கதவைத் திறந்த ரஞ்சித், என்னடா இந்த மழையில நனைஞ்சுகிட்டு இங்க வந்து இருக்க என்று கேட்க, நீங்க சொன்னத நல்லா யோசிச்சு பார்த்தேன் என்னதான் என்னோட சுய கௌரவம் என்னை தடுத்தாலும் என்னோட சீனியரை விட என்னை யாரு நல்லா பார்த்துப்பாங்கன்னு தோனுச்சு அதான் வந்துட்டேன் என்ற சிவா, உள்ள கூப்பிடுவீங்களா இல்ல இப்படி வெளியவே நிக்க வச்சு பேசப் போறீங்களா சீனியர் என்று கேட்டான்.
சிரித்தபடி சிவாவை உள்ளே அழைத்தான் ரஞ்சித். ஹாலில் தன்னுடைய பையை ஓரமாக வைத்த சிவா ஃபுட் மேட் மீதே நின்று கொண்டிருக்க, ஒரு துண்டைத் துவட்டிக் கொள்ளக் கொடுத்தான் ரஞ்சித். சிவா தன்னுடைய தலையைத் துவட்டி விட்டு துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு தன்னுடைய உடைகளைக் கழட்டத் தொடங்க, அவனை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித்தின் கண்களை ஏமாற்றுவது போல கரண்ட் கட்டானது.
ஓடிச் சென்று லாம்ப் லைட் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்த ரஞ்சித் அதன் ஒளியில் சிவாவைப் பார்த்துச் சொக்கிப்போனான். பச்சையும் மஞ்சளுமாக மாற்றி மாற்றி எரியும் அந்த லாம்ப் லைட் வெளிச்சம் சிவாவின் அரைநிர்வாண உடலின் அழகைப் பன்மடங்காக்கிக் காட்டியது.
சிவாவின் தலை மயிரில் ஒட்டியிருந்த மழையின் நீரானது புவியீர்ப்பு விசையால் அவன் தலையைப் பிரிய மனமில்லாமல் சொட்டுச் சொட்டாய் வடியும் நீர் துளிகள் தானாக இருக்கக் கூடாதா என எண்ணினான் ரஞ்சித்.
நெற்றியைத் தொட்டு அதில் மயங்கிய நீர்த்துளி ஒன்று சிவாவின் மூக்கின் வழியே விழுந்து புரள மூக்கின் நுனி அதைப் பிடிக்கத் தவறிட இதழில் இடம் பிடித்த அந்த நீர் துளி அதிர்ஷ்டசாலியா? அல்லது அந்த நீர் துளியைத் தன் இதழில் இருந்து சிவா ஊதிவிட அது ரஞ்சித்தின் கன்னத்தைச் சீண்டிய போது ரஞ்சித் அதிர்ஷ்டசாலியா? என்னும் போட்டிகளும் அங்கு நடந்து கொண்டிருந்தன.
சிவாவின் கழுத்தின் வழியே கோடிட்ட படி வந்த நீர் துளி ஒன்றிற்கு அகதியாய் தொப்புள் குழி தஞ்சம் அளிக்க அதுவும் போதாது என சிவாவின் அடிவயிற்றைத் தொட்டு அந்தரங்கம் காணத் துடித்த அந்த நீர் துளிக்கு ரஞ்சித்தின் கண் முன்னால் தண்டனை கொடுத்தது சிவாவின் இடுப்பில் கட்டி இருந்த துண்டு.
நீர்த்துளிகளால் நிறைந்திருந்த சிவாவின் மேலுடம்பு ரஞ்சித்தின் கண்களுக்கு மழையில் நனைந்து மரத்தில் தொங்கும் மாம்பழமாய் தான் காட்சியளித்தது. சிவாவை ரஞ்சித் ரசித்துக் கொண்டிருக்க ரஞ்சித்தின் முன்னால் கைகளைத் தட்டிய சிவா, சீனியர் என்னுடைய டிரஸ் எல்லாம் நனைஞ்சு போச்சு ப்ளீஸ் உங்ககிட்ட ஏதாவது டிரஸ் இருக்கா என்று கேட்டான்.
சுயநினைவை அடைந்த ரஞ்சித் தன்னுடைய அலமாரியில் இருந்து ஒரு டீசர்ட் மற்றும் ஷார்ட்சை எடுத்துக் கொடுத்தான். அதை அணிந்து கொண்ட சிவா ரஞ்சித் வீட்டின் ஹாலில் சென்று அமர லைட் வந்தது. உடனே சிவா, எப்பா நல்ல வேலை லைட் வந்துச்சு நைட்டு ஃபுல்லா வரலைன்னா எப்படி தூங்கன்னு நெனச்சேன் என்றான் சிவா.
அது ஒன்னும் ப்ராப்ளம் இல்லடா மழை நின்றதும் ஜெனரேட்டர் ஆன் பண்ணிடுவாங்க என்ற ரஞ்சித் சிவா இருந்த சோஃபாவின் அருகில் இருந்த மற்றொரு சோஃபாவின் மேல் அமர்ந்தான். இப்ப சொல்லு நேத்து வரவே மாட்டேன்னு சொன்ன இப்ப என்னடான்னா இவ்வளவு மழையில கூட என் கூட இருக்க வந்துட்ட என ரஞ்சித் கேட்டான்.
அதுக்கு என்ன பண்ண சீனியர் நம்ம எவ்வளவுதான் கெட்டதை விட்டு தள்ளி இருக்கணும்னு நினைச்சாலும் கெரகம் நம்மளை அதை நோக்கியே தள்ளுது என்றான் சிவா. டேய் என்ன நக்கலா என்றான் ரஞ்சித்.
அப்படியெல்லாம் இல்ல சீனியர் என்ற சிவா, இங்க ஒரு பெட்ரூம் தானா என ரஞ்சித்திடம் கேட்டான். ஆமாம் என ரஞ்சித் சொன்னான். உடனே, சரி அப்ப நான் இங்க ஹால்ல ஒரு ஓரமா நைட்டு படுக்கை விரிச்சு படுத்துகிறேன் என்றான் சிவா. டேய் அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல நீ என்கூட பெட்லயே படுத்துக்கலாம் நமக்குள்ள என்ன இருக்கு என்றான் ரஞ்சித்.
நானும் அதையே தான் சொல்றேன் சீனியர் நமக்குள்ள என்ன இருக்கு என்ற சிவா, ரஞ்சித் தந்த இரண்டு போர்வைகளை வாங்கிக்கொண்டு சோஃபாவில் இருந்த குசனைத் தலையணையாய் வைத்துக்கொண்டு உறங்கிப் போனான். ரஞ்சித்துக்கு தன்னுடைய பெட்டியில் உறக்கமே வரவில்லை. அவனுடைய நினைவுகள் எல்லாம் சிவா மட்டுமே நிறைந்திருந்தான்.
எவ்வளவு அழகா இருக்கான் இந்த பையன். யாரையும் லவ் பண்றானா, நமக்கு முன்னாலே எவனாவது அவனோட வாழ்க்கையில இருப்பாங்களா, இருக்கலாம் இவ்வளவு அழகான பையன எவன் விட்டு வைப்பான். ஒருவேளை இவன் நேர்கோடா இருந்தா என்ன பண்றது என்கிற எண்ணங்களில் மூழ்கி மூழ்கி கண்ணயர்ந்து போனான் ரஞ்சித்.
மறுநாள் காலை மணி எட்டைக் கடக்க கண்களைக் கசக்கிக் கொண்டே வெளியே வந்த ரஞ்சித், சிவா இழுத்து மூடி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். இன்னும் தூங்கறயாடா இரு டா உன்னை ஒரு வழி பண்றேன் என்றபடி ஒரு வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வந்தான் ரஞ்சித். ஹலோ சிவா என அவனை எழுப்ப, என்ன சீனியர் எனப் போர்வையை விளக்கிய சிவாவின் மீது அந்த வாளி தண்ணீரை ஊற்றினான் ரஞ்சித்.
ஆ…ஆஆ வென ஏங்கிய சிவாவுக்கு கை கால்கள் வெட்டத் தொடங்கின. பயந்து போன ரஞ்சித் சிவா, சிவா என அவனுடைய கன்னத்தைத் தட்டியபடி சிவாவின் உடைகளைக் கலைந்தான். அவனை வேகமாக உலர வைத்தவன் ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்தான். சிவாவின் உடல் நெருப்பாகக் கொதித்தது. அப்போதுதான் தன்னுடைய முட்டாள்தனம் ரஞ்சித்துக்கு புரிய வந்தது.
வேகமாக சிவாவைப் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்த ரஞ்சித் கவிதாவுக்கு ஃபோன் செய்தான். அவன் சொன்ன ஹாஸ்பிட்டலை அடைந்த கவிதா, என்னடா எங்க அடிபட்டிச்சு எங்க போய் விழுந்து வாருன என்று கேட்க எனக்கு ஒன்னும் இல்லடி என ஐ சி யு வின் பக்கமாகக் கையைக் காட்டினான் ரஞ்சித்.
ஐசியூ வைப் பார்த்த கவிதா சிவாவா அவனை என்னடா பண்ண, என்ன பலாத்காரம் பண்ணிட்டியா. ஏன்டா அவன் நேர்கோடா கூட இருந்திருப்பான். ஒரு பையன ஐ சி யு ல சேர்க்கும் அளவுக்கா உடலுறவு வச்சுக்குவ என கேட்டாள் கவிதா. நீ வேற ஏண்டி நான் அவன் கூட எந்தவித தப்பும் பண்ணல என ஐசியு வின் முன்னால் உள்ள சேரில் சென்று அமர்ந்தான் ரஞ்சித். அப்பாடா நான் கூட ரொம்ப பயந்துட்டேன் நீ ரொமான்டிக்கா பார்க்கிறேன்னு அவனைக் கடிச்சு திங்கிற மாதிரி பார்த்திருப்ப அதுல பயந்துட்டான் போல விடு அதுக்கெல்லாம் கேஸ் போட முடியாது என்று சொல்லிக்கொண்டு ரஞ்சித்தின் அருகில் வந்து அமர்ந்தாள் கவிதா.
என்னோட தப்பு தான்டி எல்லாமே என்றான் ரஞ்சித். என்னடா இப்பதான் நீ எதுவுமே பண்ணலன்னு சொன்ன என கவிதா கேட்க, உன்னை கால் பண்ணி கூப்பிட்டேன் பாரு அதைச் சொன்னேன் என ரஞ்சித் சொல்ல, டேய் என்ன நக்கலா என்னமோ ஏதோ உன் மேல உள்ள அக்கறையில் கவலைப்பட்டா ரொம்ப தான் பிகு பண்ற என கவிதா கோபித்துக் கொள்ள ரஞ்சித் பேசத் தொடங்கினான். நேத்து நைட்டு 11 மணி போல தான் சிவா வீட்டுக்கு வந்தான். நல்லா மழையில நனைஞ்சி இருந்தான். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தரையில படுத்துக்கிட்டான்.
காலையில 8:00 மணி வரை அவன் எந்திரிக்கல அதான் கிண்டல் பண்ணலாம்னு கொஞ்சம் கூட யோசிக்காம அவன் மேல தண்ணிய ஊத்திட்டேன்டி ஹை ஃபிவர்ல அவனுக்கு ஃபிட்ஸ் வந்துருச்சு என நடந்ததைச் சொன்னான் ரஞ்சித்.
உன் வீட்டுக்கு அவன் ஏன் வந்தான் என கவிதா கேட்க, என்கூட ரூம் ஷேர் பண்ண தான் என ரஞ்சித் சொன்னான். அது பிஞ்சுக்கு தெரியுமா என கேட்டாள் கவிதா. தெரியாது அவன் ஊருக்கு போய் இருக்கான், வர 2 மாசமாகும் அதுக்குள்ள நான் அவன்கிட்ட சொல்லிடுவேன் என்றான் ரஞ்சித். நீ அவன்கிட்ட சொல்லிட்டு தான் சிவாவை உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கணும் என கவிதா சொன்னாள்.
நாங்க ரெண்டு பேரும் டேட் மட்டும்தான் பண்றோம் எங்களுக்குள்ள வேற எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லை, அதோட கைன்ட் ஆஃப் ஓபன் தான் நாங்க என ரஞ்சித் சொல்ல, என்னமோடா நான் குமாரை வரச் சொல்லி சிவாவைப் பார்த்துக்க சொல்றேன் என கவிதா சொன்னாள். இல்லடி நானே பாத்துக்குறேன், அவனுக்கு சரியான அப்புறம் நான் நாளைக்கு வரேன் சிவாவுக்கு த்ரீ டேஸ் லீவ் மெயில் போட்டு விடுறேன் உனக்கு, அக்சப்ட் பண்ணிடு என்றான் ரஞ்சித்.
சரி எனச் சென்ற கவிதா பின்னோக்கி வந்து, சிவாவைப் பார்க்கும்போதெல்லாம் உன்னோட கண்ணுல காதல் தெரியுது. இந்த காதல் உன்னையும் அவனையும் கஷ்டப்படுத்தாம இருந்தா சரிதான். நீ ஒரு தடவை பிஞ்சு கிட்ட பேசுறது நல்லதுன்னு எனக்கு தோணுது என கவிதா சொன்னாள். சரி டி தேங்க்ஸ் என அவளை வழியனுப்பி வைத்தான் ரஞ்சித். சிறிது நேர சிந்தனைகளுக்கு பின் பிஞ்சுக்கு ஃபோன் செய்தான் ரஞ்சித். அதை அட்டென்ட் செய்த பின்பு சொல்லுடா ஏதாவது எமர்ஜென்சியா எனக் கேட்க, ஏன்டா நீ பிசியா என ரஞ்சித் கேட்டான்.
ஆமா ஒருத்தரை மீட் பண்ண போறேன் என்றான் பிஞ்சு. ஓகேடா போயிட்டு வந்து கால் பண்ணு என காலை கட் செய்தான் ரஞ்சித். ஓகே நான் ரொம்ப கஷ்டப்பட வேண்டாம், அவனும் என்னை சீரியஸா எல்லாம் நினைக்கல என்று எண்ணியவன் ஐசியு வின் வெளியே அமர்ந்திருந்தான்.
ஹாய் கவிதா என்றபடி கவிதாவின் கேபினுக்குள் நுழைந்தான் சரோ. சொல்லு சரோ என கவிதா கேட்க, சிவா இன்னைக்கு லீவா எனக்கு எந்த மெயிலும் வரல என சரோ கேட்க, ஆமா சரோ எனக்கு மெயில் வந்திருச்சு அவனுக்கு உடம்பு சரியில்லை போல என கவிதா சொன்னாள். டைரக்டா கவிதா கிட்ட பேசி இருக்கான் என மனதிற்குள் நினைத்துக் கொண்டு தன்னுடைய இடத்திற்கு சென்றான் சரோ.
மதியம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குமாரிடம் சரோ சிவா வராததைப் பற்றி ஏதாவது தெரியுமா எனக் கேட்டான். அவன், நோ சரோ நான் அவன்கிட்ட பேசி இரண்டு நாள் இருக்கும் என்க, நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஸ்டே பண்ணலையா என சரோ கேட்க, இல்ல சரோ நான் தனியா ஸ்டே பண்ணி இருக்கேன் என்ற குமார் தன்னுடைய சாப்பாட்டில் கவனம் செலுத்த ராமுக்கு ஃபோன் செய்த சரோ சிவா வரவில்லை என்பதையும் ஏதாவது பிரச்சனையா என விசாரிக்கும்படியும் சொன்னான்.
ராம் அருணுக்கு போன் செய்து சிவா ஏன்டா ஆஃபீஸ் போகல எனக் கேட்க, என்கிட்ட கேட்டா எனக்கு என்னடா தெரியும் நான் என்ன அவனை முடிஞ்சா வச்சிருக்கேன் என்றான் அருண்.
ஏதோ இரண்டு பேருக்குள்ளும் சண்டை என்பதை மட்டும் தெரிந்துக் கொண்டான் ராம். 3 மணி அளவில் குமாரைத் தன்னுடைய கேபினுக்கு அழைத்த கவிதா, சிவா ஐசியு வில் அட்மிட் ஆகி இருப்பதாகவும் குமாரைச் சென்று அவனைப் பார்த்துக் கொள்ளும்படியாகவும் சொல்ல உடனடியாக குமார் ஆஃபீஸிலிருந்து சென்றான்.
ஹலோ எனத் தன்னுடைய ஃபோனை அட்டென்ட் செய்து பேசிய அருண், ஓகே நான் அரை மணி நேரத்தில் அங்க இருப்பேன் என்று சொல்லி ஆஃபீஸில் இருந்து கிளம்பினான்.
சரோவின் ஆஃபீஸின் கீழே நின்றபடி சரோவுக்கு போன் செய்த ராம், அவனைக் கீழே வரச் சொன்னான். சிறிது நேரத்தில் கீழே வந்த சரோ, என்னடா எனக் கேட்க, டேய் அருணுக்கும் சிவாவுக்கும் இடையில ஏதோ பிரச்சனை போல நான் பாலவாக்கம் வீட்டிற்கு கிளம்புறேன். அருண் பேசியதே சரியில்ல ரெண்டு நாள் அங்க இருந்துட்டு வரேன் என சரோவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் ராம்.
கடவுளே சிவாவுக்கு எதுவும் ஆகி இருக்கக்கூடாது என மனதில் நினைத்துக் கொண்டான் சரோ. ஈசிஆரில் உள்ள கடற்கரையை அடைந்த அருண் ஃபோனில் நான் ரீச் ஆயிட்டேன் நீ எங்க இருக்க எனக் கேட்க, நான் உனக்கு பின்னால தான் வந்துட்டு இருக்கேன் என சொன்னவர் ஃபோனை கட் செய்தார்.
திரும்பிய அருண் அவனை ஓடிச் சென்று கட்டி அணைத்தான், ஏன்டா அவன் பண்ணதுக்கு என்னை ஏண்டா நீ இக்னோர் பண்ற என அருண் கேட்க நான் உன்னை இக்னோர் பண்ணல அருண்.
சிவா சொன்னது தான் உண்மை எனக்கு உன் மேல காதல் எல்லாம் இல்ல சிவாவை அடையனும் னு மட்டும் தான் நான் உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன். ஆனா நீ என்ன அவன்கிட்ட அறிமுகப்படுத்த கூட ரெடியா இல்லை. நேத்து அவன் நம்மளை ஒன்னா பாக்கணும்னு தான் நான் வேணும்னு கதவைத் திறந்து வச்சேன்.
என்னை அவன் ஒரு பையன் கூட பார்த்துட்டா அவனை அப்ரோச் பண்ண ஈஸியா இருக்கும் என்று நினைச்சேன். அது உன் மூலமா பண்ண நினைச்சேன் அவ்வளவுதான் மத்தபடி எனக்கு உன் மேல காதல் எல்லாம் இல்ல. ஆனா இனிமேல் எனக்கு சிவா வேணாம், ஒரு நல்ல பையனோட காதலனா நான் வாழ்ந்த இந்த மூணு மாதம் எனக்கு போதும். உன்னை காயப்படுத்தினதுக்கு என்னை மன்னித்து விடாதே என திரும்பி பார்க்காமல் சென்று விட்டான்.
கண்கள் கலங்க கடற்கரை மண்ணில் அமர்ந்து விட்டான் அருண்.
ஐசியு வின் முன்னால் அமர்ந்திருந்த ரஞ்சித்தின் முன்னால் சென்று நின்ற குமார், சீனியர் இப்போ சிவாவுக்கு எப்படி இருக்கு எனக் கேட்க, இப்போ அவனுக்கு ஓகே தான் ஆனா நாளைக்கு தான் நார்மல் வார்டு மாத்துவாங்க. நீ கொஞ்சம் இரு நான் வீட்டுக்கு போய்ட்டு குளிச்சிட்டு டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வந்துருவேன், அப்புறம் நீ கிளம்பு என்று ரஞ்சித் வீட்டிற்கு செல்ல, குமார் ஃபோனில் அர்புவிடம் ரஞ்சித் சொன்னதை எல்லாம் சொன்னான்.
பாலவாக்கத்தில் தங்கள் ரூமின் முன்னால் பைக்கை நிறுத்திய ராம் தன்னிடம் உள்ள சாவியைக் கொண்டு வீட்டைத் திறந்தான். அவன் கண் முன்னால் அலங்கோலமான வீட்டின் நிலை தென்பட்டது. அருண் ஃபோனுக்கு கால் செய்ய அருண் காலை கட் செய்தான். ஏதோ நடக்க கூடாத ஒன்று அங்கு நடந்திருக்கிறது என்பதை அறிந்தவன், அருண் சென்ற கடற்கரை நோக்கி பயணம் செய்தான்.
தூரத்தில் அருண் அமர்ந்திருப்பதைக் கண்ட ராம், தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு அவன் அருகில் சென்றான்.
ராமைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்த அருணிடம், என்னடா ஆச்சு என ராம் கேட்க, நீ எதைப் பற்றி கேட்கிற என அருண் கேட்டான்.
உனக்கும் சிவாவுக்கும் இடையில என்னடா ஆச்சு என ராம் கேட்க, அந்த துரோகியைப் பத்தி இனிமே என்கிட்ட பேசாதடா என அருண் சொல்ல, என்ன தான்டா ஆச்சு என ராம் கேட்க, என் வாழ்க்கையே போச்சுடா அவனால என்றான் அருண்.
-வருவான்…
