வணக்கம் ஜெஸ்ஸி. என் பெயர் அழகு ஜெகன். நான் பால்மணம் மின்னிதழின் ஆசிரியர். வளர்ந்து வரும் மற்றும் சமூகத்தில் உதாரணமாக திகழகூடிய திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை, மக்களிடமும், LGBTQIA+ சமுதாயத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறவர்களிடமும் கொண்டு சேர்ப்பதே, இந்த இதழின் “திண்ணை” என்ற பகுதியின் நோக்கம்.
ஜெகன்: இதழுக்காக உங்களை பேட்டி எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஜெஸ்ஸி: ரொம்ப நன்றி ஜெகன். வணக்கம். நான் திருநங்கை ஜெஸ்ஸி அரோரா. சென்னையின் போரூர் பகுதியில் வசிக்கிறேன். கடந்த 4 ஆண்டுகளாக, சென்னை சைதாப்பேட்டையிலுள்ள, தமிழ்நாடு அரவாணிகள் அமைப்பின் செய்தி தொடர்பாளராக உள்ளேன். இந்த அமைப்பின் மூலம் திருநங்கைக்ளுக்கான தொழில், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் உள்ளோம்.
ஜெகன்: உங்களது விரிவான சுய அறிமுகத்துக்கு நன்றி. உங்களது குழந்தை பருவம் எப்படி இருந்து. உங்கள் குழந்தை பருவம் குறித்து எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?
ஜெஸ்ஸி: என்னுடைய குழந்தை பருவம் என்பது, என் வாழ்வின் கருப்பு பக்கங்கள். அதை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் விருப்பம் இல்லையென்ற போதும், நம் சமுதாய மக்களுக்கு சில புரிதல் ஏற்படும் என்பதற்காக மட்டும் இதை நான் பகிர்ந்து கொள்கிறேன். ஏனெனில் மிக இளம் வயதிலே, அதாவது எனது 4 வயதிலே பாலியல் துன்புறுத்தலை அனுபவித்து இருக்கிறேன். இதைப் பற்றி எனது சித்தி என்னிடம் கூறிய பொழுது எனக்கு வயது 14. நான் ஒரு திருநங்கை என, எனது வீட்டில் உள்ளவர்கள் அறிந்து கொண்ட சமயம் அது. எனக்கு ஆதரவாக என் வீட்டாரோடு என் சித்தி சன்னட இடும் பொழுது தான், இதை சொல்கிறார்.
நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறேன் என்பதே எனக்கு அப்பொழுது தான் தெரிய வந்தது. எனது குடும்பத்தில் இருக்க கூடிய மிக முக்கிய உறுப்பினராலேயே இது நிகழ்த்தப்பட்டு, நான் சுயநினைவை இழ்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளேன். இந்த நிகழ்வை எல்லோரிடமிருந்தும் மறைத்த என் குடும்பம், என்னை ஏன் ஏற்று கொள்ள மறுக்கிறது என என் சித்தி கேட்டு, சன்டையில் ஈடுப்பட்டார்.
என் குழந்தை பருவம், தனிமை நிறைந்தது. எனது அண்ணா மற்றும் அக்கா இருவருமே எனை ஒன்பது என்றே அழைத்தனர். எனது அம்மாவும் இதை கண்டு கொள்ளவில்லை. எனது இயர்பெயர் சொல்லி அழைப்பதை கூட யாரும் விரும்பவில்லை. நான் திருநங்கை என அறிந்து கொண்டதற்கு பின் நான் அடைந்த கஷ்டங்களை விட என் குழ்ந்தை பருவம் வலி மிகுந்தது.
ஒரு பள்ளியில் ஒரு வருடம் கூட என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. பள்ளியிலும் எனக்கு துன்புறுத்தல்கள் நிகழ்ந்த்து. இது குறித்து என் அம்மாவிடம் சொல்லி பொழுது, அவர் பள்ளியில் இது குறித்து கேட்கும் பொழுது, நான் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டேன். இப்படியாக தான் என் குழ்ந்தை பருவம் இருந்தது.
எனது 7 வயதிலேயே நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு இருப்பதை அறிந்திருந்தேன். வயதிற்கு அதிகமான பக்குவம் அடைந்து இருப்பதை என் அம்மாவும் அவ்வபொழுது என்னிடம் பகிர்ந்து கொள்வார். வார்த்தைகளாலும், உடலளவிலும் என் வீட்டாறே என்னை துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். இது என் 14 வயது வரை நிகழ்ந்தது.
ஒருமுறை, என் வீட்டில் என் மாமா மற்றும் என் சித்திகள் எல்லோரும் சேர்ந்து கொண்டு, நான் தூங்கி கொண்டு இருந்த பொழுது, எனக்கு மையிட்டு, உதட்டு சாயம் பூசி விட்டிருந்ததை, நான் தான் பூசிக்கொண்டேன் என தவறுதலாக, என் அம்மா எண்ணி இரும்பு கம்பியால் என்னை தாக்கினார். அப்பொழுது எனக்கு தலையில் காயம் ஏற்பட்டு தையல் போட்டதும் உண்டு.
எனது தந்தை, நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுதே இறந்து விட்டார். அதன் பின் என் மீதான துன்புறுத்தல் அதிகம் ஆனது. மலக்குழியிருந்தும், பிணவறையிலிருந்தும் என்னை கொண்டு வந்தது போல இருந்தது அவர்களின் அனுகுமுறை. ஒருமுறை பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, நான் மயங்கி விழுந்துள்ளேன். எனது ஆசிரியையும், எனது பள்ளி தாளாரரும் என்னை இராமாபுரம் மியாட் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு நான் 14 நாட்கள் கோமாவில் இருந்துள்ளேன்.
அதன் பின் எனது ஆசிரியை, அவர் வீட்டில் வைத்துக் கொண்டார். அப்பொழுது தான், என் தாய் என் சாப்பாட்டில் விஷம் கலந்தார் எனவும், அதற்காக என் அம்மாவையும், என் குடும்பத்தாரையும் ஒரு வாரம் சிறையில் சிறையில் வைத்திருந்ததாகவும் சொன்னார். அந்த சூழ்நிலையிலும் என் உடல் நிலை தேறும் வரை என்னை தன் பாதுகாப்பில் வைத்து இருந்து என் ஆசிரியை பெயர் தான், ஜெஸ்ஸி அரோரா. அவர் பெயரை தான், நான் எனக்கானதாக கொண்டுள்ளேன்.
உடல் நலம் தேறிய பின் என் வீட்டிற்கு சென்றேன். என் வீட்டில் யாருக்கும் இது குறித்து எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாது கண்டு, இனி இந்த வீட்டில் தங்குவதில்லை என முடிவு எடுத்தேன். அப்பொழுதும் எனது கணித ஆசிரியர் ஜெஸ்ஸி அரோரா தான், என்னை தன் வீட்டில் வைத்து பராமரித்தார்.
எனக்கான தேவைகளுக்காக சிறு சிறு வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். காலை 4 மணிக்கு எழுந்து வீடு வீடாக செய்தி தாள்கள், பால் விநியோகம் செய்தேன். மாலை 6 மணிக்கு அருகில் இருக்கும் fancy store-ல் இரவு 9 மணி வரை வேலை செய்தேன். இப்படியாகதான் 12-ம் வகுப்பு வரை என் வாழ்வு இருந்தது. 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது, டிசம்பர் மாதம் என் அண்ணன் தற்கொலை செய்து கொண்டார். இப்பொழுது நான் படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கினேன். இதுவரை என் வாழ்வு இப்படியாகத் தான் இருக்கிறது.
என் தோழி திருநங்கை இராஜேஸ்வரி மூலம், பெங்களூரில் உள்ள ஒரு நான் திருநர் சமுதாயத்தில், நிறைய கனவுகளோடு இனைந்தேன். ஆனால் என் தலையில் ஒரு டோப்பாவை மாட்டி, சிலரோடு கடை கடையாக காசு கேட்க அனுப்பினர். பொருளாதாரத்தில் மிக உயர்ந்த குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு இவர்க்ளின் வாழ்வியல் முகுந்த குழப்பத்தை தந்தது.
நான் வேலைக்கு செல்லவே விரும்புவதாகவும், பிச்சை எடுக்க முடியாது என்பதை தெரிய படுத்தியதும், அங்கேயும் என் மீதான வன்முறை தொடர்ந்து. என் கை, கால் மற்றும் தலையில் பலமாக தாக்கி கட்டி வைத்தனர். அதன் பின் அவர்களின் விருப்பப்படி நடந்து கொள்ள முடிவு எடுத்தேன்.
2005 நான் சென்னை தாம்பரத்திற்கு வந்து விட்டேன். 2010 முதல் 2014 வரை SWAM அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.
பின் ஒரு நாள், எங்களது மூத்த திருநங்கை ஒருவர், கூவாகம் திருவிழாவிற்கு பணம் தராமல் உள்ள எங்களை போன்றவர்களை, சில ரவுடிகளைக் கொண்டு தாக்கினார். எதிர்த்து கேட்ட என்னை, பலம் கொண்டு முடிந்த அளவிற்கு தாக்கினார்கள். இந்த மூத்த திருநங்கை எங்களிடம் வாரம் தோறும் ரூபாய் 500 வீதம், மாதம் ரூபாய் 2000 தர கட்டாயப் படுத்தி பெற்றும் கொண்டார். அதோடு இல்லாமல், ஏதேனும் திருவிழா எனில் ஒவ்வொருவரும் தலா 10,000 ஆயிரம் ரூபாய் தரவும், தீபாவளியின் பொழுது ஒவ்வொருவரும் தலா 10,000 ஆயிரம் ரூபாய் தரவும், கூவாகம் திருவிழா எனில் ஒவ்வொருவரும் தலா ஒரு பவுன் தங்கமும் தர கட்டாயப்படுத்தப் பட்டோம். எங்களது சொற்ப வருமாணத்தில் இவைகளை செய்ய முடியாமல் மிகுந்த வேதனைக்கு ஆளோனோம்.
இந்த சூழலை மாற்ற முடிவு செய்து, என்னை பலப்படுத்திக் கொள்வதற்கான காலத்திற்காக காத்திருந்தேன். பாலியல் தொழிலில் செய்யவோ, பிச்சை எடுக்கவோ, தெருக்களில் ஆடவோ தான் திருநங்கைகள், என்ற குறுகிய வட்டத்தை தாண்டி, நிறைய இருப்பதாக புரிந்து கொண்ட தருணம். என்னுடைய நண்பர் வட்டத்தில் இருந்த ஒருபாலீர்ப்புக் கொண்ட ஆண்கள் பலர் மருத்துவர்களாகவும், விஞ்ஞானிகளாவும் உள்ளதை உண்ர்ந்தேன்.
உடனே, திருநங்கை சமுகத்தில் உள்ள எனது 25 மகள்களை அழைத்து, உங்களில் வேலைக்கு செல்ல விருப்பம் கொண்டவர்களுக்கு வாய்ப்பு தருவதாகவும், பாலியல் தொழிலை தொடர விருப்பம் கொண்டோர், தொடர தடை எதுவும் இல்லை எனவும் கூறினேன். பாலியல் தொழிலை தொடர 20 பேர் விருப்பம் தெரிவித்தனர். மீதம் இருந்த 5 – ல் 2 பேருக்கு எனக்கு தெரிந்த இடங்களில் வேலைக்கு அமர்த்தினேன். 3 பேருக்கு சிறிய அளவிளான சுயதொழில், அதாவது பூக்கடை மற்றும் மீன் கடை வைக்க விருப்பம் இருப்பதை அறிந்து, என் நகைகளில் சிலவற்றை கொண்டு பலத்த எதிர்ப்பிற்கிடையில் அவர்கள் தொழில் தொடங்க உதவினேன்.
பின் அங்கிருக்க முடியாமல், சில காலம் என் ஒருபாலீர்ப்புக் கொண்ட ஆண்களின் வீடுகளில் தங்கி இருந்த சமயம், என் அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாய் தொலைப்பேசி அழைப்பு வந்தது. நாங்கள், ஒருவரை ஒருவர் பார்ப்பதை நெடுங்காலமாகவே தவிர்த்து வந்தோம். மார்பக புற்றுநோய் மற்றும் சொந்தங்களின் ஏமாற்றத்தாலும் மிகவும் நலிவடைந்த என் தாயை, அன்று முதல் நான் கவணித்துக் கொள்ள தொடங்கினேன்.
2018 -ன் நவம்பர் மாதத்தில் என் அம்மா தவறி போனார். அதன் பின் என் வாழ்க்கையில் நான் என்ன செய்வது என்பது குறித்து ஆழ்ந்து சிந்திக்க தொடங்கிய எனக்கு நான், தேர்ந்தெடுத்தது Fashion industry. பல ஏமாற்றுக்காரர்களை கடந்த எனக்கு, 2019 – ல் Sushmita Agarwal (Blogger) மற்றும் Nishant Agarwal (Blogger) தங்களது Blog-க்கான மாடலாக என்னை புகைப்படம் எடுத்து, வெளியிட்டனர்.
அதன் பிறகு படிப்படியாக, Beauty pageant, Media, திருநங்கைகளுக்கான NGO என பணியாற்றிக் கொண்டே இருந்தேன். இது மட்டுமில்லாமல் கடந்த 5 வருடங்களில், சுமார் 75 திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை அமைத்துக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கை தரம் சிறக்க காரணமாய் இருந்துள்ளேன்.
தற்போது சில திரைப்பட வாய்ப்புகளும் வந்துள்ளது. Netflix சார்பாக 2 திரைப்படங்களும், Amazon Prime சார்பாக 1 திரைப்படங்களும், Sony Liv சார்பாக Bollywood-ல் 1 திரைப்படங்களும், நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகை ஆண்டிரியா உடனும் தலா ஒரு படங்களில் பணியாற்றுவதற்காண ஒப்பந்தமும், Photoshoot – ம் நிறைவடைந்தது.
ஜெகன்: நீங்கள் மருத்துவ ஆலோசனை, ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்ட 2004-ல் இருந்த சமுதாயத்திற்கும், இப்பொழுது இருக்க கூடிய சமுதாயத்திற்கும் என்ன வித்தியாசம் இருப்பதாய், உணர்கிறீர்கள்?
சமுதாயம் எந்த மாற்றமும் அடையவில்லை. உதாரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன், IT துறையில் பணிபுரியும் என் திருநங்கை சகோதரியின் மகள்கள், வீடு தேடும் முயற்சியில் 30 வீட்டு உரிமையாளர்களால் புறக்கணிக்கப் பட்டார்கள். திருநங்கைகளுக்கு பிறர் உதவ முன் வரவேண்டும் என சொல்பவர்கள் கூட, தான் உதவ முன் வர மாட்டார்கள். அறுவருப்போடே எங்களை இந்த சமுதாயம் அனுகுகிறது.
எனது சமீபத்திய அனுபவமும் இதற்கு சாட்சி. சென்ற வாரம் ஒரு நகை கடையில் நகை வாங்கிய பின், மழையால் அதன் கடை வாசலிலே ஆட்டோவிற்காக நின்றிருந்தேன். அந்த வழியே சென்ற 20-25 ஆட்டோக்களை நிறுத்த முயன்றும், அவை அனைத்தும், என்னை தாண்டி சென்று, என் அருகில் இருந்த ஒரு குடும்பத்தாரிடம் வலிய சென்று ஆட்டோ வேண்டுமா என கேட்டது. அந்த குடும்பத்தாரை பார்க்கும் நேரத்திலேயே சொல்லி விடலாம், அவர்களால் சாதாரண நாட்களிலேயே ஆட்டோவிற்கான பயண செவவு என்பது மிகப் பெரியது. என்னால் அந்த மழை நேரத்தில் அதிக தொகை கொடுத்துக் கூட ஆட்டோவில் என்னால் பயணம் செய்ய முடியும். சமுதாயம் எந்த மாற்றமும் அடையவில்லை என்பதை எல்லாம் என் அனுபவத்திலேயே சொல்கிறேன்.
ஜெகன்: இந்த இளம் தலைமுறை திருநங்கைகளுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது?
தைரியமாக இருங்கள். தெளிவாக இருங்கள். படியுங்கள். நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். செம்மறியாட்டு கூட்டமாய் குழிக்குள் விழுவதை விட, கழுதையாய் தனியாக இருங்கள். அதிலும் படித்த கழுதையாய் இருப்பது ரொம்ப நல்லது. எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம்.
ஜெகன்: பால்புதுமையினர் (LGBTQIA+) மீதான திருநங்கைகளின் புரிதல் எவ்வாறு உள்ளது?
படித்த, நகர்புறத்தில் உள்ள திருநங்கைகளை காட்டிலும், பின் தங்கிய மற்றும் கிராம புறத்தை சார்ந்த திருநங்கைகளுக்கு ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களை பற்றிய புரிதல் இன்றும் இல்லாமலே உள்ளது. மேலும் ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் இவர்களின் உதவியை நாடும் பொது, இவர்களை திருநங்கைகளாக மாற்றவே முயற்சிக்கிறார்கள். ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் பலர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெகன்: திருநங்கைகள் மீதான பால்புதுமையினரின் (LGBTQIA+) புரிதலை பற்றியும் அறிய விரும்புகிறேன்?
திருநங்கைகள் மீதான பால்புதுமையினரின் (LGBTQIA+) புரிதல் என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது. பால்புதுமையினர்ம் திருநங்கைகளை ஒரு மேல்தட்டு மனோ பாவத்துடனே அனுகுகின்றார்கள். சகிப்பு தன்மை இல்லாமல், ஏளமாகவே பார்க்கிறார்கள். இருதரப்பிற்குமான புரிதலை உருவாக்குவதில் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஜெகன்: திருநங்கை சமுகத்திற்கான சட்ட போராட்டத்தை தொடர்ந்து எடுத்து செல்லும் நீங்கள், அது குறித்தான சில அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளவும்?
திரைப்படங்களில், திருநங்கைகளை பற்றியும், LGBTQIA+ மக்களை பற்றியும் தவறான முறையில் கருத்துக்களை பரப்புவதை எதிர்த்து தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறேன்.
ஜெகன்: உங்களது இந்த நீண்ட வாழ்கையில், மகிழ்ச்சியான அறிய தருணங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளவும்?
திருநங்கைகளால் புறக்கணிக்கப்பட்டு, எங்கும் செல்ல வழி இல்லாது, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அங்கு அப்பொழுது நான் சந்தித்த மாற்றுத்திரணாளி ஒருவர் என்னிடம் கூறியதாவது, உன் மீது விழும் கற்களை சேமித்து வை. அவர்களிடமிருந்து உன்னை காத்துக் கொள்ள சுவர் எழுப்ப அது உதவும். அப்பொழுது தான் நான் இதுவரை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.
ஜெகன்: காதல் பற்றி பேசாது, இந்த கலந்துரையாடல் முடியாது. உங்கள் காதல் ப்ற்றி சொல்லுங்களேன்.
என் வாழ்கையில் இதுவரை 3 முறை காதல் வயப்பட்டேன். முதல் முறை எல்லோரையும் போல பள்ளி பருவத்தில் சங்கர் என்பவர் மீது காதல் கொண்டேன். இரண்டாவது வந்த காதலர் மீது எனக்கு நம்பிக்கை இல்லாததால் அதையும் கடந்து விட்டேன். மூன்றாவதாக ஒருவர் மீது காதல் கொண்டேன். பரஸ்பரம் காதலை பகிர்ந்து கொண்டு 4 வருடமாக தொடர்ந்து கொண்டு இருந்தோம்.
கடந்த 4 மாதங்களுக்கு முன், அவரது அலுவலகத்திலும், வீட்டிலும் திருநங்கையுடனான அவரது காதல் கேள்விகுள்ளாக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டோம்.
ஜெகன்: ஒட்டு மொத்த திருநங்கை சமுதாயத்திற்கு, காதல் குறித்து தாங்கள் சொல்லும் அறிவுறை என்ன?
திருநங்கைகளுடனான ஆண்களின் காதல் குறித்து மிகுந்த தெளிவு அவசியம் என்பதை உணருங்கள். உன்மை என்னவெனில், 2, 3 வருடங்களுக்கு பின் திருநங்கைகளுடனான காதல் ஆண்களுக்கு சலித்து விடுகிறது. அதன் பின் அவர்கள் திருநங்கைகளை விட்டு சென்று விடுகின்றனர்.
சமுக வலைதளங்களின் வளர்ச்சியில் இப்படி ஏமாற்றப்படும் திருநங்கைகளின் எண்ணிக்கையும், அவர்களது தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திருநங்கை மூலம் கிடைக்கும் பொருளாதார சுகத்திற்காகவும், திருநங்கைகள் பெருமளவு ஏமாற்றப் படுகிறார்கள். தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
உங்களக்கு ஒரு துணை தேவை என உணரும் தருணத்தில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கான எல்லா சுகமும் கிடைக்கும் நேரத்திலும் சற்று தள்ளி இருக்க பழகுங்கள். சுயமாக வாழ்வதை பழகுங்கள். அதை விட்டு விட்டு, குடும்ப தலைவியாய், காலை எழுந்து கணவர் காலை தொட்டு வணங்கி, காபி போட்டு கொடுத்து, சட்டை அயர்ன் பண்ணிக் கொடுத்து, அலுவலகம் அனுப்பும் ஆசை எல்லாம் வேண்டாம்.
ஜெகன்: பொது சமுகத்திற்கு தாங்கள் சொல்ல விரும்புவது?
திருநங்கைகளுக்கான பாதுகாப்பான சமூக சுழலை உறுதி செய்வது முதலாவதாக உள்ளது. மேலும் திருநங்கைகளையும் சக மனுஷியாய் அங்கிகரித்து, அவர்களது வாழ்வாதாரம் உயரவும் கவணம் செலுத்த வேண்டும்.
என்னுடைய ஒரு இரவு என்பது இப்படியாக இருந்தது.
சாமிகளுக்கு அணிவித்த காய்ந்துபோன மலர்களின் வாசம்
என் வீட்டு சமையலறையில் பாத்திரம் உருட்டும் சுண்டெலி
என் வீட்டிற்கு கீழே தன் பேரனை
கொஞ்சி விளையாடும் பாட்டியின் சிரிப்பு சத்தம்
எங்கேயோ தூரத்தில் தெரியும் டீக்கடை குண்டு பல்பின் வெளிச்சம்
அந்த டீக்கடை வானொலியின் பாட்டு சத்தம்
என இத்தனையோடும்,
விடிந்தும் விடியாததுமான நிறந்தரமற்ற என்னுடைய இரவு.
பங்குபெற்றவர்: திருநங்கை ஜெஸ்ஸி அரோரா
தொகுப்பாளர்: அழகு ஜெகன்.
தொகுத்து வழங்கியவர்: வைஷ்ணவி கிருஷ்ணமூர்த்தி
