எது மனிதம்

வண்ணத்துப்பூச்சிகளை எட்டு திசைகளிலும் சுதந்திரமாய் சிறகடித்து பறக்க விடுவதா?
அழுகும் விழிகளுக்கு ஆதரவு கூறுவதா?
குருதிக்கொடை செய்வதா?
பிரசவ வழியில் துடிக்கும் கற்பிணியை மருத்துவமனையில் சேர்ப்பதா?
மரங்கள் நடுவதா?
மரங்களுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்சுவதா?
வீனாய்‌ போகும் தண்ணீர் பைப்பை மூடுவதா?
சக மனிதனுக்கு உணவளிப்பதா?
மனிதநேயம் பேசுவதா?
செல்ல பிராணிகள் மீது அன்பு செலுத்துவதா?
பிறருக்கு துன்பம் வராமல் வாழ்வதா?
சாதி,மத பாகுபாடு கடந்து வாழ்வதா?

இதில் நாம் எதை மனிதம் என்று சொல்லுவது இது அனைத்தும் மனிதத்தின் வரிசையில் தானே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பிறகு ஏன் விழிகளை பாதுகாக்கக்கூடிய இமைகளாலேயே நாங்கள்(மாற்றுப்பாலினத்தோர்) தெருவில் தூக்கி வீசப்படுகிறோம்?
வீட்டில் தட்டு முட்டு சாமான்களுக்கு கொடுக்கும் மரியாதையும், வீட்டுக்கு வெளியில் செருப்புக்கு அடைக்கலம் கொடுக்கும் பெற்றோர்கள் ஏன் எங்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில்லை.

நாங்கள் அப்படி என்ன பாவம் செய்துவிட்டோம் இயற்கையின் தற்செயல்தானே? ஒரு கருவில் இரண்டு குழந்தைகள் பிறப்பது இல்லையா?இரு குழந்தைகள் பிறந்து விட்டது என்று முதல் பிறந்த குழந்தையை வைத்துக்கொண்டு இரண்டாம் குழந்தையை கொன்று விடுகிறோமா இரு குழந்தைகளுக்கும் தானே அடைக்கலம் கொடுக்கிறோம்.
அப்படி என்றால் ஆணுறுப்போடு பெண் மனமும் பெண்ணுறுப்போடு ஆண் மனமும் கொண்ட எங்களுடைய பிறப்பும் இயற்கையின் தற்செயல்தானே?

சக மனிதன் தண்ணீர் குடிப்பது கூட பொறுக்காமல் தண்ணீர் தொட்டியில் மலத்தினை கலக்கக் கூடிய அரக்கனும், ஐந்து வயது குழந்தையின் வாழ்வை சிதைக்கக்கூடிய கொடூரனும், சாதி என்கிற சாக்கடையை குடித்துவிட்டு ஊரின் வீட்டின் குறைகளை தீப்பந்தாடுபவனும், மதத்தால் நாட்டை பிளவுபடுத்துவனும் உலகில் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறார்கள்

ஆனால் எந்த பாவமும் செய்யாமல் சக மனிதர்களின் மீது மற்றவர்கள் காட்டும் அன்பை விட கூடுதல் அன்பை செலுத்தும் நாங்கள் தவறானவர்களாகவும், திருடர்களாகவும் சித்தரிக்கப்பட்டு அடிப்படை உரிமையும் அடிப்படை மரியாதையும் கூட இச்சமூகம் எங்களுக்கு கொடுப்பதில்லை.

எங்களுக்கு அடிப்படை மரியாதை கொடுக்காமல் இவ்வுலகில் நீங்கள் செய்யும் எந்த நற்செயல்களும் மனிதம் என்ற வரிசையில் உட்படாது. அது ஏழைகளுக்கு உதவி செய்வதாக இருக்கட்டும், கர்ப்பிணிகளுக்கு உதவி செய்வதாக இருக்கட்டும், குருதிக்கொடை செய்வதாக இருக்கட்டும் இப்படி நீங்கள் நல்லவர்கள் என்று உலகில் காட்டிக் கொள்வதற்காக செய்யும் எந்த நாடகங்களும் மனிதம் என்ற வரிசையில் நிச்சயம் உட்படாது

மகாபாரதத்தில் எங்களுக்கு கொடுத்த மரியாதை கூட நவீன உலகில் வாழும் உங்களால் எங்களுக்கு கொடுக்க முடியவில்லை. இன்றைக்கு எல்லோருடைய கையிலும் நவீன கைபேசி இருக்கிறது அதில் எதை தேடினாலும் விடை கிடைக்கும். எல்லோரிடமும் நவீன தொழில்நுட்பம் இருக்கிறது ஆனாலும் எங்களுக்கான அடிப்படை உரிமையும் அடிப்படை மரியாதையும் மறுக்கப்படுகிறது.

மலக்குழிகளுக்குள் எம் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் நிலாவில் சந்திரயானை இறக்கி என்ன பயன் ?வன்கொடுமைகளுக்கு எம்மக்கள் ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது நீங்கள் நவீன கருவிகளை கண்டுபிடித்து என்ன பயன்?
நவீன உலகம் என்று பெருமை பேசிக் கொள்வதில் என்ன பயன்?

எண்ணிலடங்கா வண்ணத்துப்பூச்சிகள் சிறுவயதில் என்னை சுற்றி வரும் பொழுது அதை பார்த்து ரசித்த காலங்கள் கடந்து இன்றைக்கு ஒரு வண்ணத்துப்பூச்சியாவது பார்த்து விடமாட்டோமா என்ற அளவிற்கு அதனுடைய இனப்பெருக்கமானது குறைந்துவிட்டது காரணம் மனித குலத்தின் இழிவான செயல்கள்.
கட்டுரையின் தொடக்கமாக “வண்ணத்துப்பூச்சிகள் எட்டு தசைகளிலும் சிறகடித்து பறப்பதா “என்பதை முதல் வரியாக அமைத்திருந்தேன். வண்ணத்துப்பூச்சிக்கும் மனிதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் சிந்தித்து இருப்பீர்கள். நிச்சயம் உண்டு .
வண்ணத்துப்பூச்சி எட்டு திசைகளிலும் சுதந்திரமாய் பறந்து விட்டாலே இவ்வுலகில் மனிதம் ஓங்கி நிற்கும். வண்ணத்துப்பூச்சி என்ற சொல்லில் வண்ணம் என்பது வெறும் நிறத்தை மட்டும் குறிப்பதல்ல மனிதன், விலங்கு மனிதநேயம் என்று பல்வேறு கட்டமைப்புகளை கொண்டதுதான் வண்ணத்துப்பூச்சியில் உள்ள வண்ணம் என்ற சொல் .
சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அதற்கான விடை கிடைக்கும்.

இன்றைக்கு நாங்கள் எந்த துறையில் குறைந்து போய் விட்டோம் ?
சிறுவயதில் சின்ன செடியாய் இருக்கும் பொழுது தெருவில் தூக்கி வீசினீர்கள் ஒரு முழுமையான செடியாய் வளர்ந்தோம்.
வாய்ப்பு கிடைக்கும் பொழுது எந்த திசைகள் பக்கம் திரும்பினாலும் சமூகத்தால் நசுக்கப்பட்டோம்.

நீங்கள் எங்களை தெருவில் தூக்கி வீசினீர்கள் என்பதற்காகவும் ,
நசுக்குனீர்கள் என்பதற்காகவும் எங்களுடைய வளர்ச்சியை ஒருபோதும் நிறுத்தி விடவில்லை. இன்றைக்கு நாங்கள் பெரும் ஆலமரமாய் உயர்ந்து இமயத்தின் உச்சியை தொடும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறோம்.

மருத்துவத்துறையாக இருக்கட்டும், காவல்துறையாக இருக்கட்டும், ராணுவ துறையாக இருக்கட்டும், ஆசிரியர் துறையாக இருக்கட்டும், நீதித்துறையாக இருக்கட்டும் இன்றைக்கு எல்லா துறைகளிலும் நாங்கள் சாதித்து விட்டோம்.

நீங்கள் பெறக்கூடிய வெற்றியும் நாங்கள் பெற்றிருக்கக் கூடிய வெற்றிகும் ஒன்று அல்ல.
நீங்கள் அந்த வெற்றியை மிக எளிமையாக பெற்றுவிடுவீர்கள் ஆனால் நாங்கள் ஒடுக்கப்பட்டும், நசுக்கப்பட்டும், வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் இவை எல்லாவற்றையும் கனவு என்கிற லட்சியந்தின்பால் உடைத்து எரிந்து விட்ட சாதித்தவர்கள் நாங்கள்.

இனி வரப்போகும் காலகட்டத்தில் எல்லாம் உங்களுடைய இட ஒதுக்கீடு எங்களுக்கு தேவைப்படாது என்ற மனநிலை எங்களுக்கு உருவாகிவிட்டது.

அதுவரை சற்று நசுக்காமல் இருங்கள்.
உங்கள் கடும் சொற்களால் வையாமல் இருங்கள். வன்கொடுமைக்கும் சித்திரவதைக்கும் எங்களை உட்படுத்தாமல் இருங்கள்.

நாங்கள் மாறிவிட்டோம் .
நீங்களும் மாறுவீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்….

நீங்கள் படித்த மாற்று பாலினத்தோரினுடைய(திருநங்கை,திருநம்பி) உணர்வுகளும் ,வலிகளும் கூடிய வரிகள் எல்லாம் முதலாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவன் சு.சுகநிலவன் உடைய வரிகளாகும் .நான் என்னை வைத்து எழுதிய காரணம் இவ்வுலகில் பிறருக்கு துன்பம் செய்வதற்கு முன்பு அந்த இடத்தில் தன்னை வைத்து சிந்தித்துப் பார்க்கும்பொழுது அவர்களுடைய வழியை நம்மால் உணர முடியும் என்கிற அடிப்படைதான். அந்த வரிசையில் தான் என்னை வைத்து சிந்தித்துப் பார்த்தேன். இவ்வுலகமும்
மாற்றுப்பாலினத்தோரினுடைய வழியை உணர வேண்டும் என்பதன் பிரதிபலிப்பே இக்கட்டுரை…

 

சாதிகளற்ற சமூகம் படைப்போம்.
மதங்களற்ற உலகம் அமைப்போம்.
பாலினம் கடந்து மனிதம் வளர்ப்போம்…

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன