அவன் அப்படி தான்

கல்லூரியின் கடைசி வகுப்பு நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் தன் திறமையை முழுவதுமாக கொட்டித்தீர்த்துக் கொண்டிருக்க சிவாவின் கண்கள் மட்டும் கடிகாரத்தையும் கரும்பலகையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தன.

அந்த கண்களில் தவிப்பு தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது, சிவாவின் இந்த எப்போதும் இல்லாத செய்கை அமைதியின் அரவணைப்பில் இருந்த அந்த வகுப்பறையில் சிவாவின் அருகில் இருந்த குமாருக்கு மட்டுமே குறிப்பு கொடுத்துக் கொண்டிருந்தது.

கடைசி மணி அடித்தது தான் தாமதம், தன்னுடைய நோட்டை பையினுள் வைத்த சிவா டேபிளில் கையை வைத்து ஒரு தாண்டு தாண்டி வெளிவந்தான்.

அந்த செயல் குமாரின் கையில் இருந்த பேனாவை அவனுடைய நோட்டில் கோலமிட செய்தது.  டேய் குரங்கு பயலே என குமார் கத்த டேய் சாரிடா சாரி என ஆசிரியரை கூட கவனிக்காமல் வேகமாக ஓடினான் சிவா.

என்னாச்சு இவனுக்கு என ஆசிரியர் கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் அவங்க ஊர்ல கோவில் கொடை அதான் பஸ் பிடிக்க ஓடுறான் என சுடலை சொல்ல படிப்பை தவிர எல்லாத்தையும் கரெக்டா செய்யுங்க என ஆசிரியருக்கே உண்டான சலிப்போடு சொல்லி சென்றார் ஆசிரியர்.

இதை எதையுமே கண்டு கொள்ளாமல் தன்னுடைய இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான் சிவா.

மணி 3:50 ஐ கடந்து கொண்டிருந்தது தன்னுடைய கைக்கடிகாரத்தையும் பஸ் வரும் திசையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.
அப்போது அவன் பின்னாலிருந்து அவனுடைய தலையில் தட்டியபடி டேய் எங்க கிளம்பிட்ட என NCC சீனியர் மாரிமுத்து கேட்க, அண்ணா இன்னைக்கு எங்க ஊர்ல கோவில் கொடை அதான் சீக்கிரம் போகணும் என சிவா சொல்ல, உங்க ஊர்ல நாளைக்கு தானே கொடை என மாரிமுத்து கேட்க, அதானே எங்க ஊருக்கு மாப்பிள்ளை ஆகப்போறவருக்கு தெரியாம போகுமா என சிவா சொன்னான்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ஆனா உங்க ஊரு பொண்ணு தான் கண்டுக்கவே மாட்டேங்குது என மாரிமுத்து சொல்ல, அது சரி பார்க்க பயப்படுற மாதிரி இருந்தா எந்த பொண்ணு தான் பக்கத்துல வரும் என சிவா கிண்டல் பண்ண, ஏண்டா நான் பார்க்க பயப்படுத்தற மாதிரியா இருக்கேன் என மாரிமுத்து கேட்டான்.

அப்படி சொல்ல முடியாது கொஞ்சம் பயங்கரமா இருக்கீங்க என சிவா சொல்ல அவர்கள் நிற்கும் இடத்தில் இருந்து 10 அடி தூரத்தில் இரண்டு மூன்று பெண் பிள்ளைகள் வந்து நின்றனர்.

அதில் ஒருத்தி தான் சிவலட்சுமி அவள் வந்ததும் ஏய் சிவா நல்லா இருக்கியாடா என மாரிமுத்து கேட்க என்ன கரிசனம் ரொம்ப அதிகமா இருக்கே என பக்கத்தில் பார்த்த சிவா புரிந்து கொண்டான்.  நீ நடத்து ராசா என்றபடி வந்த பஸ்ஸில் ஏறினான் சிவா, அதே பஸ்ஸில் சிவலட்சுமியும் ஏற டேய் சிவா பார்த்து பத்திரமா போடா என மாரிமுத்து கத்த சரி சரி என உள்ள ஏறி சென்றான் சிவா.

மாரிமுத்து கையசைத்து டாடா சொல்ல இது வேறயா என்றபடி சிவலட்சுமியின் அருகில் இருந்த சீட்டில் சென்று அமர்ந்தான் சிவா, உட்கார்ந்தவனின் தொடையை திருகியபடி உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் அவன் இருக்கும் போது பஸ் ஸ்டாண்ட் பக்கம் வராதன்னு என சிவலட்சுமி சொல்ல, சாரி அக்கா எப்பவும் டைப் ரைட்டிங் கிளாஸ் போயிட்டு லேட்டா தான் வருவேன் இன்னிக்கு என்னோட சூழ்நிலை அப்படி, அதான் என சிவா சொல்லவும் என்னடா அப்படி சூழ்நிலை உனக்கு? என சிவலட்சுமி கேட்டாள்.

அது வந்து……. அது வந்து…….. என சிவா இழுக்க என்ன “அவன்” வரானா என சிவலட்சுமி கேட்க ஆமா என்ற சிவாவிடம், ஏண்டா அவன் என்னோட மாமா பையன் எனக்கே தெரியாது உனக்கு எப்படிடா என சிவலட்சுமி கேட்க அக்கா உனக்கு காதல்னா என்னனு தெரியுமா என கேட்டான் சிவா.

எப்பா சாமி எனக்கு தெரியவே வேண்டாம் என சிவலட்சுமி சொல்ல, நான் சொல்லுவேன் என்ற சிவாவை பார்த்து டேய் செருப்பு பிஞ்சிடும் இதோட 135 ஆவது தடவையா “அவனை” பார்த்த அந்த முதல் தடவை பத்தி நீ சொல்றது.

உன் காதலால என் காதுல இருந்து ரத்தம் வருதுடா என்றாள் சிவலட்சுமி.
ஓகே ஒரு நல்ல காதல் கதையை மிஸ் பண்ற நீ, என சிவா சொல்ல எப்பா நீயே வச்சுக்க உன் காதல் கதையை என சிவலட்சுமி சிவாவின் முன்னால் கையெடுத்து கும்பிட்டாள், உனக்கு பொறாமை உன்னை விட நான் நல்லா காதலிக்கிறேன்னு என சிவா
சொல்லி முறைத்தான்.

டேய் இது நிறைவேறவே நிறைவேறாதன்னு தெரிஞ்சும் ஏன்டா என சிவலட்சுமி கேட்க அக்கா நம்ம ஒருத்தங்களை எவ்வளவு நேசிக்கணும் தெரியுமா? இந்த பிரபஞ்சமே அவங்கள நம்ம கூட சேர்த்து வைக்க ஒன்னு சேரனும் என சிவா சொல்ல, ஆனா இந்த வாய் மட்டும் இல்லை உன்னை ஒரு நாய் கூட மதிக்காதுடா என்ற சிவலட்சுமி எந்தி இறங்கனும் என சொல்ல
ஏன் இங்கேயே இறங்குற என சிவா கேட்க இது நாலு மணி பஸ்டா நம்ம ஊருக்குள்ள போகாதில்ல அதான் என்றதும் அவளோடு இறங்கினான் சிவா.

ஏக்கா நான் ஒன்னு கேட்கவா என சிவா சிவாலட்சுமியிடம் கேட்க “அவனைத்” தவிர வேறு எதைப் பத்தினாலும் கேளு என்றவள் அவனோடு நடக்க தொடங்கினாள்.
எனக்கு பசங்க மேல ஈர்ப்பு இருக்குன்னு நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னப்போ அதுல இருந்த பசங்க என்னை ட்ரை பண்ணாங்க, கிளாஸ்ல இருந்த பொண்ணுங்க கிண்டல் கேலி பண்ணாங்க ஆனா உனக்கு மட்டும் ஏன் நான் வித்தியாசமா தெரியல என கேட்டான் சிவா.

ஏன்னா என்னால காதலை புரிஞ்சுக்க முடியும் ஒடுக்குமுறையையும், அதிகாரத்துக்கு அடிபணிவதையும் அனுபவிச்சவங்களுக்கு தான் அது எவ்வளவு கொடூரமானது என்று தெரியும் என சிவலட்சுமி சொல்ல
சரி அக்கா இன்னொரு கேள்வி என சிவா கேட்க, முடியாது என சிவலட்சுமி சொன்னாள்.

என்ன நீ நான் கேக்குறது என்னன்னு தெரியறதுக்கு முன்னால இப்படி சொல்ற என சிவா சொல்ல
இங்க பாரு சாவடிச்சிருவேன் நீ என்ன கேட்பேன்னு எனக்கு தெரியும் என சிவ லட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும் போது டிவிஎஸ் எக்ஸ்எல் ஒன்றில் வந்த பெண்ணொருத்தி வா சிவா நான் உன்னை கூட்டிட்டு போறேன் என சிவலட்சுமியை ஏற்றிக்கொள்ள
டாட்டா தனியா உன் காதலை பற்றி கனவு கண்டுட்டே வா என சன்னமான குரலில் சொன்னபடி சிவலட்சுமி அந்த பெண்ணோடு ஏறிச் சென்று விட்டாள்.

சிவா “அவனை” முதன் முதலாக மூன்று வருடங்களுக்கு முன்னால் அனைத்து கல்லூரிகளுக்கான கலை நிகழ்ச்சி போட்டி ஒன்றில் தான் கண்டான்.  வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்துக் கொண்டிருந்தான் “அவன்”, இல்லை இல்லை வாழ்ந்து காட்டிக்கொண்டு இருந்தான்.

அவனுடைய உடையும் அதை தாங்கிய உடல் அசைவும் சிவாவை மெய்மறக்கச் செய்து கொண்டிருந்தன , அவன் வசனங்களைப் பேசும் போது சிவாவின் தேகத்தின் மயிர்கள் உச்சி நோக்கி எழுந்தன, என்றும் இல்லாமல் அன்று சிவாவின் முகம் சிவந்து கொண்டிருந்தது.

ஆண்மையின் ஆதி இலக்கணமே அவன் தான் என சிவா அன்று தான் தெரிந்து கொண்டான்.  சண்டைக் காட்சிகளில் வீழ்த்தப்பட்டோர் எதிரிகள் மட்டுமல்லர் சிவாவும் தான்.
அன்று சிவா, தன்னுடைய கல்லூரியின் சார்பில் சீவக சிந்தாமணியின் சீவகனாக நடிக்க மேடைக்கு சென்றான்.

முன்பு கண்ட அவனை மட்டுமே தேடிக் கொண்டிருந்தன சிவாவின் கண்கள் சிவாவின் நாடகம் தொடங்கியது, ஆனால் சிவாவால் “அவனைக்” காணாமல் நாடகத்தில் கவனம் செலுத்திட இயலவில்லை.
முக்கிய கதாபாத்திரமே சொதப்பியதால் மாபெரும் தோல்வியை சந்தித்தது சிவாவின் கல்லூரி.

சிவா தூத்துக்குடி வ உ சி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவன் பிராக்டிஸ்ல் அவனுடைய நேர்த்தியைக் கண்டு இந்த வருடமும் தங்களுக்கு தான் முதல் பரிசு என எண்ணிய கல்லூரியின் நினைவில் மண்ணை அள்ளி எறிந்தாலும் தன்னுடைய மனதில் சிவா “அவனுடைய” நினைவை நிலைநிறுத்திக் கொண்டான்.

சிவாவின் சிந்தனை முதல் நிந்தனை வரை அவனே நிறைந்து போனான், டேய் எங்கடா அங்கிட்டு போற என்ற குரல் கேட்டு திரும்பிய சிவா சாரிம்மா ஏதோ நினைச்சுட்டே போயிட்டேன் என்றபடி தன்னுடைய வீட்டிற்குள் சென்றான்.

என்னமோ இப்ப எல்லாம் வர வர நீ சரியில்ல என்றபடி அவன் பின்னால் வீட்டிற்குள் சென்றார் சிவாவின் அம்மா, வேகமாக தன்னுடைய அறைக்கு சென்ற சிவா பேக்கை கழட்டிப் போட்டான் கட்டிலில் படுத்தவன் இன்னைக்கு என்ன டிரஸ் போடலாம் என சிந்தித்துக் கொண்டு இருக்க டேய் சிவா சிவா என்றபடி உள்ளே வந்தான் அருண்.

என்னடா என கட்டிலில் இருந்து எழுந்த சிவா கேட்க, டேய் சீக்கிரம் கிளம்பு அவங்க எல்லாம் வல்லநாடு தாண்டிட்டாங்களாம் என்றான் அருண், என்னடா சொல்ற என வேகமாக தயாராகச் சென்றான் சிவா.

அது சிவாவின் ஊர் அம்மன் கோவில் கொடை தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் குமாரகிரி பஞ்சாயத்துக்குட்பட்ட சிற்பாடு கிராமத்தைச் சேர்ந்தவன் சிவா.
அந்த ஊர் அம்மன் கோவில் கொடைக்கு முதல் நாள் சங்கமம், பாபநாசம், ராமேஸ்வரம் என்று மூன்று புனித ஸ்தலங்களில் இருந்து தீர்த்தம் கோவில் கொடைக்கு முதல் நாள் எடுத்துவரப்பட்டு ஊர் சுற்றி அம்மன் கோவிலில் கொண்டு சேர்க்கப்படும் அதை காணத்தான் அருண் சிவாவை அழைக்கிறான்.

ஆனால் சிவாவோ “அவனைக்” காண செல்கிறான் வேகமாக கிளம்பியவன் ப்ளூ கலர் டி-ஷர்ட்டும் வெள்ளை கலர் கட்டம் போட்ட சாரத்தையும் (லுங்கி) கட்டிக்கொண்டு வெளியே வர என்னல டிப் டாப் ஆக வர காரணம் யாரு உங்க ஆளா என அருண் கேட்க மூடிட்டு வரியா என அருணோடு கிளம்பினான் சிவா.

அப்போது டேய் சிவா என அவனுடைய அம்மா கூப்பிட எம்மோ நான் தீர்த்தம் பார்க்க போறேன் என கிளம்பினான் சிவா, இந்த காப்பிய குடிச்சிட்டு போயேன் என அவன் அம்மா சத்தமிட எனக்கு வேண்டாம் என்ற படி சிவா சென்றான்.

அவர்கள் ஊருக்கு வெளியே உள்ள குளத்தாங்கறையில், மூன்று இடங்களில் இருந்து தீர்த்தம் எடுக்கப் போனவர்கள் வந்து கூடி அந்த தீர்த்தக் குடங்களுக்கு பூஜை செய்து தலையில் சுமந்து ஊர் சுற்றி செல்வார்கள்.

அந்த இடத்திற்கு சிவாவும் அருணும் செல்ல சிவாவின் கண்கள் அங்கும் இங்கும் என அனைவரையும் வேகமாக அலசின “அவனை” மட்டும் அதில் காணவில்லை அந்தத் தவிப்பு சிவாவின் மனதை பாரமாக்கியது என்னடே “அவனை” மட்டும் காணோம் என அருணிடம் புலம்பித் தீர்த்தான் சிவா.

டேய் கிடைச்ச மெசேஜ் படி “அவன்” வந்திருக்கனும், வெயிட் பண்ணு என அங்கும் இங்கும் சுற்றி பார்த்துவிட்டு மண்டையா உங்க அண்ணன் எங்கல என ஒரு பையனிடம் அருண் கேட்க முனைல டீ குடிக்கப் போயிருக்கான் என்று அந்த பையன் சொன்னான்.

டீ குடிக்க போயிருக்கானாம் வெயிட் பண்ணுல வந்துருவான் என அருண் சொல்ல அருணின் தோளைப் பிடித்தபடி எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா,
அப்போது தொலைவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக “அவன்” சிவாவின் கண்களில் தென்பட்டான்

ஆம் அவனே தான்

சூரியனின் செந்நிற கதிர்கள் அவனுடைய கருமை நிற கன்னத்தில் பட்டு ஜொலித்தது, அவன் அவனுடைய நண்பன் ஒருவனோடு பேசிக்கொண்டு சிரித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்.

சங்கமத்திலிருந்து 12கிமீ நடந்து வந்திருக்கிறான் போல அதான் அவன் காலை கெந்தி வருவதற்கு காரணம் எனப் புரிந்து கொண்டான் சிவா.  தீர்த்தக் குடங்கள் அனைத்தையும் ஒன்றாக வைத்து பூஜைகள் தொடங்கின, தன்னுடைய மேலுடம்பை மறைத்திருந்த வெள்ளை துண்டை எடுத்து இடுப்பில் இறுக்கமாக கட்டிக் கொண்டான் “அவன்” .

அப்போது தான் சிவா முதல் முறையாக அவனை அரை நிர்வாணமாகப் பார்க்கிறான்.
அவனைப் பார்க்கும் போது கம்பன் சூர்ப்பனகை ராமனின் தோளைப் பார்த்து தான் காதல் வயப் பட்டதாக கூறியது எவ்வளவு உண்மை என்பதை எண்ணிக்கொண்டான் அவன் அழகில் சற்று மயங்கித் தான் போனான் சிவா.

விரிந்ததோளும் விம்மிப் புடைத்த மார்பும் மெலிந்த இடையும் மேடு பள்ளமாய் வயிறு என அவனுடைய அந்த கருத்த மேனி சிவாவின் கண்ணை ஏதோ பண்ணியது, அதைக் கெடுக்கும் விதமாக “அவன்” உடம்பில் சந்தனத்தை அள்ளிப் பூசினான் ஒருவன்.

பூஜை முடிந்து அனைவரும் தீர்த்தக் குடங்களை தலையில் தூக்கி வைத்த படி மெதுவாக நடக்க தொடங்கினர், செண்டை மேளமும் பஞ்ச வாத்தியமும் முழங்க ஊர் இளைஞர்கள் இரண்டு புறமும் கைகோர்த்து பாதுகாப்பரணாக நடக்க கூட்டம் ஊரை சுற்ற தொடங்கியது.

அப்போது “அவன்” அருகில் நண்பர்களோடு கைகோர்த்தபடி நகர்ந்து கொண்டிருந்தான் சிவா, “அவன்” கழுத்தில் போட்டிருந்த மாலை “அவன்” அணிந்த பின் தான் அவ்வளவு அழகாக தெரிந்தது சிவாவுக்கு, “அவன்” தன்னுடைய இரண்டு கைகளையும் கொண்டு தலையில் இருந்த கும்பத்தைப் பிடித்தபடி சற்று முகத்தை உயர்த்தியபடி நடந்து கொண்டிருந்தான்.

“அவன்” எச்சில் விழுங்கும்போது ஏறி இறங்கும் தொண்டைக்குழி சிவாவை தொல்லை பண்ணியது சிவாவை பொறுத்தவரை “அவன்” மட்டுமே ஆண் அங்கிருந்த மற்ற அனைவரும் பெண் தான் அது காதலா, காமமா, பக்தியா என சிவாவுக்கு எதுவுமே தெரியவில்லை.  ஊர் சுற்றும் பொழுது தீர்த்தக் குடங்களை சுமந்து வருபவர்களிடம் திருநீறு பூசிக்கொள்ளும் மக்களும் உண்டு.

அப்போது அவனிடம் திருநீறு பூசிக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் சிவாவின் கண்களுக்கு சூர்ப்பனகைகளாகத்தான் தெரிந்தனர்…

ஒரு வழியாக அம்மன் கோவிலில் தீர்த்தக் குடங்கள் இறக்கப்பட்டன அப்போது தன்னுடைய கையில் இருந்த மாலையை சிவலட்சுமியிடம் கொடுத்த “அவன்” தனது நண்பர்களோடு சென்றுவிட மெதுவாக சிவலட்சுமியின் அருகில் சென்ற சிவா அக்கா என அழைக்க
ஹாய் டா என பதில் அளித்தவள் அவன் முகத்தை பார்த்துவிட்டு என்னவாம் 32 பல்லையும் காட்டிட்டு நிக்கிற என கேட்க அக்கா என அவள் கையில் இருந்த மாலையைப் பார்த்தான் சிவா.

டேய் லூசு மாதிரி எதுவும் யோசிக்காத என சிவலட்சுமி சொல்ல சிவா ப்ளீஸ் அக்கா எனக் கெஞ்ச அவனை அழைத்துக்கொண்டு கோவில் பந்தலில் ஓர் ஓரமாக சென்றாள் சிவலட்சுமி. அக்கா அதுல மூணு மாலை இருக்கு ஒரு மாலை மட்டும் கொடுக்கா என சிவா கேட்க அவன் வீட்டுக்கு வந்து என்னை திட்டுவாண்டா என சிவலட்சுமி சொல்ல உனக்கு என்ன இதெல்லாம் புதுசா என சிவா சொல்லிக் கொண்டிருக்கும் போது சிவாவின் பின்னால் இருந்து வந்த “அவனை” கைப்பிடித்து நிறுத்தினாள் சிவலட்சுமி.

என்ன புள்ள என அவன் சிவலட்சுமியிடம் கேட்க சிவா திக்கு முக்காடி போனான், “அவனை” இவ்வளவு அருகில் பார்த்ததும் சிவாவுக்கு குப்பென வியர்த்தது, சிவாவின் தொண்டை குழி வறண்டு போனது.

திருதிருவென அவன் முழிப்பதை பார்த்த சிவலட்சுமி இவன் என்னோட காலேஜ்ல ஜூனியர், நல்ல டேலண்ட்டான பையன் உன்னிடம் ஏதோ பேசணும்னு சொன்னான் என சிவலட்சுமி சொல்ல, சொல்லுங்க என “அவன்” சிவாவை பார்த்து கேட்க, விறு விறுவென திரும்பி பார்க்காமல் அங்கிருந்து ஓடினான் சிவா, என்னாச்சு என சிவலட்சுமியிடம் “அவன்” கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ வா என அவனை அழைத்து சென்றாள் சிவலட்சுமி.

“அவனை” விட்டு தூரம் வர வர சிவாவின் மூச்சும் பேச்சும் அவனிடம் திரும்பி வந்தது….

-வருவான்….

மேலும் படிக்க

Comments

  • Avatar

    Mahesram

    08/07/2025 at 6:18 மணி

    Nice story

    Reply

  • Avatar

    Raja

    09/07/2025 at 8:40 காலை

    Avanukka ( anthuvan Anna) waiting…
    Nice starting……

    Reply

  • Avatar

    Abu

    09/07/2025 at 9:55 காலை

    Anthuvan 🤌🏻❤️

    Reply

  • Avatar

    Ajith

    10/07/2025 at 4:21 மணி

    ❤️❤️🤌🤌

    Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன