“ஆயா” தொடர்கதை
***
பாகம்-3
(இதுவரை: சாரதா…நந்தினி மீதும் நந்தினி சாரதா மீதும் வைத்திருந்த பாசத்தை பற்றியும் பார்த்தோம்… சாரதா ஆசிரமத்து ஓனர் ராஜாவுக்கு உணவு பரிமாறி கொண்டிருக்கையில் திடீரென்று ஏற்பட்டது அந்த சத்தம்…இனி..)

“என்ன சத்தம் அது…. !?”
“அப்பா‌… நீங்க சாப்பிடுங்க…நா போயி பாத்துட்டு வரேன்…” என்று அவரை சாப்பிட சொல்லிவிட்டு பின்புறம் உள்ள அந்த அறைக்குள் சென்றேன்… இரண்டு பூனைகள் விளையாடும் பொழுது ஒரு புகைப்பட போட்டோவை கீழே தள்ளிவிட்டு இருக்கிறது…. கண்ணாடி துண்டுகளை ஓரமாக வைத்துவிட்டு… அந்த புகைப்படத்தை கையில் எடுத்தேன்… அதில் ராஜா அப்பா… இளம்வயதில் நின்று கொண்டிருந்தார்… அவருக்கு பக்கத்தில் ஒரு பொண்ணு கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள்… அதை எடுத்து கொண்டு ராஜா அப்பா அருகில் சென்றேன்…
“என்னம்மா அங்க சத்தம்?”
“இல்லப்பா… இரண்டு பூனைகள் விளையாடும் பொழுது இந்த புகைப்படத்தை மேலிருந்து கீழே தள்ளிவிட்டுச்சி…”
என்று அந்த போட்டோவை அவரிடம் காண்பித்தேன்…
அதை பார்த்ததும் கண்கலங்கினார்..
“ஏப்பா அழுகிறீங்க…? இந்த போட்டோவுல இருக்கிறது நீங்கனு தெரியுது… பக்கத்துல யாருப்பா?”
“…………..”
“ஏப்பா….அமைதியா இருக்கீங்க? இவங்க யாரு?”
“என்ன மன்னிச்சிடும்மா.‌‌. அதைப்பற்றி மட்டும் கேட்காதே.. நேரம் வரும்போது நானே சொல்றேன்…”
“சரி அப்பா…நா உங்ககிட்ட இதைப்பற்றி பேச மாட்டேன்… நீங்க வந்து சாப்பிடுங்க” என்றேன்…
சாப்பாட்டை பிழைந்தபடியே யோசித்து கொண்டிருந்தார்…
“என்னப்பா…யோசனை!?”
சட்டென்று கையை கழுவினார்…
“ஏப்பா… என்னாச்சு? ஏன் அதுக்குள்ள கையை கழுவிட்டிங்க?”
“இல்லம்மா… போதும்”என்று அந்த போட்டோவை வாங்கிகொண்டு அதையே பார்த்த படி அவருடைய அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டார்..அவரை தொந்தரவு செய்யாமல் மீதம் வைத்த சாப்பாட்டை கொண்டு போயிவிட்டேன்.

“இதோபாருங்க.. இனிமேல் உங்க குடும்பத்த என்னால பாத்துக்க முடியாது… உங்கள கட்டுன பாவத்துக்கு வேணும்னா உங்களுக்கும் உங்க புள்ளைக்கும் ஆக்கி வடிச்சி கொட்டலாம்… ஆனா உங்க அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் என்னால இனி சோறு போட முடியாது…”
“ஏன்டி…இப்படி கத்துற!? அவங்க காதுல விழுந்திட போகுது”
“விழட்டுமே… அதுக்கு என்ன… ரோஷம் வந்தா… உங்க தங்கச்சி வீட்டுக்கு போக சொல்லுங்க…”
“பேசாம இருடி…”
“இதோ பாருங்க… நீங்க ஏதோ வேலை தேடுறேனு சொல்லிகிட்டு தினமும் ஊர சுத்திட்டு வர்றீங்க… எனக்கென்ன தலையெழுத்தா… உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் சம்பாதித்து கொட்டனும்னு… வாங்குற சம்பளத்துல உங்க அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் சோறு போடுறதே பெரிய விஷயம்… இதுல வெத்தலை செலவு வேற… இப்ப வெத்தலை போட சொல்லி யாரு அழுதா!?”
பட படவென்றி பொறிந்து தள்ளினாள்…
“தம்பி பாண்டி…அய்யா பாண்டி….”
“என்ன அப்பா!?”
“உங்க அம்மா… உங்தங்கச்சியையும் தங்கச்சி புள்ளைகளையும் பாக்கனும்னு சொல்றாப்பா… நாங்க அங்க போயி ரெண்டு நாளு இருந்துட்டு வர்றோம்”
” அப்படியாப்பா…சரி… வாங்க உங்களையும் அம்மாவையும் பஸ் ஏத்திட்டு வர்றேன்.”
“ஏப்பா… இன்னைக்கு உனக்கு இன்டர்வியூனு சொன்னே… அதுக்கு போயி நீ முதலில் கிளம்பு… நாங்க போயிக்கிறோம்”
“ம் சரிப்பா”
வீட்டின் பின்புறம் போனாரு, ராசு.
“மங்களம்… மங்களம்…”
“என்னங்க…”
“நீ சொன்ன மாதிரி உம்புள்ளகிட்ட சொல்லிட்டேன்…”
” மனசே கேட்கலங்க… அவ அந்த பேச்சு பேசுறா… நம்பலால நம்ம புள்ளையும் சேத்து திட்டு வாங்குறான்… சம்பாதிக்கிற திமிரு அவளுக்கு…”
” விடு…விடு…உம்புள்ள ஒழுங்கா வேலைக்கு போனா அவ ஏன் இப்படி இருக்க போறா.. வழ வழனு பேசிட்டு இருக்காம சீக்கிரம் கிளம்பு போகலாம்”
“நல்லா பேசிவீங்களே… இப்ப மட்டும் எம்புள்ளனு சொல்லுங்க… மத்த நேரமெல்லாம் என் மூத்த புள்ள போல வருமானு பேச்சுக்கு பேச்சு சொல்வீங்க..”
“ம்… சரி.. சரி..விட்டா நாள் முழுக்க பேசிகிட்டே இருப்பே… மொதல்ல கிளம்பு”
இருவரும் சிறிது நேரத்தில் கிளம்பினார்கள்.
“ம்…இதே என் கடைசி புள்ளையா இருந்திருந்தா… இந்த நிலைமை நமக்கு வந்திருக்குமா…”
“உனக்கு அறிவே மங்களம்… எத்தனை தடவ சொல்றது அந்த சனியனை பத்தி பேசாதேனு… அதான் கடைசிபுள்ள செத்துபோச்சுனு தலைமொழுகிட்டோம்ல… அப்புறம் என்ன புலம்பல்….”
“இதோ பாருங்க… நீங்கதான் தலைமொழுகினீங்க… நாங்க எங்க பண்ண… அவன்பக்கட்டும் பேச முடியாம… உங்க பக்கட்டும் பேச முடியாம நா தவிச்ச தவிப்பு எனக்குல தெரியும்…”
“சரி…சரி‌.‌. அவனைபத்தி திரும்ப திரும்ப எங்கிட்ட பேசாதே…அதோ பஸ் வருது…பேச்சை நிறுத்திவிட்டு ஏற வழிய பாரு..”
பேருந்தில் இருவரும் ஏறிக்கொண்டார்கள்…
“ஏங்க… நீங்க அந்த சீட்டுல உட்காருங்க…”
“உனக்கு…”
“இதோ இந்த அம்மா… அடுத்த ஸ்டாப்ல இறங்க போறாங்களாம்… நா உட்காருகிறேன்..”
“ம்..சரி…”என்று முன்னாடி சீட்டில் போயி உட்காருந்தாரு…
மொபைல் போன் அடிக்கவே… எடுத்து காதில் வைத்தாள், மங்களம்…
“ஹலோ…”
“ஹலோ…அம்மா…”
“யாரு..”
“அம்மா…நாந்தாம்மா…சாரதா…”என்றேன்.
“அம்மாடி… ராசாத்தி…நீயாடா…” என்று கண்கலங்கினார்…
“அம்மா… கொஞ்சம் பின்னாடி பாரு…”
பின்னாடி பார்த்தாள், மங்களம்..
கையை அசைத்தேன்…
ஓடிவந்து அருகில் இருந்த அம்மாளை என் சீட்டில் உட்கார வைத்துவிட்டு நான் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்..
“நல்லா இருக்கீயா அம்மா… அப்பா நல்லா இருக்காரா…”
“ஏதோ இருக்கேன்… உங்க அப்பா முன்னாடி சீட்டுலதான் உட்கார்ந்து இருக்காரு… பாத்துட போறாரு…”
“பயப்படாதே அம்மா…முகத்துல சால்வச்சி மறைச்சிடுறேன்… ஆமா எங்க கிளம்பிட்டிங்க.. ரெண்டு பேரும்..”
நடந்ததை சொன்னார்..
“உன் அக்கா வீட்டுக்கு தான் போறோம்..”
“ஏம்மா…எத்தனவாட்டி சொல்லிருக்கேன்… எங்கூட வந்திடுங்கனு…”
“உம்பேச்சை எடுத்தாலே..‌உங்க அப்பா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாரு… அதுனாலதான் உன் நம்பர கூட போன்ல பதிவு பண்ணால‌…தனியா ஒரு சீட்டுல எழுதி வச்சிருக்கேன்…”.
“ம்… சரிம்மா”என்று அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டேன்…அவரும் கண் கலங்கிகொண்டே என்னை முத்தமிட்டார்..
“ஆமா…நீ என்ன இந்த பக்கம்…”
“அதுவா…நா சொல்லிருந்தேன்ல…நா ஒரு ஆசிரமத்தில இருக்கேனு…”
“ஆமா…”
“அந்த ஆசிரமத்துக்கு ஒருவர் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு பணமும் துணிமணிகளும் தாறேனு சொல்லிருந்தாரு… அதான் வாங்க போயிகிட்டு இருக்கேன்..‌”
“சரி…சரி… பஸ் ஸ்டாப் வந்துடுச்சு…உன் முகத்தை மூடிக்கோ… உங்க அப்பா பாத்துட போறாரு…”
“ம்.. சரிம்மா…”என்று முகத்தை மூடிக்கொண்டேன்…
இருவரும் பேருந்தை விட்டு இறங்கினார்கள்..
அம்மா மட்டும் திரும்பி பார்த்து ‘போயிட்டு வர்றேனு’சைகையில் சொன்னார்… நானும் பதிலுக்கு போயிட்டு வாங்க’னு சைகை காண்பித்தேன்…

நான் வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அனைவருமே எனக்கு எதிராகத்தான் நின்றார்கள்.. ஏன் அம்மா கூட என்மேல கோபமாகத்தான் இருந்தார்‌… பெத்தவள் அல்லவா!? மத்தவர்கள் மாதிரி வெறுத்து ஒதுக்க முடியவில்லை…. ஒருநாள் ராஜா அப்பாதான் என் அம்மாவை பார்த்து என் போன் நம்பரையும் கொடுத்து இருக்கிறார்… அதிலிருந்து மூன்று வருடங்களாக யாருக்கும் தெரியாமல் பேசிவருகிறோம்… அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் சந்தித்தும் வருகிறோம்… என்னைக்கு இந்த விஷயம் அப்பாவுக்கு தெரிய போகுதோ தெரியவில்லை..!? தெரிந்தால்… என்ன நடக்குமோ என்று தெரியவில்லை..!? ஏற்கனவே என்மேல் உள்ள கோபத்தில் அம்மாவை போட்டு அடிப்பார்… இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான்!
என்ன செய்வது எல்லாம் என் விதி!
பல திருநங்கைகளின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது… ஒருசிலருக்கு குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவர் ஆதரவு இருக்கும்… ஒருசிலருக்கு யாருடைய ஆதரவும் இருக்காது…. பல திருநங்கைகள் தங்களின் பிறந்தவீட்டுக்கே போக முடியாமல் தங்கள் காலத்தை கடந்து வருகிறார்கள்… திருநங்கைகளின் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்று பார்க்கதானே போகிறீர்கள்..

“ஐ! தாத்தா…ஐ!பாட்டி”என்று ஓடிவந்த பேரக்குழந்தைகளை வாரி அணைத்து முத்தமிட்டார்கள் இருவரும்!
“வாங்க அப்பா! வாம்மா!”என்று அழைத்துகொண்டே வாசலுக்கு வந்தாள், என் அக்கா கௌரி…
“இந்தாம்மா… குழந்தைகளுக்கு பிஸ்கட்… பழமும் உனக்கு பூவும் வாங்கிட்டு வந்தோம்”என்று கொண்டு வந்த பையை நீட்டினார் அப்பா..
“எதுக்குப்பா… உங்களுக்கு சிரமம்”
“இதுல என்னடா இருக்கு… யாருக்கு செய்றேன்… எம்பொண்ணுக்கும் எம்பேரபுள்ளைங்களுக்கும்தானே!”
“மாப்ளே எங்கம்மா?”
“வேலைக்கு போயிருக்காரும்மா.. இருங்க ரெண்டு பேருக்கும் டீ கொண்டு வர்றேன்…”
“வேண்டாம்மா…. இப்பதான் வர்ற வழியில குடிச்சிட்டு வந்தோம்”
“பரவாயில்லப்பா… நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க… என் கையால போட்டு தர்றேன்…”
“ம்… சரிம்மா..” என்றார்..
“பாத்தீயாடி எம்பொண்ண… இப்ப என்ன சொல்ற…!?”
“ம்ஹுக்கும்….போக போகதானே தெரிய போகுது…”
“அதெல்லாம் ஒன்னும் தெரியாது… மொதல்ல கொண்டு வர்ற டீயை குடி…அது போதும்”
என்று இருவரும் பேசி கொண்டிருந்தார்கள்.
“இந்தாங்க அப்பா டீ…”என்று இருவரிடமும் டீயை நீட்டினாள் கௌரிஅக்கா..
“எப்படிமா இருக்கே!?”
“ஏதோ இருக்கேன் அப்பா…”
“ஏம்மா… அப்படி சொல்றே!?”அம்மா கேட்டாள்..
“எல்லாம் உன் கடைக்குட்டி புள்ளயாலதான்… எனக்கும் என் மாமியாருக்கும் மட்டும் அல்ல எனக்கும் என் புருசனுக்கும் சண்டை வந்தாகூட உன் கடைக்குட்டி புள்ள செஞ்ச காரியத்தை சொல்லி சொல்லி என் மனச நோகடிக்கிறாங்க.. அதையே சொல்லி சொல்லி குத்தி காட்டுறாங்க”
“அவன் என்னடி பண்ணுவான்… எல்லாம் விதி!”
“ஆங்…உம்புள்ளய ஒருத்தர் ஒன்னும் சொல்லிட கூடாதே…உம்புள்ள ஒன்னுமே செய்யால… பழியபூரா விதிமேல போடு!”அப்பா சொன்னார்..
“ஏங்க… நீங்க வேற… எரியிற நெருப்புல எண்ணைய ஊத்துரீங்க… கொஞ்சம் சும்மா இருங்க…”
“ஆமாண்டி.. இப்படி எப்ப பேசினாலும் என் வாயை அடைச்சிடு… ஊர்வாயை உன்னால அடைக்கமுடியுமா‌..!?”
“அப்படி கேளுங்க அப்பா… அவன் செஞ்ச காரியத்துக்கு அவன என் தம்பினு சொல்றதுக்கே எனக்கு அவமானமா இருக்கு.. என்ன பண்றது எல்லாம் என் விதி”
“நீ கவலை படாதேம்மா… அப்பா நா இருக்கேன்ல…. உனக்கு எப்பவும் நான் இருப்பேன்டா…”
“வாங்க… வாங்க….” என்று ஒரு குரல் கேட்க… மூவருமே திரும்பி பார்த்தார்கள்.

– ஆயா வருவாள்…..

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன