தோட்டத்தின் கிணற்றுத் திட்டில் பேசிக் கொண்டிருந்த ஆண் மற்றும் பெண்ணின் முன்னால் நின்றான் சிவா, அது பௌர்ணமி இரவு என்பதால் இரண்டு பேரின் முகமும் சிவாவுக்கு நன்றாகவே தெரிந்தது. சிவாவை கண்ட அந்த இரண்டு பேருக்கும் பேரதிர்ச்சி, ஏனென்றால் பகலில் எலியும் பூனையுமாக தங்களை காண்பித்துக் கொள்ளும் சிவலட்சுமியும் மாரிமுத்துவும் தான் அங்கு அமர்ந்திருந்தனர்.
அடிப்பாவி உன்னை போய் நான் என்னவெல்லாம் நினைச்சேன் என தன்னுடைய வாயில் கையை வைத்தான் சிவா, டேய் தம்பி நீ என்ன இந்த பக்கம் என கிணற்றுத் திட்டிலிருந்து இறங்கிய சிவலட்சுமி சிவாவின் கைகளை பிடித்தபடி கேட்டாள். அது முக்கியம் இல்ல என சிவா சொல்ல, கோவப்படாத டா வாடா முதல்ல நீ உட்காரு அக்கா உனக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன் என்றாள் சிவலட்சுமி.
கிணற்றுத் திட்டில் அமர்ந்தான் சிவா சொல்லு என சிவலட்சுமியிடம் அதிகார தொணியில் கேட்க, டேய் எல்லாம் என் நேரம்டா என்று மனதில் எண்ணியவள், அத்தான் நீங்க போங்க நான் இவன்கிட்ட பேசிக்கிறேன் என்றாள் சிவலட்சுமி. ஓஹோ அத்தானா, அவ்வளவு போயிருச்சா என சிவா மனதில் நினைத்துக் கொண்டான் சிவாவை பார்த்து சிரித்த மாரிமுத்து, ஜூனியர் உங்க அக்கா எல்லாம் சொல்லுவாங்க நான் கிளம்புறேன் பாய் என்றவன், பாய் டா ரகு என கிளம்பினான். மாரிமுத்து சென்ற பின் சிவலட்சுமி தன்னுடைய கதையை தொடங்கினாள்.
சிவா உனக்கு தான் தெரியுமே எங்க அம்மா இன்டெர்காஸ்ட் மேரேஜ் பண்ணிகிட்டாங்க 16 வயசுலயே, எங்க அம்மா எனக்கு எட்டு வயசு இருக்கும் போது இறந்துட்டாங்க, அப்பா தற்கொலை பண்ணிக்கிட்டாரு அதுக்கு அப்புறம், நான் மாமா வீட்ல வந்து வளர்ந்துட்டு இருக்கேன். என் அப்பா வீட்டுல உள்ள யாரையும் என் மாமா என்னைய பாக்க விடல, என் அத்தை அப்பாவோட தங்கச்சி மட்டும் என்ன அப்பப்ப பார்ப்பாங்க. அந்த அத்தை பையன் தான் மாரிமுத்து என சிவலட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிவா கத்த தொடங்கினான் .
அடிப்பாவி அவன் உன்னை என் பேர வச்சு கிண்டல் பண்றான்னு மூணு வருஷமா எத்தன தடவ என்னை அடிச்சிருப்ப, கிள்ளி இருப்ப, என்ன எல்லாம் திட்டி இருப்ப. உன்னால தான் நான் அந்த ஒண்ணுத்துக்கும் உதவாத டைப்ரைட்டிங் கிளாஸ் போனேன் என்றான் சிவா. டேய் அது கூட என்னோட பிளான்தா நான் தான் அவன்கிட்ட அப்படி செய்ய சொன்னேன் அதுக்கு வசமா உன் பேரும் சிவாவா அதனால வேலை ஈஸியா முடிஞ்சுது என்றாள் சிவலட்சுமி.
ஏண்டி அப்படி சொன்ன என சிவா கேட்க, என்னடா வாடி போடின்னு சொல்ற என சிவலட்சுமி கேட்க அப்படித்தான் டி சொல்லுவேன் என்ற சிவாவை சிவலட்சுமி விரட்ட அவன் ரகுவின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டான். ரகு அவர்கள் இருவரையும் தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான், அப்போது அப்புறமா அடிச்சுக்கலாம் முதல்ல ஏன் அப்படி எல்லாம் பண்ண அதை சொல்லு என்றான் சிவா.
டேய் நம்ம காலேஜ்ல மொத்தம் நம்ம ஊரு பசங்க 12 பேர் படிக்கிறாங்க அதுல நாங்க 3 பொண்ணுங்க, மீதி ஒன்பது பேரும் பசங்க, அதுல நாலு பேரு என்சிசி-ல இருக்காங்க, நாலு பேரு கல்ச்சுரஸ்ல மிச்சம் இருக்கிறது நீ ஒருத்தன் தான் அதான் உன்ன வழியை விட்டு விலக்கிட்டா நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா பஸ்ல போலாம்ல அதான் என்றாள் சிவலட்சுமி. அடிப்பாவி எவ்வளவு பெரிய கைகேகியா இருந்திருக்க, அவ ராமனை வனவாசம் அனுப்புனா, நீ என்ன டைப்ரைட்டிங் கிளாஸ் அனுப்பி இருக்க என வாயின் மீது கையை வைத்தபடி ஆச்சரியமாக நின்றான் சிவா.
இங்க பாரு என்னால உன்னோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல எல்லாம் முடியாது. ஏற்கனவே தூக்கம் வருது ரகு வா போலாம் என சிவலட்சுமி நடந்தாள், அது சரி மூணு வருஷமா அனுபவிச்சது நான் தானே என்றபடி சிவாவும் தன்னுடைய வீட்டை அடைந்தான். இரண்டு நாட்கள் கழித்து சிவலட்சுமிடமிருந்து சிவாவுக்கு கால் வந்தது, சொல்லுக்கா என்றான் சிவா, டேய் நாளைக்கு பாபநாசம் போறோம் வரியா என்றாள் சிவலட்சுமி. ஏய், இந்த வெயில்ல நான் வரல எனக்கு டயர்டா இருக்கு என்றான் சிவா, ஓகே டா ரகுவும் வரான் நானும் என் ஆளு சேர்ந்து சுத்திட்டு இருப்போம் நீ வந்தா உனக்கு ரகுவோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியுமேன்னு சொன்னேன் என்றாள் சிவலட்சுமி. குந்தாணி பொய் சொல்லாம சொல்லு அவன் வரானா என்றான் சிவா, உன்மேல சத்தியமா வரான் என்றவள் நம்ம டோல்கேட் கிட்ட வந்துரு என்று சொல்லி போனை கட் செய்தாள்.
மறுநாள் காலை சிவாவும் கிளம்பி டோல்கேட் சென்றடைந்தான், பைக்கில் டோல்கேட் வந்தனர் ரகுவும் சிவலட்சுமியும் அவர்களுக்கு பின்னால் மாறிமுத்துவும் வந்து நின்றான். நீ உன் சீனியர் கூட ஏறிக்கோ என்றாள் சிவலட்சுமி இதுக்கு தான் என்ன வர சொன்னியா என சிவா மனதிற்குள் திட்டிக்கொண்டே சென்று மாரிமுத்துவின் பின்னால் ஏறிக்கொண்டான் சிவா. பின்னால் இருந்த சிவாவின் முகத்தை கண்ணாடியின் வழியே பார்த்த மாரிமுத்து, என்னடா எப்பவும் காரணமே இல்லாம பேசிட்டே இருப்ப இப்ப என்ன ஆச்சு எனக் கேட்க. நான் பேசி என்ன ஆகப்போகுது, என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே சீனியர் நீங்களும் அவ கூட சேர்ந்து கமுக்கமா இருந்து இருக்கீங்க என்றான் சிவா.
டேய் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல என்ற மாரிமுத்து, பொட்டலூரணி விளக்கில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட ரகு வண்டியை நிறுத்தியதை பார்த்தவன் இறங்கி நின்று கொண்டிருந்த சிவலட்சுமியின் அருகில் சென்று பைக்கை நிறுத்தினான். என்னவாம் இவனுக்கு, மூஞ்சிய ஏன் தூக்கி வச்சிருக்கான் என சிவலட்சுமி மாரிமுத்துவிடம் கேட்க எனக்கு தெரியல என மாரிமுத்து சொல்ல, என்னடா ஆச்சு என சிவாவின் முதுகை தட்டியபடி சிவலட்சுமி கேட்டாள். அதெல்லாம் ஒன்னும் இல்ல என சிவா சொல்லிக் கொண்டிருக்கும்போதே பெட்ரோல் ஃபுல் செய்து விட்டு ரகு வந்தான்.
என்னடா ஃபுல் பண்ணிட்டியா என கேட்டான் மாரிமுத்து, என்ன சீனியர் அவரை டா போட்டு பேசுறீங்க உங்களோட ரெண்டு வயசு பெரியவர் என்றான் சிவா. ஓஹோ, டேய் நான் ஒன்பதாவது ஃபெயில் அண்ட் ஆறாவதுல ஒரு தடவை ஃபீவர்னால ஸ்கூல் போகல கணக்குக்கு நானும் அவனும் ஒரே வயசு தான் என்றான் மாரிமுத்து. உடனே சிவாவின் முதுகில் தட்டியபடி சிவலட்சுமி சொன்னாள், என்னடா அங்க மரியாதை குறைஞ்சா இங்க வலிக்குது என்றாள். உடனே அப்படி எல்லாம் ஒன்னுமில்ல என சிவா மலுப்ப வசவபுரம் தாண்டி நிப்பாட்டுடா என மாரிமுத்து ரகுவிடம் சொல்ல சரி என்றபடி ரகு முன்னே செல்ல மாரிமுத்து பின்னால் சென்றான்.
பாபநாசம் செல்வதற்காக அவர்கள் சென்று கொண்டிருப்பது என் எச் 32 தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலை பொட்டலூரணி விளக்கு தாண்டி, முறப்பநாடு, பக்கபட்டியை தாண்டி வசபுரத்தில் உள்ள கருப்பட்டி காபி கடை ஒன்றில் வண்டியை நிறுத்தினர். நான்கு பேரும் சேர்ந்து காபி குடித்து முடித்து மீண்டும் பயணத்தை தொடங்கினர். இப்போது பைக்கை ஸ்டார்ட் செய்த ரகு, சிவா நீ என் கூட ஏறிக்கோ நச நசன்னு இவ தொல்லை தாங்கல என்றான். உடனே சிவாவுக்கு உச்சந்தலையில் யாரோ பெரிய ஐஸ்கட்டியை வைத்தது போல இருந்தது. சரி ரகு என பல்லை காட்டிக் கொண்டு சிவா முன்னே செல்ல டேய் அவன் தூங்கி வழியிறான் பார்த்து உட்காரு என மாரிமுத்துவின் பைக்கில் ஏறினாள் சிவலட்சுமி .
ரகுவுக்கு பைக் ஓட்ட தெரியும் ஆனால் பிடிக்காது, இது சிவாவுக்கு ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும் ரகுவின் பின்னால் அமர வேண்டும் என்கிற உற்சாகம் அவனும் ரகுவின் பின்னால் அமர்ந்தான். ரகுவின் வியர்வையோடு கலந்த அந்த சார்லி செண்ட் வாசனை சிவாவின் நாசியின் வழியே மூளையை அடைந்து காம ரசாயனங்களை அவன் உடல் முழுவதும் ஊற்றாக்கி பெருக்கெடுக்க செய்தது. ரகுவும் சிவாவும் ஒரே மாதிரியான டிரசைதான் அணிந்திருந்தனர், கருப்பு கலர் ஷர்ட் மற்றும் வேஷ்டி. அதுவே சிவாவின் பூரிப்புக்கு இரட்டிப்பு காரணம், அதுவும் ரகுவின் பின்னால் உட்கார்ந்து செல்வது அவனுடைய பக்கெட் லிஸ்டில் உள்ள ஒன்று இதையெல்லாம் தாண்டி ரகு தனக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பது இது அனைத்திலும் முதலான மகிழச்சிக்கு காரணமான ஒன்று.
ரகு வண்டியை ஓட்டும்போது அவ்வளவு மிடுக்கு, காற்று கூட ரகுவின் தொடையை ஸ்பரிசிக்க எண்ணி வேஷ்டியை விளக்குவதும் அதை ரகு சரி செய்வதும் என்று சிவாவின் கண்களுக்கு விருந்தானது. காற்றோடு சண்டையிட்டு தோற்றுப் போன ரகுவின் மார்பு சட்டையின் மீது சிவாவுக்கு அளவில்லா கோபம், தான் தொட்டு ரசிக்க வேண்டிய மார்பை அந்த சூரியன் தன் கதிர் கொண்டு ருசிக்க நேர்ந்தது, வண்டியை ரகு ஓட்டும் போது அவனுடைய உடல்வாகு இன்னும் தெளிவாக தெரிந்தது. இலக்கியங்களில் குறிப்பிடும் கந்தர்வர்களைப் போல சிவாவின் கண்களுக்கு ரகு தென்பட்டான் விரிந்த தோள், அகன்ற மார்பு, அதன் பாதி அளவு இடை, இமைக்காமல் பார்க்கத் தூண்டும் தொடை, சிவா தன்னையே தொலைத்த கால்கள் என சிவா ரகுவை அணு அணுவாக ரசித்தான்.
ராமயணத்தில் ராமனின் தோள்களை கண்டு தான் சூர்ப்பனகை காதல் கொண்டாள் என்று, அந்த கதை சிவாவுக்கு ஞாபகம் வந்தது அப்போது ரகு சடனாக பிரேக் அடிக்க என்ன ஆச்சு என சிவா கேட்க. எனக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் டா, நைட் ஷிப்ட் வேற அதான் கொஞ்சம் கண்ணசந்துட்டேன், நீ வண்டி ஓட்டுறியா என கேட்டான் ரகு. டபுள் ஜாக்பாட் அடித்தது போல சிவாவும் சரி என்று சொல்ல, சரிடா வா என சிவா வண்டியை ஓட்ட ரகு பின்னால் அமர்ந்தான். ரகுவின் தொடைகளுக்கு நடுவில் சிவா அமர்ந்து கொண்டு வண்டியை ஓட்ட பிரேக் அடிக்கும் போது, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போதும் தன் தொடைகளால் சிவாவை ரகு இறுக்கி அணைத்தது சிவாவுக்கு ஏதோ பண்ணியது .
திருநெல்வேலி டவுனை தாண்டி, சேரன்மகாதேவி ரோட்டை பிடித்தவுடன் ரகு தன்னுடைய நாடியை சிவாவின் தோள் மீது வைத்துக்கொண்டு ரூட்டு தெரியுமாடா என கேட்டான். ஆம் தெரியும் என சிவா பதில் சொல்ல, பிறகு நாடியை சிவாவின் தோள்களில் இருந்து எடுக்காமல் பேசிக் கொண்டே வர ஒரு கட்டத்தில் கண்ணசந்து சிவாவின் தோளில் தூங்கிவிட்டான், சிவா வண்டியை நிறுத்த என்னடா ஆச்சு என ரகு தூக்க கலக்கத்தில் கேட்க அம்பை வந்துட்டோம் அதான் ஒரு டீ குடிச்சிட்டு போகலாம்னு சீனியர் சொன்னார் என்றான் சிவா. ஓகே ஓகே என நான்கு பேரும் டீ குடித்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினர்.
டீ குடித்த பின்பு ரகு சிவாவோடு பேசிக்கொண்டே வந்தான், கிட்டதட்ட அந்த ஒரு மணி நேர பேச்சில் சிவா நிறைய விஷயங்கள் ரகுவைப் பற்றி தெரிந்து கொண்டான். சிவாவை பொறுத்தவரை ரகு உலகமறியாதவன், அதற்கு மிகப்பெரிய காரணம் அவனுடைய அப்பா, ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் அங்கிருந்து வந்த பின் இரண்டாவது வேலையாக காவல் துறையில் நேரடி துணை கண்காணிப்பாளராக சேர்ந்துள்ளார். அவர் வல்லநாடு ஸ்டேஷனில் பணிபுரிவதால் தான் அதை தாண்டி வசவுபுரத்தில் சிவலட்சுமி மாரிமுத்து உடன் பைக்கில் ஏறிக்கொண்டாள்.
ரகுவுக்கு அவன் அப்பாவின் மீது பாசம், மரியாதையை தாண்டி பயமே அதிகமாக இருந்தது. அதற்கான காரணம் சிவாவுக்கு பிடிபடவில்லை என்றாலும் ரகுவின் பேச்சில் கூட அவனுடைய அப்பா மிகவும் கடுமையானவராகவே இருந்தார். ரகுவின் அக்கா பக்கத்து ஊரான குலையன்கரைசலில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளார், வீட்டில் பார்த்து செய்த வைக்கப்பட்ட திருமணம் என்றாலும் நன்றாகவே அவருடைய வாழ்க்கை அவரை அழைத்து செல்கிறது. ரகுவின் அம்மா சாந்தத்தின் மறு உருவம், ரகுவின் பத்து வார்த்தைகளில் ஐந்து அவனுடைய அம்மாவை பற்றியதாகவே இருந்தது.
90களிலேயே பிஎஸ்சி படித்தவர் நல்ல குணம் அறிவு என்றாலும் பெண் அடிமையின் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு ரகுவின் அம்மா. அடுத்து ரகுவின் பாட்டி, அவருக்கு இருப்பது ஒரே ஒரு வேலை தான் எப்போது பார்த்தாலும் ரகுவின் அப்பாவின் காதில் ரகுவையும் ரகுவின் அம்மாவை பற்றியும் குறை கூறுவது அதை விட்டால் வெற்றிலை மெல்லுவது என 90களில் கிராமியப் படத்தில் காட்டப்படும் அக்மார்க் குடும்பத்தின் நகல், ஆனால் ஒரு வேற்றுமை அவர்கள் வாழ்வது 2020 களில் என்பது மட்டும்.
பாபநாசம் அடைந்ததும் பைக்கை நிறுத்திவிட்டு நான்கு பேரும், தாமிரபரணி அலைமோதி அலை மிதந்து வந்து செல்லும் படித்துறையை அடைந்தனர். அது வேலை நாள் என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே பக்தர்கள் காணப்பட்டனர். படித்துறையில் நின்றபடி சிவலட்சுமி சொன்னாள், என்னடா ஒரே குஷி தான் போல என்று, நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க ஜி என்றான் சிவா. ஏண்டா என்னாச்சு எனக்கேட்டாள் சிவாலட்சுமி, பின்ன என்னக்கா அப்பான்னு சொன்னாலே ஒன்னுக்கு போயிருவான் போல, அவனை என்னை காதலிக்க கூட வச்சுருவேன். ஆனா அவங்க அப்பாவை எதிர்த்து பேசி என் கூட வாழ வைக்க முடியாது போலையே என்றான் சிவா, அதைத்தான் நான் மூணு வருஷமா சொல்லுறேன் என்றாள் சிவலட்சுமி, ஹலோ ஒருத்தங்க புலம்புனா அதுக்கு நீங்க பதில் தான் சொல்லணும்னு அவசியம் இல்ல, உன்னால முடியும் முயற்சி செய்யுன்னு மோட்டிவேஷன் பண்ணினா போதும் என்றான் சிவா. அது எப்படிடா என சிவலட்சுமி பேசவர தன்னுடைய கையால் அவள் வாயை மூட சைகை செய்தவன் நீங்க உங்க காதலை மட்டும் பாருங்களேன் என்றான் சிவா.
என்னமோ பண்ணு என சிவலட்சுமி மாரிமுத்துவின் கையைப் பிடித்தபடி ஆற்றில் இறங்கத் தொடங்கினாள், படித்துறையில் நின்ற சிவாவை வாடா என ரகு அழைக்க, அய்யோ நான் வரல தண்ணி சில்லுன்னு இருக்கும் என்றான் சிவா. நாம வந்ததே குளிச்சு என்ஜாய் பண்ணதா என ரகு சொல்ல, அது சரி என சிவா தன்னுடைய சட்டையை கழட்டினான், அப்போது தான் ரகு முதன் முதலாக சிவாவை அரை நிர்வாணமாக பார்க்கிறான். நியமனம் எடுத்த போது அது அரை நிர்வாணமாக தெரியவில்லை ரகுவின் கண்களுக்கு, சிவா நல்ல மாநிறம் அவனுடைய துருத்திய முலைக்காம்பும், மயிரற்ற மேனியும் ரகுவின் மூளையை வெகுவாகவே கவர்ந்தது.
தன்னுடைய வேஷ்டியையும் அவிழ்த்துவிட்டு சாட்சை மட்டும் அணிந்தபடி சிவா இறங்கி வர வர ரகு கிறங்கி போனான் என்பது நிதர்சனம், படித்துறையில் பாசிபடிந்து வழுக்கும் என்பதற்காக ரகு தன்னுடைய கையை நீட்ட அதை பிடித்தபடி சிவா உள்ளே இறங்கினான். சிவாவிற்கு பாதம் முதல் மேல் நோக்கி தண்ணீர் ஏற ஏற அவருடைய முனகல் ரகுவை ஏதோ செய்தது டேய் சத்தம் போடாம இறங்குடா எனக்கு என்னென்னமோ தோணுது என்றான் சிரித்தபடி ரகு.
சுதாரித்துக் கொண்ட சிவா என்ன தோணுது என்றான், அதெல்லாம் ஒன்னும் இல்ல என சிவாவுக்கு மார்பளவு தண்ணீரில் இரண்டு பேரும் முங்கி எழுந்தனர். சிவாவின் நீர் தாங்கிய தலையும் உதடும் ரகுவின் எண்ணவோட்டத்தை இலகுவாக காமத்தை நோக்கி இழுத்து சென்றது. விம்மிய மார்பும், ரகு விழ துடிக்கும் மார்புக் குழியும், ரகு தன்னுடைய சுயநினைவை இழந்து கொண்டிருக்கும் போது அதை மீட்டெடுக்க மாரிமுத்துவின் குரல் துணை செய்தது .
சடனாக ரகுவின் செயல்பாடுகளில் சிவா வேறுபாடு அறிகிறான், ஆனால் அதை அவனால் உறுதியாக நம்பி விடவும் இயலாது, ஏனெனில் ரகுவை சிவா தன்னுடைய காதலனாக பார்க்கிறான். ரகுவின் இடத்தில் காமம் தெரிவது கூட சிவாவை பொறுத்தவரை காதலே, என்னடா என மாரிமுத்துவிடம் ரகு கேட்க ரெண்டு பேரும் இந்த பக்கம் வாங்க மாந்தோப்பு திறந்து இருக்கு என்றான் மாரிமுத்து.
சரியென இருவரும் நீந்தி அக்கரைக்கு சென்று மாந்தோப்பில் சுற்றி திரிந்தனர், அப்போது சிவா மாம்பழம் ஒன்றை கடித்துவிட்டு ஐயோ ரொம்ப புளிக்குதே என்று சொல்ல அதை வாங்கி கடித்த ரகு இல்லையே இனிக்கதானே செய்து என்றான். அது சிவாவுக்கு சற்று சந்தோஷமாக தான் இருந்தது. மாலை 4 மணியை கடக்க கோயிலுக்கு வெளியே இருந்த கடையில் ஒரு செட் தேங்காய் பழத்தை வாங்கி வந்த ரகு பைக் அருகில் வைத்து உடைத்தான். ஏன்டா இங்க உடைக்கிற என சிவா கேட்க, பின்ன கோவில் நடை அஞ்சு மணிக்கு தான் திறப்பாங்க அது வரைக்கும் நம்ம வெயிட் பண்ண முடியாதுல்ல, இப்ப கிளம்பினா தான் எட்டு மணிக்கு வீட்டுக்கு போக முடியும் என்றான் ரகு.
அதெல்லாம் சரி உங்க அம்மா கேட்க மாட்டாங்க திருநீர் எங்கேன்னு என்றான் சிவா, அதான் இருக்கே என தன்னுடைய பையில் இருந்த ஒரு பொட்டலத்தை ரகுவிடம் கொடுத்தாள் சிவலட்சுமி. அதை வாங்கி அந்த பொட்டலத்தைப் பிரித்து உடைத்த தேங்காயின் ஒரு பாதியில் போட்டான் ரகு, தன்னுடைய கையில் வாடியும் வாடாமலும் உள்ள செவ்வரளி பூவை கொஞ்சமாக எடுத்து வந்து அந்த தேங்காயின் மற்றொரு பகுதியில் போட்டான் மாரிமுத்து. இவ்வளவு ப்ரொபஷனலா நீங்க பண்றத பாத்தா ரொம்ப காலமாக இதைத்தான் பண்றீங்க போல என சிவா கேட்க. வேற என்னடா பண்றது காதல்லயும் போர்க்களத்திலயும் எல்லாம் எதுவும் தர்மமே என்றாள் சிவலட்சுமி. அவளைப் பார்த்த சிவா அது சரி என்று சொல்லி போகும் வழியில் அஞ்சப்பரில் நான்கு பேரும் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு ஊரை நோக்கி பயணத்தை தொடங்கினர் .
பயணத்தின் போது சிவா வண்டி ஓட்டிக் கொண்டிருக்க அவனை பின்புறத்தில் இருந்து கட்டிப்பிடித்த ரகு, சிவா நான் ஒன்னு கேட்கவா என்று சொல்ல சிவாவுக்கு அவன் கட்டி அணைத்து இருந்ததை வைத்து எங்கே காமத்திற்கு அழைப்பானோ என்கிற எண்ணம் தோன்ற என்ன எனத் தட்டு தடுமாறி கேட்டான். அப்படி என்னை ஏண்டா உனக்கு இவ்ளோ பிடிச்சிருக்கு என்றான் ரகு, உடனே சடன் பிரேக் அடித்தான் சிவா.
-வருவான்.
