இவ்வுலகில் மற்ற மனிதர்கள் காட்டும் அன்பை விட இவர்கள் என்மீது காட்டும் அன்பு சற்று அதிகமானதாகேவே காணப்பட்டேன்.
ஏனென்றால் பல பொய்யான உறவுகளின் அன்பிற்கு மத்தியில் எந்த நோக்கமும் ,சுயநலமும் இல்லாமல் காட்டும் அன்பு என்பதால்.
அன்பு மட்டும் இவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று சொல்லுவேன்.
அறிவும், ஆற்றலும் ,
தன்னம்பிக்கையும், பொது நலமும் சற்று அதிகமாகவே இவர்களிடம் இருப்பதாக நான் உணர்கிறேன் .
பேரன்பு கொண்ட மாற்றுப் பாலினத்தவர்கள் (திருநங்கைகள், திருநம்பிகள்) பற்றி எழுதுவதில் பெரும் மகிழ்ச்சியும் உவகையும் அடைகிறேன்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த கையோடு இந்த கட்டுரையை தொடங்கினேன்.
நான் மாற்றுப் பாலினத்தோர் மீது ஒரு தெளிவான புரிதல் அடைந்திருக்கிறேன் என்ற நம்பிக்கையில் இந்த கட்டுரைக்குள் நுழைகிறேன்…
மாற்றுப் பாலினத்தவர் மீது மாணவர்களின் புரிதல் :
பெரும்பான்மையான
மாணவர்களுக்கு மாற்றுப் பாலினத்தவர் (திருநங்கை ,
திருநம்பிகள்) மீதான சரியான புரிதல் இல்லாதவர்களாகவே காணப்படுகிறார்கள் என்று சொல்லலாம்.
சில மாணவர்களுக்கு இப்படி ஒரு பாலினம் இவ்வுலகில் இருக்கிறது என்று கூட தெரியவில்லை.
திருநங்கைகள் ,
திருநம்பிகள் பற்றிய மாணவர்களின் புரிதலையும் உரையாடல்களையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
பெரும்பான்மையான மாணவர்களுக்கு திருநங்கைகள் என்றாலே பேருந்துகளில் பிச்சை எடுப்பவள் ,கைதட்டி பிச்சை எடுக்கும் ஒரு நபர், குறைந்த காசிக்கு விபச்சாரத்திற்கு உட்படுபவளே திருநங்கை என்ற புரிதலோடு மாணவர்கள் உள்ளார்கள்..
விபச்சாரத்திற்கு திருநங்கை உட்படுகிறாள் என்பதை பல்வேறு கோணங்களில் மாணவர்களுடைய பேச்சானது இருக்கும் .அவர்களை மிகவும் இழிவான வார்த்தைகளில் சித்தரிப்பார்கள்..
திருநங்கைகளை பல்வேறு பெயர்களில் இச் சமூகம் இழிவு படுத்துகிறது. அப்பெயர்களை கொண்டு மாணவர்களும் பேசிக்கொள்வது உண்டு..
உயர்நிலை மாணவர்கள் முதல் மேல்நிலை மாணவர்கள் வரை இவ்வாறான புரிதல்களோடே காணப்படுகிறார்கள் ..
இவ்வாறான புரிதல் மாணவர்களுக்கு தோன்றுவதற்கு மாணவர்கள் காரணமில்லை. மகாபாரதம் காலம் தொடங்கி இன்றுவரை இவர்களை தவறாகவே சித்தரிக்கும் கொடூரமான இந்த இழிவான சமூகமே இதற்கு காரணம் என்பேன்..
இன்னும் சில மாணவர்களுடைய பேச்சுக்கள் சற்று கொடூரமாகவே காணப்பட்டது .
மாற்றுப் பாலினத்தவர்களின் மர்ம உறுப்புகளை எப்படியாவது ஒரு நாள் பார்க்க வேண்டும் என்று ஒருவன் சொல்ல அதற்கு மற்றொருவன் சொன்ன பதில் அவர்களை இன்னும் இச்சமுகம் இழிவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறது என்று தோன்றியது .அந்த மாணவனின் பதிலுக்கான விடை என்னவென்று பார்த்தால் இவ்வுலகம் நவீன உலகம் ஆனதின் இழிவு என்று சொல்லலாம்.(Mobile phone). இப் பேச்சைக் கேட்டபோது என்றோ ஒரு நாள் அக்கா கிரேஸ் பானு அவர்கள் எழுதிய “திருநங்கை கிரேஸ் பானுவின் சிந்தனைகள்” என்ற புத்தகத்தில் ஒரு காவல் அதிகாரி அவர்களை கைது செய்த போது மாணவர்கள் பேசிய உரையாடல் போல செய்ததாக குறிப்பிட்டிருந்தார்கள் .அன்றைக்கு அது ஞாபகத்திற்கு வந்தது .சற்று அதிகமாகவே வேதனைக்கு உள்ளான நாள் என்று கூட அந்த நாளை சொல்லலாம்.
சுதந்திரமும், சமத்துவமும், உரிமைகளும் மறுக்கப்பட்டு உரிமைகளுக்காக போராடிவரும் பெண்கள் ,தலித்துக்கள், சாதியால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் ,மதத்தால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் ,மலைவாழ் மக்கள், சிறுபான்மையினர் என்ற வரிசையில் தங்களின் முகங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக போராடிவரும் திருநங்கைகள் பற்றிய நல்ல புரிதலை கொண்ட என்னைப் போன்ற மாணவர்களும் சமூக வளைதளங்களில் மாணவர்கள் என்ற நிலையில் நின்று அவர்களுக்கு குரல் கொடுக்கும் மாணவர்களும் உண்டு..
மாணவர்கள் பற்றிய புரிதல் எவ்வாறாக மாற்றுப் பாலினத்தோர் மீது இருக்கிறது என்பதை பற்றிய இக்கட்டுரை என்பதால் கவிஞர் ஐயா வைரமுத்து அவர்களை பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் .[பானு என்ற திருநங்கை திருநம்பியர் குழுவின் அமைப்பாளர். பொறியியல் கல்லூரியின் மாணவி குறிப்பிட்டது].
கவிஞர் ஐயா வைரமுத்து அவர்களின் “மூன்றாம் உலகப்போர்”என்ற புத்தகத்தில் மாற்று பாலினத்தவர் பற்றிய சில வரிகளை குறிப்பிட்டு அவர்கள் குற்றவாளி ஆக்கப்பட்டனர்.
[ரெண்டு முரட்டு திருநங்கைகளும் கிழங்கு ராணி கையையும் காலையும் அமுக்கி மிசுங்க விடாம பிடிச்சது மட்டும்தான் தெரியும் அப்பறம் சாத்திருச்சு கதவு; விடிஞ்சு தொறந்து பார்த்தா தன் நீளமான கூந்தல் முடியில தன் கழுத்து தானே சுத்தி தூக்குல தொங்குறா கிழங்கு ராணி ]
கவிஞர் ஐயா வைரமுத்து அவர்களின் ஆகச் சிறந்த ரசிகன் என்று என்னை நானே சொல்லிக் கொள்வதில் பெருமை அடைந்த நாட்கள் உண்டு.
என் வயது மாணவர்கள் ஐயா அவர்களின் வரிகளை வாசிப்பதில் பெரும் ஆர்வம் உள்ளவர்களாகவே காணப்படுகிறார்கள். இவ்வாறான மாற்றுப் பாலினத்தோர் பற்றிய நீங்கள் குறிப்பிட்ட வரிகளை மாணவர்களாகிய என்னைப் போன்றவர்கள் வாசிக்கும் பொழுது மாற்றுப் பாலினத்தவர் மீது தவறான புரிதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். எனவே அய்யா போன்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள் அவர்களை நல்ல பார்வையோடு சித்தரிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
பள்ளி மாணவர்களுக்கு மாற்றுப் பாலினத்தவர் மீதான நல்ல புரிதலை உண்டாக்குவது :
பள்ளிகளில் தற்போது இருக்கும் கல்வி முறையும்(Education system) , பாடத்திட்டங்களும் சரியானதாக இல்லை என்றே சொல்லலாம் .
ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் கல்வியை பெரும்பான்மையான ஆசிரியர்கள் முழுமையாக சொல்லுவதில்லை.
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் பத்தாம் வகுப்பு படிக்கும் போது பெண்கள் உறுப்பு பற்றியும் அவர்கள் மாதந்தோறும் அனுபவிக்கும் கொடூரமான மாதவிடாய் பற்றிய பாடம் இருந்தது .
(ஆம்பள பிள்ளைங்க நீங்க உங்களுக்கு இது தேவையில்லாத பாடம் )என்ற சொன்னது ஞாபகம் வருகிறது .இவ்வாறு செய்வதால் பெண்கள் மாதந்தோறும் அனுபவிக்கும் கொடூரமான வழியை பற்றி தெரிந்து கொள்ளாததாலே பிற்காலத்தில் பெண்களை சித்திரவதைக்கு
உள்ளாக்குகிறார்கள் என்று சில நேரங்களில் தோன்றியது உண்டு.
பெண்கள் பற்றியே ஆண் மாணவர்களுக்கு பள்ளிகளில் சொல்லிக் கொடுக்க தவறி விடுகிறார்கள் ஆசிரியர்கள். நான் மேல்நிலை வகுப்பில் உயிரியல்(Biology) பாடப்பிரிவில் படித்தவன் .அதில் விலங்கியல் பாடத்தில் மாற்றுப் பாலினத்தவர்கள் பற்றிய எந்த ஒரு பதிவும் பெரிதாக காணப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.. இந்த நிலையில் கண்டிப்பாக இவர்களை பற்றி தெரிந்த கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் மாணவர்கள் .ஆனால் கல்வி வழியாக இதை கற்றுக்கொள்ள தவறி விடுகிறார்கள் மாணவர்கள்.
நம்முடைய பள்ளி கல்வித்துறை பாலியல் கல்வியை(Sex education) கண்டிப்பாக பள்ளியில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு போட வேண்டும். மாற்று பாலினத்தவர் பற்றியும் ஒவ்வொரு வகுப்பிலும் பாடங்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறாக நம்முடைய பள்ளி கல்வித்துறையும் ,
அரசும்,கவிஞர்களும்,
எழுத்தாளர்களும்,
இச்சமூகமும் மாற்றுப் பாலினத்தவர்களை குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி பார்க்காமல் பறந்து விரிந்து இவர்களும் மனிதர்கள் தான், இவர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்போம் என்றபடி
விடைபெறுகிறேன்.
-சுகநிலவன்
