ஸ்டீபன் கொஞ்சம் கொஞ்சமாக ரகுவின் அருகில் வந்து கொண்டிருக்க ரகுவின் கண்கள் கலங்கி கரைபுரளக் காத்துக் கொண்டிருந்தது, அவனுடைய இதயம் ஏனோ உடலை விட்டு தனியாக இயங்குவது போல சத்தமிட்டது. ரகுவினுடைய குரல்வளைப் பேச விடாமல் தனக்குத்தானே தாழிட்டுக் கொண்டது. ரகுவின் மூச்சுக்காற்று வேகமாக வெளியேறியது, என்னடா ரகு எங்க ஊரு பக்கம் வந்து இருக்க என ஸ்டீபன் சொன்னதும் தனக்கு எதிரில் நின்ற அவனைக் கட்டி அணைத்தபடி கதறி அழத் தொடங்கினான் ரகு.
டேய் என்ன ஆச்சு என்ன ஆச்சுடா என ஸ்டீபன் ரகுவை தேற்ற நினைக்க ரகுவின் பின்னால் நின்ற சிவா, விடுங்க அவன் அழுகட்டும் என சைகை காட்டினான். பத்து நிமிடம் அழுகைக்குப் பின் ரகு மெதுவாக ஸ்டீபனை விட்டு விலகினான்.
எதுவும் பேசாமல் சிறிது தூரம் ரகு நடக்க தொடங்கினான், அவனை பின்தொடர்ந்து சென்ற ஸ்டீபனிடம் நான் இங்கேயே இருக்கேன் ஸ்டீபன், அவனுக்குள்ள ஏகப்பட்ட கேள்விகள் இருக்கு, ப்ளீஸ் நீங்க அவன் கிட்ட எல்லா உண்மைகளையும் சொல்லுங்க என்றான் சிவா.
டேய் அதனால அவன் இன்னும் கஷ்டப்படுவானே என்றான் ஸ்டீபன். அண்ணா அவனுக்கு நீங்க ஏன் அவனை விட்டுட்டு போனீங்கன்னு தெரிஞ்சுக்க உரிமை இருக்கு, அதை நீங்க சொல்லித்தான் ஆகணும் என்றான் சிவா. சரிடா நீ சொல்ற நான் அதனால அவன்கிட்ட எல்லா உண்மையும் சொல்றேன் என்றபடி ரகுவின் அருகில் சென்றான் ஸ்டீபன்.
டேய் அஞ்சு வருஷம் கழிச்சு மீட் பண்ணி இருக்கோம் ஒரு வார்த்தை கூட பேசாம போற என்றான் ஸ்டீபன், திரும்பி அவனைப் பார்த்த ரகு என் பின்னால வராத டா நான் இருக்குற கோவத்துல உன்னை சாவடிச்சிடுவேன் என்றான் ரகு. பரவால்ல சாவடிச்சுக்க ஆனா என்கூட பேசிட்டு சாவடி என்று ஸ்டீபன் சொன்னதும், ரகுவின் நடந்த கால்கள் நின்றன, ரகுவின் அருகில் வந்தான் ஸ்டீபன், என்னடா என் மேல இவ்வளவு கோபம் என கேட்டான். அவனுடைய கழுத்தை தன்னுடைய இரண்டு கைகளாலும் பிடித்தபடி ஏன்டா என்னை விட்டுட்டு போன, ஒரு வார்த்தை கூட சொல்லாம போயிட்ட ஏன்டா? ஏன்? என்னை விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு என ரகு கேட்க.
நான் விட்டுட்டு போகல டா விரட்டி அடிக்கப்பட்டேன் என்றான் ஸ்டீபன்.
ஸ்டீபன் சொன்ன அந்த வார்த்தை ரகுவை, அவனுடைய பேச்சைக் கேட்க வைத்தது. ஆமா ரகு என்ன விரட்டி அடிச்சிட்டாங்க, என்னை காலேஜ் விட்டு டிஸ்மிஸ் பண்ண வச்சாங்க. எங்க அப்பாவ ஏன்னே தெரியாம அரெஸ்ட் பண்ணாங்க, என் வயசு பையங்க எல்லாம் படிச்சிட்டு இருக்கும் போது நான் கோர்ட்டு வாசல்லையும் போலீஸ் ஸ்டேஷன் வாசலையும் கைகட்டி நின்னுட்டு இருந்தேன் என்றான் ஸ்டீபன்.
என்னடா சொல்ற எனக்கு தெளிவா புரியிற மாதிரி சொல்லு என்றான் ரகு.
ஆமா ரகு நான் உண்மைய தான் சொல்றேன், என்னோட வாழ்க்கையில இப்ப ஒரு வருஷமா தான் கொஞ்சம் அமைதியா இருக்கு நாலு வருஷமா நான் நரகத்தில் தான் வாழ்ந்துட்டு இருந்தேன். யாருடா இதெல்லாம் பண்ணுனது என கேட்டான் ரகு, நான் சொன்னா உன்னால நம்ப முடியாது டா என்றான் ஸ்டீபன்.
டேய் ஏன்டா இப்படி சொல்ற உன்ன நம்பாம நான் வேற யாரடா நம்ப போறேன் என்ற ரகுவிடம் உன்னோட அப்பா தான் இதெல்லாம் பண்ணுனாரு என்றான் ஸ்டீபன்.
அதைக் கேட்ட ரகுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது, என்னடா எங்கப்பாவா என ரகு தான் ஆச்சரியத்தை வெளிபடுத்தினான்.
ஆமான்டா ரகு உங்க அப்பா தான், உனக்கு நியாபகம் இருக்கா எனக்கு உடம்பு சரியில்லைன்னு நான் சொன்னேன் அப்புறம் நீ காலேஜுக்கு தனியா போயிட்ட அப்போ என்னோட பிரண்டு கிட்ட நான் பேசிகிட்டே மொட்டை மாடியில் உள்ள துணிகள் எடுக்க போன, நான் கீழே வந்து பார்த்தப்போ உன்னோட அப்பா நின்னுட்டு இருந்தாரு.
அவரோட கையில உன் டைரி இருந்துச்சு, என்னோட சந்தேகம் உண்மையா ஆயிருச்சு உங்க அப்பா உன்னோட டைரில நீ என்ன பத்தி எழுதி வச்சிருந்த எல்லாத்தையும் பாத்துட்டார்.
என்கிட்ட உன் பேர் என்னன்னு கேட்டாரு, நான் ஸ்டீபன்னு சொன்னேன்.
ஓஹோ நீ தான் அதா, உனக்கும் என் பையனுக்கும் இடையில் என்ன போயிட்டு இருக்கு என்று கேட்டார், ஒன்னும் இல்லைன்னு நான் சொன்னேன்.
உடனே அவர் அப்ப ஏன் ரகு உன்ன லவ் பண்றேன்னு இந்த டைரி ஃபுல்லா எழுதி வச்சிருக்கான்னு அவர் கேட்டார், நான் எனக்கு தெரியாது உங்க பையன தான் கேக்கணும் என்று சொன்னேன்.
உடனே அவர் அவ்வளவு திமிரா உனக்கு என என்னோட சாதி பேரை சொல்லி திட்டுனாரு, நான் அவர்கிட்ட உங்க பையன் தான் என்னை லவ் பண்ணறன்னு சொன்னான் நான் அவனை லவ் பண்ணலன்னு சொல்லிட்டேன் அப்படின்னு சொன்னேன்.
உடனே அவர் என்ன மிரட்டி பக்கத்துல உள்ள டீக்கடைக்கு போயிட்டு, ஒன் ஹவர் கழிச்சு வர சொன்னாரு நான் போயிட்டு வந்து பார்த்தேன். உன்னோட பொருட்கள் எதுவுமே அங்க இல்ல நீயும் இல்லை, அதுக்கப்புறம் நீ காலேஜுக்கும் வரல அதுக்கு அடுத்த வாரம் நான் காலேஜ் லீவு ஊருக்கு போயிட்டு திரும்ப வர. பஸ் ஸ்டாண்ட்ல எங்க அப்பாவோட வெயிட் பண்ணிட்டு இருந்தேன், நானும் எங்க அப்பாவும் எங்க பேக்கை வச்சிட்டு பக்கத்துல உள்ள டீக்கடை ல டீ குடிச்சிட்டு இருந்தோம்.
திடீர்னு வந்த போலீஸ்காரங்க என்னோட பேக்ல இருந்து போதை பொருள் பொட்டலம் ஒன்னை எடுத்து காட்டி யாரோட பேக்குன்னு கேட்டாங்க, எங்க அப்பா அவரோட பேக் தான்னு சொல்லிட்டாரு.
அவரை திட்டி அடிச்சு அரெஸ்ட் பண்ணிட்டு போயிட்டாங்க, அதுக்கு ரெண்டு நாள் கழிச்சு காலேஜ்ல என்ன டிஸ்மிஸ் பண்ணிட்டதாகவும் டிசி வந்து வாங்கிட்டு போகவும் சொன்னாங்க. ஏன் எதுக்குன்னு எனக்கு ஒண்ணுமே புரியலடா.
ஒரு வருஷமா எங்க அப்பாவ ஜெயில்ல தான் வச்சிருந்தாங்க, தம்பி, தங்கச்சி, அம்மான்னு எல்லாரும் பாத்துக்க நான் அப்பாவோட கடையை நடத்த ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷம் கழிச்சு ஒரு நாள் போலீஸ்கார அண்ணா ஒருத்தர் சொன்னாரு.
ஏல ஸ்டீபா, உனக்கும் தூத்துக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பையனுக்கு இடையில எதுவும் தகராறு இருக்கா என்று, ஏன் அண்ணா என்ன ஆச்சுன்னு நான் கேட்டேன். அந்த போலீஸ்காரருக்கு கொஞ்சம் பெரிய ஆட்கள் செல்வாக்கு அதிகம் போல அதான் உன்னோட அப்பா கேஸ இவங்க முடிக்காம இழுத்து அடிக்கிறாங்க என்று சொன்னார்.
நான் உங்க அப்பாவ முரப்பநாடு ஸ்டேஷன்ல வச்சு பார்த்தேன், அவர் என்கிட்ட எதுவுமே தெரியாத மாதிரி பேசினாரு. ஆனா அவரோட உதட்டுல தெரிஞ்ச அந்த ஏளனமான சிரிப்பு அவர் தான் எல்லாத்துக்கும் காரணம்னு தெரிஞ்சுக்கிட்டேன். நான் அவரோட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டேன் அதுக்கு அப்புறமா தான் ஆறு மாசத்துல எங்க அப்பா வீடு திரும்பினார் என்ற ஸ்டீபன் கண்ணில் இயலாமையின் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
ஸ்டீபனின் கால்களை பிடித்த படி ரகு, என்ன மன்னிச்சிடுடா என்னை மன்னிச்சுடுடா என்று அழுதான். அவனுடைய தோள்களை பிடித்து எழுப்பிய ஸ்டீபன், டேய் அவர் பண்ணதுக்கு நீ என்ன பண்ணுவ என ரகுவை சமாதானப்படுத்தி எங்க வீட்டுக்கு போகலாம் என அழைத்து சென்றான்.
அவர்கள் பின்னால் சிவாவும் செல்ல மூன்று பேரும் வீட்டை அடைந்தனர்.
மரியா என ஸ்டீபன் அழைக்க ஆறு மாத கர்ப்பிணி பெண் ஒருத்தி வெளியே வந்தாள், என்ன ஸ்டீபா எனக் கேட்டப்படி. இதுதான் நான் சொன்ன என்னோட பிரண்டு ரகு என அறிமுகப்படுத்தினான் ஸ்டிபன்.
வாங்கண்ணா எப்படி இருக்கீங்க என மரியா பேசிக் கொண்டிருக்க, ஸ்டீபன் வீட்டுக்குள் சென்று கூல்ட்ரிங்ஸ் பாட்டில் ஒன்று எடுத்து வந்தான்.. ரகுவுக்கும் சிவாவுக்கும் கூல்ட்ரிங்ஸ் கொடுத்துவிட்டு திண்ணையில் அமரச் சொன்னவன் மரியாவுக்கு சேரை எடுத்து வந்து அவளையும் அமர சொன்னான்.
ரகு பேச்சை தொடங்கினான், எத்தனை மாசம் ஆகுது சிஸ்டர் என்று ஆறாவது மாசம் அண்ணா என்ற மரியா, என் புருஷன் மேல அப்படி என்ன தான் வசியம் பண்ணீங்களோ அண்ணா, ஒரு நாளைக்கு பத்து தடவையாவது உங்க பேரை சொல்லிடுவாரு.
கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் ஹனிமூன் போவாங்க, ஆனா இவரு உங்க கூட சுத்துன இடமா தான் என்னை கூட்டிட்டு போய் காமிச்சாரு, சமையல் பண்ணா கூட, இது ரகுவுக்கு பிடிக்காது இது ரகுவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று உங்க புராணம் தான் போங்க என்றாள் மரியா.
ஆனா ஒன்னு உங்களை விட அவருக்கு யாரையும் இவ்வளவு பிடிக்காது, அவ்வளவு ஏன் அவங்க அம்மா அப்பாவை கூட என்றாள் மரியா. அவர்களுக்குள் சிரிப்பும் கேலியுமாக போய்க்கொண்டிருக்க ஸ்டீபனின் கண்ணில் சிவா கண்டது ரகுவின் மீதான கதைக்காத காதல்.
சரி அண்ணா எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் போல இருக்கு என மரியா உள்ளே செல்ல அப்ப நாங்களும் கிளம்புறோம் டா என ரகுவும் சிவாவும் சொல்ல, அவர்களை வழி அனுப்ப ஸ்டீபனும் ஊர் எல்லை வரை வந்தான்.
ரகுவின் முகத்தில் ஸ்டீபனிடம் ஏதோ ஒன்றைக் கேட்காமல் போவது போல சிவாவுக்கு தெரிந்தது, ஸ்டீபன் தன்னுடைய ஊர்காரர் ஒருத்தரை பார்த்து நின்று பேச, ரகுவிடம் சிவா சொன்னான் ஏதாவது கேட்கணும்னு உனக்கு தோணுனா அதைக் கேட்டிடு இல்லன்னா உன்னோட வாழ்க்கை ஃபுல்லா கஷ்டப்படுவ என்றான்.
சரிடா என்ற ரகு ஊர் எல்லையில் சிவாவை கொஞ்சம் முன்னால் போக சொல்லிவிட்டு ஸ்டீபனிடம் நான் கடைசியா ஒன்னே ஒன்னு கேட்கவா என்றான் ரகு, கேளுடா என ஸ்டீபன் சொன்னான்.
உண்மையாவே என்னோட காதல் உனக்கு உடல் மேல் ஏற்பட்ட ஈர்ப்பதா தெரிஞ்சதா எனக் கேட்டான் ரகு, டேய் ஏன்டா இப்படி சொல்ற என ஸ்டீபன் கேட்கும் முன் ரகுவின் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்தது.
ரகுவின் கைகளை தன் கைகளோடு பிடித்த ஸ்டீபன் சொன்னான், இன்னைக்கு மட்டும் இல்ல என்னைக்குமே அப்படி நான் நினைச்சதில்ல ரகு நான் உன்னை திட்டினது என் மேல எனக்கு இருந்த கோபம் தான். நீ என் மேல வச்சிருந்தது ஒரு உன்னதமான காதல் அது இந்த உலகத்துல யாராலும் எனக்கு மறுபடி கொடுக்க முடியாதது மனச குழப்பிக்காம ஊருக்கு போ என்றான் ஸ்டீபன்
தன்னுடைய காதலை உன்னதமான ஒன்று என ஸ்டீபன் சொன்னது ரகுவின் மனதில் இருந்த காயங்களுக்கு மருந்தாகி போனது, சரிடா நான் கிளம்புறேன் என ரகுவும் சிவாவும் சென்ற பின் மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு நடந்து செல்லும் போது தான் ஸ்டீபன் எண்ணினான்.
ஆமா ரகு நீ மூணாவது வருஷம் தான் என் மேல இருக்கிற காதலை சொன்ன, நான் உன்ன பார்த்த முதல் நாளிலிருந்தே உன்னை காதலிச்சேன் உன்னை என் கூட தங்க வற்புறுத்தினது, உன்னோடு இருக்கணும்னு தாண்டா எத்தனையோ இரவுகள் நீ தூங்குறத நான் ரசிச்சு இருக்கேன்.
உன் நெத்தியில தொடங்கி உதடு வர உனக்கே தெரியாம முத்தம் கொடுத்து இருக்கேன், ஆனா என்னால நான் ஒரு கே என்பதை ஏத்துக்க முடியலடா அது தான் உன்ன திட்ட காரணம். நான் உன்னை திட்டின ஒவ்வொரு வார்த்தையும் என்னை நானே கேட்டுக்கிட்டதுடா என்று நினைத்தவன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஸ்டிபன்.
ரகுவின் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி வண்டியை அங்கும் இங்கும் அலப்பிக் கொண்டு ஓட்டினான் ரகு, ஹலோ என்ன ஆச்சு என சிவா கேட்க அவன் என்னோட காதல உன்னதமான ஒன்று என்று சொன்னான், அதனால எனக்கு என்னமோ பறக்கிற மாதிரி இருக்கு என்றான் ரகு.
டேய் நீ பறடா என்ன போட்டு எடுத்துடாத என்றான் சிவா, ஓ சாரி சாரி என வண்டியை சரியாக ஓட்டிக்கொண்டு உனக்கு எப்படி தெரியும் ஸ்டீபன் உவரியில் இருக்கான்னு என ரகு கேட்க. எனக்கா எனக்கெல்லாம் தெரியாதே என சிவா சொல்ல டேய் பொய் சொல்லாத நான் மணப்பாடு கிட்ட வரும்போது நீ யாருக்கோ மெசேஜ் பண்ணத பார்த்தேன். கடற்கரையில கூட நாம அந்த பக்கம் போகலாம்னு சொன்னதுக்கு நீ இந்த பக்கம் தான் போகணும்னு சொன்ன உண்மையை சொல்லு என ரகு சொல்ல, அதெல்லாம் உனக்கு எதுக்கு என்றான் சிவா, இப்ப சொல்ல போறியா இல்லையா என்றான் ரகு.
சரிடா சொல்றேன், நான் பேஸ்புக்ல தேடுனேன். ஸ்டீபன் என்கிற பெயரில் 10 ப்ரோபைல் காட்டுச்சு, அதுல உன் காலேஜ்ல படிச்ச 3 பேர் இருந்தாங்க அந்த மூணு பேருக்கும் ஹாய் ப்ரோ ஐ ஆம் ரகு ன்னு மெசேஜ் பண்ணுனேன்.
இவர் தான் ஹாய்டா எப்படி இருக்க அப்படி இப்படின்னு மெசேஜ் அனுப்புனாரு சரி நாம தேடுனது இவர்தான் போல அப்படின்னு பேச ஆரம்பிச்சு உண்மைய சொன்னேன். அவரும் உன்னை பாக்கணும் போல இருக்குன்னு அவரோட ஆசையை சொன்னாரு சரி நீயும் அவன் ஏன் உன்னை விட்டுட்டு போனான்னு என்கிட்ட பொலம்புன இல்ல அதான் உன்ன கூட்டிட்டு வந்தேன் என்றான் சிவா.
ரொம்ப தேங்க்ஸ்டா என்றான் ரகு, பரவா இல்லடா என்றான் சிவா.
அப்படி சொல்லாத என்னோட அஞ்சு வருஷ தவிப்பை நிறுத்தி வச்சிருக்க என்றான் ரகு, ஓஹோ சரி உன் தேங்க்ஸ் அக்சஸப்ட் பண்ணிக்கிறேன் என்றான் சிவா. சரியென இரண்டு பேரும் வீட்டை அடையவே இரவு 8 மணி ஆகிவிட்டது, சிவாவை அவனுடைய வீட்டில் விட்டுவிட்டு ரகு தன்னுடைய வீட்டை அடைந்தான்.
எங்கடா போன இவ்வளவு லேட்டா வீட்டுக்கு வர என ரகுவின் அம்மா கேட்க அம்மா எனக்கு 25 வயசு ஆகுது என்ன பார்த்துக்க எனக்கு தெரியும் என வீட்டுக்குள் சென்றான் ரகு.
ஹாலில் அமர்ந்திருந்த ரகுவின் அப்பா என்னடா ஊர் சுத்துனாலும் வீட்டுக்கு ஆறு மணிக்கு முன்னால வரனும்னு சொல்லி இருக்கேன் இல்ல என்றார். அது என்னுடைய இஷ்டம் என தன்னுடைய அறைக்குள் ரகு செல்ல எத்தனிக்க, என்னல சொன்ன என அவனுடைய சட்டை காலர் பிடித்து இழுத்த அவனுடைய அப்பா கன்னத்தில் பளார் என அறைந்தார்.
ரகுவின் அம்மா அதை தடுக்க, விடுமா அடிக்கிறது அடுத்தவங்கள மிரட்டுவது தானே இவரோட வேலை என சொல்ல அவனை இழுத்து தரையில் போட்டு அடித்தார் அவனுடைய அப்பா.
பத்து நிமிடம் தன்னுடைய கோபம் தீர அடித்தார், நான் பேசினால் நீ கேட்கணும் நீ பேசறது எல்லாம் நான் கேட்கணும்னு அவசியம் இல்ல மரியாதையா எனக்கு பிள்ளையா இருக்கணும் புரியுதா. என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உதவாத பிள்ளை எனக்கு தேவையே இல்லை என்றபடி அங்கிருந்து சென்றார். கோபமாக தங்களுடைய தோட்டத்தை நோக்கி சென்றான் ரகு, சிறிது நேரம் அழுகையும் கோபமும் அவனை பாடாய்படுத்த அவன் அருகில் வந்து அமர்ந்தான் சிவா.
நீ எப்படி இங்க என ரகு சிவாவிடம் கேட்க, அது ஒண்ணும் இல்லை என்னாச்சு உனக்கு ஏன் நீ உங்க அப்பா கிட்ட சண்டை போட்ட எனக் கேட்டான் சிவா.
பின்ன என்னடா ஸ்டீபன் வாழ்க்கையை அழிச்சிட்டாரு பாரேன், அவன் எங்க கிளாஸ்ல நல்லா படிச்சவன் இன்னைக்கு அவனோட வாழ்க்கையை பாரு அழிச்சிட்டாரே டா என்றபடி அழுதான் ரகு. அவனை கட்டி அணைத்த சிவா சொன்னான், ரகு என்னைக்குமே நடந்ததை மாற்ற முடியாது ஸ்டீபனுக்கு உங்க அப்பா பண்ணுண கொடுமைக்கு அந்த கடவுளே அவரை பார்த்து பாரு நீ தேவை இல்லாம யோசிக்காத என்றான் சிவா.
எப்படிடா என்னால முடியல என்றபடி ரகு அழுக, அவனுடைய முகத்தை தன்னுடைய இரண்டு கைகளாலும் ஏந்திய சிவா எச்சிலும் கண்ணீரும் நனைந்திருந்த ரகுவின் உதடுகளை தன் உதடுகளைக் கொண்டு ஒத்தி எடுக்க தொடங்கினான்.
ரகுவுக்கும் அந்த முத்தம் அப்போது தேவைப்பட்டது, இருவரின் இதழ்களும் பரஸ்பரம் நலன் விசாரிக்க தொடங்கின, எச்சில்களுக்கு இடையே பண்ட பரிமாற்றம் நடைபெற்றது. சிவாவின் கீழுதட்டை கடித்து இழுத்த ரகு, மெதுவாக அவனுடைய கண்ணம், காது, கழுத்து என முத்தத்தை சென்று சேர்த்துக் கொண்டிருந்தான்.
சிவாவின் கழுத்தில் ரகுவின் உதடுகள் உல்லாசமாக உலா வர, சிவா மன்மத மயக்கத்தின் வாசலை அடைந்தான், கழுத்துக்கு கீழே ரகு செல்ல, வேகமாக சிவாவின் சட்டையை கலட்ட ரகுவின் கைகள் எத்தனிக்க, சிவா சிவா என்ற சத்தம் கேட்டு இருவரும் பிரிந்தனர்.
யார் அழைப்பது என திரும்பி பார்த்தான் சிவா…….
வருவான்
