இரண்டு நாட்களாக தங்களுடைய அம்மாவின் நிலையைக் கண்டு வனிதாவும் சிவாவும் உடைந்து போயிருந்தனர். அப்போது சிவா தன்னுடைய அக்காவிடம் ஏன்க்கா சிவலட்சுமி அக்கா ஒரு தடவை கூட வந்து பார்க்கல என கேட்டான்.
தெரியலடா நம்ம மாமா பத்தி உனக்கு தெரியாதா என்று வனிதா சொல்ல, எனக்கு சிவலட்சுமி அக்காவைப் பத்தி நல்லாவே தெரியும், என்னமோ நடந்து இருக்கு நம்ம பிரச்சனை முடிஞ்சதும் அவள பாத்து நான் பேசிக்கிறேன் என சிவா சொல்லிக் கொண்டிருக்க, சிவா அம்மாவின் காதலர் காரில் இருந்து இறங்கினார்.
அவரைப் பார்த்ததும் சிவாவின் அப்பாவின் சொந்தங்கள் முணுமுணுக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சிவா அவரை உள்ளே அழைத்து வந்தான். வனிதா தன்னுடைய அப்பாவை அடிக்கடி சந்திப்பது உண்டு. ஆனால் இன்று உள்ள சூழ்நிலை அவளுக்கு தன்னுடைய அப்பாவைப் பார்த்ததும் கண்கள் கலங்கி கரைபுரள, குரல்வளை உடைந்து அப்பா என அவரை கட்டி அணைத்தாள்.
இங்க என்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா என சுடலை கேட்க, எது நடக்கணுமோ அதுதான் நடக்குது நீ உன் வேலையை மட்டும் பாரு என சிவா சுடலையைப் பார்த்து சொன்னான். ஏற்கனவே சிவா எல்லோரைப் பற்றிய உண்மையையும் சொல்வதால் பயந்த சுடலை அமைதியாகி போனான்.
சிவா அம்மாவின் தலைமாட்டில் அமர்ந்த அவருடைய காதலர், தன்னுடைய தொண்டை நெரிக்க, “கோமு” நான் சங்கர் வந்திருக்கேன் என்று சொல்ல, சிவாவின் அம்மா தன்னுடைய கண்களைத் திறந்தார். ஏற்கனவே மார்புக்கும் தொண்டைக்கும் ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர் தன்னுடைய காதலைக் கண்டதும், இந்த பாரமான உலகை விட்டுப் பிரிய எத்தனித்து துடித்தது. அழுது கொண்டிருந்த சங்கரை சிவா தேற்றி அவருடைய கையில் பால் கிண்ணத்தைக் கொடுத்தான்.
அவர் பஞ்சைப் பாலில் நனைத்து கோமதிக்கு கொடுக்க, தான் சேர்த்து வைத்திருந்த ஏக்கம், வெறுப்பு, கோபம், மனபாரம், துக்கம் என அனைத்தையும் அந்த பூத உடலில் விட்டு விட்டு கோமதியின் உயிர் பிரிந்தது. கோமதி எனக் கதறி அழுத சங்கரைக் கட்டி அணைத்தபடி, நாங்க இருக்கோம் அப்பா என்றான் சிவா. சிவாவின் வீட்டு முன்னால் பந்தலிடப்பட்டது. அவர்களுடைய சொந்த பந்தங்கள் வரத் தொடங்கினர்.
மணி காலை 10:30 க்கு நீர்மாலைக்கு போய் வந்தவர்கள் சிவாவின் அம்மாவைக் குளிப்பாட்டத் தயாராகினர். சிவாவின் மாமா வராததால் ஒன்றுவிட்ட பங்காளி ஒருவரின் மூலம் கோமதிக்கு தாய் வீட்டுக் கோடி செலுத்தப்பட அவரைக் குளிப்பாட்டி தாய் வீட்டு சேலை கட்டப்பட்டது. தன்னுடைய தலையில் கெண்டியை வைத்து சுற்றியபடி சிவா தன்னுடைய புலம்பல்களை ஒப்பாரியாக்கினான்.
கட்டெறும்பு வட்டமிடும்
ஒரு காகிதமும் மேல்பறக்கும்
என்னை பெத்த அம்மா
அந்த காகிதத்தை பார்த்தயின்னா
நீ பெத்த மக்க நாங்க படும் கஷ்டமத சொல்லிடுமே
சித்தெறும்பு வட்டமிடும்
ஒரு சீட்டுகளும் மேல்பறக்கும்
என்னை பெத்த சீதை நீ
அந்த சீட்டெடுத்து பார்த்தயின்னா
நீ பெத்த செல்ல மக்க
நாங்க படும் சிரமத்தை சொல்லிடுமே
அம்மா நான் காண்டா மணி விளக்கு நான் பொறந்த கோட்டையில நான் கல்லு மேல நின்னெறிவேன்
இன்னைக்கு நான் காத்தடிச்சு மங்காம கஷ்டப்பட்டு மங்கிட்டேனே
அம்மா நான் தூண்டா மணி விளக்கு நான் பிறந்த கோட்டையில நான் தூண் மேல நின்னெறிவேன்
இன்னைக்கு நான் தூசு பட்டு மங்காம துயரப்பட்டு மங்கிட்டேனே
எனக்கு சங்க முள்ளு கல் கோட்டை
நான் பிறந்த வாசலிலே சணம் பெருத்த நன்நாடு
என்ன பெத்த சீதை நீங்க உள்ள மட்டும் நான் சங்கை ஒதுக்கி வச்சேன் எனக்கு வந்த சனத்தாரையும் தள்ளி வச்சேன்
இன்னைக்கு என்ன பெத்த சீதை நீங்க மாண்டிடவே
எனக்கு சங்க முள்ளு குத்துறதும் இந்த சனத்தாரு பேசுறதும் எனக்கு சகிக்க மனம் கூடலியே
எனக்கு இண்ட முள்ளு கல் கோட்டை நான் பிறந்த வாசலது இனம் பெருத்த நன்நாடு
என்னை பெத்த இந்திராணி நீங்க உள்ள மட்டும் நான் இண்ட ஒதுக்கி வச்சேன் எனக்கு வந்த இனத்தாரையும் தள்ளி வெச்சேன்
என்னை பெத்த இந்திராணி நீங்க மாண்டிடவே எனக்கு இண்ட முள்ளு குத்துறதும் இந்த இனத்தாரு பேசுறதும் இந்த சண்டாள தேசத்தில எனக்கு இருக்க மனம் கூடலியே
என்ன பெத்த கண்ணகியாள் கருவுலயும் நான் கடலை பருப்பு அளவு கருவா சனிக்கையில
என்னை கடையில மருந்த வாங்கி நீங்க கடிச்சு தின்னு இருந்தா
நான் கருவுலையே கலைஞ்சிருப்பேன் உங்க காலுக்கு நடுவுல களமா சரிஞ்சிருப்பேன்
என்ன கருவுலையே கலைக்காம இந்த கருவை உருவாக்கி இந்த கண்ணனையும் ஆளாக்கி
இன்னைக்கு என்னை கஷ்டப்பட விட்டுட்டு தான் என்ன பெத்த மாதா நீ கைலாயம் கண்ணசந்த
என்ன பெத்த உத்தமியாள் உந்தியில நான் உளுந்தம்பருப்பு அளவு உருவா சனிக்கையில
ஊருக்குள்ள மருந்த வாங்கி நீ உருக்கி குடிச்சிருந்தா
நான் ஒரு உருவுலையே கலைஞ்சுருப்பேன் உன் காலுக்கு கீழ உதிரமா சரிஞ்சிருப்பேன்
என்னை உருவிலேயே கலைக்காம நீங்க உருவ கருவாக்கி இந்த உத்தமனை ஆளாக்கி
இன்னைக்கு ஊர் பழிக்க விட்டுட்டு தான் என்ன பெத்த மாதா நீ உடையார் லோகம் சம்மதிச்ச.
ஏம்மா எனக்கு சின்ன கொடிக்காவாம் நான் பொறந்த இந்த வாசலிலே சிறுகாம்பு வெத்தலையாம்
நான் சிரிச்சே பரிச்சேன்னுலா இன்னைக்கு சிறுசுலயே தாய் இழந்தேன் சீரு அற்ற பிள்ளையானேன்.
எம்மா எனக்கு வண்ண கொடிக்காவாம் நான் பொறந்த வாசலிலே எனக்கு வரி காம்பு வெத்தலையாம்
நான் வளைச்சே பறிச்சேன்னுலா ஒருகாலம் இன்னைக்கு வயசுலயே தாய் இழந்தேன் நான் வரிசை அற்ற மகனுமானேன்
என்று குமுறிய சிவாவை கட்டி அணைத்தபடி வனிதா ஒரு சில வார்த்தைகளை ஒப்பாரி ஆக்கினாள்.
என் கூட பொறந்ததொரு கருணமகாராசா உனக்கு மேற்காம வந்தேயின்னா உன் கூட பொறந்த நானிருக்கேன் கோடி சனம் இருக்கு கொல்லையத்தை ஆள் இருக்கு லட்சம் சனம் இருக்கு மிச்சமா நான் இருக்கேன்
நம்ம பெத்த மாதா வயித்துல நம்ம தரிக்கையில போட்ட எழுத்து தம்பி இது தப்பாது நம்ம தலையெழுத்து
என்னும் வரிகளில் நான் உனக்கு இருக்கிறேன் கவலை கொள்ளாதே என தன்னுடைய ஆறுதலை சொன்னாள் வனிதா.
சிவாவின் அம்மா கோமதியின் இறுதி ஊர்வலம் அவனுடைய வீட்டிலிருந்து புறப்பட்டது. என்ன தான் தன்னுடைய அம்மா தன்னை வெறுப்போடு நடத்தி இருந்தாலும் அவருடைய மனதின் வேதனையை அறிந்தவன் சிவா.
அவனைப் பொறுத்தவரை தன்னுடைய அம்மா 40 வயதில் இறக்க வேண்டியவர் இல்லை, அது மட்டுமே அவனுடைய ஏக்கம். சிவா அம்மாவின் இறுதி ஊர்வலம் ரகு வீட்டின் தெருவில் திரும்பும்போது எதிரே அருண் வந்து அவனைக் கட்டி அணைத்தான்.
வாடா, அம்மா என்ன மறுபடியும் ஏமாத்திருச்சுடா என்ற சிவாவிடம், தைரியமா இருடா என்ற அருணும் அவனுடன் நடக்க தொடங்கினான். அப்போது ரகு வீட்டின் முன் சில ஆட்கள் நின்று கொண்டிருக்க இறுதி ஊர்வலத்தைப் பார்த்து ரகுவின் அம்மா வாசலில் வந்து நின்றார்.
சிவா, அத்தை கடைசியா கோமதி முகத்தைப் பார்த்துக்கிறேன்ப்பா என ரகுவின் அம்மா கேட்க, சரியென சிவா சம்மதிக்க, ரகுவின் அம்மா சிவாவின் அம்மாவின் கன்னத்தைப் பிடித்தபடி என்னை விட்டுட்டு போறியா நங்கை என அழுதார்.
அத்தை நேரமாச்சு என சிவா சொல்ல, ஒரு நிமிஷம் சிவா என ஒரு முக்காலியை எடுத்து கோமதியின் கடைசி ஊர்வல வண்டியின் முன் வைத்த ரகுவின் அம்மா, மரக்கால் ஒன்றை அதன் மேல் வைத்து, அதில் நெற்பயிர் கொட்டி நிறைத்து விட்டு, பிறந்த வீட்டு மரக்கா, குடிமகனை எடுத்துக்க சொல்லுங்க என அவர் சொல்ல, ரகுவின் வீட்டு முன்னால் ஒரு கார் வந்து நின்றது.
அந்த காரில் இருந்து மாலையும் கழுத்துமாக சிவலட்சுமி இறங்கினாள். பின்னாலேயே மாரிமுத்து இறங்குவான் என எண்ணிய சிவாவுக்கு பேரதிர்ச்சி. இறங்கியது ரகு அவனும் மாலையும் கழுத்துமாக இருப்பதைப் பார்த்து அனைத்தையும் புரிந்து கொண்டான் சிவா.
அவர்களைக் கடந்து அந்த இறுதி ஊர்வலம் போகும்போது தன்னுடைய வலியின் வெளிப்பாடாக சிவா உதிர்த்த புன்னகை சிவலட்சுமியைக் கொன்றது என்று சொன்னாலும் தகும்.
மயானம் சென்ற கோமதியின் ஊர்வலம் அவருடைய இறுதிக் காரியங்கள் நல்லபடியாக முடிந்தபின் அங்கிருந்து கலைந்தது. சிவாவும் அவன் அம்மாவின் காதலர் சங்கரும் நடந்து வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
சிவா நீ என்னை அப்பாவா நினைக்கிறியோ இல்லையோ ஆனா நீ எனக்கு மகன் தான, நான் கிளம்புறேன். எனக்கு தேவை கொஞ்சம் தனிமை என்னை தடுக்காத சிவா, வனிதா கிட்ட நான் ஃபோன்ல பேசிக்கிறேன் என அவரும் விடை பெற்றுக் கொண்டார்.
மூன்று நாட்கள் கழித்து சிவா அம்மாவுடைய சடங்குகள் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. அந்த இரவு வனிதா தன்னுடைய வீட்டுக்கு சென்றாள். தனியாக தன்னுடைய வீட்டில் அமர்ந்து தன் வாழ்க்கை தனக்கு கொடுத்த தனிமையை எண்ணிக் கொண்டிருந்தான் சிவா. அப்போது அங்கு வந்த அருண் என்னடா தனிமை எப்படி இருக்கு என்று கேட்க, என்னை விட உனக்கு தான் அதை பத்தி நல்லா தெரியும் என்றான் சிவா.
அது என்னமோ உண்மைதான், ஆனால் இந்த தடவை நான் ஒரேடியா இந்த ஊரை விட்டு போறேன். அம்மா என்கிட்ட விடுதலை பத்திரம் எழுதி வாங்கிட்டாங்க. இனிமே எனக்கும் அவங்க சொத்துக்கும் மட்டுமில்ல அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம் என்ற அருண், உனக்காக நான் என்னைக்குமே இருப்பேன் டா அதை மட்டும் மறந்துடாத என்ற படி சென்னைக்கு கிளம்பினான்.
சில நாட்களில் சிவாவின் தேர்வு முடிவுகள் வந்தது. எப்போதும் போல சிவா நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருந்தான். வாழ்க்கையின் முக்கியமான சில முடிவுகளை எடுக்க தொடங்கியிருந்தான் சிவா. அப்போது சென்னையில் உள்ள அவன் செலக்ட் ஆன கம்பெனியிலிருந்து கால் வந்தது. ஜூலை ஜாயின் பண்ணிக்கோங்க என அவர்கள் சொன்னதும் சரியென சிவா தன்னுடைய வாழ்வின் அடுத்த பயணத்திற்கு தயாராகத் தொடங்கினான்.
அது ஒரு வியாழக்கிழமை, தன்னுடைய அக்கா வனிதாவுக்காகக் காத்திருந்தான் சிவா. அவள் வந்ததும், இந்தா அக்கா அம்மா உன் பேருல போஸ்ட் ஆபீஸ்ல போட்டு வச்சிருந்த பைசா, இது நம்ம புதுக்கோட்டையில் உள்ள இடத்தோட பத்திரம், இது என்னோட விடுதலை பத்திரம். எனக்கும் நம்ம அம்மா பேர்ல உள்ள எந்த சொத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னு எழுதி இருக்கேன்.
மாமா எப்படியும் நம்ம அம்மாவுக்கு சேர வேண்டிய சொத்துக்களைத் தருவாரு, அன்னைக்கி இதை பயன்படுத்திக்க. நான் முடிஞ்ச வரை இங்க வரமாட்டேன் அப்படி வர வேண்டியதா இருந்தா, இந்த வீட்டுல உள்ள என்னோட ரூம்ம பின்வாசல் வழியா நான் யூஸ் பண்ணிக்கிறேன்.
மத்த வீட்டை நீ வாடகைக்கு விட்டுக்கோ, அம்மாவைச் சேர்ந்த பண்டப் பாத்திரம் துணிமணி எல்லாம் எடுத்துக்கோ. இதுல 15 பவுன் நகை இருக்கு. அம்மா எப்பவும் சொல்லும், இது உன்னோட சொத்துன்னு என அனைத்தையும் சிவா அவளிடம் ஒப்படைத்தான்.
கண்கள் கலங்க நீ என்னை அனாதையா விட்டுட்டு போறியாடா என வனிதா கேட்க, இல்லக்கா நம்ம தலையெழுத்து இதுதான் போல, என்னால என்னோட அம்மா இல்லாம, என்னோட தோத்துப்போன காதல் முன்னால உயிரோட வாழ முடியாது.
அக்கா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ, உனக்கு எப்போ என்னை பாக்கணும்னு தோணுனாலும் நீ சென்னைக்கு வா. இப்ப நான் போக எனக்கு அனுமதி கொடு என தன்னுடைய அக்காவைக் கட்டி அணைத்துவிட்டு வெளியே வந்த சிவாவின் முன்னால் சுடலை நின்றான்.
அவனுடைய பார்வையின் அர்த்தம் புரிந்த சிவா, என்னடா மாமா நான் தோத்துட்டு போறேன்னு பாக்குறியா, உனக்கு வாழ்க்கை பிச்சை போட்டுட்டு போறேன் என தன்னுடைய ஊரின் பஸ் ஸ்டாண்டுக்கு போனான் சிவா.
அப்போது சிவா… சிவா… என அழைத்தபடி சிவலட்சுமி வருவதைக் கண்ட சிவா என்னாச்சுக்கா என கேட்க, ஏன்டா என் மேல கோபமா என சிவலட்சுமி கேட்க, எனக்கு யாருமேலையும் எந்த கோபமும் இல்ல அக்கா என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது சிவலட்சுமியின் பின்னால் ரகு வந்து நின்றான்.
அவனைப் பார்த்த சிவா ரெண்டு பேருக்கும் வாழ்த்துகள் என்று சொல்ல, டேய் நான் ஏன் இதை பண்ணி இருப்பேன்னு நீ கேட்கவே மாட்டியா என்றாள் சிவலட்சுமி. அக்கா நான் உன்னை அக்கான்னு கூப்பிட மட்டும் இல்ல, எனக்கு வனிதா எப்படியோ அப்படித்தான் நீயும். என்னோட காதல நான் எவ்வளவு காதலிச்சேன் என்கிறது என்ன விட உனக்கு அதிகமாகவே தெரியும்.
அப்படிப்பட்ட நீ இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கனா எல்லாத்தையும் யோசிக்காமல் பண்ணி இருக்க மாட்ட. நான் கஷ்டப்படுவேன்னு தெரிஞ்சு நீ எனக்கு ஒரு விஷயம் பண்ணி இருக்கேன்னா, உனக்கு அதைவிட பெரிய கஷ்டம் ஏதோ வந்திருக்கு.
நீ அடிக்கடி என்கிட்ட சொல்லுவ, நமக்கு பிடிச்ச வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்காது ஆனா கிடைச்ச வாழ்க்கையைப் புடிச்ச மாதிரி வாழ எல்லாராலும் முடியும், அதை மட்டும் நினைவுல வச்சுக்கோ என அவளைக் கட்டி அணைத்த சிவா, மிஸ் யூ அக்கா என பேருந்தில் ஏறினான்.
கண்ணீரோடு சிவலட்சுமி திரும்பி ரகுவைப் பார்க்க, வாழ்க்கையில பண்ண கூடாததெல்லாம் பண்ணினேன். ஆனா ஒருத்தனைப் பிணமா நடமாட விடணும்னு நான் என்னைக்கும் நினைக்கல சிவா என சிவலட்சுமியைக் கட்டி அணைத்தான் ரகு. சிவா சொன்ன வார்த்தைகளோடு சிவலட்சுமி தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்குள் செல்ல தயாரானாள்.
மாரிமுத்துவின் ஊரைக் கடக்கும் போது ஒட்டி இருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து சிவா நடந்த அனைத்தையும் யூகித்துக் கொண்டான். தன்னுடைய அக்கா தனக்கு துரோகம் பண்ணவில்லை என்ற நிம்மதியோடு சென்றான்.
ஆம் அந்த “கண்ணீர் அஞ்சலி” மாரிமுத்து உடையது.
-வருவான்…
