அருண் சொன்ன வார்த்தை சிவாவையும் ரகுவையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. என்னடா சொல்ற முதல்ல நீ அழுகாம தெளிவா என்ன நடந்தது? என்று சொல்லு என்றான் சிவா.
அருண் சொல்லத் தொடங்கினான், என் தங்கச்சி கல்யாணம் கொஞ்சநாள் கழிச்சு சுதன் எனக்கு போன் பண்ணினான். அவசரமா அவங்க தோட்டத்துக்கு வர சொன்னான், எப்பவும் நைட்டு தான் அங்க சந்திப்போம், இன்னைக்கு என்னடா பகல்ல தோட்டத்துக்கு வர சொல்றன்னு நான் கேட்டேன். அதுக்கு நீ வாடா நம்ம வாழ்க்கையோட முக்கியமான சில முடிவுகளை எடுக்கனும்னு சுதன் சொன்னான்.
நானும் அவன் சொன்ன மாதிரி போனேன், அவனோட கண்ணு எல்லாம் செவந்திருந்துச்சு, என்னடா ஆச்சு ஏன் அழுதுகிட்டு இருக்கேன்னு கேட்டேன். அவனோட வீட்ல அவனோட மாமா பொண்ணுக்கும் அவனுக்கும் கல்யாணம் பேசி முடிக்கிறதாவும், நாளைக்கு நிச்சயதார்த்தம்ன்னு சொன்னான். நான் அதை கேட்டுட்டு நீ என்ன முடிவு பண்ணி இருக்கேன்னு கேட்டேன், நான் என்னடா முடிவு பண்ண போறேன். இன்னிக்கு நைட் என்னோட வீட்ல சொல்ல போறேன் நம்ம காதலைப் பத்தி என்று சுதன் சொன்னான்.
ஒரு காதலனா நான் உன் கூட இருப்பேன்டா என்று நான் அவனை கட்டி புடிச்சேன், என்னோட பின்னால இருந்து யாரோ என்னை எட்டி மிதிக்க நானும் அவனும் ரெண்டு பேருமே நிலைதடுமாறி கீழே விழுந்துட்டோம்.
நான் எழுந்து திரும்பி பார்த்தா, அது சுதனோட அண்ணன் என்ன ஏதுன்னு கேட்காமலேயே எங்க ரெண்டு பேரையும் அடிக்க ஆரம்பிச்சாரு. ஏண்டா பொட்ட என் தம்பியையும் உன்னை மாதிரி ஆக்க பார்க்கிறாயா? அப்பன் இல்லாத நாய் நீ, என் தம்பியை கெடுக்கிறியான்னு அவர் சொல்லி என்னை அடிக்க, சுதன் ஒரு கட்டத்துக்கு மேல பொறுக்க முடியாம அவங்க அண்ணனை திரும்பி அடிச்சிட்டான்.
அவருக்கு அதை தாங்கிக்க முடியல, அவங்க ரெண்டு பேருக்கும் இடையில கை கலப்பு உண்டாகிருச்சு, நான் தடுத்து நிறுத்தினேன். அப்ப தான் சுதனோட அப்பா, மாமா எல்லோரும் தோட்டத்துக்கு வந்தாங்க. அவங்க வந்ததை கவனிக்காத சுதன் அவங்க அண்ணன் கிட்ட நான் தான் அருணை முதல்ல லவ் பண்னினேன். அவனுக்கு இந்த மாதிரி காதல் பத்தி எதுவுமே தெரியாது அவன் கிட்ட என் காதலை நான் தான் முதன் முதலில் சொன்னேன்.
அதுக்கப்புறம் ஆறு மாசம் கழிச்சு தான், அவன் என்னோட காதல ஏத்துக்கிட்டான் நாங்க ரெண்டு வருஷமா ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம், நான் வாழ்ந்தா அது அருண் கூட தான் இல்லன்னா இப்படியே காலம் ஃபுல்லா இருந்திடுவேன். என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க முடியாது, எனக்கு ஒரு பெண் மேல ஈர்ப்பு வராது என திரும்பியவன் அவன் அப்பாவையும் மாமாவையும் பார்த்து பேச்சை நிறுத்தினான்.
சுதானோட அண்ணனை திட்டின அவங்க அப்பா என்னை வீட்டுக்கு போக சொன்னாரு, அங்கிருந்து நான் கிளம்பினதும் சுதனை கூட்டிகிட்டு அவங்க அப்பா வீட்டுக்கு போயிட்டாங்க. மறுநாள் காலையில சுதனோட அம்மா எங்க வீட்டுக்கு முன்னால வந்து கண்ணா பின்னான்னு திட்டினாங்க, என் அம்மாவுக்கும் எல்லாம் தெரிஞ்சு போச்சு சுதனோட அம்மா என்ன பொட்டை, ஒன்பதுன்னு ரொம்பவே கேவலமா பேசினாங்க. என் அம்மா என்கிட்ட கேட்டாங்க ஆமாம்மா நானும் சுதனும் காதலிக்கிறோம் என நான் அம்மாவிடம் சொன்னேன்.
தலையில அடிச்சுக்கிட்டு அம்மா அழுது புலம்புனாங்க, நான் 18 வருஷம் தவமாய் தவமிருந்து உன்னை பெத்தது, இதுக்கு தானா, இதெல்லாம் பாக்க கூடாதுன்னு தான் உங்க அப்பா போய் சேர்ந்துட்டாவ போல அப்படி இப்படின்னு எங்க அம்மா ஒரு பக்கம் அழுது புலம்பிச்சு.
அன்னைக்கு நைட்டு எனக்கு சுதன் கால் பண்ணினான், நாங்க எப்பவும் சந்திக்கிற இடத்துல சந்திச்சோம். அவங்க அம்மா பேசுனதுகக்கு என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டான், நான் பரவால்லடா இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கனவே தெரிந்தது தானே ஃப்ரீயா விடு பாத்துக்கலாம்ன்னு சொன்னேன். அன்னைக்கு அவனோட நடவடிக்கைகள் ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சு, என்கிட்ட மறுபடி மறுபடி நான் இல்லைனாலும் நீ உன்னோட வாழ்க்கையை நல்லபடியா வாழணும்னு சொன்னான், ஏன்டா இப்படி லூசு மாதிரி பேசுற அதெல்லாம் ஒன்னும் நடக்காதுன்னு நான் சொன்னேன்.
அன்னைக்கு எங்களுக்குள்ள காதலோடு சேர்ந்த காமமும் இருந்துச்சு, என்னோட மார்புல தூங்கன சுதனை அதுக்கு முன்னாடி அப்படி தூங்கி நான் பார்த்ததில்லை. கடவுளே எல்லாம் சரியாகிடனும் என வேண்டிக்கிட்டு நானும் கண்ணசந்தேன், மறுநாள் காலையில நான் மட்டும் தான் இருந்தேன். என்னோட தலைமாட்டுல, “என்னைக்கும் உன் அளவு நான் யாரையும் காதலிக்கலைன்னு” எழுதின பேப்பர் மட்டும் தான் இருந்துச்சு. அதுக்கப்புறம் 2 நாளா அவன் என் கூட பேசவே இல்ல, ஒரு மணி நேரத்துக்கு முன்னால அவன் இறந்துட்டதா எங்க அம்மா சொன்னாங்க.
அதை என்னால ஏத்துக்க முடியல என்ற அருணை எப்படி சமாதானம் பண்ணுவது என தெரியாமல் சிவாவும் ரகுவும் வருந்தி நின்றனர். ஊருக்குள் விசாரித்த போது சுதனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் நாளை அவனுடைய இறுதி சடங்குகள் நடத்தப்படும் எனவும் தெரிந்து கொண்டான் சிவா. சுதன் மற்றும் அருணை பற்றிய உண்மையோடு கூடிய பல வதந்திகளும் ஊருக்குள் காட்டு தீயாய் பரவியது, சிவா அருணை தன்னோடு வீட்டுக்கு கூட்டிச் சென்றான்.
ரகுவால் சுதன் இப்படி தன் உயிரைத் தானே எடுத்துக் கொண்டான் என்பதை நம்பவே முடியவில்லை. அவர்கள் பள்ளியில் படித்த காலத்திலேயே தன்னுடைய ஆண்கள் மீதான ஈர்ப்பை பற்றி வெளிப்படையாக சொன்னவன் சுதன். அதனால் ஏற்பட்ட கிண்டல்களையும் கேலிகளையும் அவ்வளவு நேர்த்தியாக கையாண்டவன், எப்படி இன்று தன்னையே மாய்த்துக் கொள்வான்.
அது மட்டுமின்றி சென்னை சென்ற போது மாரிமுத்து காட்டிய வீடியோவால் சின்ன சலசலப்பு ஏற்பட்ட போது கூட, ரகுவிடம் நீ சிவாவை மாதிரி பேசலன்னு நான் குற்றம் சொல்லலடா. ஆனா அவன் எழுந்து போனப்புறம் ஆறுதலா அவன் கூட நீ போயிருக்கலாம், அவன் ஏதோ ஒரு வகையில தனிமையா ஃபீல் பண்ணிருப்பான் என்றான் சுதன்.
அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சுதனா இப்படி பண்ணினான், என ரகுவை அதிர்ச்சியும் சோகமும் ஒரு சேர தாக்கியது. சிவா அருணின் தோளில் கை வைத்தபடி என்னடா யோசிக்கிற என்றான், தெரியலடா சிவா ஒரு உயிரை எடுத்துக் கொள்வது தான் காதலா? நீ தானடா சொன்ன காதல்னா இன, மத, பாலின வேறுபாடு எல்லாம் கிடையாது என்று, இன்னிக்கு என்ன ஆச்சு பாத்தியா ஒருத்தர் மேல அன்பு வச்சதுக்கு தண்டனை மரணமா டா என அருண் அழ சிவாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
டேய் இது காதல் கொடுத்த தண்டனை இல்லடா, இந்த சமுதாயம் நமக்கு செய்ற துரோகம்ன்னு எப்படி உனக்கு புரிய வைப்பேன் டா அருண் என மனதில் சொல்லியப்படி அருணை சிவா கட்டியணைத்தான். சுதன் இன்னைக்கு இல்லாம போயிருக்கலாம், ஆனால் இனிமேல் சுதன்கள் உருவாகாமல் இருக்க வேண்டும் கடவுளே என தன்னுடைய ஆற்றாமையை மனதில் எண்ணி மருவிக் கொண்டான் சிவா.
ஆனால் எப்படி புரிய வைப்பது அருணுக்கு இந்த மாண்புகெட்ட சமுதாயத்திடம் காதல் என்றதுமே நமது படுக்கை அறையை பற்றி மட்டுமே சிந்திக்கும் என்பதையும், இந்த ஈனப்பிறவிகளிடம் என்ன சொன்னாலும் இது இயற்கையன்று என்கிற பதிலே கிட்டும் என்பதையும் எண்ணி சிவாவும் கண்ணீர் வடித்தான். அவர்கள் இருவராலும் அதுதான் செய்ய முடிந்தது
மறுநாள் காலை 9:30 மணியளவில் சிவாவிற்கு ரகு போன் செய்தான், சொல்லு ரகு, என சிவா சொன்ன குரலில் ரகு புரிந்து கொண்டான் சிவாவின் சோகம் எவ்வளவு என்பது பற்றி, காலை 11 மணிக்கு சுதனின் உடல் கொண்டு வரப்படுமாம் ஒரு பத்தரைக்கு போகலாமா எனக் கேட்டான் ரகு. சரிடா என சிவா சொன்னான்.
11 மணி அளவில் சுதன் வீட்டின் வாசலில் சிவா, அருண், ரகு மூன்று பேரும் நின்று கொண்டிருந்தனர். ஆம்னி வேன் ஒன்றில் சுதனின் உடல் கொண்டுவரப்பட்டது. ஓலங்களும் ஒப்பாரிகளும் அலறின சுதனின் உடலை கண்டதும் சுதனின் அம்மாவும் அப்பாவும் தங்கையும் கதறி அழுதனர். அய்யோ என் பிள்ளையைப் பறிக்கொடுத்துட்டேனே, அம்மா இந்த ஊர்க்காரங்க என்ன தப்பா நினைச்சுப்பாங்களே, நான் என்னம்மா பண்ண எனக்கு நாணமா இருக்குன்னு பொலம்புனானே அப்பவே நான் என் புள்ளையை தனியா விடாம வச்சிருக்கணுமே என்றபடி சுதனின் அம்மா கதறினார்.
சுதனின் தங்கை என்ன மன்னிச்சிடு அண்ணா நான் உனக்கு நல்ல தங்கச்சியா இல்லை என அழுதாள். சுதனின் உடலில் புருவத்துக்கு மேலும் காதுக்கு கீழும் ரத்த கறைகள் காணப்பட்டன. நல்ல மாநிறம் மட்டுமின்றி தன்னுடைய அழகில் அதிகம் கவனம் செலுத்தக்கூடியவன் சுதன் என்பதால் அவனுடைய அழகு அன்று இன்னும் பிரகாசமாக இருந்தது. லேசாக கிழிந்த கீழுதடும் புருவத்தின் காயமும் இல்லை என்றால் நிச்சயம் பார்ப்பவர்கள் தூங்கிட்டு இருக்கும் சுதனை எழுப்பலாமா என்று நினைப்பர்.
அருண் மெதுவாக சுதனின் அருகில் செல்ல முயற்சிக்க, சுதனின் அண்ணன் வழிமறிக்க, அவன் நெஞ்சில் கையை வைத்து பின்னால் தள்ளிய சிவா கூறினான். இது துஷ்டி வீடு இங்க உன் கதையை அவுத்துவிட்டா சந்தி சிரிச்சிடும் என்று சொல்ல எதுவும் பேசாமல் சுதனின் அண்ணன் பின்னால் செல்ல அருண் சுதனின் காலின் அருகில் சென்று கீழே அமர்ந்தான்.
சுதனின் காலை தன்னுடைய தலையில் வைத்தபடி என்னை மன்னிச்சுடு சுதன், நீ எந்த தப்பும் பண்ணாதவன் என்னை காப்பாத்திக்க உன்னை தேவையில்லாமல் இதில் இழுத்து விட்டுட்டேன்டா, உன்கிட்ட எல்லா உண்மையும் சொல்ல வர்றதுக்குள்ள இப்படி பண்ணிட்டியேடா என்னை மன்னிச்சிடுடா என அவனுடைய கால் மாட்டில் முட்டி முட்டி அழுதான் அருண்.
உடனே கூட்டத்தில் ஒரே சலசலப்பு, அப்போ செத்தவன் நல்ல பையன் தான் போல, நம்ம எல்லாரும் தேவையில்லாம சந்தேகப்பட்டோம் போல என்ற வாக்கியங்களும் வலம் வரத் தொடங்கியது. சுதனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது, மையானத்தில் சுதனின் அண்ணன் அவனுக்கு காரியங்கள் செய்து கொண்டிருக்க, மையானத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் நின்ற படி அருண் எரியும் உடலையே பார்த்த படி நின்றான்.
ஆம் இன்று நெருப்பை நீக்கமற தன் உடலில் ஏற்றுக் கொண்டிருக்கும் சுதன் தான், அன்று கைகளில் சிந்திய காபிக்காக கதறி அழுதவன்.
இவனே தான், இங்கு அமைதியாக தீக்கிரையாகி கொண்டிருக்கும் இவன் தான் 50 வருட வாழ்க்கையை வாழத்திட்டமிட்டது.
இவன்தான் காதலும் காமமும் எனக்கு பரிசளித்தவன், இவன் தான் என்னை எனக்கே பிடிக்க காரணமானவன்.
இவன் தான் நான் இன்று வரை உயிரோடு இருக்க காரணமானவன்.
ஆ…………. ஆ…………. என்ன கதறி அழுத அருணை எப்படி தேற்றுவது என தெரியாமல் சிவா தவித்தான், தன்னுடைய தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அருண் அழுதான்.
சுதன் வீட்டார் சென்றபின் எரிந்து கொண்டிருக்கும் தன்னுடைய காதலனின் அருகில் சென்றான் அருண், நீ உன்னையே அழித்துக் கொண்டாய் என்பதை நான் ஏற்பதாக இல்லை. ஆனால் அப்படி நீ செய்திருந்தால் நிச்சயம் நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன், ஆனால் உன் உயிர் பறிக்கப்பட்டு இருந்தால் நிச்சயம் நம் காதல் அவர்களை சும்மா விடாது.
என்னோட வாழ்க்கை என்கிற டைரியில் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் குதூகளிப்பையும் தந்த நீயே இன்னைக்கு அழுகையும் தந்திருக்கிறாய். இனிமே உன்னை யாரும் தவறாகவும் பேச மாட்டாங்க என்று சொல்லிவிட்டு திரும்பிய அருண் நின்று கொண்டிருந்த சிவாவை பார்த்து வாடா போகலாம் என நடக்கத் தொடங்கினான்.
சுதனின் வீட்டில் இருந்த அனைவரும் சென்று விட சுதனின் அம்மா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்க, சுதனின் தங்கை மட்டும் ஒரமாக அழுது கொண்டே இருந்தாள். ஏய், என்னட்டி நீ இன்னும் அழுதுகிட்டே இருக்க எழுந்து போய் வேலையை பாரு என சுதனின் அம்மா சொல்ல, எப்படிம்மா உன்னால இப்படி சாதாரணமா இருக்க முடியுது எனக் கேட்டாள் சுதன் தங்கை.
என்னடி வாய் ரொம்ப நீளுது மூடிட்டு போய் வேலையை பாரு என அவர் அடுப்படிக்குள் சென்றார். அண்ணா (சுதன்) என்னை மன்னிச்சிடுடா நான் உனக்கு துரோகம் பண்ணல, எனக்கு தெரியாம தான் இதெல்லாம் நடந்துச்சு என புலம்பி கொண்டு அவளும் வேலை செய்ய தொடங்கினாள்.
என்னம்மா உன் மவ பிணத்திக்கிட்டு இருக்கா என்றான் சுதனின் அண்ணன், என்னடா செய்ய ஒரு பிள்ளை பைத்தியமாகவும் இன்னொரு பிள்ளை நோயாளியாகவும் பெத்து இருக்கேன்.
பெத்த அஞ்சில மூணு தான் மிச்சம், இப்ப அதுலயும் ஒன்னு போச்சு இவளையும் சீக்கிரம் புருஷன் வீட்டுக்கு அனுப்பனும் என்றபடி சுதன் அம்மா தன்னுடைய வேலையில் மூழ்கினார்.
சுதனுக்கு என்ன நடந்தது என்று அவனுக்கும் அந்த கடவுளுக்கும் தான் தெரியும்.
-வருவான்………
