இரவு 8 மணி அளவில் சிவா கண்களைத் திறந்தான், அவனைச் சுற்றி குமார், அர்பு, ரஞ்சித், கவிதா என அனைவரும் அமர்ந்திருந்தனர். மெதுவாக சிவா எழுந்து உட்கார முயற்சிக்க, அருகில் இருந்த ஸ்டாண்ட் ஆட அந்த சத்தம் கேட்டு வேகமாக சென்று சிவாவைத் தூக்கி அமர வைத்தான் ரஞ்சித்.
அதைப் பார்த்த கவிதா அவனை நினைத்து சற்று கவலை அடைந்தாள். என்ன இவன்? இவனுக்கு என்ன வேணும்னு இவனுக்கே தெரியல. அந்த பிரசாத் பையன டேட் பண்றேன்னு சொல்றான். ஆனா உருக்கமான காதல் இந்த சிவா மேல இருக்குற மாதிரி தெரியுது என்ன தான் நடக்கப் போகுதோ என எண்ணியபடி நின்றாள் கவிதா.
சிவாவை அமர வைத்த ரஞ்சித் அவன் அருகில் பெட்டிலேயே உட்கார, ஹலோ சீனியர் கொஞ்ச நகருங்களே என்ற குமார் சிவாவின் தலையை வருடியபடி இப்போ ஓகேவா உனக்கு என்று கேட்டான். இப்போ ஓகே தான் என சிவா தலையசைக்க, மன்னிப்பு கேட்பதாய் இருந்தது ரஞ்சித்தின் பார்வை. பரவாயில்லை என்பதாக சிவாவும் ரஞ்சித்திற்கு பார்வையில் பதில் அளித்தான்.
இதையெல்லாம் பார்த்தபடி கவிதா, சரி சிவா நீ அடுத்த வாரம் வேலைக்கு வந்தா போதும் உடம்ப பாத்துக்கடா என்றபடி அங்கிருந்து கிளம்பினாள். சரிடா நீயும் அர்புவும் கிளம்புங்க நான் சிவாவ பாத்துக்கிறேன் என்ற ரஞ்சித்தைப் பார்த்து குமார், என்ன சீனியர் ஜூனியர் மேல கரிசனம் ரொம்பவே கூடுது என்று சிரித்தான்.
டேய் என்னதான் நான் சீனியரா இருந்தாலும் என்னோட ஜூனியர்ஸ பார்த்துக்க வேண்டியது என்னோட கடமை இல்லையா என்று சொல்லியபடி சிவாவைப் பார்த்து கண்ணடித்தான் ரஞ்சித். அது சரி, என்னமோ நல்லா இருந்தா சரி என அர்புவைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றான் குமார்.
அவர்கள் அனைவரும் சென்ற பின் தன்னுடைய பேக்கில் இருந்த டிபன் பாக்ஸை எடுத்து வெளியே வைத்தான் ரஞ்சித். இது என்ன சீனியர் என சிவா கேட்க, இதுவா நான் உனக்காக பண்ணின டின்னர் என டிபன் பாக்ஸை திறந்தான் ரஞ்சித். அதிலிருந்து இட்லி சட்னி சாம்பார் உடன் சிவாவுக்கு சாப்பிட கொடுத்தான். அவனும் தன்னால் முடியவில்லை என்றாலும் சிறிதளவு சாப்பிட்டான்.
அதன்பின் ரஞ்சித்தும் சாப்பிட்டுவிட்டு அங்கு அருகில் இருந்த பெஞ்சில் படுத்து உறங்கிப் போனான். இரவு வெகு நேரமாக உறக்கம் வராமல் சிவா நேற்றைய தினம் நடந்த நிகழ்வுகளை அசைப்போட்டபடி கடைக்கண் கண்ணீர் வடிய விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
டேய் என்ன தான்டா ஆச்சு என ராம் கேட்க, என்னோட வாழ்க்கையே போச்சுடா என்ற அருண் கதறி அழுதுவிட்டு ராமின் முன் கடற்கரையில் அமர்ந்தபடி பேசத் தொடங்கினான்.
நானும் என்னோட லவ்வர் சுதனும் நாலு வருஷம் லவ் பண்ணினோம். எங்களுக்குள்ள ஓபன் ரிலேஷன்ஷிப்ல இருக்கலாம்னு நாங்க பேசி முடிவு எடுத்த காலம் அது. சிவா எப்போதுமே இந்த மாதிரியான ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு தான் தெரிவிப்பான். அவன் கிட்ட சொல்லாம நானும் சுதனும் நம்ம ட்ரை பண்ணி பார்ப்போம்னு பண்ணினோம்.
அப்போ எனக்கு அறிமுகமானவர்தான் ஆறுமுகம. அவர நான் முன்னமே பார்த்து இருக்கேன். என்னைவிட ஆறு வயசு மூத்தவர், எங்க ஊருக்கு பக்கத்து ஊர்காரரா எனக்கு அறிமுகமானார். ரெண்டு வருஷம் கழிச்சு இந்த மாதிரியான ஓப்பன் நமக்கு செட்டாகாதுனு நானும் சுதனும் மோனோகாமஸ் ரிலேஷன்ஷிப் உள்ள வந்துட்டோம்.
இந்த விஷயம் எதுவுமே சிவாவுக்கு தெரியாதுனு நான் நெனச்சேன். சுதன் இறந்த இந்த ரெண்டு வருஷத்துல நான் நிறையவே கஷ்டப்பட்டு இருக்கேன், அது உனக்கே தெரியும்ல ராம். ஒரு எட்டு மாசத்துக்கு முன்னால எனக்கு ஆறுமுகம் மறுபடியும் மெசேஜ் பண்ணாரு. ஆனா இந்த தடவ நான் அவர அதிகமாகவே நேசிக்க ஆரம்பிச்சேன். என்னோட மனசுல இருந்த காயங்களுக்கு மருந்தாவும் என்னோட தனிமைக்கான விருந்தாவும் அவர நான் ஏத்துக்கிட்டேன்.
அப்போ சிவா அம்மாவோட இறப்புக்கு போனபோது தான் ஆறுமுகம் கல்யாணம் ஆனவர்னும், அவர் கல்யாணம் பண்ணி இருக்கிறது சிவாவோட பெரியப்பா பொண்ணுன்னும் நான் தெரிஞ்சுகிட்டேன். உடனே நான் அவர விட்டு பிரிய எடுத்த எல்லா முயற்சிகளையும் அவருடைய பாசம் மிகுந்த பேச்சு முறியடிச்சிருச்சு. என்ன பண்ணனு தெரியாம தான் உன்ன கொஞ்ச நாளைக்கு உன் ஆள் கூட போய் இருன்னு சொன்னேன்.
ஏன்னா சிவா வந்தா அவரும் நானும் உன்னோட ரூமை யூஸ் பண்ணிக்கலாம்ன்னு நான் நினைச்சேன். நீயும் நான் சொன்னதுக்காக உன் ஆளு ரூமுக்கே போயிட்ட. சிவா வந்து ரெண்டு நாள் ஆறுமுகம் வரல, நானும் பெருசா எடுத்துக்கல அதுக்கப்புறம் அவர் வந்தாரு. எப்பவும் நைட் 11 மணிக்கு வருவாரு காலையில ஆறு மணிக்கு போயிடுவாரு.
நானும் முடிஞ்ச அளவு சிவாவுக்கு தெரியாம தான் பாத்துக்கிட்டதா நினைச்சேன். சிவா போனவாரம் நான் தனியா போகலாம்னு இருக்கேன்னு சொன்னதும் எனக்கு ஒரு பக்கம் வருத்தமானாலும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சியும் கூட. வெள்ளிக்கிழமை சிவா எனக்கு கால் பண்ணி நான் இன்னைக்கு நைட்டு ஃபிரண்டு வீட்டுல இருந்துட்டு நாளைக்கு தான் வீட்டுக்கு வருவேன்னு சொன்னான்.
நான் ஹாப்பியா ஆறுமுகத்துக்கு கால் பண்ணி வர சொன்னேன், சிவா சொன்னதையும் சொன்னேன். அவரும் ஹாப்பியா வருவார்னு பார்த்தேன், ஆனா அவர் கோபப்பட்டார். என்கிட்ட, சிவாவுக்கு பயந்து பயந்து தான் நீ என்கூட வாழ போறியா அப்போ சிவா சொல்லாம உன்னால என்கூட ஒன்னா இருக்க முடியாதானு கேட்டார். நான் அவர எவ்வளவோ சமாதானப்படுத்த நெனச்சேன் ஆனா கோபப்பட்டு போயிட்டார்.
மறுநாள் சனிக்கிழமை சிவா வந்ததும் அவன் கிட்ட நான் ஒருத்தர காதலிக்கிறேன்னு சொன்னேன். என்ன விட அவன் தான் சந்தோஷப்பட்டான், யாரு என்னனு கேட்டான். அப்ப நான் அவரு கல்யாணம் ஆனவர்னு சொன்னேன். சிவாவோட முகமே மாறுச்சு, என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது, அவன் என்ன யோசிக்கிறான்னு.
ஆனா என்னால அவர் உன்னோட பெரியப்பா மருமகன்னு சொல்ல முடியல, ஏன்னா எனக்கு ஒரு நல்ல நட்ப இழந்துருவோமோனு பயமா இருந்துச்சு. சரிடா எனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்லை, ஆனா அவர் இந்த காதல்ல எவ்வளவு உறுதியா இருக்காரு? உன்ன என்னைக்கும் கைவிட மாட்டார்ல னு கேட்ட சிவா கிட்ட, கண்டிப்பா அப்படி பண்ண மாட்டார்னு நான் சொன்னேன்.
சரிடானு சொன்ன சிவா, ஐ அம் ஹாப்பி ஃபார் யூனு சொல்லிட்டு தூங்க போயிட்டான். நானும் நைட் அவர் வந்ததும் சொன்னேன். அவரு ஓகே ன்னு சொல்லிட்டு என் கூட தான் தன்னோட இரவ கழிச்சாரு. காலையில ஒரு ஏழு மணி போல நான் கண்ண முழிச்சு பார்த்தேன், ஹால்ல ஏதோ சத்தம் கேட்டுச்சு.
இனிமே இந்த பக்கம் நீங்க வராம இருந்தா உங்களுக்கு நல்லதுன்னு சிவா சொன்னத கேட்டு நான் வெளியே வந்தேன். கோபமான சிவந்த கண்களோட இனிமே நமக்குள்ள எதுவும் இல்லைன்னு சொல்லிட்டு ஆறுமுகம் போயிட்டாரு. உடனே நான் அவர நிறையவே சமாதானப்படுத்த முயற்சி பண்ணினேன், ஆனா எதுவுமே வேலைக்காகல. ரோடு வரைக்கும் போய் அவர சமாதானப்படுத்த முயற்சி பண்ணினேன்.
அவர் என்கிட்ட சிவா உன்னோட லைஃப்ல இருக்குற வரைக்கும் என் கூட மட்டும் இல்ல நீ யார் கூடவும் வாழ முடியாதுன்னு சொல்லிட்டு போயிட்டாரு என்ற அருணின் கண்ணீர் கன்னத்தை மினுங்கச் செய்து கொண்டிருந்தது.
அவருடைய அந்த வார்த்தைகள என்னோட காயப்பட்ட இதயம் ஏற்க மறுத்தாலும் மூளை அப்படியே ஏத்துக்கிச்சு. நான் கோபத்தோட வேகமா நம்ம ரூமுக்கு போனேன். அங்க காபி குடிச்சிட்டு இருந்த சிவா கையில இருந்த கிளாஸ தட்டிவிட்டேன். என்னோட வாயில வந்தபடி எல்லாம் திட்டுனேன், இனிமே என்னோட மூஞ்சிலேயே முழிக்காதன்னு சொல்லி அவன கழுத்தப் பிடிச்சு வெளிய தள்ளிட்டேன் என்ற அருணின் நிலையைக் கண்ட ராமின் கண்களும் கலங்கியது.
அருண் தன்னைப் பேசிய வார்த்தைகளை எண்ணி எண்ணி சிவாவின் கண்கள் உறங்க மறுத்தன. அவனுடைய எண்ணங்கள் அனைத்தும் அருண் தன்னை இனிமேல் மூஞ்சிலேயே முழிக்காத என்று சொன்னதைப் பற்றியே சுற்றி வந்தது.
ஆனாலும் சிவாவைப் பொறுத்தவரை அவன் அருணுக்கு தீங்கு செய்யவில்லை. அந்த பிரச்சனை நடந்த அன்று காலை 6:30 மணி அளவில் சிவா தனக்கான காபியைப் போட சமையலறையில் நின்று கொண்டிருந்தபோது தான் ஆறுமுகத்தைக் கண்டான். அவன் அருணின் அறையில் இருந்து வந்ததும் சிவா புரிந்து கொண்டான், ஆனால் அவன் அதிர்ச்சி அடையவில்லை.
ஏனென்றால் சிவாவுக்கு ஏற்கனவே தன்னுடைய பெரியப்பாவின் மருமகனைப் பற்றி நன்றாகவே தெரியும், அவரொரு காரியவாதி. தன்னுடைய காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று சிவா அறிவான். உனக்கு இங்க என்ன வேலை என சிவா ஆறுமுகத்தைப் பார்த்து கேட்க, என்னடா ஒரு அக்கா புருஷன நீ வா போனு மரியாதை இல்லாம பேசுற என்றான் ஆறுமுகம்.
மெதுவாக சிரித்தபடி ஏன்டா உனக்கெல்லாம் வேற வேலையே கிடையாதா, இன்னும் எத்தன பேரோட வாழ்க்கைய அழிக்க காத்திருக்க என்றான் சிவா. மாமாவுக்கு தேவையானது என்னன்னு உனக்கே தெரியும், அது மட்டும் தான் என்னோட டார்கெட் அதை எப்படியாவது நான் அடைவேன் என்ற ஆறுமுகம் சிவாவைப் பார்த்து சிரித்தான்.
இங்க பாரு ஆறுமுகம் எனக்கு மட்டுமில்ல என்னோட அக்கா வனிதா பெரியப்பா மகள் அதான் உன்னோட பொண்டாட்டி எல்லோருக்குமே உன்ன பத்தி நான் சொல்லிட்டேன் என்று சிவா சொன்னதும் உடனே, என்னடா சொல்ற என ஆறுமுகம் கோபத்தோடு கேட்க, ஆமா உன்னோட உண்மையான முகம் உன்னோட மனைவிக்கும் தெரியும் அவங்கள காரணம் சொல்லி நீ அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டது எங்க அக்காவுக்கும் தெரியும்.
உன்னோட உண்மை உனக்கு மட்டும்தான் இன்னும் தெரியல, அத நான் ஞாபகப்படுத்தவா என்று சிவா, தன்னுடைய உணர்வுகளை விட உறவுகள் பெரிது என இன்று வரை ஆறுமுகத்தைச் சீண்டாமல் இருந்தவன் பேசத் தொடங்கினான்.
நீ எல்லாம் சீசனுக்கு வந்துட்டு போற வெட்டுப்பூச்சி மாதிரி, எங்கேயும் ஒரு இடத்துல இருக்க மாட்ட, எல்லா இடத்திலும் வாய் வைக்கணும்னு அலையுவ, அதுதான் உன்னோட உண்மையான முகம். உன்னால ஒரே ஒருத்தர் கூட எல்லாம் வாழவே முடியாது, உன்னோட இறந்த கால வாழ்க்கையே அதற்கு சாட்சி என்ற சிவா, அந்த பட்டியல்ல என்னோட அருண கண்டிப்பா நான் வர விடமாட்டேன் என்றான்.
என்னோட நெருக்கமானவர்கள யாராவது கஷ்டப்படுத்த நெனச்சா நான் கண்டிப்பா சும்மா விடமாட்டேன். இனிமே இந்த பக்கம் வராம இருந்தா உங்களுக்கு நல்லது என்று சொன்னதும் ஆறுமுகம் சிவாவைப் பார்த்த பார்வை சிவாவை சற்று பயமுறுத்தியது என்பது உண்மை.
ஆனால் சிவா தன்னுடைய நிர்ணயங்களை எண்ணி அஞ்சுபவன் அல்ல. அதற்குள் வெளியே வந்த அருணிடம் கோபமாக பேசி ஆறுமுகம் வெளியேற, அவன் பின்னால் சென்ற அருண் திரும்பி வந்து பேசிய வார்த்தைகள் தான் சிவாவின் மனதை சுக்கு நூறாக உடைத்தது.
ஆறுமுகம் சென்ற பின் உள்ளே வந்த அருண் சிவாவின் காபி கிளாஸை தட்டி விட்டான். அப்போதுதான் தான் செய்த காரியத்தின் வீரியத்தை சிவா அறிந்தான். அவனைப் பொறுத்தவரை அருணுக்கு நல்லது செய்ததாகத்தான் நினைத்தான்.
ஆனால் ஆறுமுகம் மேலே அருண் கொண்டுள்ள அஃபெக்ஷன் பத்தி அவன் அறியாதிருந்தது அப்போது தான் அவன் அறிந்தான். ஏன்டா உன்னோட நெனப்புல நீ பெரிய நியாயவான்னு நினைச்சுட்டு இருக்கியா என அருண் கேட்க, நான் அப்படியெல்லாம் நினைக்கலையே டா என சிவா சொல்ல, அப்புறம் என்ன மயித்துக்கு டா நீ அவர்கிட்ட பேசின என்றான் அருண்.
டேய் உன்னோட நல்லதுக்கு தான் நான் அதை பண்ணுனேன் என சிவா சொல்ல, அவன் முன் கையெடுத்து கும்பிட்ட அருண், ப்ளீஸ் எனக்கு நீ எந்த நல்லதும் பண்ண வேண்டாம் சாமி, நீ பண்ணுனதே போதும் என்ற அருணிடம் அவன் எல்லாம் நீ நினைக்கிற மாதிரி அவ்வளவு நல்லவன் இல்லடா என சிவா சொல்லி முடிக்கும் முன், உனக்கு அப்படிதான்டா தெரியும்… உனக்கு அப்படி தான்டா தெரியும் உன்னோட வாழ்க்கையில உன் தரித்திரம் எதுவுமே நல்லது நடக்கல, எவனுமே நல்லவனா இல்ல, அதான் அடுத்தவங்க லைஃப்ல உனக்கு அதே மாதிரி தெரியுது.
பெத்த அப்பன், சித்தப்பா, சித்தப்பா மகன், அக்கா புருஷன், காதலிச்சவன்னு எல்லாரும் உன்ன ஏமாற்ற போயி உனக்கு யாரு மேலயும் நம்பிக்கை இல்லை. அதான் அடுத்தவங்களுக்கு நடக்கிற நல்லத உன்னால ஏத்துக்க முடியல, ஏன்னா உன்னோட இந்த கேவலமான புத்திக்கு தான் உனக்கு இதெல்லாம் நடந்திருக்கு.
அவங்க மேல தப்பு சொல்றதுக்கு முன்னால உன்ன பத்தியும் உன்னோட கெட்ட எண்ணங்கள் பத்தியும் யோசிச்சுக்கோ என அருண் சொல்ல, அதிர்ச்சியாக நின்ற சிவா, அருண் நீதான் இப்படி எல்லாம் பேசுறியா என்று கேட்க, ஆமாடா வேற ஏதாவது நல்லது பண்ணலாம்னு நினைச்சா ப்ளீஸ் என் கண்ணு முன்னாடி நிக்காம போயிடு என்றான் அருண்.
தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு அருணின் வீட்டை விட்டு வெளியேறும் முன், அருண் சுதனோட பிரிவு உன்ன ரொம்பவே பாதிச்சிருக்கு, உனக்கு இப்ப தேவை பார்ட்னர் இல்ல தெரபிஸ்ட் என சொல்லி வெளியேறினான் சிவா.
இதையெல்லாம் மருத்துவமனையில் இருந்த படி சிந்தித்த சிவாவை விட, அருண் சொல்ல சொல்ல கேட்ட ராமின் மனம் மிகவும் வேதனைக்கு உள்ளானது. ஏன்டா ஏற்கனவே செத்தவன நீயும் உன்னோட பங்குக்கு
கண்ணீரில் நனைந்த தலையணை சிவாவை சுயநினைவுக்கு கொண்டுவர, சிவா மெதுவாக திரும்பி ரஞ்சித்தைப் பார்த்தப்படி படுத்தான். பாவம் தன்னுடைய இந்த நிலைக்கு தான் காரணம் என ரஞ்சித் பயந்து இருப்பான் என எண்ணிய சிவா அவனை எண்ணி சற்று கவலையும் கொண்டான். சிவாவைப் பொறுத்தவரை ரஞ்சித் அவனுக்கு செய்திருக்கும் உதவி மிகவும் பெரியது.
பணப் பிரச்சனையினால் சிவா தனியாக இருக்க பயப்படவில்லை அவனுடைய மனப்பிரச்சினை தான் அதற்கு காரணம். மறுநாள் சிவா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். அவனை தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு சுற்றியபடியே ரஞ்சித் இருக்க, என்ன சீனியர் வீட்டுக்கு போகாம நம்ம ஏன் இப்படி சுத்திட்டு இருக்கோம் என சிவா கேட்டான்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல நாம இப்ப கிளம்பிடலாம் கொஞ்சம் வெயிட் பண்ணு என்று மருத்துவமனையில் இருந்து வந்து மூன்று மணி நேரம் கழித்து வீட்டுக்கு அழைத்து சென்றான் ரஞ்சித்.
சரோவின் ஃபோனை அட்டென்ட் செய்த ராம், டேய் சிவா இங்க இல்ல ஆனா பிரச்சனை கொஞ்சம் பெருசா தான் தெரியுது என்று சொல்ல, சிவா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகுற அளவு பெரிய பிரச்சனையா என சரோ சொல்ல, என்னடா சொல்ற என ராம் கேட்டான்.
ஆமாடா என நடந்ததைச் சொன்னான் சரோ. சரிடா நான் இப்ப அருண் கூட இருக்க வேண்டியது ரொம்ப அவசியம், கொஞ்ச நாள் போகட்டும் நான் சிவாவ பார்த்து பேசிக்கிறேன் என ராம் ஃபோனை கட் செய்தான்.
தன்னுடைய வீட்டின் பார்க்கிங்கிற்கு வந்ததும் ரஞ்சித் சிவாவின் கண்களை மூடியபடி தங்களுடைய ஃபிளாட் முன்னால் கொண்டு சென்று அவனை நிறுத்தி கதவைத் திறந்தபடி சிவாவின் கண்களைத் திறக்கச் சொன்னான்.
– வருவான்…
