அழைப்பு மணி சத்தம் கேட்டு சிவா கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தான். இவ்வளவு நேரம் கண்டது கனவு என்றதும் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டு கதவைத் திறந்தான் சிவா.

 

அவன் முன்னால் தன்னையும் தன்னுடைய காதலையும் நிராகரித்த ரகு நிற்கிறான். உருகி உருகி காதலித்த காதலன் நிற்கிறான். அவனின் உணர்வுகள் அவனை பாடாய்ப்படுத்தின. ஒன்று அவனைக் கட்டி அணைத்து உனக்குள் உள்ள ஏக்கங்களையும், அவன் பிரிவால் நீ பெற்ற வருத்தத்தையும் சொல்லு என்றது.

 

மற்றொரு உணர்வு அவனுடைய கன்னங்களை சிவக்கும் அளவு அடி என்றது. ஆனால் சிவா தேர்ந்தெடுத்தது மூன்றாவது ஒன்றை, ரகுவின் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியை போக்குவதற்கான சூழ்நிலையை உருவாக்க எண்ணினான்.

 

அங்கு நிலவிய அமைதியை உடைத்து உள்ளே வா என சிவா ரகுவை அழைத்தான். ரகு உள்ளே சென்றதும் கதவைத் தாழிட்ட சிவா ரகுவின் எதிரில் உள்ள சோஃபாவில் சென்று அமர்ந்தான். தன்னுடைய கைகளைப் பிசைந்தபடி தரையையே பார்த்துக் கொண்டிருந்தான் ரகு. அவனை தன் பக்கமாக திருப்ப எண்ணிய சிவா, எப்படி இருக்க ரகு எனக் கேட்டான்.

 

உடனே, நான் நல்லா இருக்கேன் என்றான் ரகு. அதையும் கீழே பார்த்துக்கொண்டே கூறினான். ஏன் என்னை பார்த்து பேசமாட்டியா ரகு என்ன சிவா கேட்க, நா அவ்வளவு தகுதியானவனா என்ன நினைக்கல என ரகு பதில் அளித்தான். ஆனால் கல்யாணம் பண்ண தகுதியானவன்னு உன்னை நீயே நினைச்சுகிட்ட அப்படித்தானே எனக் கேட்டான் சிவா. அவனை தலை நிமிர்ந்து பார்த்த ரகு, ஒருத்தவங்களோட பாதுகாவலனா மாற என்ன தகுதி தேவையோ அந்த தகுதி எனக்கு இருக்குன்னு நான் நினைக்கிறேன் என்றான் ரகு.

 

கலகலவென சிரித்தான் சிவா. அது ரகுவுக்கு உச்சகட்ட அவமானமாக தெரிந்தாலும் அவன் அதை வெளிக்காட்டவில்லை. சிவா பேசத் தொடங்கினான். உனக்குள்ள உள்ள ஆணாதிக்க எண்ணம் இப்படி எல்லாம் பேச வைக்குது. உன்னை சொல்லி குத்தம் இல்லை, அப்பன் புத்தி தான உனக்கு இருக்கும் என்றான் சிவா.

 

ஆனால் ரகுவின் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. சிவா நன்றாக புரிந்து கொண்டான், ரகு எந்த நிலைமையில் இருக்கிறான் என்பதை. உனக்கு ஏதாவது என்கிட்ட கேட்கணுமா ரகு என சிவா கேட்க, ஆமா என்பதாக தலையசைத்து பதில் அளித்தான் ரகு.

 

சரி கேளு என அவன் முன் கைகட்டி சோஃபாவில் சாய்ந்தான் சிவா. நீ எப்படி இருக்க என ரகு சிவாவிடம் கேட்டான். உண்மைய சொல்லணுமா பொய் சொல்லணுமா எனக் கேட்டான் சிவா. உன்னோட இஷ்டம் என்ற ரகுவின் அருகில் சென்ற சிவா பேசத் தொடங்கினான்.

 

என் அம்மாவோட கடைசி ஊர்வலத்துல நான் மயானத்துக்கு போயிட்டு இருந்தப்போ உன்ன கல்யாண மாலையோடு பார்த்தேன். அப்போ என்னோட மனசுல ஏற்பட்ட வலி இருக்குல்ல, யாரோ என்னோட மார்பு கூட்டுலருந்து இதயத்த வெளிய பிச்சி எடுத்து கசக்கி புழியிற மாதிரி ஒரு வலி ஏற்பட்டுச்சு.

 

ஆனா என்னோட உணர்வுகள என்னால அப்ப வெளிப்படுத்த முடியல, கொஞ்ச நாள் கழிச்சு நான் நிதானமா யோசிச்சு பார்த்தேன். எனக்கு உன் மேல கோபம் எல்லாம் இல்ல, மிகப்பெரிய வருத்தம் மட்டும்தான் இருக்கு. அது எனக்கு நீ ரொம்பவே தேவப்பட்ட இடங்கள்ல நீ என் கூட இல்லாம போனது தான்.

 

ஆனா அதுவும் என்னுடைய எதிர்பார்ப்பு தானே தவிர உன்னோட தப்பா நான் கன்சிடர் பண்ணல. அதனால என்னை பத்தி யோசிக்கிறத விட்டுட்டு உன்னோட மனைவியோடயும் உனக்கு பிறக்கப் போற உன் குழந்தைகளோடயும் உன் வாழ்க்கைய பாருடா என்றான் சிவா.

 

உடனே, நீ எப்படி இருக்கேன்னு நான் கேட்ட கேள்விக்கு உன்கிட்ட இருந்து பதிலே வரலையே என்றான் ரகு. நான் எப்படி இருக்கேன்னு இப்ப நான் இருக்கிற நிலைமையில் உன் கிட்ட சொன்னா உன்னோட வாழ்க்கைய நீ வாழ முடியும்னு நினைக்கிறியா ரகு என்றான் சிவா.

 

ரகுவின் கன்னங்களில் கண்ணீர் முத்தமிட்டது. உன்னால என்னை மன்னிக்கவும் மறக்கவும் முடியுமா சிவா எனக் கேட்டான் ரகு. இந்த கேள்வி சிவா எதிர்பார்த்தது தான், ஆனால் ரகுவைக் காயப்படுத்தாமல் பதில் அளிக்க வேண்டும் என்பதால் சிவா சிறிது மௌனத்திற்கு பின் பேசத் தொடங்கினான். ரகு.. வாழ்க்கையில நான் கத்துக்கிட்டத சொல்றேன், லவ் வேற ரிலேஷன்ஷிப் வேற. காதலிக்கிறவங்க கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கணும்னு அவசியம் இல்ல, ஆனா ரிலேஷன்ஷிப்ல இருக்குறவங்கள காதலிக்க கத்துக்கிட்டா போதும்.

 

நான் உன்னை காதலிச்சது உண்மை, அதை என்னால மறக்க முடியாது என்பதும் உண்மை, ஆனா என்னால உன்னை மன்னிக்க முடியும். நான் இத உன்னை சமாதானப்படுத்த சொல்றதா நினைக்க வேண்டாம். மாரிமுத்துவோட குழந்தை அவளோட வயித்துல வளருதுன்னு தெரிஞ்சும் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு, நீ சிவலட்சுமி மேல வச்சிருந்த காதல் தான் காரணம். நீ ஆணாதிக்கவாதியா இல்லாம உன் காதலுக்கு மரியாதை கொடுத்தது தான் நான் உன்னை மன்னிக்க முதல் காரணம்.

 

நீ என் அம்மாவ பத்தி பேசும்போது உன்னோட நாக்க இழுத்து வச்சு அறுக்கணும்னு தோணுச்சு. ஆனா உன்னோட அப்பாவோட உடல்நலம் தான் அதுக்கு காரணம்னு தெரிஞ்ச அப்புறம் உன்னை மன்னிக்க இரண்டாவது காரணம் கிடைச்சது. நாளைக்கு பிறக்க போற சிவலட்சுமியோட குழந்தைகள் எந்தவித கேலி கிண்டகளுக்கும் உட்பட மாட்டாங்கன்னு நினைக்கும் போது உன்னை ஏன் மன்னிக்க கூடாதுன்னு மூணாவதா ஒரு காரணம் கிடைச்சது. அதையெல்லாம் தாண்டி நான் உன்னை காதலிச்சுருக்கேன். இதை விட வேற என்ன காரணம் வேணும் ரகு உன்னை மன்னிக்க என்ற சிவா திரும்பி பார்த்தான்.

 

சிவாவின் காலில் விழுந்து அழுதான் ரகு. அந்த அழுகையில் சத்தம் இல்லை, புலம்பல் இல்லை. அந்த அழுகையில் மனதார தன்னுடைய தவறுகளை உணர்ந்த ஒரு ஆணின் கண்ணீர் துளிகள் மட்டுமே சிவாவின் பாதங்களை தீண்டின. ரகுவை விட்டு விலகிய சிவா, இப்ப நீ சொல்லு ரகு நீ எப்படி இருக்க என்று கேட்டான். நான் நல்லா இருக்கேன். சிவலட்சுமியையும் குழந்தைகளையும் பார்த்துக்கணும், அதை தவிர வேற எதை பத்தியும் யோசிக்கிறது இல்லை. நீ என்னை மன்னிச்சுட்டன்னு தெரிஞ்ச பிறகு இன்னும் கொஞ்சம் எனக்கு நிம்மதியா இருக்கு என ரகு சொன்னான்.

 

அதுதான் உனக்கும் உன்னோட மனைவிக்கும் உன்னோட குழந்தைகளுக்கும் நல்லது டா என்றான் சிவா. சிவலட்சுமி கோவிலிலிருந்து ஆட்டோவில் வந்து கொண்டிருந்தாள்.

 

ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு பேரும் பார்த்து இருக்காங்க, எப்படியும் தனிமையில் இருந்திருப்பாங்க என அவள் எண்ணினாலும் அவளுடைய கணவன் இன்னொருவனோடு தனிமையில் இருந்து விடுவானோ என்ற கவலையும் அவளுடைய எண்ணவோட்டங்களுக்கிடையே ஓடிக் கொண்டு தான் இருந்தது.

 

ஆனாலும் தன்னுடைய எண்ணங்களை புறந்தள்ளி, சிவா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு சிவலட்சுமி வீட்டுக்கு சென்று கதவைத் தட்டினாள். சட்டை இல்லாமல் வியர்த்த உடலோடு ரகு கதவைத் திறந்தான், தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டு வீட்டின் உள்ளே வந்தாள் சிவலட்சுமி. அவளுடைய வருத்தத்தை மறைத்து பேசத் தொடங்கினாள். என்னடா உன்னோட லவ்வரை பார்த்ததுல சந்தோஷமா என கேட்டாள் சிவலட்சுமி.

 

ம்ம்ம்ம்…. என்பதை மட்டுமே பதிலாக அளித்த ரகு தன்னுடைய அறைக்கு சென்று கதவைத் தாழிட்டான். தன்னுடைய அறைக்கு சென்ற சிவலட்சுமியின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள். ரகுவின் அறையின் முன்னால் சென்றவள், தட்டலாமா வேண்டாமா என சிந்தித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

 

பத்து நிமிட காத்திருப்புக்கு பின் கதவைத் தட்டினாள். தலையைத் துவட்டி கொண்டே ரகு கதவைத் திறந்தான். என்னடி என ரகு கேட்க, சாப்பிட வாடா என சொல்லிவிட்டு உணவு மேசையில் சென்று அமர்ந்தாள் சிவலட்சுமி.

 

ரகு வர, அவனுக்கு பரிமாறியவள் 10 நிமிடமாக காத்திருந்து விட்டு, டேய் அவன் எங்கடா எனக் கேட்டாள். எவன் என ரகு திருப்பி கேட்க, எவனா டேய் சிவாவை எங்க என சிவலட்சுமி கேட்டாள். அவன் இங்க இல்லையே நான் வந்த அரை மணி நேரத்துலயே அவன் போயிட்டான் என்றான் ரகு.

 

என்னடா சொல்ற அவனை ஏன் போக விட்ட என சிவலட்சுமி கேட்க, நான் அவனை ஏன் தடுக்கணும் அவனுக்கும் எனக்கும் என்ன இருக்கு என்றான் ரகு. என்னடா இப்படி பேசுற என சிவலட்சுமி கேட்க, நான் சரியா தான் பேசுறேன் சிவலட்சுமி அவன் என்னோட பழைய காதல் அவ்வளவு தான். நான் அதை தாண்டி மனைவி குழந்தைங்கன்னு அடுத்த கட்டத்துக்கு வந்துட்டேன். இனிமேலும் அந்த பழைய காதல்லயே தேங்கி நின்னா அது எனக்கும் சரியாகாது, அது அவனுக்கும் சரியாகாது என்றான் ரகு.

 

அப்போ அவன் கிட்ட நீ எதுவும் பேசலையா என்றாள் சிவலட்சுமி. பேசினேன், மன்னிப்பு கேட்டேன், சரின்னு மன்னிச்சிட்டான் அவன் என்று ரகு கூற, எனக்கு புரியல என்றாள் சிவலட்சுமி. உனக்கு புரியுற மாதிரி சொல்றேன் கேளு, நாம காதலிக்கிறவங்களோட ரிலேஷன்ஷிப்ல இருக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை, நாம ரிலேஷன்ஷிப்ல இருக்குறவங்கள காதலிக்க கத்துக்குறது தான் முக்கியம் என்றான் ரகு.

 

அந்த வார்த்தை நிச்சயம் சிவலட்சுமியை சற்று மகிழ்ச்சியுற செய்தது தான். ஆனால் அப்போதைக்கு வெளி காட்டாமல் அவள் தன்னுடைய அறையில் சென்று படுத்தாள். அடுத்த நாள் காலையில் 10 மணியளவில் சிவா மற்றும் சில பெண்களின் சத்தம் கேட்டு கண்விழித்தாள் சிவலட்சுமி.

 

மெதுவாக தன்னுடைய கட்டில் மெத்தையில் எழுந்து அமர்ந்தவள், அங்கிருந்த குரல்களை எல்லாம் யார் என கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தினாள். மெதுவாக தன்னுடைய வயிற்றைப் பிடித்துக் கொண்டு எழுந்தவள், தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

 

அவள் முன்னால் சில சொந்தங்களோடு ரகுவின் அம்மா, சிவாவின் அக்கா வனிதா என எல்லோரும் அமர்ந்திருந்தனர். அவளால் அவளுடைய அழுகையை அடக்க முடியவில்லை. அத்தை என உடைந்த குரலில் அவள் அழைக்க அங்கிருந்த அனைவரின் பார்வையும் சிவலட்சுமியின் மீது திரும்பியது.

 

தங்கோம் என அவள் அருகில் சென்ற ரகுவின் அம்மா, அவளை கட்டி அணைத்தார். அனைவரும் அவளிடம் நலம் விசாரிக்க அங்கிருந்த சோஃபாவில் அவள் அமர்ந்தாள். அப்போது, சரி நீங்க பேசிட்டு இருங்க என வனிதாவும் சிவாவின் பெரியப்பா மகளும் கிச்சனுக்குள் வேலை செய்து கொண்டிருந்த சிவாவின் அருகில் சென்றனர்.

 

அப்போது ரகுவைத் தேடினாள் சிவலட்சுமி. யார தேடுற என ரகுவின் அம்மா கேட்க ரகுவ தான் தேடுறேன் என சிவலட்சுமி சொன்னாள். அவன் கடைக்கு கொஞ்சம் பொருள் வாங்க வெளிய போய் இருக்கான் அவன் அக்காவோட என்றார் ரகுவின் அம்மா. மதினியும் வந்திருக்காளா என சிவலட்சுமி ஆச்சரியத்தோடு கேட்க, ஆமா அவளோட புருஷன் போக சொல்லிட்டாவ என ரகுவின் அம்மா சொன்ன சிறிது நேரத்தில் ரகுவும் அவனுடைய அக்காவும் வந்து சேர்ந்தனர்.

 

ரகு, சிவா சொல்லிய பொருட்களை அவனிடம் கொடுக்க கிச்சனுக்குள் சென்றான். அவன் கொடுத்த பொருட்களை வாங்கிய சிவா, பியூட்டிஷன் வந்துட்டாங்க அக்காவ போக சொல்லு என்றான். சரியென சிவலட்சுமியிடம் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் வந்த ரகு ஏதாவது ஹெல்ப் வேணுமா? என கேட்டான்.

 

உடனே அருகில் இருந்த வனிதா, ஹெல்ப் எல்லாம் வேண்டாம் கொழுந்தப்பிள்ளை ஒரே ஒரு கேள்விக்கு பதில் தான் வேணும் என்றாள். என்ன மதினி கேளுங்க என ரகு சொல்ல, உங்க கல்யாணம் முடிஞ்சு அஞ்சு மாசம் தான் ஆகுது ஆனா சிவலட்சுமி ஏழு மாசம் எப்படி மாசமா இருக்கா என கேட்க, சிவா சற்று சங்கடத்தோடு ரகுவைப் பார்க்க, சற்றும் தயங்காமல் ரகு, உங்க தங்கச்சிக்கு அவ்ளோ அவசரம் மதினி நான் என்ன பண்ண என்று அங்கிருந்து நகர, என் கொழுந்தபிள்ளைக்கு வெட்கம் அள்ளுது என்றாள் வனிதா. சிவா புரிந்து கொண்டான், ரகு சிவலட்சுமியை முழுமையாக ஏற்றுக் கொண்டான் என்பதை. உடனே வனிதாவிடம், உனக்கு நக்கல் கொஞ்சம் அதிகம் தான் என்று சிவா சொல்ல அனைவரும் சிரித்தனர்.

 

நல்லபடியாக சிவலட்சுமிக்கு வளைகாப்பு நடத்தி முடித்து அன்றைய இரவு அனைவரையும் பேருந்தில் ஏற்றி வழியனுப்பினர் சிவாவும் ரகுவும். அவர்கள் வீட்டுக்கு வரும்போது ரகுவின் பைக்கில் பின்னால் சிவா அமர்ந்தான். தேங்க்ஸ் டா என ரகு சொல்ல எதுக்கு தேங்க்ஸ்லாம் என்னோட அக்காவுக்கு நான் பண்ண வேண்டிய கடமையை தான பண்ணியிருக்கேன் என சிவா சொன்னான்.

 

பேருந்து நிலையம் முதல் ரகுவின் வீடு வரை நிலவிய மௌனம் சொன்னது அவர்கள் இருவருக்கும் இடையேயான காதலின் முறிவு பற்றி. வீட்டிற்கு வந்ததும் சிவாவும் சிவலட்சுமியும் அன்று இரவு வெகு நேரம் பேசிவிட்டு உறங்கினர்.

 

அடுத்த நாள் காலை கவிதா வந்தாள். சிவலட்சுமி கவிதாவிடம் தன்னுடைய வேலையை விடுவதாகவும் இப்ப பேப்பர் போட்டா குழந்தை பிறக்கறதுக்குள்ள கரெக்ட்டா இருக்கும் என்றும் சொன்னாள். ஓகே என அங்கிருந்து சிவா, கவிதா மற்றும் பிரபு கிளம்பினர்.

 

அன்று இரவு சிவலட்சுமியோடு நடக்க சென்று இருந்தான் ரகு. என்னடா சிவா உனக்கு வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியா என சிவலட்சுமி கேட்டாள். நீ வேணும்னு முடிவு பண்ணிட்டேன் என்றான் ரகு. பேருந்தில் அமர்ந்திருந்த சிவாவின் கண்ணில் கண்ணீர் மட்டும் காரணம் சொல்லாமல் வடிந்து கொண்டிருந்தது.

 

மறுநாள் காலையில் சென்னையில் இறங்கியதும் கவிதா, சிவா நாளைக்கு நீ வேலைக்கு வந்தா போதும் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். சரியென மெட்ரோ மூலமாக தங்களுடைய வீட்டை அடைந்தான் சிவா.

 

சிவா அழைப்பு மணியை அடிக்க உள்ளாடையோடு வந்து கதவைத் திறந்தான் பிரசாத். சற்று முகசுளிப்போடு நீ யாரு என சிவா கேட்க, அத நான் கேக்கணும் நீ யாருடா என பிரசாத் கேட்டான்.

 

டேய் ட்ரெஸ்ஸ போட்டுட்டு போய் கதவை திறயேன் டா என பிரசாத்தின் பின்னால் வந்து நின்றான் ரஞ்சித்.

 

 

-வருவான்…

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன