள் என்றான் அருண், அப்ப வெள்ளையம்மாவா நடிச்ச வடிவுக்கரசியை பிடிக்காதா என்றான் சிவா. அவளை எப்படிடா பிடிக்கும்? கெட்டுப்போய் வந்தவளுக்கு வாழ்க்கை கொடுத்த நல்ல மனுஷன் சிவாஜி, ஆனால் அவருக்கே அந்த பொம்பளை மதிப்பு கொடுக்காது என்றான் அருண். ஓஹோ சிவாஜி அவ்வளவு பெரிய மனுஷனா அந்த படத்துல என கேட்டான் சிவா, டேய் என்னடா இப்படி சொல்லுற எவ்வளவு பெரிய மனுஷன் மட்டுமில்ல தியாகி, என்ற அருண் முன் கை காட்டி நிறுத்திய சிவா பேசத் தொடங்கினான்.
கணவன் மனைவின்னா என்னடா அருண் என கேட்டான் சிவா, நீ என்னடா லூசு மாதிரி பேசுற என்றான் அருண். ஆமாடா உங்களை கேள்விக் கேட்டா நாங்க லூசா, சிவாஜி தியாகியாவும் நல்லவனாகவும் தெரியனும்னு அவங்க மாமா மானத்தை காப்பாத்தணும்னு கெட்டுப் போன பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிறேன்னு கட்டினது தியாகமா வச்சுக்கலாம், ஆனா முப்பது வருஷமா அவள தொடாம வச்சிருந்தது எப்படி நியாயமாகுது உங்க எல்லோருக்கும் என்றான் சிவா. அருண் பதிலின்றி அவனை பார்க்க, ஆனாலும் உங்களை தெய்வமா, அந்த தேவனா நினைச்சு அந்த புள்ள கால அமிக்கி கையை அமிக்கி சேவை செய்யணும் அப்படித்தானே என்றான் சிவா .
அப்புறம் என்னடா கெட்டு போன பொண்ணை யாருடா கட்டிப்பாங்க அவர் கட்டிக் கிட்டார் இல்ல அது பெருசு தானே என்றான் அருண். பெருசா இருந்துருக்கும் அந்த ஆள் அவங்களோட நல்ல படியா வாழ்ந்து இருந்தா, ஆனா அதுக்கு அப்புறம் அவங்க கூட வாழ்ந்தாரா?. ஏண்டா காம உணர்வுகளின் உந்துதல் தான் அந்த பிள்ளை ஏற்கனவே தப்பு பண்ணி இருக்கு, அந்த தப்புக்கு நீங்க வாழ்க்கை முழுசும் அந்த பிள்ளைக்கு தாம்பத்திய சுகமே கொடுக்காம தண்டனை கொடுப்பீங்களா. கல்யாணம் மட்டும் பண்ணி கிட்டதால உங்களுக்கு தியாகின்னு பட்டம் வாங்கணும்னா, அந்த புள்ள மூக்கு சளிய சிந்திக்கிட்டு தான் சோறு போடும் மூடிட்டு தின்னுதாகணும். அப்போ கல்யாணம் பண்ணாம கெட்டுப் போனவர்களுக்கு தண்டனை தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கைன்னு தீர்மானிக்க சிவாஜி யாரு, அப்போ அந்த கெட்டுப்போன பிள்ளையை எவ்வளவு அருவருப்பா அவரு பார்த்திருந்தா அந்த பிள்ளைய தொடாம 30 வருஷம் வாழ்ந்திருப்பாரு. கல்யாணத்துக்கு முன்னால காமத்தை பாத்த வெள்ளையம்மா கெட்டுபோனவலாம் கல்யாணம் ஆன பின்ன பரிசல் காரி மேல காதல் வந்தது மட்டும் எப்படி உங்களுக்கு தெய்வீக காதலா தெரியுது என்றான் சிவா.
அருணுக்கு சிவா ஏதோ சொல்ல வருகிறான் என்பது நன்றாகவே புரிந்தது, டேய் என்ன சொல்லணுமோ அதை நேரடியாகவே சொல்லு என்றான், சிவா பேசத் தொடங்கினான் அருண் கணவன்-மனைவி, காதலர்கள் மாதிரி சில உறவுகளுக்கு இடையில அன்னியோன்யம் ரெம்பவே அவசியம், அதனால தான் அறத்துக்கும் பொருளுக்கும் குறள் எழுதின வள்ளுவர் காமத்துக்கு தனியா ஒர் அத்தியாயம் எழுதி இருக்கிறார். உனக்கு மாதத்துக்கு ஒருமுறை சேர்ந்தாலே போதும்ன்னு தோணலாம், ஆனா உன்னோட பார்ட்னர் தேவையை தெரிஞ்சு தானே நீ நடந்துக்கணும் என்றான் சிவா. சரிடா எனக்கு புரியுது என்ற அருண், சுதனை தன்னுடைய அருகில் அழைத்தான். என்னடா என சுதன் கேட்க, எனக்கு எல் ஜி பி டி கியு பத்தியும் நாம எப்படி செக்ஸுவல் ரிலேஷன்ஷிப் ல இருக்கணும் என்பது பத்தியும் தெளிவுபடுத்துடா. என்னால நீ இல்லாம இருக்க முடியாது என்றான் அருண், கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிய அருணை கட்டி அணைத்தான் சுதன் .
அவர்களை தொந்தரவு செய்யாமல் சிவா தன்னுடைய வீட்டிற்கு சென்றான், அவனுடைய அன்றைய தினம் முழுவதும் ராமலிங்கம் பற்றியே இருந்தது அடுத்த நாள் காலை ராமலிங்கம் அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றான் சிவா. அங்கு தீவிர சிகிச்சை பிரிவின் வெளியே ராமலிங்கத்தின் மகன் மட்டுமே அமர்ந்திருந்தார். அவரிடம் சென்ற சிவா ஹாய் சார் எப்படி இருக்கு உங்க அப்பாக்கு என கேட்க மச் பெட்டர் பட் கொஞ்ச நாளைக்கு பேச மட்டும் கஷ்டமா இருக்குமாம் என்றார் ராமலிங்கத்தின் மகன். சரிங்க, சார் எழுந்தா நான் வந்தேன்னு சொல்லுங்க சரிப்பா சொல்றேன் என்றார் ராமலிங்கத்தின் மகன் .
மருத்துவமனையில் இருந்து கல்லூரிக்குச் சென்றான் சிவா, அவன் வாசலைத் தாண்டி போகும் போது முதல் வருட மாணவர்கள் சிலர் “சுந்தரு சுந்தரு ஏ ஹசீனா சுந்தரு சுந்தரு” என இந்தி பாடலை பாடிக்கொண்டே சிவாவை கடந்து சென்றனர். தன்னை அவர்கள் கடந்த பின் தான் அவர்கள் நார்மலாக பேசியதை கவனித்தான் சிவா, ஏதோ சந்தேகம் வர டேய் என சத்தமிட்டு அவர்களை அழைத்தான்.
என்ன சீனியர் என்றான் ஒருவன், நீங்க எல்லாம் ஃபர்ஸ்ட் இயர் தானே என கேட்டான் சிவா, ஆமாம் என்றான் மற்றொருவன் எந்த டிபார்ட்மெண்ட் என சிவா கேட்க, சி எஸ் என்றான் மற்றவன் நீங்க எல்லாம் சுந்தரோட பிரண்ட்ஸா எனக்கேட்டான் சிவா, இல்ல சீனியர் நாங்க ஏன் அவனை தெரிஞ்சு வச்சுக்க போறோம். அந்த நாயை யாருன்னு தெரியாது என்றான் ஒருவன், ஓ அப்படியா அவன பாக்கணும் போல இருந்தது அதான் கேண்டீனுக்கு வர சொல்லணும் என்றான் சிவா, அவர்களுக்குள் சலசலப்புகள் ஏற்பட சிவா நினைச்ச வேலை முடிஞ்சது எனக் கேண்டீனை நோக்கி சென்றான்.
சிவா கேண்டீனுக்குள் நுழைய சுந்தர் ஹாய் சீனியர் என்றான், அடப்பாவிகளா என்னடா இவ்வளவு பாஸ்ட்டா டெலிவரி ஆகியிருக்கு மெசேஜ் என்று மனதில் நினைத்தபடி சுந்தர் அருகில் வேகமாக சென்றான் சிவா. என்ன சொன்ன நீ உன் பிரெண்ட்ஸ் கிட்ட என கேட்டான் சிவா. உடனே சுந்தர் பயத்துடன் நான் ஒன்னும் சொல்லல அவங்க கேட்டாங்க, சிவா சீனியர் சத்தம் கேட்டு நான் போனேன் ரெண்டு பேரும் சேர்ந்து ராமலிங்கம் சாரை காப்பாத்திட்டோம்ன்னு மட்டும் தான் சொன்னேன் என சுந்தர் சொல்ல. இங்க பாரு சுந்தர் எனக்கு உன்ன பிடிக்கும் ஆனால் லவ் எல்லாம் உன் மேல இல்ல எதையும் நினைச்சு குழம்பாத, நீ இப்படி எல்லாம் பண்ணினா அப்பறம் நமக்குள்ள எதுவுமே வேண்டாம்ன்னு நான் முடிவு பண்ண வேண்டி இருக்கும் என்றான் சிவா. ஐயோ இனிமே யாருமே என்னை பத்தியோ இல்ல இல்ல நம்ம பத்தி பேச மாட்டாங்க ஓகேவா? நீங்க வேணும்னா என்னை லவ் பண்ணாம இருக்கலாம் நான் உங்களை எப்போவும் லவ் பண்ணுவேன் இதை சாப்பிடுங்க என்று சொல்லி டேபிள் மேல் இருந்த ஸ்நாக்ஸை காட்டிவிட்டுச் சென்றான் சுந்தர்.
சிவா ராமலிங்கத்தை பற்றி சிந்திக்க தொடங்கினான், வயது 58 இன்னும் ரெண்டு வருடத்தில் ஓய்வு பெறப்போகிறவர் முப்பது வயது மகன் அவனுக்கும் திருமணமாகி ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு பேரக் குழந்தைகள் இவ்வளவு நன்றாக இருக்க அவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள நினைக்க வேண்டும். எவ்வளவு அழகாகவும் அமைதியாகவும் பேசக்கூடியவர், எல்லோரும் மதிக்கும் மனிதர் அவருக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை என சிந்தித்தான் சிவா.
அன்றைய வகுப்புகள் சிவாவுக்கு அவ்வளவு நன்றாக போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மதிய நேரம் தனக்கான ஸ்காலர்ஷிப் பணம் வந்து விட்டதா என பார்க்க கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கியை அடைந்தான் சிவா. தன்னுடைய விவரங்களை கேட்டபின் சிவா அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்க அவனை சிவா என்று அழைத்தார் வங்கி ஊழியர் ஒருவர் . சொல்லுங்க சார் என்றான் சிவா, உனக்கு ஸ்காலர்ஷிப் அப்ரூவ் ஆகி இருக்கு இன்னும் அக்கவுண்டுக்கு வரல சிவா என்ற வங்கி ஊழியர் நீதான் ராமலிங்கம் சாரை காப்பாத்துனன்னு சொன்னாங்க என்றார் வங்கி ஊழியர்.
ஆமா சார் பாவம் என்ன பிரச்சனையோ மனுசன் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்று சிவா சொல்ல, என்ன பண்ண சிவா பத்து லட்சத்தை யாருகிட்டையோ கொடுத்து ஏமாந்துட்டாரு போல, அதான் இந்த முடிவோ என்னவோ என்றார் வங்கி ஊழியர். அவரிடம் அப்படியா சார், ஆமாப்பா அன்னைக்கு பேங்க் மேனேஜர் கிட்ட வந்து ஏதாவது பண்ணலாமா என்று கேட்டார். அவர் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது என்றார் வங்கி ஊழியர் ஓகே சார் என்றபடி சிவா வங்கியில் இருந்து வகுப்புக்கு சென்றான்.
மறுநாள் சிவா கல்லூரி முடிந்ததும் ஹாஸ்பிடல் சென்று பார்த்தான், ராமலிங்கம் அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறினார்கள். ராமலிங்கம் திருநெல்வேலி மாவட்டம் மானூரை சேர்ந்தவர், அதனால் இப்போதைக்கு வேண்டாம் தேர்வுகளுக்கு பின் போய் சந்திக்கலாம் என முடிவெடுத்த சிவா, வங்கியில் தனக்கு தெரிந்த ஊழியர் மூலமாக ராமலிங்கம் பணம் அனுப்பியவர் பெயர் வினோத் என்றும், திருச்சியில் உள்ள கிளை ஒன்றுக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டது என்பதையும் தெரிந்து கொண்டான். அது சிவாவின் மூன்றாவது வருட இறுதித் தேர்வுகள் அடுத்த வருடம் சிவாவின் படிப்பிலும் வாழ்விலும் முக்கியமான பல மாற்றங்கள் நிகழ போகிறது அதையெல்லாம் எதிர்கொள்ள சிவாவும் தயாராகத்தான் இருந்தான். தேர்வுகள் முடிந்து சிவாவுக்கு 13 நாள்கள் விடுமுறை விடப்பட்டது அருணும் சிவாவும் திருச்செந்தூர், குலசை என கோவில்களுக்கு சென்று வந்தனர்.
சென்னை அண்ணாநகர் பத்தாவது தெருவில் உள்ள பெட் கிளினிக் முன்னால் தன்னுடைய பைக்கை நிறுத்தினான் ரஞ்சித். தன்னுடைய நாயை தூக்கிக்கொண்டு கிளினிக் உள்ளே சென்றவன் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை என்றும், தடுப்பூசி போட வில்லை என்றும் சொல்லி, வைத்தியம் பார்க்க அங்கு இருந்த அட்டெண்டர் ரஞ்சித்தை பார்த்த பார்வையில் ரஞ்சித் புரிந்து கொண்டான். அவனுடைய நாய்க்கு குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று பக்கத்து அறையில் ஏற்பாடு செய்யப்பட்டு ரஞ்சித் வெளியே காத்திருக்க. அவருடைய நாய்க்கு வைத்தியம் நடந்து கொண்டிருந்தது, அப்போது அந்த அட்டெண்டர் நைசாக ரஞ்சித்திடம் பேசி நம்பர் வாங்கிக் கொண்டான்.
அது ஒரு பவுர்ணமி இரவு தன்னுடைய இரவு உணவை உண்டபின் சிவா சற்று தூரம் நடக்கலாமே என்று எண்ணி, அருணுடன் போனில் பேசிக்கொண்டே ஊருக்கு வலப்புறம் உள்ள வாழைத் தோப்பு பக்கம் வந்தான். சிவா டேய் நீ வேற அந்த பையன் சுந்தர் ரொம்ப சின்ன பையன் டா ஆனா காரியத்துல கெட்டிக்காரன், எனக்கு என்னமோ என்னோட சுகத்துக்காக நான் அவனை ஏமாத்துற மாதிரி தோணுது என்றான் சிவா. எதிர்முனையில் அருண் டேய் அவனை ஜிஆர்ல தானே பார்த்த என கேட்க ஆமாம் என்றான் சிவா.. அப்புறம் என்னடா அது எப்படிப்பட்ட ஆப் என்ன ஆப்புன்னு தெரியாமயா அவன் அதை யூஸ் பண்ணுதான். படுத்தவனை எல்லாம் நீ லவ்வர் ஆக்கணும்னா உங்க லிஸ்ட் கொஞ்சம் பெருசாவே போகும் என்றான் அருண், டேய் என்ன கிண்டலா உன் கதையை எடுத்து விடவா. ஏதோ சுதனை பார்த்த இந்த ரெண்டு வருஷமா நீ சும்மா இருக்க, அதுக்கு முன்னால உங்க கதையை அவுத்து விட்டா கந்தலாகிவிடும் என்றான் சிவா. எதிர்முனையில் ஒரு முக்கியமான வேலை கொஞ்சம் கழிச்சு பண்றேன் என காலை கட் செய்தான் அருண்.
அவரோட கதையை சொன்னதும் கழண்டுட்டான் பாரேன், என்றபடி சிவா முன்னே நடக்க சற்று தொலைவில் யாரோ ஒருவர் நிற்பதை கண்டவன், மெதுவாக செல்ல அது ரகு என்பதை அறிந்து அவன் பின்னால் இருந்து அவனை பயமுறுத்தினான். பயந்த ரகு ஏன்டா இந்த கொலைவெறி உனக்கு என கேட்க. நீ என்ன பண்ற இந்த நேரம் இன்னிக்கு தண்ணி பாய்ச்சல் நம்ம ஊரு முறை கிடையாது, உங்க தோட்டத்துல நாளைக்கு தான் தார்பரின்னு எங்க அம்மா சொல்லுச்சு. சம்பந்தமே இல்லாம இங்க என்ன பண்ற எனக் கேட்ட சிவா, தன்னையும் மீறி ஏதோ சத்தம் தெற்கு பக்கம் வருவதை கேட்டு விட்டான். ரகு அதை சிவா கவனிக்க கூடாது என்பதற்காக ஏதேதோ பேச, அவனை வாயை மூட சொன்ன சிவா ரகுவின் கையை பிடித்து இழுத்தபடி சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான்.
வாழைத்தோட்டத்தில் மோட்டார் ரூமின் பின்புறம் உள்ள கிணற்றின் திட்டில் இரண்டு பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒன்று பெண் மற்றொன்று ஆண், உடனே வேகமாக ரகுவை அங்கேயே நிற்கச் சொன்ன சிவா அவர்கள் இரண்டு பேருக்கும் முன்னால் சென்று நின்றான். பௌர்ணமி நிலவொளியில் அந்த இருவரின் முகமும் நன்றாகவே தெரிந்தது சிவாவிற்கு, சிவாவை அங்கு கண்ட அந்த இருவருமே பேரதிர்ச்சி கொண்டனர்.
வருவான்…

Mahesram
10/08/2025 at 10:21 காலை
Nice