இந்தக் கட்டுரை மூலமா குயர் (Queer) செலிபிரிட்டி தினு அவர்களோட வாழ்க்கையைப் பற்றி, அவங்க பேஸ் (face) பண்ண கசப்பான தருணங்கள், அத அவங்க எதிர்கொண்ட விதம் பத்தியெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்க போறோம். ரொம்ப முக்கியமா LGBT ரிலேடட் (related)-ஆ நமக்கு இன்னும் புரிதல் இல்லாத விஷயங்கள் பத்தி அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்க போறோம்.
கேள்வியாளர் (கே): வணக்கம் தினு. எப்படி இருக்கீங்க?
தினு (தி): வணக்கம். நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க?
கே: நானும் நலம். நன்றி. நீங்க யாரு. நீங்க இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க?
தி: நான் தினு. நான் இப்போ கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி-ல எம்.டி (M.D.,), எம்.பி.பி.ஸ் (M.B.B.S.,) பெண்கள் விடுதி-ல மேனேஜர் (Manager)-அ வேல பாத்துட்டு இருக்கேன். மற்றும் சமூக ஆர்வலர்-ஆகவும் இருக்கேன்.
கே: உங்க வாழ்க்கை-ல நீங்க குயர் (queer)-ன்றத எப்ப உணர ஆரம்பிச்சீங்க?
தி: என்னுடைய 5-6 வயசுலயே நான் மத்தவங்கள விட வித்யாசமா இருக்கேன்-னு நான் உணர ஆரம்பிச்சேன். நான் யாரு-ன்னு நான் அடையாளம் கண்டுக்குறதுக்கு முன்னாடியே இந்த சமூகம் என்னை அடையாளம் கண்டுடுச்சு, என் நடை, உடை, பாவம் மூலியமாக. அதன் அடிப்படையில என்னை நெறய கேலி கிண்டல் எல்லாம் பண்ணாங்க. அது ஒரு பக்கம் இருந்தாலும், என்ன நான் முழுசா உணர்ந்தது என்னுடைய இரண்டாவது பிரேக்-அப் (Break-up)-க்குப் பிறகுதான். அதன் பிறகுதான் சமூகத்துக்கு இதுதான் நான்-னு தெரிவிச்சேன்.
கே: எல்லாருக்கும் முதல் காதல்-ன்றது ரொம்ப முக்கியமான மறக்க முடியாத நிகழ்வு. உங்க முதல் காதல் பத்தி சொல்ல முடியுமா?
தி: முதல் காதல்-ன்ற வார்த்தைய கேட்டாலே என்னை அறியாம எனக்கு வெக்கம் வந்துடும். ஏன்-னா அதுக்கு முன்னாடி வரை நான் பார்த்த ஆண்கள் எல்லாரும், என் உடல் மீது ஈர்ப்பு கொண்ட ஆண்கள் தான். ஆனால், என் முதல் காதல் அப்டி இல்ல. முதல் முதலா ஒருத்தர பாக்கறேன். அவன் யாருன்னு தெரியாது. என் வகுப்பு வாசல்-ல நின்னுட்டு இருக்கான். 2-3 நாளா அப்டி நிக்குறான். அவன் யாருக்காக நிக்குறான்-னும் எனக்குத் தெரியாது. என் நண்பர் ஒருத்தவர்தான், அவன் எனக்காக வெயிட் (wait) பன்றான், என்கிட்ட பேசணும்-னு நெனைக்குறாரு-ன்னு சொன்னாரு. நான் போய் பேசும்போது “நான் கொஞ்ச நாளா உன்ன பாத்துட்டு இருக்கேன். எனக்கு உன்ன புடிச்சிருக்கு. நான் உன்ன லவ் (love) பண்றேன்-னு சொன்னாரு. எனக்கு சிரிப்பு தான் வந்தது. அதோட மனசுல ஒரு வெக்கமும் இருந்துச்சு. எனக்கு 16, அவருக்கு 17 வயசு இருக்கும் அப்போ. எனக்கு அது புதுசா இருந்துச்சு. அவர் டெய்லி (daily) என்னைய பாக்க வந்து நிப்பாரு. ஸ்கூல் (school)-ல எல்லாரும் பாத்து பயப்படக்கூடிய ஒரு நபர் அவரு. அப்டி பட்ட ஒருத்தரு எனக்காக காத்துட்டு இருக்காரு-ன்றது ஒரு பக்கம் கர்வம் ஆகவும் இருந்துது. அந்த சமயங்கள்-ல எல்லாரும் அவர் பேரு சொல்லி தான் என்னய கிண்டல் பண்ணுவாங்க. ஆனா எனக்கு தெரியாது ஏன் கிண்டல் பண்றாங்கன்னு. அப்றம் நான் அவர்கிட்டயே கேட்டேன் “ஏன் உங்க பேர வெச்சு கிண்டல் பண்றாங்கன்னு”. “நான் எல்லார்கிட்டயும் நீ என்னோட வைஃப் (wife)-னு சொல்லிருக்கேன்”-ன்னு சொன்னாரு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில. அப்ப அவரு 12-th, நான் 11-th. அந்த காலகட்டம் ரொம்ப மகிழ்ச்சியான ஒரு காலம். என்கிட்டே யாருமே நெருங்க முடியாது. எனக்கு ஒரு பாதுகாப்பா நின்னாரு அவரு. அந்த உறவு 3 வருஷங்கள், நான் பி.காம் (B.Com.,) ரெண்டாவது வருஷம் படிக்கிற வரை நல்லா போச்சு.
கே: உங்க கல்லூரி வாழ்க்கை எப்படி இருந்துச்சு? LGBT அப்படிங்கிற டேர்ம் (term) உங்களுக்கு எப்ப தெரிய ஆரம்பிச்சுது?
தி: ஸ்கூல் (school) வரைக்கும் நான் ரொம்ப பொலைட் (polite)-ஆ இருந்தேன். சத்தமா பேசமாட்டேன், சத்தமா சிரிக்கமாட்டேன். ஒரு இடத்துல உக்காந்துட்டா எந்திரிச்சு ரெஸ்ட்ரூம் (restroom) கூட போக மாட்டேன். பயந்த சுபாவத்தோட இருந்தேன். அப்ப என்னோட அந்த முதல் காதலன் என்கிட்ட “நான் எப்பவும் உன் கூடவே இருக்க மாட்டேன். உன்னைய ப்ரொடெக்ட் (protect) பண்ணிட்டே இருக்க முடியாது. நீ இன்னும் தைரியமா இருக்கனும். நான் காலேஜ் (college) போய்ட்டா நீ 12-th படிக்கும்போது எப்படி இருப்ப, யோசிச்சு பாரு. நீ யாராச்சும் ஏதாச்சும் கேட்டாங்கன்னா ரியாக்ட் (react) பண்ணு. உன்னைய எதும் சொன்னாங்கன்னா ஏன்-ன்னு கேளு. பொறுமையா கேக்காத, சத்தமா கேளு. அப்போ உன்னைய சொல்றவங்க பயப்படுவாங்க”-ன்னு சொல்லி கொடுத்தாரு. அத நான் பின்பற்ற ஆரம்பிச்சேன். காலேஜ் (college) வந்த அப்றம் சீனியர்ஸ் (seniors) கூட என்கிட்டே பேச பயப்படுவாங்க. என்னய யாரும் கேலி கிண்டல் பண்ண மாட்டாங்க. நான் எதையுமே சத்தமா தான் பேசுவேன். நான் எனக்காக, என்னய காப்பாத்திக்கிறதுக்காக ஒரு பிம்பத்த உருவாக்கினேன். அந்த பிம்பம் எனக்கு பழகிடுச்சு. என்னுடைய கல்லூரி வாழ்க்கை ரொம்ப நல்லா போச்சு. நான் நெறய கத்துக்கிட்டேன். அங்கதான் நான் சமூக சேவைகள்-ல ஈடுபட ஆரம்பிச்சேன். காலேஜ் (college)-ல ஸ்டூடெண்ட் ரெப்ரெசென்டடிவ் (Student Representative), டிபார்ட்மென்ட் ஜெனரல் செகரெட்டரி (Department General Secretary), டிபார்ட்மென்ட் செகரெட்டரி (Department Secretary)-ஆ எல்லாம் இருந்தேன். எனக்குள்ள ஒரு ஆளுமைய உணர்ந்தது கல்லூரி-ல தான். கல்லூரி-ல எனக்கு புல்லீஸ் (bullies) கெடயாது. கல்லூரி வாழ்க்கை ரொம்ப நல்லாவே போச்சு. ஆனா அப்பவும் நான் குயர் (queer)-ன்றத உணரல. நான் வேலை-ல இருக்கும்போது, ரெண்டாவது பிரேக்-அப் (break-up)-க்கு அப்புறமாத்தான் நான் உணர்ந்தேன். அதுக்கு முன்னவரை, எனக்கு புடிச்ச ஒரு பையனோட நான் உடலுறவு வெச்சுக்குறேன் அப்டின்ற ஒரு மனநிலை-ல தான் இருந்தேன். அத மாத்துனது என்னோட ரெண்டாவது பிரேக்-அப் (break-up) தான்.
கே: உங்க குரலையோ, இல்ல நீங்க ரியாக்ட் (react) பண்றத பாத்தோ சுத்தி இருக்கவங்க பயப்பட்ட மாதிரியான தருணம் ஏதாச்சும் இருக்கா?
தி: நெறய நேரங்கள்-ல நடந்துருக்கு. நெறய பெரு என்னோட வாய்ஸ் (voice)-அ கேட்டு தூரமா ஒதுங்கி போய்டுவாங்க. இப்பவும் நடக்குது. தெரியாத நபர்கள் யாரும் கால் (call) பண்ணாங்கன்னா “சொல்லுங்க மேடம் (madam)” அப்டின்னு சொல்லுவாங்க. என் வாய்ஸ் (voice) கேட்டு கைதட்டியோ இல்ல வார்த்தைகள் சொல்லி கேலி கிண்டல் பண்றதோ இன்னைக்குமே நடந்துட்டு தான் இருக்கு. ஆனா நான் அத கடந்து வர பழகிட்டேன். இது தப்புன்றத பத்திலாம் அவங்களுக்கு விளக்க விருப்பமும் இல்ல, நேரமும் இல்ல.
கே: அருமையா சொன்னிங்க. கலை, இலக்கியத்துக்கும் LGBT-க்கும் இருக்க சம்மந்தத்த பத்தி நீங்க என்ன நெனைக்குறிங்க?
தி: கலை, இலக்கியத்துக்கும் LGBT-க்கும் எந்த அளவுக்கு சம்மந்தம் இருக்கு-ன்னு பாத்தோம்னா, ஒரு புத்தகம் புரட்சி செய்யும். புரிதல குடுக்கும். காலத்தால் அழிக்க முடியாத ஆவணம் அது. இன்னைக்குவரைக்கும் தமிழ்-ல குயர் (queer) இலக்கியம், ரொம்ப கம்மியாதான் இருக்கு. அதையும் மக்கள்கிட்ட கொண்டு போய் சேக்குறதுக்கான வேலைகளை பெருசா பண்றது கெடயாது, ஒரு சில பதிப்பகங்கள் தவிர. எல்லாருமே அத ஒரு பொருள் ஈட்டும் நோக்கத்துக்காக மட்டுமே பாக்குறாங்க. இதை நாங்க எப்படி பாக்கிறோம்-னா, மக்கள் கிட்ட நம்ம சமூகத்தைப் பத்தி கொண்டு போய் சேக்கக் கூடிய ஒரு கருவியாதான் பாக்கிறோம். பாடல், சினிமா, தியேட்டர் (theatre) முதலிய கலை வடிவங்கள்-ல குயர் (queer) மக்கள் இருக்கணும். இப்பவரை குயர் (queer) மக்கள கேலி பண்ற மாதிரியான விஷயங்கள் தான் இருக்கு. மிக சிலர் தான் நம்மல சப்போர்ட் (support) பண்றாங்க. ஏன் கலைவடிவம் ரொம்ப முக்கியம்-னா, நம்ம வலிய ஒருத்தவங்ககிட்ட சொல்றத விட அத நம்ம திரையிட்டு காட்டினோம்னா அது ஒருத்தவங்கள தாக்கும். ஒரு திருநங்கை படுற துயரங்கள நீங்க சொல்றதுக்கும், நடிச்சு காட்றத்துக்கும் நெறய வித்யாசங்கள் இருக்கு. நம்மல உணர வைக்கும். அதனால் இது ரெண்டையும் மக்கள்கிட்ட கொண்டு போய் சேக்குறதுக்கு நம்ம பயன்படுத்துற ஆயுதமா நான் பாக்குறேன். குயர் (queer) மக்கள்-ல நெறய கலைஞர்கள் இருக்காங்க. ஆனா அவங்களுக்கு வாய்ப்ப இந்த சமூகம் குடுக்க மாட்டிங்குது. இப்போ இருக்க கலை இலக்கிய வடிவம் ஆணால், ஆணுக்கும் பெண்ணுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு வடிவமாதான் இன்னைக்கும் இருக்கு. அப்ப நாங்க எங்க போவோம். குயர் (queer) மக்களுக்கு-ன்னு ஒரு வடிவத்த கடந்து 10 வருஷமா தான் உருவாக்க தொடங்கிருக்காங்க. ரேவதி அம்மா, ஸ்வேதா அக்கா, கல்கி சுப்ரமணியம் இவங்கள மாதிரியானவர்கள் அந்த வடிவத்தை உருவாக்கிட்டு இருக்காங்க. அவர்கள் பின்தொடர்ந்து இன்னும் நிறைய குயர் (queer) மக்கள், அதுக்குள்ள வர்றாங்க. இவங்களுக்கு முன்னாடி எங்களுக்கு உருவாக்கமே கெடயாது. இப்போ உருவாக்கம் வரும்போது வாய்ப்புகள் கொடுக்கப்படணும், கொடுங்க. 2011-ல வெளியான ஒரு இந்தி தொடர்-ல gay உறவைப் பத்தி கண்ணியமா சொல்லிருப்பாங்க. அத தமிழ்-ல டப் (dub) பண்ணி “என் வாழ்க்கை”-ன்னு ஒளிபரப்பு செஞ்சாங்க. அதே மாதிரி, “கருத்தம்மா”-ன்ற ஒரு தொடர்லயும் அத பண்ணாங்க. அது மாதிரியான விஷயங்கள் ஏன் இன்னும் தமிழ் சின்னத்திரைலையோ வெள்ளித்திரைலையோ இல்ல!? எங்கள கேலி பண்றத மட்டும் தான் பண்றிங்களே தவிர, எங்களுக்குள்ளயும் காதல் இருக்கு, வலி இருக்கு, ஏக்கம் இருக்கு, தவிப்பு இருக்கு. ஆனா ஏன் இதெல்லாம் ஒரு துணைக் கதையா கூட வெக்க மாட்றிங்க. எங்களை கதாநாயகன், கதாநாயகியா காட்டுற அளவுக்கு கூட வேணாம். கதாநாயகி ப்ரெண்ட் (friend)-ஆ காட்றதுக்கு கூட உங்க மனசு உறுத்துதில்ல, அதான் ஏன்னு கேக்குறேன். மக்களுக்கு ஒரு நல்ல முற்போக்கான விஷயத்தை கொண்டு போய் சேக்குற ஒரு கலைவடிவம் தான் ஒரு நல்ல கலைவடிவமா இருக்கும்.
கே: இதுக்கான தடையா என்ன இருக்குன்னு நீங்க நெனைக்குறிங்க?
தி: புரிதலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் தான். 2 வருஷத்துக்கு முன்னாடி தன்னை ஒரு முற்போக்கு சிந்தனையாளர்-ன்னு சொல்லிக்கக் கூடிய ஒரு இயக்குநரோட ஒரு நேர்காணல் பாத்தேன். LGBT-ன்றது மேற்கத்திய கலாச்சாரம், அத ஏன் இங்க கொண்டுவர்றிங்கன்னு கேக்கறாரு. இப்டி முற்போக்கு பேச கூடியவர்களிடமே ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பான்மை இல்லாததுனால தான் எங்களுக்கான வாய்ப்புகளை பறிக்குறாங்க, மறுக்குறாங்கன்னு சொல்லமாட்டேன், பறிக்குறாங்க. ஏன் பறிக்கப்படுத்து-ன்னு சொல்றேன்னா அவங்களுக்கு புடிக்கல, உடன்பாடு இல்லன்றதுனால எங்கள் வாய்ப்புகள் பறிக்கப்படுது. தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்புனால தான் குயர் (queer) மக்களின் அடையாளம் அழிக்கப்படுது.
கே: அரசுத்துறைல இருந்து நீங்க என்ன எதிர்பாக்குறீங்க? அவங்க ஏதாவது பண்றங்களா இப்போ?
தி: நாங்க நெறயவே எதிர்பாக்குறோம். ரொம்ப மிகையாலாம் இல்ல. ஒரு மனிதனுக்கு தேவையான பேசிக் (basic) தேவைகளைத்தான் எதிர்பாக்குறோம், உணவு, உடை, இருப்பிடம், கல்வி – இது நாலும். இது நாலும் எல்லாருக்கும் சமமா கெடைக்குதான்னு கேட்டா இங்க ஒரு பெரிய கேள்விக்குறி இருக்கு. அதும் குயர் (queer) மக்களுக்கு கெடைக்குதான்னு கேட்டா, கிடைச்சாலும் கிடைக்க விடாத சூழல் தான் இருக்கு. இப்பதான் பாலிசி மேக்கிங் (Policy Making) பத்தி பேசிட்டு இருக்காங்க. அது வந்த அப்றம் தான் அதுல நமக்கு சாதகமா என்ன இருக்குன்னு பாக்கணும். குயர் (queer) மக்களுக்கு எப்படிப்பட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்துறாங்கன்றதுல தான் அரசாங்கம் குயர் (queer) மக்கள் மேல ஆர்வம் காட்றாங்கன்றது இருக்கு. ஒரு திருநங்கைய கொலை பண்ணா அதுக்கு தண்டனை 3 வருஷம் தான். எனக்குப் புரில. நாங்களும் மனுஷங்கதானே. என்னய ஒருத்தன் கொலை பன்றான்னா அவனுக்கு 3 வருஷம் தண்டனை போதுமா!? அது அரசாங்கத்தோட நலத்திட்டமா!? ஒரு பெண்ண பலாத்காரம் பண்ணாலே மரண தண்டனை குடுக்கணும்ன்னு பேசுறோம். அப்ப பெண்ணியம் பேசுறவங்கள்லாம் உண்மைலயே பெண்ணியவாதிகளான்னு யோசிக்கக் கூடிய அளவுக்கு தோணுது எனக்கு. நாங்களும் பெண்கள் தான். எங்க மேல வன்முறை நடக்கும்போது, அவர்களுக்கான தண்டனை மட்டும் ஏன் கம்மியா இருக்கு. எங்க மேல நடக்கக் கூடிய வன்முறைக்கு நீதிமன்றமோ காவல்துறையோ அரசாங்கமோ ஏன் கவனம் காட்ட மாட்டிங்குறாங்க!? எங்களைப் பாதுகாக்க ஏன் எந்த மாதிரியான நலத்திட்டங்களையும் உருவாக்க மாட்டிங்குறாங்க!? ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குறது அரசாங்கத்தோட கைல இருக்கு. அரசாங்கம் எப்போ அதுக்கான நடவடிக்கைகள் எடுக்குதோ, அப்பதான் குயர் (queer) மக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இருக்கும். இப்ப இருக்கக் கூடிய அரசு, LGBT மக்கள பத்தி நெறய யோசிக்கிறாங்க, உள்ளடக்கி பேசுறாங்க, நெறையா செய்றாங்க. அத பாக்கும்போது நல்லது நடக்கும்ன்ற நம்பிக்கை. அவங்கள்டயும் நெறய எதிர்பார்ப்புகள் இருக்கு. அத அவங்க நிறைவேத்தலைன்ற வருத்தமும் இருக்கு.
கே: LGBT-ல் சாதி மதத்தின் தாக்கம் எப்படி இருக்கு-ன்னு நெனைக்குறிங்க?
தி: தோழர் அழகுஜெகன் அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவாரு. ஒரு கட்டத்துல குயர் (queer) மக்களை இந்த சமூகம் ஏத்துக்கும், 20 வருஷத்துலயோ, 30 வருஷத்துலயோ. ஆனா இந்த சமூகத்துக்குள்ள தீண்டாமை இருக்குல்ல, சாதி சார்ந்தோ, மதம் சார்ந்தோ, அது என்னைக்குமே மாறாது. அது இருக்க வரைக்கும் LGBT-க்கான பாதுகாப்பான சூழல் உருவாகாது. ஏன்னா சாதி-ன்றது மதம் சார்ந்து தான் இருக்கு. எல்லா மதத்துலயும் சாதிய ஒடுக்குமுறை இருக்கு. அதே மாதிரி எல்லா மதத்துக்குள்ளயும் மதத் தீவிரவாதம் இருக்கு. நான் இந்துவாக தான் பிறந்தேன். ஆனா அத நெனச்சு நான் நெறய நேரங்கள்ல வருத்தப்பட்டிருக்கேன். ஏன்னா, பாராளுமன்றத்துல தன்பாலீர்ப்பாளர்கள் திருமணத்தைப் பத்தி ஒரு கேள்வி எழுப்பப்படுது. செக்ஷன் (section) 377-க்கு அப்றமா. இந்துத்துவத்த தாங்கி புடிக்கக் கூடிய எம்.பி., (M.P.,) ஒருத்தர், இந்து முறைப்படி திருமணம் பண்ணா திருமணத்த அங்கீகரிக்கிறோம்-ன்னு சொன்னாரு. இந்து முறைப்படினா கணவன்-மனைவி உறவு. ஆனா நாங்க அந்த பைனரி (binary) அமைப்புக்குள்ளயே வர மாட்டோம். நாங்க நான்-பைனரி (non-binary)-ஆ தான் தள்ளி நிக்குறோம். நான்-பைனரி (non-binary)-னா ஜென்டர் (gender) அமைப்பு கெடயாது. சமூகம் உருவாக்கி வெச்சுருக்க ஒரு கட்டமைப்பு. அதுக்குள்ளயே நாங்க வரல. சரி, நான் இந்துவா பொறந்தேன், வள்ர்ந்தேன். நான் ஒரு இந்து பையன காதலிச்சு கல்யாணம் பண்ணி கணவன்-மனைவி-யா இருக்கோம்ன்னு வெச்சுக்கோங்க. அப்ப கிறிஸ்துவர்கள் என்ன பண்ணுவாங்க!? இஸ்லாமியர்கள் என்ன பண்ணுவாங்க? மத்த மதத்துல LGBT மக்களே இல்லையா!? அப்பா நீங்க ஒரு மதத்த வெச்சு, இன்னொரு மதத்த ஒடுக்கும்போது, வெறுப்பு உருவாகும். ஏற்றுக்கொள்ள மனப்பான்மை இல்லாம போகும். இதே தான் சாதிலயும் நடக்குது. சாதி-ல கௌரவம், மரியாதை, நம்ம சாதிய சேந்தவங்க என்ன நினைப்பாங்க, அது மாதிரி நெனச்சுட்டு ஆணவ கொலை பண்ணக் கூடியவர்களும் நெறய பேர் இருக்காங்க. அதனால, இந்த சாதியும் மதமும் இருக்குற வரைக்கும், LGBT-க்கு பாதுகாப்பான சூழல் இருக்காது. ஏன்னா, உதாரணமா, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நெறய கருத்து வேறுபாடுகள் இருக்கு. ஆனா LGBT-ன்னு வர்றப்ப ரெண்டு பேரும் ஒரே முடிவுல நிப்பாங்க. ரெண்டு பெரும் ஏத்துக்க மாட்டாங்க. இதுலயே உங்களுக்கு மதத்துனால LGBT சமூகத்துக்கு ஏற்படக் கூடிய தாக்கம் தெரிஞ்சுருக்கும். மதம் சார்ந்து இயங்கக்கூடிய நிறைய நிறுவனங்கள்-ல குயர் (queer) மக்களின் குரல் நசுக்கப்படுது. மிக சிலர் ஏத்துக்குறாங்க. இங்க வலிகள் நெறய இருக்கு. அதத் தொடைக்க ஒரு கை பத்தாது. பல கைகள் தேவைப்படுது. அப்டி பாக்கும்போது, நீங்க என்னதான் வழக்கு போட்டு, உங்க பக்க நியாயங்களை வெச்சு வாதாடினாலும், சட்ட அமைச்சர் முடிவு பண்ணனும், எம்.பி., (M.P.,) முடிவு பண்ணனும். சட்ட அமைச்சர் இது சட்டத்துக்கு எதிரானது-ன்னு சொல்லுவாரு, அதையும் தாண்டி மதத்துக்கு எதிரானது, மதக் கலாச்சாரத்துக்கு எதிரானது-ன்னு சொல்லுவாங்க. அதையே தான் எம்.பி., (M.P.,)-யும் சொல்லுவாங்க. இப்போ ஆட்சில இருக்கவங்க மட்டும் தான் பண்றங்களா னு கேட்டா, கிடையாது. முன்னாடி ஆட்சில இருந்தவங்க இத பத்திலாம் கவலையே படல. இப்ப பேசுறாங்க இது தர்றோம், அது தர்றோம்ன்னு. குயர் (queer) மக்கள வெச்சு அரசியல் பன்றாங்க.
கே: இந்த நிலை வருங்காலத்துல மாற என்ன மாதிரியான நடவடிக்கைகள்லாம் எடுக்கணும்-ன்னு நினைக்கிறீங்க?
தி: இதுக்கான பதில நான் குயர் (queer) சமூகத்துக்கு தான் சொல்ல விரும்புறேன். பொது சமூகத்துக்கு இல்ல, ஏன்னா பொது சமூகத்துக்கிட்ட போய் எங்களை ஏத்துக்கோங்கன்னு சொல்ற எடத்துல நாங்க இல்ல. உங்க யார்கிட்டயும் போய் எங்களை ஏத்துக்கோங்கன்னு சொல்லல. எங்களுக்கான உரிமையை பறிக்காதீங்கன்னு தான் சொல்றோம். நான் இந்தியா-ல பொறந்துக்குறேன். அதனால எனக்குன்னு அடிப்படை உரிமைகள் இருக்குல்ல. அதுல தலையிடாதீங்கன்னு சொல்றேன். அவ்ளோதான். வருங்காலத்துல எங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னா அதுக்கு நாங்க என்ன பண்ணனும்-னு என் குயர் (queer) மக்களுக்கு தான் சொல்ல விருப்பப்படுறேன். முதல்ல கல்வி. கல்வி ரொம்ப ரொம்ப முக்கியம். குயர் (queer)-ஆ இருந்துட்டு குறைந்தபட்சம் ஒரு டிகிரி (degree)-ஆச்சும் முடிச்சுருக்கணும், டிகிரி (degree)-யோ, ஐடிஐ (ITI)-யோ, டிப்ளோமா (Diploma)-வோ ஆச்சும் முடிச்சுருக்கணும். யாரையும் சார்ந்திருக்காம மாசம் குறைந்தபட்சம் 10000 சம்பாதிக்கிற அளவுக்காச்சும் தகுதி இருக்க அளவு கல்வி இருக்கணும். அதோட ஒரு கூடுதல் திறன் இருக்கணும். ஏன் குயர் (queer) மக்கள் அன்ட்ராபிரேனார் (entreprenaur)-ஆ இருக்க கூடாதா!? நடிகராவோ இயக்குநராவோ எழுத்தாளரவோ இருக்கக்கூடாதா!? இன்னும் நம்ம நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டு அதுல சாதிக்கிறதுக்கான விஷயங்கள பண்ணலாம். இது முதல் விஷயம். இரண்டாவது விஷயம். மிக மிக முக்கியமான விஷயம். குயர் (queer) குழந்தைகள பாதுகாக்கிறது. இதுல குயர் (queer) மக்களுக்கும் பங்கு இருக்கு, பொது சமூகத்துக்கும் பங்கு இருக்கு. உடல்ரீதியாவும் மனரீதியாவும், எந்த பாதிப்பும் உருவாக்காம, அன்பான, ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி, மன அமைதியோட அவங்க வாழ்க்கையை கொண்டுபோறதுக்கு உறுதுணையா இருக்கனும்ன்னு நான் நினைக்கிறேன். மூனாவது வேலை பாதுகாப்பு. இன்னைக்கு காலகட்டத்துல ஏதாச்சும் ஒரு பிரச்சனை வந்துச்சுனா யாரானாலும் வேலைய விட்டு போங்கன்னு சொல்லிடறாங்க. அப்டி அனுப்புறப்ப வெளிய போய் அவங்க வேலை தேடுவாங்க, கிடைக்கும், குடும்பத்தோட துணை இருக்கும் , சரி. அப்ப குயர் (queer) மக்கள் என்ன பண்ணுவாங்க. குடும்பத்தோட ஆதரவு இல்லாத குயர் (queer) மக்கள் என்ன பண்ணுவாங்க!? ஒரு புது வேலை கிடைக்க பல மாசங்கள் ஆகலாம். அந்த காலகட்டத்துல அவங்க வாழ்வாதாரத்த எப்டி பாத்துப்பாங்க!? முக்கியமா திருநங்கை/ திருநர் மக்களுக்கு ரொம்ப கஷ்டம். அவங்களோட உடல்நிலைய பாத்துக்குறதுக்கே அவங்களுக்கு காசு பத்தாது. அப்டி இருக்கும்போது வேலை போயாச்சுன்னா அவங்க உடல், மனம் எந்தளவுக்கு பாதிக்கப்படும். அதனால கண்டிப்பா வேலை பாதுகாப்பு ரொம்ப முக்கியம். அதே மாதிரி எல்லா அலுவலகத்துலயும் குயர் (queer) மக்கள சாதாரணமா நடத்தணும். மத்தவங்கள மாதிரிதான் நாங்களும் குடுத்த வேலைய செய்யுறோம், அவ்வளவுதான். அதே மாதிரி குயர் (queer) மக்களுக்கு தரப்படுற ஊதியம், பிற மக்களுக்கு கொடுக்கப்படுற ஊதியத்த விட ரொம்ப கம்மியா இருக்கு. காரணம், அவங்க குயர் (queer) மக்களா இருக்கதுனால மட்டும். அப்ப அது சம வாய்ப்பு கிடையாது. அது சமத்துவம் கிடையாது. சமத்துவம்-ன்றது அவங்களுக்கு சம வாய்ப்பு இருக்கணும், அதே மாதிரி சமமான வெகுமதியும் இருக்கணும். என்கிட்ட இருக்க திறமைக்கு குடுக்குற வெகுமதி ஏன் சமமா இல்லன்றது தான் என்னோட கேள்வி. அதுக்கு அப்றம் குயர் (queer) மக்களுக்கு இருக்க மிக முக்கியமான தேவை கிடைமட்ட இட ஒதுக்கீடு (Horizontal Reservation). கிடைமட்ட இட ஒதுக்கீடு (Horizontal Reservation), அப்டினா, தலித் பெண்கள்-ன்னு ஒரு பிரிவு இருக்கு. ஏன்னா அவங்க எஸ்.சி (SC) பிரிவுக்குள்ள வர்றதுனால. ஆனா எஸ்.சி (SC) பிரிவுல பிறந்த திருநங்கைக்கு அந்த வாய்ப்பு இருக்கான்னு கேட்டா, கிடையாது. வேற ஒரு பிரிவுல போட்டி போட சொல்றாங்க. யோசிச்சு பாருங்க. தலித் மாணவன், தலித் மாணவி இருக்காங்க. அவங்களுக்காக இட ஒதுக்கீடு கொண்டு வர்றாங்க. அவங்க குடும்பத்தோட துணை இருக்கு. ஆனா திருநங்கைக்கோ திருநர்க்கோ எந்த குடும்பம் துணை இருக்கு. அப்படியும்கூட படிச்சு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைக் குடுக்கல. இட ஒதுக்கீடு-ல வேலை குடுக்க சொல்லியாச்சு. ஆனா மாநில அரசு அதுக்கான எந்த முன்னெடுப்புமே எடுக்கல. ஒன்றிய அரசும் கூட. கண்துடைப்புக்கு பண்றோம்ன்னு சொல்றாங்களே தவிர, எந்த முன்னெடுப்புமே இல்ல. இட ஒதுக்கீட அதிகப்படுத்துங்க. பெண்களுக்கு இப்பதான் 33 வந்துருக்கீங்க. அப்ப எங்களுக்கு எப்ப குடுப்பீங்க. அது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயமா பாக்குறேன். இன்னொன்னு நம்மள நம்மலே நேசிக்கிறது, செல்ப் லவ் (Self-love). நம்ம உடல நம்ம ரொம்ப நேசிக்கணும். நம்ம துவண்டு போய் உக்கார்ற நேரங்கள்ல நம்மல நம்மலே நேசிச்சாதான், மன அழுத்தமோ, மனச் சோர்வோ நம்மள ஆட்சி பண்ணாது.
நம்மை ஆளுமைக்கு உள்ளாக்கிவிடாது, அது நம்மை ஆட்சி செய்திடாது. எல்லோருக்கும் மன அழுத்தம் இருக்கும், அதை நாம் கடந்து வந்து விடுவோம். ஆனால் தன்னை நேசிக்காத நபராக இருந்தால், அவரின் முடிவுகள் தவறாக இருக்கும். ஆகையால், நம் உடல் எவ்வாறு இருந்தாலும் நாம் அதை நேசிக்க வேண்டும். இன்று அதிகளவில் நிறம், உடல், உருவம் சார்ந்த கேலிகளும் கிண்டல்களும் செய்கிறார்கள். யார் என்ன கூறினால் என்ன? என் உடலை நான் நேசிக்கிறேன். நான் தினமும் கண்ணாடி முன் நின்று என் உடலை ரசிப்பேன். எனக்கு தொப்பை இருக்கிறது என்று கூறினாலோ நான் கருப்பாக இருக்கிறேன் என்று கூறினாலோ நான் கவலை கொள்ள மாட்டேன். அதற்காக எந்தவித சிகிச்சையும் எடுத்து கொள்ளவும் மாட்டேன். ஒரு காலத்தில் நான் அதை செய்து கொண்டிருந்தேன். பிறகு புரிந்துகொண்டேன், சிகிச்சை எடுத்துகொள்வதினால் என்ன உபயோகம்? ஏனென்றால் 2019ல் 98 கிலோவில் இருந்து 68 கிலோவாக என் உடல் எடையைக் குறைத்தேன். உடல் எடையைக் குறைத்ததினால் இந்த சமூகம் என் தலையில் கிரீடம் தூக்கி வைத்ததா? இல்லையே. அப்போது என்னை எப்படி பார்த்ததோ அப்படி தான் தற்போதும் பார்க்கிறது. பிறகு ஏன் என்று எனக்கு தோன்றியது. நன்றாக சாப்பிடுகிறேன், மகிழ்ச்சியாக சிரிக்கிறேன். அதனால் தன்னலப் பற்று (self-love) என்பதை நான் மிக முக்கியமாக கருதுகிறேன். அடுத்ததாக உள்ள முக்கியமான விடயம் hearing (கேட்டல்). அதை பற்றி பேசுவதற்கு முன் நான் இரண்டு நபரைப் பற்றி பேசியே ஆகவேண்டும். அந்த இரண்டு நபர்கள் என்னுடைய குரு. நான் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தப்போது நான் ஒரு NGO (அரசு சார்பற்ற அமைப்பு) மூலமாக ஒருவரிடம் சென்றேன். அந்த அமைப்பின் பெயர் ஓரினம். அங்கு ராம்கி என்னும் நபர் இருந்தார். எல்லோரும் அவரை ராம்கி என்று அழைப்பர், நான் அவரை ஆர்.கே (RK) என்று அழைப்பேன். நான் பெரும்பாலான இடங்களில் கூறியிருக்கிறேன். அது அவருக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை ஆனால் உண்மையாகவே நான் அதை என் மனதிலிருந்து தான் கூறுகிறேன். இன்று தினு என்னும் ஓர் நபர் உயிருடன் இருக்கிறேனென்றால் அதற்கு காரணம் ஆர்.கே மட்டும் தான். அவர் கொடுத்த தைரியம், ஊக்கம் மட்டும் தான் காரணம். அப்போது, நான் என் இரண்டாவது காதல் முறிவுக்கு பின்னால் மிகவும் தனிமையாகி, மன அழுத்தத்திற்கு உள்ளாகி, எனக்கு உதவி செய்வதற்கு யாருமே இல்லை என்று எண்ணி என்ன செய்வது என்று அறியாமல் தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றேன். மின்விசிரியில் துணியைப் போட்டுவிட்டு எப்படி அதை கட்டலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன். அப்போது வெளியில் இருந்து அம்மா கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. நான் வேகமாக அந்த துணியை எடுத்துவிட்டு ஒரு நிமிடம் நாம் ஏன் சாக வேண்டும் என்று யோசித்தேன். மறுநாள் அலுவலகம் சென்றதும் NGO பற்றி ஆராய்ந்தேன், அப்போது ஓரினம் தென்பாட்டது. அவருக்கு நான் messengerஇல் குறுஞ்செய்தி அனுப்பியதும் அவர் என்னை தொடர்பு கொண்டார், அவரிடம் பேசினேன். அவர் என்னை KMC யில் கவுன்செல்லிங் எடுத்து கொள்ள கூறினார். அதுபோலவே செய்தேன். அதன் பிறகு இரண்டு மூன்று அமர்வுகளுக்கு சென்றேன். அப்போது ஆர்.கே என்னிடம் கூறிய ஒரு விடயம் என்னவென்றால் “உன் குரலை நான் கேட்டேன், எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. அதனால் உன்னிடம் யாராவது பேச வேண்டும் என்று நினைத்தால், அதை கேள். அவரின் குரலைக் கேள். அது மிக மிக முக்கியம். நம் குயர் மக்களுக்கு மிக முக்கியம். ஏனென்றால் அது தான் நமக்கு கிடைப்பது இல்லை”. அது தான் நான் செவிகள் உள் வர காரணமும் கூட. இரண்டாவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு. அதை கடைசியாக கூறுகிறேன். சகோதரன் என்னும் அரசு சார்பற்ற அமைப்பில் (NGO) ஜெயா ஆன்டி இருக்கிறார். அவர் என்னை ஸ்வீட்டி என்று அழைப்பார். அவர் அதில் நிர்வாக இயக்குனர். எனது Come outக்கு பிறகு 2018ல் நான் அவரிடம் பேசும்போது அவர் கூறிய வார்த்தை என்னவென்றால் “பொது சமூகத்தை நீ கேள்வி கேட்காதே ஸ்வீட்டி. உன்னை நீ கேள்வி கேட்டு கொள், உனக்கு என்ன கடமை இருக்கிறது என்று”. “அனைத்து குயர் மக்களுக்குமே ஒரு கடமை இருக்கிறது. தன்னைப் பற்றிய புரிதலைத் தன் குடும்பத்தாருக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமை. நீ மைக் பிடித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. ஊடகத்தில் பேச வேண்டிய அவசியம் இல்லை. நீ சாலைகள் தோறும் அட்டைகள் பிடிக்க அவசியம் இல்லை. ஆனால் உன்னை சுற்றி இருப்பவர்களுக்கு அந்த புரிதலைக் கொடுக்க வேண்டும். நீ நான்கு நபருக்கு கொடுத்தால் அது நாற்பது ஆகும். நாற்பது ஐம்பது ஆகும் ஐம்பது அறுபது ஆகும். ஒரு கையால் தட்டினால் மட்டுமே எல்லாம் கிடைத்துவிடாது எல்லோரும் இணைந்து தட்டும்பொழுது தான் கிடைக்கும்” என்று ஜெயா ஆன்டி கூறினார். அதனால் எனக்கு எங்கெங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் குயர் மக்களைப் பற்றி நான் பேசுவேன். அப்படி தான் என் பயணம் தொடங்கியது. அதனால் கேட்டல் என்பது மிக முக்கியமான விடயம் என்று நான் நினைக்கிறன். இதெல்லாம் தான் குயர் மக்களுக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய விடயம் என்று நான் நினைக்கிறேன்.
ஸ்ரீகாந்த் : செவிகளுடன் எப்படி இணைந்தீர்கள்? அந்த பயணம் எப்படி இருந்தது?
தினு : ஜெயா ஆன்டியுடன் பேசி முடித்ததற்கு பின் நான் யூட்யூப் (youtube) பக்கம் ஒன்று தொடங்கினேன். அதில் பின்தொடர்பவர்கள் (followers) பெரிதாக எல்லாம் இல்லை. என்னுடைய நோக்கம் குயர் மக்களைப் பற்றிய புரிதல் தமிழாக்கத்தில் இருக்க வேண்டும் என்பதே. கே (gay) என்றால் என்ன? அந்த காலகட்டத்தில் ஒரு ஆணும் ஆணும் காதலிக்கிறார்கள், உடலுறவு கொள்கிறார்கள் என்பதைத் தமிழாக்கத்தில் ஊடகங்களில் பெரியதாக கூறியது இல்லை. நான் அதை முகநூலிலும் பகிர்வேன். அதன் வரவேற்பு நன்றாக இருந்தது. வீட்டு பக்கத்தில் உள்ளவர்களும் அதை பற்றி பேசுவார்கள், சந்தேகம் கேட்பார்கள். 2019 Pride நடக்கும்பொழுது, உங்களின் காணொளியை நான் வீட்டில் காட்டினேன் என்று என்னிடம் வந்து கூறினார்கள். நான் அப்போது என்னை பெரிய பிரபலமாகவெல்லாம் எண்ணி கொள்ளவில்லை. எனக்கு கிடைத்த வழிகாட்டுதலின்படி என் கடமையைச் சரிவர செய்துகொண்டிருக்கிறேன் என்றே தோன்றியது. அந்த pride இல் தான் நான் அழகு ஜெகனை சந்தித்தேன். அங்கு நான் “கல்யாணம் செய்துகொள்ள மாப்பிள்ளை யாராவது இருக்கிறீர்களா?” என்று கேட்டேன். உடனே ஜெகன் “நான் இருக்கிறேன்” என்று கூறிக்கொண்டு வந்தார். இருவரும் சேர்ந்து ஆடினோம். பிறகு விடைபெறும்பொழுது, ஜெகன், “நான் தற்போது பெங்களூரில் இருக்கிறேன். சென்னை வந்ததும் ஒரு NGO தொடங்கும் எண்ணம் உள்ளது. இணைந்து ஏதாவது செய்யலாம்” எனக் கூறினார். பிறகு நாங்கள் எண்கள் பரிமாறிக்கொண்டு விடைபெற்றோம். அவ்வப்போது நான் வெளியிடும் காணொளியில் திருத்தம் ஏதேனும் இருந்தால் கூறுவார். அதன்பிறகு 2020ல் covid தொடங்கியது. நான் அப்போது ஒரு NGO மூலமாக பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு டியூஷன்(tuition) எடுத்து கொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில் தான் நான் தன்பாலீர்ப்பாளராக come out ஆனேன். அதனால் அந்த NGO விற்கும் எனக்கும் சில முரண்பாடுகள் ஏற்பட்டது. குயர் மக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஆசிரியர்களாகிய நீங்கள் ஏற்படுத்தவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அது ஒரு தனிநபரின் விருப்பு வெறுப்பு காரணமாக மறுக்கப்பட்டது. அவர்கள் என்னை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று எண்ணும்போது covid தொடங்கியது. கோவிட் தொடங்கியதும் நிதியில்லை எனக் கூறி அந்த டியூஷன் சென்டரை மூடிவிட்டார்கள். அந்த காலகட்டத்தில் ஒரு நாள் ஜெகன் என்னை அழைத்து pride நடப்பது கடிது, அதனால் நாம் அதை அப்படியே விட்டுவிட முடியாது அனைவரையும் உற்சாக படுத்தும் விதமாக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி அனைவரிடமும் காணொளிகள் பெற்று அதை பதிவேற்றம் செய்திருந்தார். அதில் நானும் பேசியிருந்தேன். அடுத்ததாகவே அது ’30 inspiring queer’ என்னும் தலைப்பில் வந்தது. அப்போது ஜெகன் ஒரு ஹெல்ப்லைன் (helpline) தொடங்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம், அதற்கு பயிற்சி எடுத்து கொள்ளலாம் என்றார். பிறகு ஒரு மூன்று மாதம் வெவ்வேறு துறைகளிலிருந்து வந்த வல்லுநர்களிடமிருந்து பயிற்சி பெற்றோம். பிறகு அதை துவங்குவதற்கு கொஞ்ச நாள் முன்
ஜெகன், “இந்த ஹெல்ப்லைன் பெயர் செவிகள் நீங்கள் தான் அதன் ஒருங்கிணைப்பாளர்” என்று கூறினார். அப்போது நான் இது சரியாக இருக்குமா என்னால் இதை சரிவர செய்யமுடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் உன்னால் செய்யமுடியும் என்று என்னை ஊக்கப்படுத்தியதால் தான் நான் செவிகளுடன் இணைந்தேன். செவிகளில் 2 ஆண்டுகளில் ஏறத்தாழ 1000 அழைப்புகளை நான் ஏற்று பேசியிருக்கிறேன். ஒவ்வொரு அழைப்புமே மறக்கமுடியாததாக இருக்கும், பல வலிகள் இருக்கும், பலர் அழுவார்கள், சிலருக்கான தீர்வுகள் எங்களிடம் இருக்கவே இருக்காது. சிலர் ஆழமான மன அழுத்தத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு மருத்துவ துறையில் இருந்து எவ்வாறு உதவ முடியும் என்று பார்த்து உதவி இருக்கிறோம். இவ்வாறு தான் என் பயணம் அணியமில் (Aniyam Foundation) தொடங்கியது. அதன்பிறகு அணியம் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகி அணியமின் பால்மணம், விருது வழங்கும் விழா (award functions) உட்பட மற்ற இயக்கங்களிலும் எனது பங்கையாற்றினேன். அப்போது தான் ஜெகன் டியூஷன் (tuition) எடுப்பதை மறுபடியும் தொடங்கு நான் நிதி உதவி செய்கிறேன் என்றார். ஒரு வாரம் கழித்து இதை நாமே செய்யலாம் என்று அதற்கு பாபா சாகேப் சமூக கற்றல் மையம் எனப் பெயரிட்டு தொடங்கினோம். இரண்டு ஆண்டு நன்றாக சென்றது. அங்கு பாடம் மட்டுமல்லாது குயர் மக்களைப் பற்றிய கல்வி உட்பட முற்போக்கு சிந்தனைகள் உடைய பல விடயங்களைக் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தோம். அதன் பிறகு அங்கு சில அரசு சார்ந்த நில பிரச்சினையால் சிலர் வீடு மாறி சென்று விட்டனர். எண்ணிக்கை குறைவால் அம்மையத்தை மூடி விட்டோம். அதன் பிறகு அணியமுடன் தொடர்ந்தேன். இப்பொழுது நான் ஒரு சின்ன இடைவெளி எடுத்து இருக்கிறேன்.
ஸ்ரீகாந்த் : அந்த இடைவெளியில் இருந்து சீக்கிரம் வெளியில் வந்து உங்கள் பணியினை தொடர்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அப்போது யூட்யூப் (youtube) பக்கம் வைத்திருந்தீர்கள் அல்லவா, இப்பொழுது யூட்யூபில் பால்புதுமையர் (LGBTQ) சம்பந்தமாக தமிழில் தட்டச்சு செய்தால், ஒன்று அதற்கு எதிர் மாறாக வரும் அல்லது pride சம்பந்தமாக வரும் அல்லது பாலியல் காட்சிகளாக வரும். இன்றளவுமே யாரும் அதில் இருக்க கூடிய பாலினம், பாலீர்ப்பு பற்றி தெளிவாக உங்களைப் போல் பேசவில்லை என்று கூறலாம். நீங்கள் மறுபடி இதை தொடருங்கள். ஆதரவளிக்க நாங்கள் அனைவரும் இருக்கிறோம்.
தினு : கண்டிப்பாக! இதை மறுபடி தொடங்க வேண்டும் என்று நாங்களும் நினைக்கிறோம், தொடங்க வேண்டும் என்னும் எண்ணமும் இருக்கிறது. அணியமின் யூட்யூப் (youtube) பக்கத்தில் நாங்கள் இதைப் பற்றி பேசியிருக்கிறோம். ஆனால் வணிகமாக ஒரு காணொளி பார்ப்பதற்கும் விழிப்புணர்வு காணொளி பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள் இங்கு இருக்கிறது. பார்ப்போம்! யூட்யூப் (youtube) பக்கத்தில் நாங்கள் விழிப்புணர்வு செய்வது மட்டுமல்லாமல் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் youtube பக்கங்களுமே பல நல்ல கேள்விகளைக் கேட்கலாம். எப்போதுமே உங்களுக்கு சின்ன வயதில் என்ன நடந்தது ? நீங்கள் இப்போது உணவுக்கு என்ன செய்கிறீர்கள்? என்பது போல் கேள்விகள் அல்லாமல் முற்போக்கு சிந்தனைகளோடு இன்னும் பல முற்போக்கான கேள்விகளைக் கேட்கலாம். எங்களிடம் கூறுவதற்கு பல விடயம் இருக்கிறது. அது போல் ஏன் கேட்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதுபோல் கேள்விகளைக் கேட்டால், அக்காணொளி இன்னும் அதிக மக்களைச் சென்று அடையும். எதிர்மறையாக பேசுவதை விட நேர்மறையாக பேசலாம்.
ஸ்ரீகாந்த் : பாலினம் பற்றி பேசும்பொழுது பல பேருடைய இன்ஸ்டாகிராம் (instagram) பக்கங்களிலோ அல்லது professional ஆன பதிவுகளிலோ he/him, she/her, they/them என மேலே குறிப்பிட்டு இருப்பர். ஏன் pronoun மிக முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அதை ஏன் நாம் உபயோகப்படுத்த வேண்டும்? அதை பற்றி கூற முடியுமா?
தினு : இப்போது நான் ஒரு ஆண் என்று வைத்துக்கொள்ளுங்கள். நான்கு பேர் இருக்கும் இடத்தில் வைத்து என்னை வாடி என்று கூறினால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? எனது மனம் புண்படும் இல்லையா? இப்போது என் உள்ளுணர்வு ஒரு பெண். ஆனால் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பயந்து நான் இந்த சமூகத்திற்கு முன்னால் எனக்கு பிடிக்காத ஒரு உடையில் இருக்கிறேன் என்றால் அந்த உடையை வைத்து நீங்கள் எப்படி என்னை மதிப்பிடுவீர்கள்? அது என்னை இன்னும் காயத்திற்கு உள்ளாக்கும். இங்கு என் உள்ளுணர்வு பாதிக்கப்படுகிறது அல்லவா?! நான் விருப்பப்பட்டு அந்த உடையில் இல்லை, என் விருப்பம் இல்லாமல் தான் அந்த உடையில் இருக்கிறேன், வேறு வழி இல்லாமல் அந்த உடையில் இருக்கிறேன். இது ஒரு அடிப்படையான எடுத்துக்காட்டு. நான் என்ன உணர்கிறேனோ, என் உள்ளுணர்வு என்னவாக இருக்கிறதோ, நான் ஆணாக உணர்கிறேனா அல்லது பெண்ணாக உணர்கிறேனா என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் என்னை அழைக்கும்பொழுது அதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும் அல்லவா அதற்கு அளவே கிடையாது. ஏனென்றால் குடும்பத்தில் இருப்பவர்கள் தான் நம்மை அப்படி அழைக்கிறார்கள் என்று நாம் வெளியே வந்து நண்பர்கள் மத்தியில் இருக்கிறோம். நண்பர்கள் மத்தியில் இப்படி ஒரு சூழல் கிடைத்தது என்று வைத்துக் கொள்ளுங்கள் நம் மன அழுத்தம் சிறிது குறையும். நாமே நமது அசல் தன்மையைப் பயமில்லாமல் உணர்வோம். நமது அசல் தன்மையை நம்மிடம் இருந்து பறிக்கும் பொழுது நமக்கு எவ்வளவு வலிக்கிறது. உங்கள் அடையாளத்தை உங்களிடம் இருந்து அழிக்கும்பொழுது எவ்வளவு வலிக்கிறது, அதேதான் இங்குமே. என்னுடைய அடையாளம் இதுதான். நான் பிறக்கும் பொழுது ஒரு ஆணாக, ஆண் உடலில் பிறந்திருக்கலாம். ஆனால் என் உணர்வுகள் ஆண் கிடையாது. நான் ஒரு பெண்ணாக தான் இருக்க ஆசைப்படுகிறேன் அல்லது இந்த சமூகம் சொல்லக் கூடிய எந்த கட்டமைப்பிலும் நான் அடங்காமல் இருக்கலாம். ஆணும் இல்லை பெண்ணும் இல்லை. பிறக்கும் பொழுது பெண்ணாக, பெண் உடலில் பிறந்திருக்கலாம் ஆனால் என்னை நான் ஒரு ஆணாக தான் உணர்கிறேன் என்பது என்னுடைய உள்ளுணர்வு சார்ந்தது. அதை நீங்கள் pronoun misgender செய்யும்பொழுது அது என் மனதை இன்னும் பாதிக்கும்.
ஸ்ரீகாந்த்: Pronoun என்பது மிக முக்கியம் என்று கூறி விட்டீர்கள். இதை குறிப்பிடும் பொழுது they/them என்றும் சிலர் குறிப்பிட்டு இருப்பார்கள். He/him என்றால் அவன் என்று கூறலாம் she/her என்றால் அவள் என்று கூறலாம். They/them என்றால் என்ன?
தினு : They/them என்னும் pronoun உபயோகப்படுத்துபவர்கள் தங்களை எந்த பாலினத்திற்குள்ளும் பொருத்திக் கொள்ள மாட்டார்கள். அவர்களை non-binary மக்கள் (பாலின இருநிலைக்கு
அப்பாற்பட்டவர்கள்) என்று கூறுவார்கள். Binary என்றால் ஆண், பெண். ஆண் பெண் என்னும் கோட்பாடுகளுக்குள் வரக்கூடிய எல்லோருமே binary. தன்னை ஓர் ஆண் என்றும் கூறாமல் ஒரு பெண் என்றும் கூறாமல் தனக்குள் இரண்டு பாலினமும் இருக்கிறது அல்லது எந்த பாலினமும் கிடையாது, ஒரே நேரத்தில் இரண்டு பாலினத்தையும் உணர்கிறேன் அல்லது சிறிது நேரம் இந்த பாலினமாக உணர்கிறேன் சிறிது நேரம் அந்த பாலினமாக உணர்கிறேன், சூழலுக்கு ஏற்றார் போல் எனது உணர்வுகள் வெளிப்படும் பொழுது, என் எதிரில் இருப்பவரைப் பொறுத்து எனது உணர்வுகள் மாறுபடுகிறது என் உடல் பாவங்கள் மாறுபடுகிறது என்னும் பொழுது அவர்களை non-binary (பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவர்கள்) என்று கூற முடியும். அவர்களை ஒரு ஆண் என்றும் கூறமுடியாது ஒரு பெண் என்றும் கூற முடியாது.
ஸ்ரீகாந்த் : அவர்களை எவ்வாறு அழைப்பது?
தினு : அவர்களிடம் சென்று நீங்கள் they/them ஆ என்று கேட்க கூடாது. நீங்கள் என்னை பார்க்கிறீர்கள் ஹாய் என்று சொல்லுகிறீர்கள், நானும் ஹாய் என்கிறேன். உங்கள் பெயர் என்னவென்று கேட்கிறீர்கள், நான் என் பெயர் தினு என்று கூறுகிறேன். அடுத்து, உங்களை நான் எப்படி அழைக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். இதை அவர்கள் non-binary (பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவர்கள்) அல்லது trans மக்கள் (மருவிய பாலின மக்கள்) என்பதால் மட்டுமே கேட்க வேண்டும் என்றல்ல, பொதுவாகவே ஒரு மனிதன் சக மனிதனை எப்படி அழைக்க வேண்டும் என்று கேட்டுவிட்டு அழைப்பது மிகவும் நல்லது. இதை குழந்தையிலிருந்தே கற்றுக் கொடுக்கத் தொடங்கினால் வளர வளர அக்குழந்தைகள் அதை பின்பற்றி கொள்வார்கள்.
ஸ்ரீகாந்த் : இந்த கேள்வி எனக்கு ரொம்ப நாளாக இருந்தது. இன்று விடை கிடைத்துவிட்டது. அடுத்து, இப்போது தன்னை குயராக (பால்புதுமையினர்) அடையாளப்படுத்தி கொள்பவர்கள் என்ன செய்தால் அவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.
தினு : முதலில் நீங்கள் self-identify செய்து கொண்டீர்கள் என்றால் அதை எல்லோரிடமும் கூற வேண்டிய அவசியம் இல்லை. நான் gay (தன்பாலீர்ப்பாளர்), நான் lesbian (தன்பாலீர்ப்பாளர்), நான் transwoman (திருநங்கை), நான் transman (திருநம்பி), நான் non-binary (பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவர்), நான் bisexual (இருபாலீர்ப்புடையவர்) என்று எல்லோரிடமும் சென்று கூற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களை நீங்கள் self-identify செய்துகொண்டீர்கள் என்றால் நன்று, உங்களுக்கு புரிதல் வந்துவிட்டது. அடுத்ததாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், நன்றாக படிக்க வேண்டும். படிப்பை முடித்துவிட்டு ஒரு வேலைக்கு செல்ல வேண்டும். வேலைக்கு சென்ற பிறகு, சொல்ல வேண்டிய ஒரு சூழல் உருவாகும் இல்லையா, சொல்லி தான் ஆக வேண்டும் இப்போது சொன்னால் சரியாக இருக்கும் என்று உங்களுக்கு தோன்றும் இல்லையா, அப்பொழுது தான் நீங்கள் கூற வேண்டுமே தவிர அதுவரை கூறக் கூடாது. சில நேரங்களில் நாம் கூறும் முன்னே இந்த சமூகம் நம்மை கண்டுபிடித்து இருக்கும் அந்த நேரத்தில் நம்மை வெளிப்படுத்தக்கூடிய ஒரு சூழலில் இருக்கும் பொழுது வெளிப்படுத்தலாம். ஆனால் உங்கள் கல்வி பாதிக்காத அளவில் உங்கள் அருகில் ஒரு பாதுகாப்பான நபரை வைத்துக்கொண்டு நீங்கள் வெளிப்படுத்தலாம்.
ஸ்ரீகாந்த் : Relationship என்று வரும்பொழுது அதிக காதல் முறிவுகள் உடனே உடனே ஆகக் கூடியதாக இருக்கிறது. எவராலுமே உடைக்க முடியாத அளவிற்கு ஒரு நல்ல relationship இருக்க வேண்டும் என்றால் என்னென்ன பின்பற்றினால் சரியாக இருக்கும்.
தினு : நல்ல relationship என்று ஒன்று இல்லை. என்னுடைய காதல்முறிவே எப்படி என்றால் என்னை விழுந்து விழுந்து காதலித்த ஓர் நபர், நான் இரண்டாம் ஆண்டு பயிலும்போது என்னை கல்யாணம் செய்துகொள்ள முடியாது என்றார். அப்போது எனக்கு gay, lesbian, bisexual எல்லாம் எனக்கு தெரியாது. அவர் எனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று கூறும்போது என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை இப்போது இருக்கிற மனப்பக்குவம் அப்போது எனக்கு கிடையாது. இருந்திருந்தால், சரி நீங்கள் bisexual (இருபாலீர்ப்புடையவர்) போல, சரி நாம் அதை பற்றி யோசிப்போம் என்றிருப்பேன், அந்த அளவிற்கு நான் அந்த நபரைக் காதலித்தேன். அப்போது, அந்த நபரை வேறொருவருடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. என்னை பற்றி மட்டும் தான் யோசித்தேன். காதலுமே அப்படி தான். எல்லோரும், தியாகம் செய்ய வேண்டும், ஒருத்தருக்காக இன்னொருவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றெல்லாம் கூறுவார்கள். அப்படியெல்லாம் கிடையாது. நான் என்னுடைய பார்வையில் இருந்து கூறுகிறேன். நம்முடன் இருக்கும் partner தப்பு செய்துவிட்டார்கள் என்றால், அந்த தப்பைப் பற்றி பேச வேண்டும். உட்கார வைத்து ஏன் இப்படி செய்தாய், எதனால் இப்படி செய்தாய் என்று பேச வேண்டும். கோபம் வருகிறதா சத்தமிட்டு, முடிவில் அந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டுகொண்டு இருவரும் அதிலிருந்து விலகி ஒன்றாக வருகிறீர்கள் இல்லையா அது தான் relationship. அந்த பிரச்சனைக்காக விட்டு பிரியாமல் அதை பத்தி யோசித்து நீங்கள் பேசுவது தான் relationship. நான் சொல்லும் பிரச்சனை கொலை, கொள்ளை, வன்புணர்வு போன்றவை அல்ல, சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் போன்றவையெல்லாம் கூறுகிறேன். நாம் கற்றுக்கொள்வோம். இதுபோல் பேசினால் அவருக்கு பிடிக்காது, இந்த விடயம் செய்தால் பிடிக்காது. ஒன்றுமே இல்லை தலைத்துவட்டி விட்டு துண்டை கீழே போட்டால் அவனுக்கு பிடிக்காது அல்லது அவளுக்கு பிடிக்காது என்பதை அவர்கள் கோபப்பட்டு நம்மிடம் கூறினால் தான் தெரியும் அல்லது நமக்கு தெரியாது. அது போல் Stable ஆன (நிலையான) ஒரு relationshipக்கு முக்கியமான ஆதாரமாக இருப்பது மூன்று விடயங்கள் தான். ஒன்று emotional satisfaction. மகிழ்ச்சியான சூழலிலும் சரி கடினமான சூழலிலும் சரி நம்முடன் துணை நிற்பது. இரண்டாவது physical satisfaction, இது மிக மிக முக்கியமானது. இதைப் பற்றி நான் அடுத்து கூறுகிறேன். மூன்றாவது financial stability. பொருளாதார நெருக்கடிகள் இல்லாமல், ஒருவரை ஒருவர் சார்ந்து இல்லாமல் தனித்து
இருக்க வேண்டும். அதே நேரத்தில் எதிர்காலத்திற்காக இருவரும் இணைந்து ஏதாவது செய்ய வேண்டும். Asexual மக்கள் (அல்பாலீர்ப்பினர்) இருக்கிறார்கள். அவர்களுக்கு physicalஆக எதுவும் தோன்றாது. அவர்களைக் காதலிக்கும் நபரும் இவர்களது physical relationship என்னவாக இருக்கும் என்று புரிந்து கொண்டால் அவர்களுக்குள் காதல் நன்றாக அமையும். இப்போது நான் இருக்கிறேன், எனக்கு ஒருவரைக் கட்டி பிடிப்பதற்கு பிடிக்கும், முத்தமிட பிடிக்கும். அவர்களுக்கும் விருப்பம் என்னும் பொழுது நாம் அதை செய்யலாம். Asexual மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு காதல் என்பது பார்ப்பது, பேசுவது அவர்களுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வது, இவற்றிலேயே அவர்கள் satisfy ஆகி கொள்வார்கள். உடல் தேவையே அங்கு இருக்காது. அங்க, அவர் காதலிக்கும் நபரும் அதே போல் இருந்தால் மட்டும்தான் அந்த ரிலேஷன்ஷிப் நிலையாக இருக்கும். அவர் காதலிக்கும் நபர் ‘இல்லை எனக்கு physical need இருக்கிறது நீ என்னை தொட வேண்டும்’ என்று கூறும்பொழுது அந்த இடத்தில் பிரச்சனைகள் வரும். பிரிவு உருவாகும். அதனால் ஒருத்தருக்கு ஒருத்தர் இந்த மூன்று விடயங்களின் மேல் சமமான புரிதலுடன் கொண்டு சென்றால் அந்த ரிலேஷன்ஷிப் நிலையாக இருக்கும். எவராலும் பிரிக்க முடியாதா என்று கேட்டால் நான் அவ்வாறு கூற மாட்டேன். எனக்கு இப்போது ஸ்ரீகாந்த் அழகாக தெரிகிறார், எனக்கு பிடித்திருக்கிறது. நாளைக்கே எனக்கும் அவருக்கும் ஒரு கருத்து வேறுபாடு எனக்கு அவரை பிடிக்கவில்லை. அப்போது எனக்கு வேறொருவரைப் பிடித்திருக்கிறது என்றால் நான் விலகி செல்கிறேன் என்றால் உனக்கும் எனக்கும் ஒத்துப் போகவில்லை நாம் பிரிந்து விலகி சென்று விடுவோம் என்று இருவர் முடிவு செய்யும் பொழுது எந்த mental trauma வும் இல்லாமல் எந்த பிளாக்மெயில்களும் இல்லாமல் அவர் செல்லட்டும் என்ற மனப்பான்மையுடன் இருவர் இருக்கிறார்கள் அல்லவா அதுதான் ரிலேஷன்ஷிப்.
ஸ்ரீகாந்த் : இது நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இப்போது அடுத்த பகுதிக்கு செல்வோம். உங்களுக்கு பிடித்தமான விடயங்களை தெரிந்து கொள்வோம். உங்களுக்கு பிடித்த ஒரு படம் என்றால் என்ன?
தினு : எனக்கு மிகவும் பிடித்த படம் என்னவென்றால் பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை. அந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவளுக்கு, தனக்கு என்று நிறைய ஆசைகள் இருக்கும் தனக்கு என்று நிறைய கனவுகள் இருக்கும். ஆனால் அதை எல்லாம் அவள் தனது குடும்பத்திற்காக விட்டு கொடுத்துவிட்டு குடும்பம் நம்மை புரிந்து கொண்டால் போதும் என்ற சூழலில் இருக்கக்கூடிய ஒரு கதையாக இருக்கும். அதுமட்டுமன்றி பெண்ணியம் அதிகமாக பேசி இருக்கக்கூடிய ஒரு படமாக இருக்கும். அதனால் அந்த காலகட்டத்தில் எனக்கு அந்த படம் மிகவும் பிடிக்கும். இப்ப வரையிலுமே எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஸ்ரீகாந்த் : உங்களுக்கு பிடித்த பாடல் எது? அதாவது மன அழுத்தத்துடன் இருக்கும் பொழுதோ மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதோ எப்போதுமே மிகவும் பிடித்த பாடல் என்றால் எது?
தினு : எப்போதுமே பிடித்த பாடல் நட்புக்கு ‘இதோ இதோ என் நெஞ்சிலே’ என்று ஒரு பாடல் இருக்கிறது அந்தப் பாடல் எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும். காதல் என்று வரும் பொழுது 180 என்று ஒரு படம். அது சித்தார்த்தின் படம். அதில் ‘நீ கோரினால்’ என்னும் பாடல் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் என்னுடைய முன்னாள் காதலர் பார்ப்பதற்கு கொஞ்சம் சித்தார்த்தை போல் தான் இருப்பார். அதனால் அவராலயே எனக்கு அந்த பாடல் மிகவும் பிடிக்கும். அதன் பிறகு ‘முன்பே வா’ பாடல் பிடிக்கும்.
ஸ்ரீகாந்த் : இவ்வளவு அழகாக பாடுவீர்கள் என்று தெரிந்திருந்தால் ஒரு பாடலையும் பாட கூறி இருப்பேன். உங்களுக்குப் பிடித்த உணவு எது?
தினு : பிரியாணி எனக்கு மிகவும் பிடிக்கும். I love பிரியாணி. அதுவும் beef பிரியாணி எனக்கு மிக மிக பிடிக்கும். எப்போது கொடுத்தாலும் சாப்பிடுவேன். மற்றும் வெஜ் உணவில் சாம்பார். சாம்பார் அப்பளம் பிடிக்கும்.
ஸ்ரீகாந்த் : உங்களுக்குப் பிடித்த நிறம் என்றால் அது என்ன?
தினு : கருப்பு. உலகத்திற்கே தெரியும். ‘கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’.
ஸ்ரீகாந்த் : நீங்கள் அடிக்கடி ஒரு கடைக்கு செல்கிறீர்கள் என்றால் அங்கு முதலில் வாங்ககூடிய அல்லது உங்களுக்கு பிடித்தமான அணிகலன் எது?
தினு : தோடு. தோடு தான் முதலில் பார்ப்பேன். எனக்கு மட்டுமல்ல என் சகோதரிகளுக்குமே நான் அதை தான் முதலில் பார்ப்பேன். நன்றாக இருக்கிறதா. Collections எப்படி இருக்கிறது என்று பார்ப்பேன். நன்றாக இருக்கிறது என்றால் அப்படியே மொத்தமாக வாங்கிக் கொண்டு வந்து விடுவேன்.
ஸ்ரீகாந்த் : உங்களுக்கு பிடித்தமான நடிகர் யார்?
தினு : சூர்யா. காரணம் அவர் நன்றாக நடிக்கிறார் என்பதல்ல. அவர் ஒரு நல்ல மனிதர். கல்வியை வியாபாரமாக பார்க்கக்கூடிய இந்த சமூகத்தில் கல்விக்கு உதவி செய்யக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்கினார் இல்லையா, அந்த காலகட்டத்தில் இருந்து எனக்கு சூர்யா பிடித்தம். I fell in love with him என்று கூறலாம். ஜோதிகா அக்கா கோபித்து கொள்வார் என்று நினைக்கிறேன். இப்போது அவர் தயாரிக்கும் படங்களாக இருக்கட்டும், தேர்ந்துதெடுக்கும் படங்களாக இருக்கட்டும் எல்லாம் முற்போக்கு சிந்தனையோடு இருக்கும்பொழுது எனக்கு இன்னும் அவர் மீது ஒரு மரியாதை வந்துவிட்டது. அதனால் அவரை எனக்கு பிடிக்கும்.
ஸ்ரீகாந்த் : உங்களுக்குப் பிடித்தமான நடிகை யார்?
தினு : எல்லா காலத்திலும் எனக்கு எப்போதுமே யாரை பிடிக்கும் என்றால் சில்க் ஸ்மிதா தான். பெரும்பாலானோர் அவரை item dancer கவர்ச்சியானவர் என்றெல்லாம் கூறுவர். ஆனால் நான் அவரை ஒரு கதாநாயகியாக, சிறந்த நடிகையாக பார்க்கிறேன். அவர் இன்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் யோசித்து இருக்கிறேன். அவர் வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் இருந்திருக்கிறது. நான் அவரை எனக்கு ஒரு முன்மாதிரியாக பார்க்கிறேன். அவருக்கு அடுத்தது எனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாரா அக்கா. ஏன் நயன்தாரா அக்காவைப் பிடிக்கும் என்றால் அவர் அழகாக இருக்கிறார் நன்றாக நடிக்கிறார் என்றெல்லாம் கிடையாது. அவர் மிகவும் கடினமாக உழைக்கும் நபர். இந்த சமூகம் நிறைய அவரைக் காயப்படுத்தும்பொழுது கூட அவர் விட்டுவிடவில்லை. அவர் உழைத்து கொண்டே இருந்தார். இன்றளவுமே அவர் முன்னணி நடிகை தான். தற்போது அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்று கூறினாலும் கூட அவர் முன்னணி நடிகை தான். எந்த பாத்திரம் கொடுத்தாலும் அவரால் நடிக்க முடியும். அந்தப் பாத்திரத்துடன் பொருந்தி சரியாக நடித்திருப்பார். அதெல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஸ்ரீகாந்த் : நீங்கள் வாசித்த நூல்களிலே உங்களுக்கு பிடித்தமான நூல் எது?
தினு : மரக்காவின் மெல்லக் கொல்லும் மன்னிப்புகள். அதில் எனக்கு பிடித்த கவிதை ‘இருட்டு புதரில் நல்லா ஊம்பு என்ற வாய் தான் விடிந்தவுடன் ஒன்பது என்று ஓலனமிடுகிறது’. பெரும்பாலான குயர் மக்களுக்கு அது மனதைத் தாக்கக்கூடிய அளவுக்கு இருக்கும். அந்த நூலில் நிறைய கவிதைகள் நன்றாக இருக்கும். அடுத்து ஜெகனுடைய ‘செருப்பை தின்கிறேன்’ பிடிக்கும். அது இந்த சமூகத்தினுடைய சட்டையைப் பிடித்து உலுக்கி கேள்வி எழுப்புவது போல் இருக்கும். இந்த சமூகத்தின் மீது வைக்கக்கூடிய கேள்விகளாக இருக்கும். அடுத்து பால்மணம். நான் அதிகமாக நூல்கள் வாசிக்க மாட்டேன். பால்மணம் ஏன் சொல்கிறேன் என்றால், ஒரே புத்தகத்தில் பல மக்களுடைய வலிகளின் குரலை பார்க்கலாம், குயர் மக்களுடைய சாதனைகளைப் பார்க்கலாம். பால்மணத்திற்கு நான் நேர்காணல் எடுத்ததினால் மாதாமாதம் அவ்விதழ் வெளிவரும்பொழுது அதை வாசித்து பார்ப்பேன். எல்லாம் எவ்வாறு இருக்கிறது, நாம் எடுத்து கொடுத்த நேர்காணல் சரியாக வந்துள்ளதா என்று பார்க்கும்பொழுது வாசித்தது தான்.
ஸ்ரீகாந்த் : உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் பிடித்தமான நபர், அவரை என்றுமே மறக்கவே மாட்டேன் என்றால் அது யார்?
தினு : நான் ஒருவரைக் கூறுவதற்கு முன் ஒரு விடயம் கூறவேண்டும். இரண்டு நபர் தற்போது உயிருடன் இல்லை. ஒருவன் மோனிஷ் என்னுடைய நெருக்கமான நண்பன். 16 வயதில் அவர் தவறிவிட்டார். அவர் ஒரு குயர் நபர். சமூகம் கொடுத்த நெருக்கடியின் காரணமாக தன்னுடைய உடலைத் நெருப்புக்கு இறையாக்கிகொண்டார். அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. அப்போது அந்த காலகட்டத்தில் அவர் எனக்கு நல்ல நண்பர். பிறகு சமீபத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய குழந்தை, பெயர் காமிஸ் ஜான்சன். அவனும் தற்கொலை செய்துகொண்டான். செவிகள் தொடங்கிய மூன்று அல்லது நான்கு மாதங்களில் என்று நினைக்கிறேன். அதுவுமே எனக்கு மிக பெரிய இழப்பு. இவர்கள் இருவருமே எனக்கு என் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைத்தேன், தற்போது அவர்கள் இருவருமே இல்லை. பிறகு எனது 15, 16 வயதிலிருந்து ஒருவரை தெரியும் அவர் பெயர் திலோத்தம்மா. அவர் ஒரு திருநங்கை. அவர் 2D shelter home இல் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். மிகவும் அருமையான மனிதர். நாங்கள் அதிகமாக பேசிக்கொள்ள மாட்டோம், ஆனால் நாங்கள் அமர்ந்து பேச தொடங்கினால் நேரம் போதாது. நிறைய விடயங்கள் பேசுவோம். எங்களுக்குள் ஒளிவு மறைவு என்பதே கிடையாது, எந்த ரகசியங்களும் கிடையாது, எல்லாவற்றையுமே பகிர்ந்து கொள்வோம். தற்போது எனக்கு நெருக்கமாக இருக்கக்கூடியவர் ஷர்மி, அவரின் கணவர் சக்தி மாமா மற்றும் ஜாய் ஜோஷ்வா. இவர்கள் மூவரும் தான். அதன்பிறகு மரக்கா. ஜெகனை எனக்கு 2019லிருந்து தெரியும். எங்களுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. இருந்தாலும் கூட எங்களால் ஒருவரை ஒருவர் வெறுக்க முடியாது. நாங்கள் இருவரும் ஒன்றாக இல்லை, அதிகமாக பேசிகொள்வதும் இல்லை இருந்தாலும் எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். நல்ல நண்பர்கள் என்று கூறுவேன்.
ஸ்ரீகாந்த் : நீங்கள் சென்ற இடங்களிலேயே உங்களுக்கு பிடித்தமான இடம் எது? மகிழ்ச்சியாக இருக்கும்பொழுதோ கவலையுடன் இருக்கும்பொழுதோ உங்களுக்கு பிடித்த இடம் என்றால் அது எது?
தினு : மூன்று கூறலாம். எதுவெல்லாம் குயர் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களோ அவையாவுமே எனக்கு பிடித்தமான இடங்கள். இரண்டாவது ஷர்மியின் வீடு. அதன் பிறகு பார்த்தால் என்னுடைய அலுவலகத்தில் ஒரு ஆலமரம் இருக்கிறது. நான் எப்போதெல்லாம் மிகவும் மனசோர்வுடன் உணர்கிறேனோ அப்போதெல்லாம் அந்த ஆலமரத்தின் அருகில் சென்று அமர்ந்தால் மனதில் உள்ள பாரங்கள் எல்லாம் குறைந்து விடும்.
ஸ்ரீகாந்த் : உங்களுக்கு பிடித்தமான உடை எது?
தினு : கருப்பு நிற உடை அனைத்துமே எனக்கு பிடிக்கும். Feminine ஆக என்னைக் காட்டக்கூடிய அனைத்து உடைகளுமே எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஸ்ரீகாந்த் : இப்படி பொதுவாக கூறிவிட்டால் எப்படி! உங்களுக்கு பிடித்த கடவுள்?
தினு : எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை. இருந்தால் காட்டுங்கள் பிறகு அதை பற்றி யோசிக்கலாம்.
ஸ்ரீகாந்த் : நல்ல ஒரு பதில் கூறியிருக்கிறீர்கள். உங்களுக்கு பிடித்தமான விளையாட்டு எது?
தினு : shuttlecock மிகவும் பிடிக்கும்.
ஸ்ரீகாந்த் : உங்களுக்கு பிடித்தமான செல்லப்பிராணி ஏதாவது இருக்கிறதா?
தினு : எனக்கு நாய் பூனை என்றால் மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் கைவிடப்பட்ட நாய்கள் மற்றும் பூனைகளுக்கு shelter தொடங்கும் எண்ணமும் எனக்கு உள்ளது, அது எனது நீண்ட நாள் ஆசை.
ஸ்ரீகாந்த்: இன்ஸ்டாகிராமில் கேள்விகள் கேட்க பதிவு செய்திருந்தோம். என்ன கேள்விகள் வந்திருக்கிறது?
தினு : ஒரே ஒருவர் மட்டும் ‘Are you love me’ என்று கேட்டிருக்கிறார். இந்த விடயம் ஷர்மிக்கு தெரிந்தது என்றால் அவள் என்னை துடைப்பத்தால் அடிப்பாள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்த நபருடன் நான் பேசிகொண்டிருக்கிறேன். இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தற்போது அவருக்கு ஆம் என்று பதிலளிக்கலாம் என்றிருக்கிறேன். ஆம் என்று தான் அனுப்ப போகிறேன்.
ஸ்ரீகாந்த் : வருங்காலத்தில் என்ன நடக்கிறது என்று கூறுவீர்களா?
தினு : கண்டிப்பாக கூறுவேன்.
ஸ்ரீகாந்த் : மிக்க நன்றி தினு. இவ்வளவு நேரம் மிகவும் பொறுமையாக இனிமையாக பதிலளித்தமைக்கு நன்றி. இந்த நேர்காணல் மூலமாக அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்று இன்னும் பலர் தெரிந்து கொள்வார்கள். நிறைய வாய்ப்புகள் அரசு பக்கத்தில் இருந்து வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அடுத்தடுத்து இன்னும் வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கலாம். மிக்க நன்றி தினு.
தினு : மிக்க நன்றி ஸ்ரீகாந்த். உங்களுடைய கேள்விகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை போல் இன்னும் நிறைய விடயங்களைப் பலர் பேசினால் குயர் மக்களைப் பற்றிய புரிதல் அதிகமாகவே பொதுமக்களைப் போய் சேரும். மீண்டும் ஒரு முறை மிக்க நன்றி. மேலும் அணியம் ஃபவுன்டேஷனிற்கும் அழகு ஜெகனிற்கும் ஒருங்கிணைப்பாளர் ஆனந்திற்கும் எனது நன்றி மற்றும் செவிகளின் mentors மற்றும் interns கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன்