யார் தன்னுடைய பெயரைச் சொல்லி அழைப்பது என திரும்பி பார்த்தான் சிவா, அவன் அருண். வேகமாக சிவாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு 50 மீட்டர் தொலைவில் இருந்த சோளத் தட்டைகளுக்கு நடுவே சென்று இருவரும் மறைந்தனர்.  

 

அவர்கள் மறைந்த இரண்டாவது நிமிடம் புல்லட்டில் ரகுவின் அப்பா வந்தார். அவர் ரகுவிடம் ஏதோ பேசி அழைத்து செல்வதை பார்த்த சிவா, ரொம்ப தேங்க்ஸ் டா நீ மட்டும் கரெக்டான நேரத்துக்கு வரல, நானும் அவனும் என சிவா ஏதோ சொல்ல வர அவன்லாம் ஒன்னும் ஆகமாட்டான் நீதான் காணாம போயிருப்ப என்றான் அருண்.  

 

அது என்னவோ உண்மை தான்டா என அருணும் சிவாவும் வீட்டை நோக்கி நடந்தனர், நான் இங்க இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும் என்றான் சிவா. நானும் என் ஆளும் இப்பதான் தோட்டத்துல முடிச்சோம். நான் ரகு அவன் தோட்டத்துக்குள்ள போனதையும் பார்த்தேன். அவனுக்கு பின்னாலயே நீ போனதையும் பார்த்தேன், கடைசியா புல்லட் வரத பார்த்தேன்.  நம்ம ஊர்ல புல்லட் வச்சிருக்குறது ரகு அப்பா மட்டும் தானே, அதான் குறுக்கால ஓடி வந்தேன் . 

 

அவர் கரையை சுத்தி வர்றதுக்குள்ள நான் வந்தரலாம் என்று நினைச்சு வந்தேன் அதே மாதிரி வந்துட்டேன் என்றான் அருண், அப்போது சைக்கிளை தள்ளியபடி அவர்களோடு வந்து சேர்ந்தான் சுதன்.  ஏண்டா லூசு காண்டத்தை பிரிச்சா அந்த கவரை ஒரு ஓரமா வைக்க மாட்ட, நான் எங்கன்னு தேடி அலையுறேன், அப்போ பாத்து ரகுவோட அப்பா வேற பைக்ல போறவர் நின்னு என்னல இந்த நேரத்துல தேடுத உங்க அப்பன் தங்க கட்டி எதையும் தொலைச்சிட்டானான்னு கேட்டுட்டு போறாரு என்றான் சுதன்.    

 

போடா எனக்கு அதை போட்டுட்டு பண்றதுல விருப்பமே இல்ல, உன்னால தான் நான் அதை யூஸ் பண்றேன் என்றான் அருண்.  டேய் சிவா, நீயே சொல்லுடா என சுதன் சொல்ல அது வந்து அருண் என சிவா பேச தொடங்கும் முன் எதுனாலும் நானும் என் ஆளும் பார்த்துக்குறோம்  மச்சான் நீ கத கதையா கிளாஸ் எடுப்ப என்ற படி அருண் டாட்டா சொல்லிவிட்டு கிளம்பினான்.    

 

என்னண்ணா உங்க காட்டுல டெய்லியும் மழை தான் போல என்றான் சிவா, டேய் நீ வேற அப்படி எல்லாம் ஒன்னுமில்ல, இப்ப கொஞ்சம் பரவால்ல என்றான் சுதன். அண்ணா எதுவுமே கொஞ்சம் கொஞ்சமா தான் அவனுக்கு புரியும், சரி பாக்கலாம் அண்ணா என தன்னுடைய வீட்டை அடைந்தான் சிவா.  

 

மறுநாள் அவனுடைய அம்மாவோடு குலதெய்வம் கோவிலுக்கு சென்று இருந்தான் சிவா.  அது திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவிக்கும் அம்பாசமுத்திரத்துக்கும் இடையே உள்ள வீரவநல்லூர் கிராமத்தில் இருக்கும் கோவில். அங்கு மூலவர் சாஸ்தா, அவரை வணங்கிவிட்டு சிவாவும் அவனுடைய அம்மாவும் அமர்ந்திருக்க அங்கு 50 வயது ஆண் ஒருவர் வந்தார் . 

 

அவரோடு பேசுவதற்காக சிவாவின் அம்மா சற்று தூரம் சென்றுவிட, சிவா கோவிலை சுற்றி நோட்டமிட்டபடி அமர்ந்திருந்தான்.  அவனுடைய கண்கள் அம்மா யாரோடு பேசுகிறார் என்பதை அறிந்து கொள்ள துடித்தது, உள்ளம் அம்மாவிடம் நேரடியாகவே கேட்டுவிடலாம் என்று மறுபடி மறுபடி சொன்னது.  ஆனால் தன்னுடைய அம்மா மீது இருந்த மரியாதையின் காரணம் அவன் அந்த ஆண் முன்னால் கேட்கவில்லை. 

 

அரை மணி நேரம் கழித்து சிவாவின் அம்மா வந்தார், வாயா போகலாம் என்றபடி நடக்க தன்னுடைய உணர்வு பெருக்கின் காரணம்,  அது யார் என்று கேட்டான் சிவா. போற வழியில சொல்றேன் என தன்னோடு அவனை அழைத்து சென்றார் சிவாவின் அம்மா.   

 

தன்னுடைய அம்மாவை பார்க்க வந்தவருக்கு இருந்தது போலவே கன்னத்தில் மறு இருக்கும் ஒருவரை சிவாவுக்கு நன்றாக தெரியும், ஆனால் அது யாரென சிவா யோசித்துக் கொண்டே வரும் பொழுது தான் அவன் நினைவுக்கு வந்தது.

  

சிவாவின் அக்காவுக்கும் அதே போல மறு இருப்பது, உடனே அம்மா எனக்கு ஏன் அந்த ஆளு நம்ம அக்காவோட அப்பா மாதிரி தோணுது என சிவா கேட்கவும், கரெக்ட் தாண்டா உனக்கு உங்க அப்பன் புத்தி எப்படியாவது தெரிஞ்சுக்கணும் இப்ப அந்த ஆளு யாருன்னு அதானே, வா சொல்றேன் என சொல்லத் தொடங்கினார் சிவாவின் அம்மா.    

 

என்னோட தப்பு தான் தம்பி எல்லாமே உனக்கும் உங்க அக்காவுக்கும் விவரம் தெரிஞ்சதுமே நான் சொல்லி இருக்கணும் சொல்லாம வச்சது என்னோட தப்பு தான். நான் பத்தாவது படிக்கும்போது இவரோட ஓடிப்போயிட்டேன் ரெண்டு வருஷம் திருப்பூர்ல யாருக்கும் தெரியாம தான் வாழ்ந்தோம்.  

 

எங்க அண்ணன் அப்போ ஆர்மில இருந்தான், ஒரு தடவை லீவுக்கு வந்தவன் நான் திருப்பூரில் இருக்கிறது தெரிஞ்சு அங்க வந்தான்.  அவனுக்கு இருந்த ஆள் பலம் என்னையும் அவரையும் அடிச்சு போட்டுட்டான், அவர கொன்னுடுவேன் ஒழுங்கா என்கூட வான்னு மிரட்டுனான். ரத்த வெள்ளத்தில் இருந்த அவருக்கு எதுவும் ஆக கூடாதுன்னு நானும் உங்க அக்காவை தூக்கிட்டு என் அண்ணன் கூட வந்துட்டேன்.   

 

தூத்துக்குடி, சிதம்பரம் நகரில் உள்ள எங்க சித்தி வீட்ல தான் ரெண்டு வருஷம் இருந்தேன். ஒரு நாள் நைட் உங்க அப்பாவை கூட்டிட்டு வந்து என் கழுத்துல தாலி கட்ட சொன்னான் எங்க அண்ணன்.  உங்க அப்பாவும் குத்து விளக்கு முன்னால என் கழுத்துல தாலி கட்டினாரு, என்னை நம்ம ஊருக்கும் கூட்டிட்டு வந்தார்.  அன்னையிலிருந்து உங்க அப்பா சாகுற வரைக்கும் என்னை என்னென்ன கொடுமை எல்லாம் பண்ணினாரு என்று உனக்கு தெரியாதுடா.  ஒவ்வொரு நாளும் உங்க அப்பன் கூட வாழ்றது அந்த நரகத்துக்குச் சமம்.   

 

ஆனா என்ன மாதிரி என் பொண்ணு கஷ்டப்படக்கூடாதுன்னு, நான் எப்பவும் அவளுக்கு ஒன்னு ஒன்னும் பார்த்து பார்த்து பண்றேன் உன் பெரியப்பாவை தவிர அந்த வீட்டு ஆம்பளைங்க எல்லோரும் என்னை எடை போட்டு பார்த்தாங்க.  என்னோட வாழ்க்கையில ஆசைப்பட்ட வாழ்க்கையும் கிடைக்கல, கிடைச்ச வாழ்க்கையும் ஆசைப்படுற மாதிரி இல்ல என்ற சிவாவின் அம்மா வடித்த கண்ணீரில் மித மிஞ்சிய விரக்தி மின்னியது.    

 

போன வருஷம் நம்ம கோவில்ல தான் அவரைப் பார்த்தேன், எங்க அண்ணன் அடிச்ச அடியில வாழ்க்கையில குழந்தை பெத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.  இன்னொரு பொண்ணோட வாழ்க்கை கெட்டுப் போக கூடாதுன்னு அவரும் கல்யாணம் பண்ணிக்கல.  

 

அதான் எனக்கு தெரிஞ்ச பொண்ணு ஒன்னு இருக்கு, அவளுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க கட்டிக்கோங்கன்னு சொல்ல வந்தேன். ஆனா அவரு உன்னோட இடத்துல வேற யாரையும் வச்சு என்னால பாக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு என்று குலுங்கி குலுங்கி அழுதார் சிவாவின் அம்மா.    

 

சிவாவின் அப்பா இறந்த போது கூட அவர் அப்படி அழுது சிவா பார்த்ததில்லை, அவனை பொறுத்தவரை தன்னுடைய அம்மாவின் காதல் புனிதமானது தான். சாரி மா என்னை மன்னிச்சிரு என பஸ் என்றும்  பாராமல் அவனுடைய அம்மாவின் காலில் விழுந்தான் சிவா. பரவால்லையா நீ எந்திரி என அவனுடைய அம்மாவும் சமாதானம் செய்தார்.  

 

ஆணவக் கொலைகளும் அறுத்து கட்டுவதும் சிவாவின் ஊரில் சகஜம்தான். சிவாவின் அம்மாவை விட அவருடைய காதலர் சிவாவின் கண்களுக்கு முன் உயர்ந்து நின்றார்.  பஸ்ஸை விட்டு இறங்கிய சிவாவும் அவனுடைய அம்மாவும் ஊரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.  அப்போது அவர்கள் போகும் வழியில் போலீஸ், பொதுமக்கள் என ஏகப்பட்ட கூட்டம் தென்பட்டது என்ன என அறிந்து கொள்ள சிவா வேகமாக முன்னே சென்றான்.   

 

அங்கு 20க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கும் சிவா ஊர் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது, அதை தீர்த்து வைக்க சில போலீஸ்காரர்களும், விஏஓ, தலையாரி, பஞ்சாயத்து தலைவர் என கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.  அங்கு நின்ற திருநங்கைகளில் சிவாவுக்கு தெரிந்த பொன்னியும் நின்று கொண்டிருக்க சிவா அவர்களின் அருகில் சென்றான்.   

 

ஹாய் பொன்னி அக்கா, என்ன இந்த பக்கம் என சிவா கேட்க அதை ஏன் கண்ணு கேக்குற, முதல்வர் நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் எங்களுக்கு ஐந்து சென்ட் இடமும் அதற்கான பட்டாவும் போன வாரம் கொடுத்தாங்க.  அந்த இடத்தை பார்த்துட்டு கம்பி வளைச்சு போட்டுட்டு போலாம்னு வந்தோம்.  

 

இங்க வந்து பார்த்தா ஊர்க்காரங்க எல்லோரும் எங்களை விரட்டி அடிக்கிறாங்க. அதான் போலீஸை கூப்டோம் கலெக்டர் வராகலாம்  அவரை கூப்பிட்டு வர இன்ஸ்பெக்டர் போய் இருக்காரு எஸ்.பி வருவாருன்னு நினைக்கிறேன் என கூறினாள் பொன்னி. அப்போ இன்னைக்கு சம்பவம் இருக்கு அப்படித்தானே என சிவா சொல்ல உடனிருந்த திருநங்கைகளும் சிவாவும் சிரித்து கொண்டனர்.   

 

சிறிது நேர காத்திருப்புக்குப் பின் கலெக்டர், போலீஸ் இன்ஸ்பெக்டர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என அனைவரும் வந்து இறங்கினர். கூச்சலிட்ட அனைவரையும் அமைதிப்படுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் கலெக்டர் இரண்டு பக்கத்து நியாயத்தையும் கேட்டுட்டு  பதில் சொல்லுவாங்க என்றதும் அனைவரும் அமைதியாகினர்.   

 

முதலில் கலெக்டர் திருநங்கைகளில் ஒருவரை அழைத்து நீங்க சொல்லுங்கமா என்றார். வணக்கம் மேடம் என்னுடைய பெயர் மீனா, முதல்வரோட நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் எங்களுக்கு போனவாரம் இடமும் பட்டாவும் கொடுத்தாங்க. எங்க இடம் எங்கன்னு பார்க்க நாங்களும் சர்வேயரோட வந்தோம், இங்க வந்து பார்த்தா எங்களை கல்லை கொண்டு எரியுறாங்க, அடிக்க வராங்க. அதான் மேடம் போலீஸை கூட்டிட்டு வந்தோம், இந்த சப் இன்ஸ்பெக்டர் இந்த ஊர்காரர் போல பொட்டைங்க ஊருக்குள்ள வந்தா கல்லை கொண்டு தான் எரியுவாங்க அப்படின்னு சொல்றாரு மேடம் என தன்னுடைய தரப்பை சொல்லி முடித்தார் மீனா.   

 

என்ன சார் இதெல்லாம் எனக் கலெக்டர் சப் இன்ஸ்பெக்டரை (ரகுவின் அப்பா) கேட்க அதெல்லாம் இல்ல மேடம் பொய் சொல்றாங்க என்றார் ரகுவின் அப்பா.  உள்ளூர் போஸ்டிங் ஏன் பண்றீங்க சார் என எஸ்பி யிடம் கேட்டார் கலெக்டர். அவர் போஸ்டிங் இல்ல மேடம் மூணு மாசத்துக்கு இன்சார்ஜ் மட்டும் தான் என எஸ்.பி சொன்னார்.  ஊர்க்காரங்கள்ள யாராவது சொல்லுங்க அவங்க இங்க இருக்கிறதுல என்ன பிரச்சனை என கேட்டார் கலெக்டர். 

 

அது எப்படி மேடம் குடும்பம் குட்டிகளோட நாங்க இருக்குற இடத்துல இந்த ஒன்பதுகளை இருக்க விட முடியும் என்றார் ஊர்க்காரர் ஒருவர், ஒரு நிமிஷம் வார்த்தையை பார்த்து பேசணும், அவங்களை திருநங்கை என்று அழைக்கனும் என அரசாங்கம் சொல்லி இருக்கு அவர்களை காயப்படுத்துற எந்த வார்த்தையும் பயன்படுத்தக் கூடாது என்றார் கலெக்டர்.    

 

மேடம் எங்க ஊருக்குள்ள அவங்க இருக்க நாங்க அனுமதிக்க முடியாது என்றார் ஊர்க்காரர்களில் மற்றொருவர், அதான் ஏன்னு கேட்கிறேன் வேல்யூவான காரணங்கள் இல்லாம கவர்ன்மென்ட் ஆர்டரை நீங்க மறுக்க முடியாது, எனக்கு நியாயமான காரணங்களை சொல்லுங்க என்றார் கலெக்டர். மேடம் நான் சொல்லுறேன் என 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி பேச தொடங்கினார்.  

 

எங்க புள்ளைங்க இந்த வழியாத்தான் படிக்க போகும் வரும் எங்க வீட்டு ஆம்பளைங்க போவாங்க வருவாங்க கைதட்டி காசு கேட்கிறதையும் இவங்கள மாதிரி டிரஸ் போடுறதையும் எங்க பிள்ளைங்க கத்துக்கிட்டா அது தப்பில்லையா மேடம். அதே மாதிரி ஊர் ஆம்பளைங்களை வளைச்சு போட்டா எங்க வாழ்க்கை பாதிக்காதா என அவர் சொல்லும் போது உன் புருஷனையும் உன் புள்ளையும் வீட்டுக்குள்ள பூட்டி வச்சுக்கோ பெரியம்மா என்றான் சிவா, கூட்டத்தின் அனைவர் கவனமும் அவன் மேல் சென்றது.    

 

பெரியம்மா நீ சொல்லுறதை கேக்கும் பொது மனோரமா டயலாக் தான் நியாபகம் வருது, ஏன் பாவாடை அவுந்தது குத்தமில்ல பக்கத்து வீட்டு பையன் பாத்தது தான் தப்புன்னு சொன்னா எப்படி, பாவடைய சரியா கட்டடிகிணும் இல்லையான்னு மனோரமா சொல்லுவாங்க.  

 

உன் புருஷனும் உன் புள்ளையும் யோக்கியமா இருந்தா இவங்க கூப்பிட்டாலும் அவங்க ஏன் போறாங்க என கூட்டத்தின் முன்னால் வந்து சொன்னான் சிவா. கலெக்டர் சிவாவை உற்று கவனித்தார், உங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு இன்னைக்கு உங்க முன்னால  திருநங்கைகளா நிக்குறவங்களை எல்லாம் யாரும் மயக்கியோ மந்திரம் பண்ணியோ மாத்தல. அவங்களோட உணர்வுகளின் உந்துதல் அவங்க பெண்ணா மாறி நம்ம முன்னாடி நிக்கிறாங்க.   

 

இங்க பாரு பெரியம்மா உன் பிள்ளை திருநங்கையா இருந்தா நீ மூடி மூடி வச்சாலும் அவன் மாறத்தான் போறான், அதை நீ மட்டும் இல்ல யாரு நினைச்சாலும் மாற்ற முடியாது. பாலியல் தொழில் பத்தி பேசுறயே பெரியம்மா, நீ தமிழ் லிட்ரேச்சர் படிச்சவ தானே பாரதியார் என்ன சொல்லி இருக்காரு. ஒர் ஊர்ல ஒரு பெண் கற்பிழக்கிறாள், அப்படினா அதே ஊர்ல இன்னொரு ஆணும் கற்பிழந்து இருக்கிறான் என்று தான் அர்த்தம்னு சொல்லி இருக்காரு. இத நான் உனக்கு சொல்லி தெரியனும்னு இல்ல. 

 

பெரியம்மா எந்த ஆம்பளையும் போகலனா அவங்க பாலியல் தொழில் பண்ண போறதே இல்ல, பிச்சை எடுக்குறாங்கன்னு சொல்றீங்க இருக்க இடமும் கொடுக்காமல் படிக்க விடாமல் வேலையும் கொடுக்காமல் எல்லாத்தையும் நாம பண்ணிட்டு இன்னும் எத்தனை நாளைக்கு தான் அவங்களே குற்றம் சொல்றது.

 

உங்க எல்லாரையும் பொருத்தவரைக்கும் என்ன தெரியுமா வெரட்டி அடிச்சு தொரத்தி புடிச்சு ஒதுங்க இடமும் கொடுக்காமல் நீ ஒழுக்கமா மட்டும் இருக்கணும்னு சொன்னா இதுல என்ன நியாயம் இருக்கு என்றான் சிவா. 

 

நீ சின்ன பையன் அதுக்கு தகுந்த மாதிரி பேசு என்றார் ஊர்க்காரர் இன்னொருவர். நான் அவங்களை மாதிரி மாற போறதும் இல்ல அவங்க கூட படுக்க போறதும் இல்ல.  எனக்கு அவங்க இங்க இருக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்லை.  உங்களுக்கு பிரச்சனை இருக்குன்னா இங்க இருங்க இல்லனா கிளம்பி போங்க என்றான் சிவா. கூட்டத்தில் பாதி பேர் கலைந்து செல்ல, ஊர் தலைவர் மனு ஒன்றை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு எஞ்சிய ஊர்காரர்களையும் கூட்டிச் சென்றார்.   

 

கலெக்டர் திருநங்கைகளிடம் இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு நானே சர்வேயர் மூலமாக அளந்து கல்லு போட்டு தர சொல்றேன் என அங்கிருந்து கிளம்பினார். குட் பா, உன் பேர் என்ன என கலெக்டர் கேட்க சிவா என்று பதில் அளித்தான். உடனே சரிப்பா என கலெக்டர் மற்றும் மற்ற அதிகாரிகள் சென்றுவிட சிவா பொன்னியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் சிவாவை வாழ்த்தி விட்டு செல்ல சிவாவும் அவனுடைய அம்மாவும் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினர்.   

 

சிறிது தூரத்தில் அவர்களை இடைமறைத்த ரகுவின் அப்பா சிவாவை முன்னால் நடக்கச் சொன்னார், ஏன் எதுக்கு என சிவா கேட்க நீ முன்னால போ சாமி நான் வரேன் என்றார் சிவாவின் அம்மா.  அவன் சென்ற பின் ஐந்து நிமிடம் ரகுவின் அப்பா சிவாவின் அம்மாவிடம் பேச சிவாவின் அம்மாவும் கோபமாக ஏதோ பதில் அளித்துக் கொண்டிருந்தார்.  ரகுவின் அப்பா சென்றதும் சிவாவின் அம்மா அவன் அருகில் வந்து வாயா போகலாம் என அழைத்துச் சென்றார்.  

 

என்னம்மா அவர் சொன்னாரு, என சிவா கேட்க.  விடுயா அவனுக்கு வேற வேலை இல்ல, என சிவாவின் அம்மா சொல்ல. அவனுக்கா, என்னம்மா ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை இப்படி மரியாதை இல்லாம பேசுற என்றான் சிவா. டேய் இவ்வளவு நேரம் என் வாழ்க்கையை அழிச்சான்னு சொன்னல அந்த அண்ணனே அவன் தான்டா என்றார் சிவாவின் அம்மா.   

 

என்னம்மா சொல்லுத என சிவா கேட்க, ஆமாடா இவன் தான் என் அண்ணே நாங்க ஆறு பொண்ணுங்க இவன் ஒருத்தன் தான் ஆம்பள புள்ள என்றதும் சிவாவின் மூளையில் என்னது ரகு எனக்கு மாமா பையனா என அதிர்ச்சியில் அவன் வீட்டு வாசலிலேயே அமர்ந்தான். 

 

  வருவான்… 

 

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன