இதுவும் காதல்தான்
அன்று நள்ளிரவு மொட்டை மாடி ரூமில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவன் திடீரென ஏதோ கெட்ட கனவு கண்டது போல் விழித்துக் கொண்டான். அவனுக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடப்பது போன்ற கனவு அது. மீதமிருந்த இரவு முழுவதும் அதனைப் பற்றிய யோசனையிலே கழித்தவன் விடியலுக்காக காத்திருந்தான். காலையில் வழக்கம் போல கல்லூரிக்கு கிளம்பி சென்றுவிட்டான்.
அவன் பெயர் கௌதம். இருபது வயதுள்ள வாலிபன். வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தான். கௌதம் ஒரு கிராமத்து பின்னனியை சேர்ந்தவன். மற்ற குழந்தைகளை போல் அல்லாமல் அவனது குழந்தைப்பருவம் மிகவும் கசப்பானதாகவே இருந்தது. தினமும் தன்னுடைய அப்பா குடித்துவிட்டு வீட்டில் அம்மாவிடம் சண்டை போடுவதையே பார்த்து வளர்நது வந்தான். பொறுப்பற்ற அப்பாவும் அடிக்கடி கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட அம்மா மட்டுமே வேலைக்கு சென்று பிழைப்ப நடத்த வேண்டி இருந்ததால் தாயின் அன்பும் அவனுக்கு கிடைக்காத ஒன்றாகவே இருந்தது.
கௌதம் ஒரு சாந்தமான பொறுப்பான பையன். அவன் அம்மா வேலை முடிந்து வீட்டுக்கு வருவதற்குள் வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் முடித்து விடுவான். சோறு பொங்குவதில் இருந்து வீடு பெருக்குவது வரை அனைத்துமே அத்துபடி அவனுக்கு. சில சமயங்களில் அக்கம் பக்கத்தினர் “ கௌதம் தான் பொம்பள புள்ள மாறி வீட்ல இருக்க வேலையெல்லாம் இழுத்து போட்டு செய்றான் “ என்று சொல்வார்கள். இது போன்ற வேலைகள் செய்வது அவனுக்கு பிடித்தமானதாகவே இருந்தது.
சிறுவயதிலிருந்தே ஆம்பள பசங்க மேல அவனுக்கு ஒரு விதமான ஈர்ப்பு இருந்தது. குறிப்பாக இருபதுகளில் உள்ள பசங்கள பார்த்தாலே ஒருவித வெட்கம் போன்ற உணர்வு தோன்றியிருந்தது. ஆம்பளங்க யாராவது வீட்டுக்கு வந்தால் கூட அவர்களோடு பேச மாட்டான், ரூமுக்குள் சென்று விடுவான். பதின்ம வயதுகளில் இதுபோன்ற உணர்வுகள் அவனுக்குள் அதிகமாய் தோன்றத் தொடங்கியது. அவனுக்குள்ளே நிறைய கேள்விகள் எழத் தொடங்கியது. இயல்பாக ஒரு ஆம்பள பையனுக்கு பெண் மீது தானே ஈர்ப்பு வர வேண்டும். ஆனால் தனக்கு மட்டும் ஏன் மாறாக உள்ளது என்ற கேள்வி அவன் மனதில் விடையில்லாத ஒன்றாய் இருந்து வந்தது.
இப்படி இருக்க கௌதம் எங்கு வெளியில் சென்றாலும் பருவம் வந்த பசங்கள பார்க்கும் போது அவர்களோடு பேச வேண்டும் நட்புறவாட வேண்டும் எண்ணமும் அவனுக்கு அவ்வப்போது இருந்து வந்தது. பள்ளிப்படிப்பை முடித்த கௌதம் கல்லுரியில் சேர்வதற்காக காத்திருந்தான். சில மாதங்கள் கழித்து அவன் ஆசைப்படி வெளியூரில் உள்ள ஒரு பிரபலமான கல்லுரியில் இடமும் கிடைத்தது; அது வரை வீடு பள்ளி என்று இருந்த கௌதமுக்கு வீட்டைப்பிரிந்து செல்வது கஷ்டமாக இருந்தாலும், பதிய இடத்திற்கு போறோம், நிறைய பசங்க இருப்பாங்க நண்பர்கள் ஆகலாம் போன்ற எண்ணங்கள் அவனுக்கு ஆறுதலை தந்தது.
விடுதியில் இடம் கிடைக்காததால் உறவினர் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தான். வீட்டைப் பற்றிய நெனப்புடன் சேர்த்து தனிமையும் அவனை வாட்டிக் கொண்டிருந்தது. கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களில் நிறைய நண்பர்களும் கிடைத்தனர் வார இறுதி நாட்களில் நண்பர்களோடு ஊர் சுற்றுவது சினிமா பார்க்க போவது போன்ற விஷயங்கள் அவனுக்கு மகிழ்வைத் தந்தது.
ஆனால் அவனுடைய உள்ளுணர்வுகளை பகிர்ந்து கொள்ள யாருமே இல்லை. நாளுக்கு நாள் தனிமை அதிகரிக்க அவனுடைய உணர்வுகளும் அதிகரிக்கத் தொடங்கியது. கல்லூரியில் நோட்ஸ் எடுப்பதற்கும், மற்ற பாடங்களை ரெஃபர் பன்னவும், வீட்டுக்கு தொடர்பு கொள்ளவும் உதவியாக மொபைல் போனும் அவனுக்கு வாங்கி கொடுத்திருந்தனர். மெதுவாக, போனில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொன்றாய் கற்றறிந்தான் கௌதம். மொபைல் போன் மட்டுமே அவனது தனிமைக்கு மருந்தாய் இருந்தது. அப்போது தான் அவனுக்கு நண்பர்கன் மூலம் பேஸ் புக் அறிமுகமானது அதில் அக்கவுன்ட் ஒன்றை தொடங்கி அதில் பயன்படுத்த தொடங்கினான்.
தினமும் கல்லூரி முடித்து மாலையில் பேஸ்புக் நண்பர்களுடன் மெசஞ்சரில் பேசுவான். சில நட்புகள் மிகவும் நெருக்கமாகி நம்பர் ஷேர் செய்து போனிலும் பேச ஆரம்பித்தான், ஆரம்பத்தில் சில தவறான அழைப்புகள் வந்தாலும், பேஸ்புக்கில் கௌதமுக்கு நிறைய நல்ல நண்பர்களும் கிடைத்தனர். அவனைப் போலவே உணர்வுகளை கொண்ட நிறைய நண்பர்களை கண்டான் கௌதம். அவனுக்குள் இருந்த சில கேள்விகளுக்கும் விடை கிடைத்தது.
அதுவரை ஒரு ஆணுக்கு பெண்தான் வாழ்க்கைத்துனையாய் இருக்க வேண்டும். அதுவே நியதி என்று அவன் பார்த்த சமூகத்தையும் அவனுக்கு கற்பிந்த இறை நம்பிக்கையும் வைத்து எண்ணியிருந்தவனுக்கு, ஒரு ஆணுக்கு ஏன் இன்னொரு ஆண் மீது காதல் வர கூடாது, ஏன் வாழ்க்கைத்துனணயாய் வரக்கூடாது என்ற கேள்விகள் மாற்றத்தை ஏற்படுத்தின. இண்டர்நெட்டிலும், புத்தகங்களிலும் தன்பாலின ஈர்ப்பு பற்றியும் அதன் அறிவியலையும், வரலாற்றையும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றியும் தேடித்தேடி படிக்கத் தொடங்கினான். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள அவனுக்கு நம்பிக்கை அளித்தது. கௌதம், ஒரு பையன் தான் தனக்கு வாழ்க்கையில் துணையாக வர வேண்டும் என உறுதியாக முடிவு செய்திருந்தான்.
அந்த வேளையில் தான், நீண்ட நாட்களாகவே பேஸ்புக்கில் கவின் என்று ஐடி ஒன்று பரிந்துரையில் இருந்தது. புரோபைல் போட்டோவில் ஒரு அழகான பையன் போட்டோ இருந்தது.கௌதம் அடிக்கடி அந்த ஐடி உள்ளே சென்று பார்த்து வந்திருந்தான். அதில் போஸ்ட் செய்திருந்த கவிதைகளும், வரையா ஓவியமாய் அதில் போஸ்ட் செய்திருந்த போட்டோக்களும் கௌதமுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ஒருவித பயத்தால் ரெக்வஸ்ட் கொடுக்காமலே வைத்திருந்தான். சில மாதங்களுக்கு பிறகு எப்படியாவது கவின் கிட்ட பேச வேண்டும் என்று நினைத்து ரெக்வஸட் கொடுத்து, பேச ஆரம்பித்தான். மறுநாளே கவனிடம் இருந்து ரிப்ளை வந்தது. முதலில் இருவரும் தங்களுடைய விவரங்களை பகிர்ந்து கொண்டு, பேச தொடங்கினர். ஒரு வார காலத்திலேயே கௌதமுக்கு கவினை மிகவும் பிடித்துவிட்டது.இருப்பினும் அதை அவன் கவினிடம் சொல்லிக்கொள்ளாமல் நட்பாகவே பேசி வந்தான். வாரங்கள் செல்ல இருவரும் கால் பேச ஆரம்பித்து நிறைய பகிர்ந்து கொண்டனர். ஒருநாள் பேசவில்லையென்றால் கூட ரொம்ப கஷ்டமாயிருக்கும் அவனுக்கு. கௌதமுக்கு கவின் உடனான நட்பு காதலாக மாறியது. ஒருமாதம் கழித்து ஒருநாள் கால் பேசும் போது கௌதம் தன்னுடைய காதலை கவினிடம் வெளிப்படுத்திவிட்டான். ஆனால் கவின் தனக்கு எந்தவொரு காதல் உணர்வும் கௌதம் மீது வரவில்லை என்று கூறிவிட சற்று மனமுடைந்து போனான் கௌதம். இருப்பினும் என்றாவது ஒருநாள் கவினுக்கு தன்மீது காதல் வரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து இருவரும் பழகி வந்தனர்.
நாட்கள் செல்ல செல்ல இருவரும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள தொடங்கினர், கௌதம் அவன் வாழ்வில் நடந்த பழைய ஞாபகங்கள், பள்ளி, கல்லூரி நட்புகள் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டான். கவினும் அவனுடைய பாஸ்ட் லைஃப் பற்றியும் பகிர்ந்து கொண்டான். இருவரும் காதலர்கள் போலவே பழகி வந்தனர், சிறு சிறு சண்டைகள், முத்தங்கள், மன்னிப்புகள் என எதற்கும் பஞ்சமில்லை. கவின் மீது அளவற்ற பிரியமாயிருந்தான் கௌதம். ஆனால் கௌதம் தன்னுடைய காதலை கவினிடம் வெளிப்படுத்தும் போதெல்லாம் கவின் கோபப்படுவான், எந்தவொரு காதல் உணர்வும் இல்லை என்றே கூறி வந்தான். கவினின் பழைய காதல் அனுபவங்கள் அவனுக்கு காதல் மீது அதீத வெறுப்பையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருந்தது. இதைப் பரிந்து கொண்டு கௌதம் என்றாவது ஒருநாள் கவின் தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையில் கவினின் காதலுக்காக காத்திருந்தான் கௌதம்.
ஒரு மகிழ்வனின் வாழ்க்கையில் உச்சகட்ட ஆசையாய் இருப்பது ஒரு ஆணின் முழுமையான அன்பும், அரவணைப்பும் தான். சற்று கரடு முரடாக இருந்தாலும் அந்த அன்பிற்காகவே மகிழ்வன் மனம் ஏங்கும். இயல்பாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான அன்புறவு திருமணம் மூலம் நிச்சயிக்கப்படுவதாலும் சமூகத்தால் அது அங்கீகரிக்கப்பட்டதாலும் எளிதில் கிடைக்க்கூடிய ஒன்றாகவே உள்ளது. ஆனால் மகிழ்வன்களின் வாழ்க்கையில் ஒரு ஆணின் அன்பிற்குச் சொந்தமாவதென்பது எட்டாத கனியாகவே இருக்கிறது. எத்தனை போராட்டங்கள், ஏமாற்றங்கள் கடந்து வர வேண்டியுள்ளது. எல்லாம் இந்த மனம் படுத்தும் பாடு. உண்மையான காதலுக்காகவும், ஒரு ஆணிண் நிலையான அன்பிற்காகவும் பெண்மையை மனத்தில் சுமந்து கௌதம் போன்று எத்தளையோ மகிழ்வன்கள் காத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
நவீன் ஆல்பர்ட்
