சிவலட்சுமியோடு வீட்டினுள் புகுந்த ரகுவைப் பார்த்து, என்னடா எங்க போயிட்டு வரீங்க என கேட்டார் அவனுடைய அப்பா. ஒரு பொணத்த ஊருக்கு வழி அனுப்பி வச்சிட்டு வரேன் என்றான் ரகு. என்னடா உளறுற என அவனுடைய அப்பா கேட்க, உங்களுக்கு அப்படி தான் அப்பா தெரியும். உங்களுக்கு இல்லாத ஹார்ட் அட்டாக்க பயன்படுத்தி என்னை இவ்வளவு நாள் நீங்க மிரட்டி இருக்கலாம், இனிமேலும் அதெல்லாம் நடக்காது. ஒரு வயசுக்கு மேல அப்பா மேல பாசம் இருக்கலாம், மரியாதை இருக்கலாம், ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பயம் இருக்கக் கூடாது.

 

ஆனா என்னை இந்த 29 வயசு வரை நீங்க பயமுறுத்தி மட்டும் தான் உங்க கூட வச்சிருக்கீங்க, நாளைக்கு நானும் சிவலட்சுமியும் என்றவன் தன்னுடைய பேச்சை நிறுத்தி சிவலட்சுமியை ஒரு தரம் பார்த்துவிட்டு, நானும் என் பொண்டாட்டியும் கோயம்புத்தூர் போறோம். நான் பேசிட்டேன், என் ஃபிரண்டு கிட்ட சொல்லி வீடு பார்த்துட்டேன் என்றவன் சிவலட்சுமியுடன் தன்னறைக்குள் நுழைந்தான்.

 

மாரிமுத்துவின் இறப்பு சிவலட்சுமியை எவ்வளவு பாதித்திருக்கும் என சிவாவுக்கு நன்றாகவே தெரியும். அவளுடைய இந்த முடிவு அவனை வருத்தமடைய செய்யவில்லை. ஏனென்றால் ரகுவின் முதல் காதல் சிவலட்சுமி என்பதை அவனும் நன்கு அறிவான். மறுநாள் காலை சென்னையில் இறங்கிய சிவா, அருண் தன்னுடைய வீட்டுக்கு ஏற்கனவே வழி சொல்லி இருந்ததால், தன்னிடம் பொருட்கள் அதிகமாக இருந்ததால் டேக்சி பிடித்து பாலவாக்கம் சென்றடைந்தான். அவனை வீட்டின் உள்ளே அழைத்த அருண், டேய் சாப்பிட்டு ரெஸ்ட் எடு நான் ஒர்க் முடிஞ்சு வரேன் பேசலாம் என்று கிளம்பினான்.

 

மாலை 6 மணி அளவில், ரகு நீ ஓகேவா என சிவலட்சுமி கேட்க, ஏன் அப்படி கேக்குற என சிவலட்சுமியைப் பார்த்து கேட்டான் ரகு. இல்லடா, நடந்ததெல்லாம் வச்சு நீ எப்படி இருக்கன்னு என சிவலட்சுமி தன்னுடைய கேள்வியைக் கேட்கும் முன், இங்க பாரு சிவு (சிவலட்சுமி) உனக்கு எப்படி மாரிமுத்துவ மறக்க முடியாதோ அதே மாதிரி என்னால சிவாவை மறக்க முடியாது என்றான் ரகு.

 

உன் வயித்துல வளருற குழந்தைங்க தான் இனிமே நம்மளோட வாழ்க்கை, அதைத்தவிர நல்ல நண்பர்களா நம்முடைய பயணத்தைத் தொடங்குவோம் என்றான் ரகு. சரியென சிவலட்சுமி தலையசைக்க, நான் இந்த ஊர்ல இருந்தா சரியா இருப்பேன்னு எனக்கு தோணல, அதான் நம்ம போறோம் என அவளை அழைத்துக்கொண்டு ரகு கோயம்புத்தூர் நோக்கி தன்னுடைய பயணத்தைத் தொடங்க தயாரானான்.

 

அருண் வேலைக்கு சென்றபின் குளித்து முடித்து சாப்பிட்ட சிவா, அவனுடைய வாழ்க்கையின் கடந்த இரண்டு மாத சோகங்களுக்குப் பின் நிம்மதியாக உறக்கம் கொண்டான். மாலை அருண் வந்து சிவா உறங்குவதைப் பார்த்தான். எதைப் பற்றியும் கவலையில்லாமல் தூங்கும் சிவாவைப் பார்த்து, இனி தான் உன்னோட வாழ்க்கையின் முக்கியமான முடிவுகள எடுக்க வேண்டி வரும், அதுல தான் உன்னோட உண்மையான மன தைரியமும் வாழ்க்கையும் அடங்கும் என சிவாவின் தலையைத் தடவி விட்டு இரவு உணவைச் சமைக்கத் தொடங்கினான்.

 

மாலை 7 மணி அளவில் தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு ரகு வெளியே வந்தான். ஹாலில் அவனுடைய அப்பா அமர்ந்து இருந்தார். மாடியில் உள்ள தன்னுடைய அறையில் இருந்து தன் பேக்கை எடுத்துக்கொண்டு சிவலட்சுமியும் இறங்கி வந்தாள். சரிம்மா நான் கிளம்புறேன் என்ற ரகு, சிவலட்சுமியைப் பார்த்து சிவு நான் வெளியே நிற்கிறேன் என்று சொல்லிச் சென்றான்.

 

மாமா நானும் கிளம்புறேன், அத்தை மாமாவ நல்லா பாத்துக்கோங்க என சிவலட்சுமி சொல்ல, சரிம்மா பார்த்து போயிட்டு வாங்க என ரகுவின் அம்மா சொல்ல, சரி அத்தை என வெளியேறினாள் சிவலட்சுமி. ஏற்கனவே ஆட்டோவை வர சொல்லி இருந்தான் ரகு. அதில் ஏறி இரண்டு பேரும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை அடைந்தனர்.

 

தனியார் பேருந்து ஒன்றில் ஏறினர் இரண்டு பேரும். அது படுக்கை வசதி கொண்ட பேருந்து. அதிலுள்ள இரண்டு படுக்கை சீட்டு ஒன்றை ரகு புக் பண்ணி இருந்தான். சிவலட்சுமி முதலில் ஜன்னல் ஓரமாக சென்றதும் ரகு அதன் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தான்.

 

சாரி சிவு அவசரமா புக் பண்ணதுல இந்த சீட்டு தான் கிடைச்சது என்ற ரகுவிடம், எனக்கு இதனால எந்த பிரச்சினையும் இல்ல ரகு என்றவள், சிறிது நேரம் சிந்தித்து விட்டு, நான் ஒன்னு கேட்கவா ரகு என்று சிவலட்சுமி சொல்ல, கேளுடி என்றான் ரகு.

 

உண்மைய சொல்லு நீ ஓகேவா என்று கேட்டாள் சிவலட்சுமி. ஏன் அப்படி கேக்குற என ரகு கேட்க, எனக்கு உன்னை நல்லா தெரியும், நீ எப்பவும் போல இல்லை என சிவலட்சுமி சொல்ல, அது வந்து என ஏதோ உளறிய ரகுவின் முகத்தைத் தன் பக்கமாக திருப்பி, நீ என்ன ஃபீல் பண்றியோ அதை தயங்காம என்கிட்ட சொல்லலாம் என்று சிவலட்சுமி சொல்ல, சிவலட்சுமியின் தோளில் சாய்ந்து கதறி அழத் தொடங்கினான் ரகு. சிவா என்னைக்காவது என்னை மன்னிப்பானான்னு தெரியல என அழுத ரகுவைச் சமாதானப்படுத்த முயற்சித்து கொண்டிருந்தாள் சிவலட்சுமி.

 

பேருந்து செல்ல செல்ல சிவலட்சுமி மனதில் ஏகப்பட்ட கேள்விகள். இந்த வாழ்க்கை நம்மிடம் என்ன தான் சொல்ல நினைக்கிறது, ரகு மகிழ்வன் என்று நினைத்து தான் நான் என்னோட வாழ்க்கையில மாரிமுத்துவைத் தேர்ந்தெடுத்தேன்.என் வாழ்வின் அடுத்த நிலைக்கு முன்னேற நினைக்கும்போது, என்னோட காதலை என்னிடம் இருந்து பிரித்துக் கொண்டான் அந்த இறைவன். என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைகளுக்காக நான் இன்னொருவனின் காதலைப் பறித்துக் கொண்டேன்.

 

உணவுக்காக ஒன்றை ஒன்று புசித்துக் கொள்ளும் விலங்குகளைப் போலத்தான் மனிதர்களும் போல, அங்கு உடல்கள் புசிக்கப்படுகின்றன ஆனால் இங்கு உணர்வுகள் நசுக்கப்படுகின்றன. ரகுவின் மீது சிவா கொண்ட காதலை என்னை விட வேறு யாரால் உணர முடியும். ஆனால் என்னுடைய சுயநலத்திற்காக நான் அதையே அவனிடம் இருந்து எடுத்துக் கொண்டது எவ்வாறு சரியாகும். அதற்கான மன்னிப்பை சிவா எனக்கு வழங்கவில்லையே. அவனைப் பொறுத்தவரை நான் செய்தது தவறு இல்லை என்று சொல்லிவிட்டான்.

 

ஆனால் என்னை பார்த்து அவன் உதிர்த்த அந்த வழி நிறைந்த புன்னகை என்றும் என் உள்ளத்தில் உதிரம் கொட்ட வைக்குமே. இதெல்லாம் நான் நினைக்க இது நேரமில்லை, நல்லபடியாக இரண்டு பிள்ளைகளையும் இந்த உலகிற்கு கொண்டு வரணும். சிவாவுக்கு நான் செய்தது போல துரோகம் என் பிள்ளைகள் வேறு யாருக்கும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தவள், அழுது அழுது அயர்ந்து தூங்கும் ரகுவைப் பார்த்து சாரிடா என்றபடி தன்னுடைய உறக்கத்திற்குள் சென்றாள்.

 

காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிய ரகுவும் சிவலட்சுமியும் பீளமேடு பகுதியில் உள்ள தங்கள் அப்பார்ட்மெண்டிற்கு சென்றனர். ரகுவின் நண்பர்கள் ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தனர். அதைப் பார்த்து சிவலட்சுமி, உனக்கு இவ்வளவு நல்ல நண்பர்கள் கூட இருக்காங்களா என்று கேட்க, ஆமா என ரகு சொல்ல, சரி வீடு பெருசா இருக்கே ரெண்ட் எவ்வளவு என்றாள் சிவலட்சுமி. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன், சாப்பாட்டு செலவை நீ பார்த்துக்கோ என்ற ரகு, சிவலட்சுமி அறையில் அவளுடைய பொருட்களை வைத்துவிட்டு தன்னுடைய அறைக்கு செல்லும் முன் ஏதாவது தேவைனா என்னை கூப்பிடு, நாளைக்கு நான் ஒர்க்கு போகணும் நீ நல்லா ரெஸ்ட் எடு என்று சொல்லிச் சென்றான். அவனை பார்த்து, ரகு ரொம்ப தேங்க்ஸ் என்று சிவலட்சுமி சொல்ல, யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் என அவன் சொன்னான்.

 

காலை ஏழு மணி அளவில் கண்விழித்தான் சிவா. தன்னுடைய அருகில் அமர்ந்து துணிகளை மடித்துக் கொண்டிருந்த அருணைப் பார்த்து, குட்மார்னிங் டா என்ற படி சிவா அருணைக் கட்டியணைத்தான். குட்மார்னிங் டா என பதிலுக்கு சொன்ன அருண், என்னடா நேத்து நைட் அப்படி ஒரு தூக்கம், உன்னை எழுப்பி சாப்பாடு கொடுக்குறதுக்குள்ள நான் படாத பாடு பட்டுட்டேன்டா என்றான். அப்படியா சாரிடா நல்லா நிம்மதியா தூங்கி 20 நாளைக்கு மேல ஆச்சு, அதான் என்னையும் அறியாமல் அந்த தூக்கம் என்ற சிவாவிடம், சரிடா உன் வேலைக்கு என்ன ஆச்சு என்றான் அருண்.

 

ஏன்டா இந்த ஒரு நாளிலேயே உனக்கு பாரமா இருக்கேனா நான் என்றான் சிவா. செருப்பு பிஞ்சிடும், அந்த கம்பெனில எதுவும் சொன்னானா, சொல்லலனா என் ஃபிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி ஏதாவது ஓபனிங் இருக்கான்னு பார்க்கச் சொல்ல தான் கேட்டேன். வீட்டிலேயே இருந்தா அதுவும் சரிப்பட்டு வராது சிவா என்ற அருண், எனக்கு உன்ன பத்தி கவலையா இருக்குடா என்றான். புரியுது, நான் சும்மா சொன்னேன் டா, இன்னும் 20 நாள் கழிச்சு ஜாயின் பண்ணலாம்ன்னு இருக்கேன் என்றான் சிவா.

 

சரி நானும் மூணு வாரத்துக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் வாங்குறேன். ஆஃபீஸ்ல ஒரு அடிமை இருக்கான், அவன் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவான், கொஞ்சம் ஊர் சுத்தலாம் என்றான் அருண். சரிடா, இந்த ராம் எங்கடா ஆளையே காணோம் என சிவா கேட்க, எனக்கு புரியல அவனை ஏன் நீ விசாரிக்குற என அருண் கேட்க, அதனால என்ன பிரச்சனை உனக்கு என சிவா கேட்க, எனக்கு ஒன்னும் இல்ல ராம் சென்னை வடபழனில ஒரு பையனை டேட் பண்றான் போல, அதான் இந்த பக்கம் அதிகம் வரது இல்ல. நேத்தே நான் சொன்னேன் நீ வந்து இருக்கேன்னு, நாளைக்கு வரேன்னு சொன்னான் என அருண் சொல்ல, ஓகே என்ற சிவா, எனக்கும் ஆஃபீஸ் போக நிறைய திங்ஸ் வாங்கணும் என்றபடி காலை உணவைச் சமைக்கிறேன் என கிச்சனுக்குள் சென்றான்.

 

சிவாவை உற்சாகப்படுத்த அருணும் அவனைப் பல இடங்களுக்கு கூட்டி சென்றான். பலவகையான மால்களுக்கும் கோவில்களுக்கும் சிவாவுக்கு பிடித்த கடற்கரை என பல வகையான முயற்சிகளை அருண் செய்தாலும் அவ்வப்போது சிவாவின் மனம் பழைய நினைவுகளில் மூழ்கத்தான் செய்தது.

 

ஒரு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு எழுந்த சிவா, நான் இன்னைக்கு போய் ஜாயினிங் லெட்டர் மட்டும் வாங்கிட்டு வரேன், திங்கட்கிழமைல இருந்து ரெகுலரா ஆஃபீஸ் போறேன் என சிவா கிளம்பிச் சென்றான்.

 

சிவா கிண்டியில் உள்ள தன்னுடைய ஆஃபீஸ்க்கு சென்றான். வரவேற்பறையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சிறிது நேரம் காத்திருப்பிற்குப் பின் சிவா உள்ளே அழைக்கப்பட்டான்.

 

கவிதாவின் கேபினை காட்டி அங்கு செல்லுமாறு ரிசப்ஷனிஷ்ட் கூற, சிவா கவிதாவின் கேபினை திறந்து கொண்டு உள்ளே வரலாமா என்றான். வாங்க சிவா என அவனை வரவேற்ற கவிதா சிவாவை அமரச் சொன்னாள். தேங்க்யூ என்று சொன்ன சிவா அமர, ஏற்கனவே அவன் அருகில் ஒருவன் அமர்ந்திருக்க அவனுக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு சிவா தன்னுடைய கல்லூரியில் கொடுத்த டாக்குமெண்ட்களை கவிதாவிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட கவிதா உங்க காலேஜ்ல உன் கூட இன்னொரு பையனும் செலக்ட் ஆகி இருந்தான்ல என்று சொல்ல, ஆமா அவன் நாளைக்கு காலைல தான் ரீச் ஆவான். ரூம் ஏதாவது எடுத்துட்டு மண்டேல இருந்து ஆஃபீஸ் வருவான் என சிவா சொன்னான்.

 

ஆமா எனக்கும் அவன் மெயில் பண்ணி இருந்தான். ஓகே நீங்க அர்பு, இன்னைக்கு ஜாயினிங்கா இல்ல மண்டே தானா என்று கேட்டாள் கவிதா. ஐயோ எனக்கு தெரியாது இன்னைக்கே ஜாயின் பண்ணணுமா என்று கேட்டான் அர்பு. ஜஸ்ட் கிட்டிங் என்ற கவிதா, நீங்களும் மண்டேவே வாங்க என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள்.

 

சிவா வெளியே நடந்து செல்ல, ஏங்க ஏங்க என அவனை அழைத்தபடி ஓடி வந்தான் அர்பு. சொல்லுங்க அர்பு என சிவா கேட்க, உங்களுக்கு எப்படி என் பேர் தெரியும் என சிவாவிடம் அர்பு கேட்டான். இப்பதானே கவிதா சொன்னாங்க என சிவா சொல்ல, அட ஆமா இல்ல, எனக்கு தான் உங்க பேரு ஞாபகம் இல்ல என அர்பு சொன்னான்.

 

என்னோட பேரு சிவா என அர்புவிடம் சிவா சொல்ல, சரி நான் உங்ககிட்ட ஒரு ஹெல்ப் கேட்கணும் என அர்பு கேட்க, சொல்லுங்க என சிவா சொல்ல, நான் சென்னைக்கு புதுசு எனக்கு வீடெல்லாம் பாத்துட்டேன் எல்லாம் செட் பண்ணியாச்சு. வீட்ல வீராப்பா நான் இன்டிபெண்டன்டா இருக்க போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா தனியா இருக்க பயம், உங்க ஃபிரண்டுக்கு ஆட்சேபனை இல்லனா அவரை என் கூட ரூம் ஷேர் பண்ணிக்க சொல்லுங்களேன் என்றான் அர்பு. பயம்னு சொல்ற, என்கிட்ட தைரியமா என் ஃபிரண்டை உன்கூட இருக்க சொல்ல சொல்ற என சிவா கேட்க, உங்கள பார்த்தா தப்பானவரா தெரியல என்றான் அர்பு.

 

சரி உன்ன மாதிரி ஆளுங்க எல்லாம் நிறைய கண்டிஷன் வச்சிருப்பீங்களே, அதை சொல்லு எனக்கு ஓகே னா என் ஃபிரண்டுக்கும் ஓகே தான் என சிவா சொன்னான். எனக்கு தம் தண்ணி அடிக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்ல, ஆனா வீட்டுக்கு யாரையும் கூட்டிட்டு வரக்கூடாது என்றான் அர்பு. சரி டா, நாளைக்கு அவன் உனக்கு கால் பண்ணுவான் என அர்புவிடம் நம்பரை வாங்கிக்கொண்டு சிவா கிளம்பினான்.

 

அடுத்த நாள் அருணோடு சென்று தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சிவா வந்தான். ஞாயிறு இரவு அருணோடு அமர்ந்து சாப்பிடும் பொழுது, என்னடா 20 நாள் ஆச்சு நான் வந்து, இந்த ராம் ஒரு தடவை கூட வரல என்றான் சிவா. வருவான்டா என்ற அருண் சாப்பிட, அருண் நெக்ஸ்ட் மந்த் சேலரி வந்ததுக்கப்புறம் நான் கம்பெனி கிட்ட ரூம் எடுத்துப் போகலாம்னு நினைக்கிறேன் என்று சிவா சொன்னான். ஏன்டா டிராவல் அலைச்சலுக்கு நினைக்கிறியா? என அருண் கேட்க, ஆமா என்று மட்டும் சொல்லி வைத்தான் சிவா.

 

ரஞ்சித் வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர அவனுக்கு பின்னால் தள்ளாடியபடி வந்தவன், ரஞ்சித்தைப் பார்த்து ப்ளீஸ் ஈட் மீ என்று சொல்ல, கதவைப் பூட்டிவிட்டு அவனை அலேக்காக தூக்கி சென்று கட்டிலில் கடத்திய ரஞ்சித் அவன் மேல் பாய்ந்தான். அங்கு இருவரின் உடல்களும் உரச ஏற்பட்ட வெப்பம் கருமையான இருட்டிலும் கண்களை மூடச் சொல்லிக் கட்டாயப்படுத்தியது. ரஞ்சித்தின் வாழ்வின் மிக மகிழ்ச்சியான இரவாக அது உருமாறியது. திங்கட்கிழமை காலை சிவா சீக்கிரமாக தன்னுடைய அலுவலகத்தை நோக்கி பயணமானான்.

 

ஆஃபீஸின் வாசலில் குமாரையும் அர்புவையும் பார்த்து அவர்களோடு உள்ளே சென்றான். அனைவரும் கான்ஃபரன்ஸ் ஹாலில் அமர்ந்திருக்க, கவிதா உள்ளே வந்தாள். எல்லா கம்பெனிகளிலும் சொல்லும் வரவேற்புகளைச் சொல்லிவிட்டு, தன்னுடைய ஃபோனில் கால் செய்து, சரோ நீங்க டி எல் எல்லாரும் வாங்க உங்களுக்கான ஃபிரஷர்ஸ கூட்டிட்டு போய் உங்க இன்ட்ரோ கொடுங்க என்று சொன்னாள்.

 

அனைவரையும் கவிதா பிரித்து விட, சரோவின் டீமில் சிவா பிரிக்கப்பட்டதும் அவனோடு கான்ஃபிரன்ஸ் ஹாலை விட்டு வெளியே வந்த சிவாவின் மேல் வந்து மோதினான் ரஞ்சித்.

 

“இடியட்” என சொல்லியபடி சிவா அவனைப் பார்த்தான்.

 

– வருவான்…

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
[mc4wp_form id="1139"]

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன