ரசிகர்கள் வாசகர்களுக்கு முதற்கண் என் வணக்கம், 2020 ஆம் ஆண்டில் ஆரம்பித்த பால்மணம் மின் இதழில் எனக்கு ஜோல்னா பகுதியில் கதை எழுத வாய்ப்பு கிடைத்தது, முதல் வருடம் 11 விதமான ஒரின ஆண்களின் காதலை மையப்படுத்தி சிறு கதைகளை எழுதினேன். 2021 ஆம் ஆண்டில் சத்யா என்ற தொடர் கதையை எழுதினேன். அதை தொடர்ந்து இந்த வருடம் ஆசிரியர் குழுவில் பேசி முடிவெடுத்து சமூகத்தில் ஓரின ஆண்களின் வாழ்வில் நடக்கும் சில உண்மைசம்பவங்களை மையப்படுத்தி கதைகள் எழுத திட்டமிட்டிருக்கிறேன். அதன் படி 2022 ஆம் ஆண்டின் ஜோல்னா பகுதியின் முதல் உண்மை சம்பவம் சிறுகதையாக இதோ “கண்ணாமூச்சி ஏனடா !!!”

கண்ணாமூச்சி ஏனடா? !!!

“அடேய் அருண் மணி 5:30 ஆகுது இன்னுமா நீ எந்திரிக்கல, அப்பா எழுந்து 15 நிமிஷமாச்சு, நீ தூங்குறது தெரிஞ்சா ஒதை பின்னிடுவாரு, ஒழுங்கா எழுந்து போய் பல்லு விளக்குறமாதிரி பாத்ரூம்ல புகுந்துக்கோ”

“சிவா இன்னும் கொஞ்ச நேரம் நான் தூங்கிக்குறேனே?”

“இந்த வீட்டு சீனியர், அதாவது உன் அண்ணேங்குற முறையில சொல்லுறேன், ஒழுங்கா வாத்தியார் அப்பா வரத்துக்குள்ள எழுந்துட்டா சாட்டை அடில இருந்து தப்பிக்கலாம் இல்லாட்டி இன்னிக்கு உன் கெண்டை கால்ல தழும்பு விழுறதை யாராலும் தடுக்கமுடியாது”

“அட அட அட…. இவன் ஒருத்தான், ஏண்டா எனக்கு 5 வருஷத்துக்கு முன்னால இந்த வீட்டுல பொறதுட்டு என்னைய இந்த பாடு படுத்துறே, போன ஜென்மத்துல நான் என்ன பாவம் பன்னினேனோ, அநியாயத்துக்கு கீழ் படியுற அண்ணன், இப்படி ஒரு ஸ்டிரிக்ட் அப்பா எனக்கு”

அப்பா, முன் கேட்டை திறந்து, கீரைகட்டு, அன்றைய தினசரியுடன் உள்ளே நுழையும் நேரம், அருண் பல்லை விளக்கிவிட்டு, அம்மாவிடம் காப்பி கேட்டுவாங்கி உறிஞ்சிக்கொண்டே, முதலாம் ஆண்டு கல்லூரி படிக்கும் தன் அண்ணன் இடம் வந்து அமர,

“டேய் அநியாயம் பன்னாதடா, உனக்கு வயித்தால போக”

“அருகம்புல் ஜூஸ் குடிக்குற உனக்குதான் அதெல்லாம் போகும் எனக்கு ஒன்னும் ஆகாது தம்பி” என கூறிக்கொண்டே ஒரு புத்தகத்தை எடுத்து பிரித்து வைத்து படிப்பது போல பாவலா காட்டிக்கொண்டு, சிவாவின் ஏதோ பிடிங்கி விளையாடிக்கொண்டிருந்தான். அதற்குள் கீரைக்கட்டை சமையலைறையில் கொடுத்துவிட்டு ஹாலுக்கு வந்த அப்பா இதை கண்டு “அருணை யாரு எழுப்பிவிட்டது நீ எதுக்கு இவ்வளவு நேரத்துல எழுந்தே”

“நீங்க தான் சீக்கிரமா எழுந்துக்காட்டி அடி பின்னிடுவீங்கனு அண்ணண் தான் எழுப்பிவிட்டான்”

“ஏன் டா சிவா செமஸ்ட்டருக்கு நீ படிக்காம பொழுதை போக்க சின்ன பையனை எதுக்கு டா எழுப்பிவிட்ட” சிவா பேந்த பேந்த விழிக்க, அப்பா, “போ போய் திண்ணையில உக்காந்து படி, ரெண்டு பேரும் தனி தனியா இருங்க”

“மொத்தத்துல நீ தான் இந்த வீட்டுல ராஜா மாதிரி இருக்கே உனக்கு தான் ஸ்பெசல் கவணிப்பு எல்லாம்”

இந்த சம்பவத்திலிருந்தே உங்களுக்கு புரிந்திருக்கும் சிவா வீட்டில் எவ்வளவு கண்டிப்பாக வளரும் பையன். அருண் அந்த வீட்டு செல்ல பிள்ளை. சிவா அறியாமல் செய்யும் தவறுக்கு கண்டிக்கவும் சில சமயம் தண்டிக்கவும் செய்யும் அப்பா, சில சமயம் அருண் அறிந்தே செய்யும் சில தவறுகளை கண்டுகொள்ள மாட்டார். இது அருணுக்கு ஒரு சுதந்திரத்தையும், சிவாவுக்கு ஒரு கடுப்பையும் கொடுத்தது.

அருண் அப்பா சொல்படி தான் சரிவர கேட்பதில்லையே தவிற பள்ளி ஆசிரியர்களிடத்தில், கீழ்படிந்த மாணவன், படிப்பிலும் விளையாட்டிலும், மற்ற கலை நிகழ்ச்சிகளிலும் படு சுட்டி. அருணுக்கும் அப்பாவை பிடிக்காது என்பதெல்லாம் இல்லை, அப்பா பள்ளியில் ஆசிரியராகவும், வீட்டில் அப்பாவாக நடந்துக்கொண்டால் அருணுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அருணின் அப்பா 24 மணி நேரமும் ஆசிரியராகவே இருக்கிறார் அது தான் அருணுக்கு பிடிக்கவில்லை. இலவச இனைப்பாக கடந்த ஒரிரண்டு வருடங்களாக அருண் தன் உடல் அளவிலும் மனதளவிலும் ஹார்மோன் அளவிலும் சில பல மாற்றங்களும் வினைகளும் உணர்ந்து அருணின் கண்களுக்கு ஆண்கள் பேர் அழகன்களாக தெரிந்தனர்.

இப்படியே சிவாவும் அருணும் வளர்ந்து வந்தார்கள் அருண் தனது 12ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதிவிட்டு இன்று முடிவுக்காக காத்துக்கொண்டிருந்தனர். 11 மணி அளவில் அருணின் மதிப்பெண்களுடன் வீட்டுக்கு வந்தார் அருணின் அப்பா. ஆனால் அருண் தன் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ள காலையிலேயே வெளியே சென்றவன் வீடு திரும்ப மாலை ஆனது. அருண் எடுத்தது 1100 மதிப்பெண்களுக்கு மேலே.

அருண் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று அப்பா ஒரு கணக்கு போட்டுவைத்திருந்தார், ஆனால் அருணுக்கு அதில் சுத்தமாக விருப்பமே இல்லை. தான் ஒரு விளையாட்டு ஆசிரியர் ஆகவேண்டும் என்ற நெடு நாளாக வைத்திருந்த ஆசையை கூற, அது அருணின் அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எவ்வளவு மறுத்தும் அருண் அடமாக “படித்தால் இந்த உடற்பயிற்சி கல்வி டிகிரி தான் படிப்பேன் என்றும் இல்லாவிட்டால் படிக்கவே மட்டேன், தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்வேன்” என்று மிரட்டியதால் மட்டுமே அருணின் அப்பா வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டார்.

இதை கண்ட சிவாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, தன்னுடைய எந்த ஒரு விஷயத்திலும் முழுமையாக எனது விருப்பத்தை காதுகூட கொடுத்து கேக்காத அப்பா, அருணுக்கு இவ்வளவு சுந்தந்திரம் கொடுப்பது அவனுக்கு இன்னும் எரிச்சலை மூட்டியது. ஆசிரியராக இருக்கும் அப்பாவை ஒன்றும் செய்யமுடியாத காரணத்தால் அதன் கோபம் அருணின் மேல் மொத்தமாக திரும்பியது. சிவா அருணை பழிவாங்கவும் போட்டு கொடுக்கவும் சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்காத்திருந்தான்.

அருணை, அவனது அப்பா, அதே ஊரில் உள்ள ஒரு கல்வி நிறுவங்கள் வைத்திருக்கும் ஒரு அறக்கட்டளை நடத்தும் உடற்பயிற்சி கல்வி கல்லூரியில் சேர்த்துவிட்டார். அருணும் அந்த கல்லூரிக்கு முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக வந்து போய்க்கொண்டிருந்தான். இந்த இரண்டு வாரத்தில் தனக்கு தோதாக தன் கண்ணுக்கு குளிர்சியாக ஏதேனும் பையன் தென்படுகிறானா என போவோர் வருவோரை பார்த்துக்கொண்டே செல்வான். இந்த நாட்களில் வீட்டிலிருந்து அவன் அம்மா, சாப்பாடு கட்டிகொடுத்து அனுப்பிவிடுவாள், போக போக அருனுக்கு இந்த டிபன் தூக்குவது சுத்தமாக பிடிக்கவில்லை அடிக்கடி “என்ன மா இது ஸ்கூல் படிக்கும் போது தான் இதை தூக்கிகிட்டே போனேன் இப்ப தான் காலேஜ் முக்கு முக்கு கேண்ட்டீன் வச்சிருக்கான் அங்க போனா சாப்பிட்டுக்குவேன். அதனால அப்பாகிட்ட பேசி பஸ் காசு தவிற மதியம் சாப்பாட்டுக்கு காசு வாங்கி கொடு, உன் புருஷங்கிட்ட நான் கேட்டு காசு கொடுத்துட்டாலும்”. அருணின் அம்மாவும் மகன் கேக்கிறானே என்று ஒத்துக்கொண்டாள்.

இந்த ஒரு மாதத்தில் அருண் கல்லூரி நுழைவாயிலில் இருந்து முதலில் ஆப்பீஸ், நிறுவனர் பங்களா, அதைத்தாண்டி பாலிடெக்னிக் கல்லூரி, அதைத்தாண்டி கலை அறிவியல் கல்லூரி, ஒரு பொறியியல் கல்லூரி, அதைத்தாண்டி ஒரு கல்வியியல் (B.Ed.) கல்லூரி, அதைத்தாண்டித்தான் அருணின் உடற்பயிற்சி கல்வி கட்டிடம், இதில் காலையிலும் மாலையிலும் அருண் செல்லும் நேரத்திற்கு அந்த B.Ed. கல்லூரி கட்டிடத்திடம் ஒரு கட்டழகன் அருண் கண்களை கவர்ந்திழுத்தான். அந்த நாள் முதல் இன்று வரை அருண் அந்த கட்டழகனை கண்களாலேயே அள்ளி பருகிக்கொண்டிருந்தான்.

இன்று தான் முதன் முதலாக அருண் தன் நண்பர்களுடன் இணைந்து மதிய உணவுக்காக அருகே உள்ள B.Ed. கல்லூரி கேண்டினுக்கு சென்றான், உள்ளே சென்றதும், அந்த கட்டழகன் எங்கேயாவது தென்படுகிறானா என தேட தொடங்கி ஒரு வழியாக தட்டில் மீல்ஸ் வாங்கிக்கொண்டு ஒரு டேபிளில் அமர்ந்தால் அருணிற்கு அதிர்ச்சி, காரணம் அந்த கட்டழகன் தன் எதிரிலேயே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அருண் அன்று தட்டிலி இருந்த சேற்றை சாப்பிடுவதற்கு பதிலாக எதிரில் அமர்ந்திருந்த கட்டழகனின் கண்களால் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். இது இப்படி கிட்டதட்ட ஒரு மாதம் ஓடியது. அனுதினமும் போகும் போதும் வரும் பொழுதும், மதியம் கேண்டினில் அதே டேபிளில் எதிர் எதிரே அமர்ந்து சாப்பிடுவதும், அருணிற்க்கு ஆர்வத்தையும் ஆவலையும் கட்டுபடுத்த முடியவில்லை எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ன பேசுவது என்று திக்கு தெரியாமல் விழித்தான். இந்த சமயத்தில் தான் தன் நண்பனின் அக்கா திருமணத்திற்க்காக மற்ற நண்பர்கள் அனைவரும் வெளியூர் சென்றிருந்தனர். வெளி ஊர் என்பதால் அருணிற்கு அவன் அப்பா அனுமதி அளிக்கவில்லை. இதில் அருணிற்கு வருத்தம், அவன் அண்ணன் சிவாவிற்கு கொண்டாட்டம்.

சரி தனக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று புலம்பிக்கொண்டே அன்றைய மதிய உணவு தட்டை வாங்கிக்கொண்டு அதே மேசையில் அமர எதிரே இருந்த கட்டழகனை தேட அவனும் அடுத்த சில நிமிடங்களில் அவனும் வந்துவிட்டான். அருணிற்கு கொடுத்த சாம்பார் தீர்ந்து போக அதை எப்படி கேட்பது யாரிடம் கேட்பது என விழி பிதுங்க்கொண்டிருந்த சமயத்தில் தான் அந்த கட்டழகனே அருணை ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டிருந்தவன் பக்கத்து மேசையில் இருந்த சாம்பார் ரசம் பாத்திரத்தை எடுத்து கொடுத்து “இங்க தானே இருக்கு இதை கேக்குறதுக்கு எதுக்கு தயங்குறே, இப்ப சாப்புடு” அருனும் அவன் பெயர்கூட கேக்காமேலே பேச ஆரம்பித்து அந்த லஞ்ச் டைம் முடிந்து போய் இருவரும் பிரிய மனம் இல்லாமல் பிரிந்து அவர் அவர் வகுப்புக்கு சென்றனர். மதியம் இருவருக்குமே பாடத்தில் மனது ஒட்டவில்லை. மாலை கல்லூரி மணி ஒலிப்பதற்க்காக காத்திருக்க அது ஒலித்ததும் அருண் அந்த கட்டழகனின் கல்லூரிவாசலில் காத்திருக்க அவனும் வந்தான் இருவரும் பேசிக்கொண்டே அவர் அவர்கள் வீடு நோக்கி சைக்கிளை தள்ளிக்கொண்டே சென்று பிரியும் நேரத்தில் தான் அருண் தயங்கி தயங்கி

“நான் அருண் நீ” என்று கேக்க

“அவனும் எனக்கு தெரியும் உன் பேர், நான் எழில்”

அருணிற்கு எழில் மீதும், எழிலுக்கு அருணின் மீதும் ஒரு நல்ல நட்பு ஒன்று உருவாகி இருந்தது ஒரு வாரத்திற்குள்ளாகவே இருவரும் கை கோர்த்தபடி நடந்து செல்ல துவங்கினர், ஒருவரை விட்டு ஒருவர் இருப்பதில்லை, இப்படி இருக்க ஒரு நாள் காலை அருண் சைக்கிள் ஓட்ட எழில் முன் கம்பியில் அமர்ந்துக்கொள்ள சைக்கிள் மெதுவாக தான் நகர்ந்தது ஆனால் அருணுக்கு தான் மனது ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. முந்தய தினம் மழை பெய்து ஓய்ந்திருந்தபடியால் அருகில் இருந்த குட்டை போல இருந்த சேற்று நீரை கவனிக்காமல் அதில் விட எதிரே வந்த ஒரு பைக் இவர்கள் மீது சேற்று நீரை வாரி இறைத்ததில் இவர்கள் துணி எல்லாம் சேறு, எழிலின் யோசனையால் அருகில் அறை எடுத்து தங்கி இருந்த தன் வகுப்பு தோழன் வீட்டுக்கு செல்ல இவர்களது கோலத்தை பார்த்தவன் தன்னுடை துணிகளை எடுத்து கொடுத்துவிட்டு குளிச்சிட்டு சீக்கிரம் காலேஜ் வந்துடுங்கடா நான் முன்னாடி போறேன் வரும் போது கதவை மறக்காம பூட்டிட்டு வரனும்னு” என கூறிவிட்டு கல்லூரிக்கு சென்றுவிட்டான்.

அருண் சேறு பட்ட துணிகளுடனே கொஞ்சம் தயங்கி தயங்கி நிற்க, எழில் முன்னே வந்து தன்னுடைய துணிகளை களைந்து குளித்து துணிகளை துவைத்து விட்டு வர அருணும் குளித்துவிட்டு வர, வெளியே மழை வலுத்து பேய ஆரம்பித்திருந்தது, எழிலனோ ஒரு ஒற்றை துண்டு உடன் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்க, அருண் எழிலனின் வனப்பையே பார்த்துக்கொண்டிருந்தான்,

எழிலன் “டேய் அருண் எத்தனை தரம் உன்னை கேக்க”

“என்ன கேட்ட?, மறுபடியும் கேளு”

“சரியா போச்சு போ, உனக்கு எதும் முக்கியமாக கிளாஸ் இருக்கா இல்லை இன்னிக்கு கட் அடிச்சிட்டு தூங்கலாமானு கேட்டேன்”

“தூங்கலாம் தூங்கலாம்” என அவசரமாக கூறிய அருண்,

“கிளாஸ் கட் அடிச்சிட்டு தூங்குறதுல என்ன குதுகலம் உனக்கு” என பேசிக்கொண்டே இருவரும் ஒரே போர்வையை போர்த்துக்கொண்டு படுத்திருக்க, திடிரென ஒடி இடிக்க இருவருமே பயத்தில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாய் ஒருவரின் பிடியும் இறுகியது, மெல்ல மெல்ல காம நாடம் ஒன்று அங்கு அரங்கேறியது. இருவருக்கும் இது தான் முதல் முறை என்பதால் தட்டு தடுமாறிதான் முன்னேறினர்.

அதன் பிறகு அடிக்கடி அருணும், எழிலும் அதே அறையில் அடிக்கடி தங்க ஆரம்பித்தனர் இருவருக்குளும் காதல் மலர்ந்து பூத்துக்குலுங்கி, காய் காய்த்து, கனிந்து காத்திருந்தது. அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. எழிலனுக்கு B.Ed. இரண்டாம் வருடம் என்பதால், பக்கத்து ஊரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் மாதிரி வகுப்பு எடுக்க செல்வேண்டும். முதல் இரண்டு நாட்கள் பஸ்சில் சென்றால் நேரம் ஒத்துவரவில்லை மூன்றாம் நாள் தனது சைக்கிளை 10 கிலோ மீட்டர் தூரம் மிதித்து செல்வதை பார்த்த அதே அரசு பள்ளி ஆசிரியை தனது ஸ்கூட்டியில் அழைத்து செல்ல ஆரம்பித்தார்கள். எழிலனும் இத உதவிக்கு பிரதி பலனாக அந்த ஆசிரியையின் சில பல வகுப்புகளையும் மற்ற வேலைகளையும் செய்து கொடுக்க ஆரம்பித்தான். இது இப்படி ஒரு வாரம் கடந்திருக்கும் ஒரு நாள் எழிலனை பார்ப்பதற்க்காக வந்த அருண் இவர்கள் ஸ்கூட்டியில் ஒன்றாக செல்லும் காட்சிகளை பார்க்க நேர்ந்தது.

ஒருவழியாக எழிலனுக்கு அந்த 15 நாள் மாதிரி வகுப்புகள் முடிந்ததும் முதல் நாள் கல்லூரிக்கு வர வழக்கமான இடத்தில் காத்திருக்க அருண் எழிலை கண்டும் சைக்கிளை நிறுத்தாமல் ஓட்ட எழிலன் துரத்தி பிடித்து காரணம் கேக்க, அருணும் தான் கண்டதை பற்றி கூற எழிலனும் “இது எல்லாம் வேலை செய்யுற இடத்துல வரக்கூடிய சின்ன சின்ன சங்கடங்கள் சின்ன சின்ன உதவிகள் இது எல்லாம் பெரிசுபடுத்தகூடாது” என்று சமாதானம் கூற அதே இடத்தில் இருவரும் கட்டிபிடித்து முத்தம் கொடுத்துக்கொண்டனர். இந்த காட்சியை அருணின் அண்ணன் சிவா பார்த்துவிட்டு இது தான் சமயம் தன் தம்பியை பழிதீர்த்துக்கொள்ளவும் அவன் கோபத்தை காட்டவும் இதை அவன் அப்பாவிடம் அந்த நிமிடமே கூற, உடனே வெடித்தது கலவரம்.

அன்றைய நாள் இரவு அருணின் வீட்டில் புயல் அடித்து ஓய்ந்தது பூகம்பத்தில் சிக்கிய அருணுக்கு ஏகப்பட்ட காயங்கள், அருண் எவ்வளவு எடுத்து சொல்லியும் அவன் அப்பா ஆணுக்கு ஆண் காதலிப்பதும் சேர்ந்து வாழ்வதும் முற்றிலும் இயற்கைக்கு எதிரான காரியம் என்றும் அது அசிங்கம் என்றும் கூறிக்கொண்டே இருந்தார். அருண் எவ்வளவு முயன்றும் அவன் கூறிய அத்துனை விஷயங்களும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகத்தான் போனது. முடிவில் ஆளுக்கு ஒரு புறம் அமர்ந்திருந்தனர், சிவா மட்டும் தனக்கு தேவையானதை தானே சமைத்து சாப்பிட்டு நிம்மதியாக உறங்கிவிட்டான்.

அடுத்த நாளிலிருந்து அருண் கல்லூரிக்கு செல்ல அவன் அப்பா தடை விதித்தார், வீட்டைவிட்டு வெளியே செல்லவும் தடைவிதித்தார். வெளி ஊரில் தன் தங்கை கணவன் வேலை பார்க்கும் கல்லூரியில் சீட்டு வாங்க ஏற்பாடு செய்தார். இதை எல்லாம் தெரிந்துகொண்ட அருண் ஒரு நல்ல நாளில் அவன் அம்மாவிடம் மட்டும் சொல்லிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி எழிலன் வீட்டுகே வந்துவிட்டான். எழிலனோ நடந்ததை எல்லாம் தெரிந்து இருந்தும், “இங்க எதுக்கு அருண் வந்தே?” என்ற கேள்வியை கேட்டு மனம் உடைந்த அருண், “என்ன டா இப்படி சொல்லிட்ட, காலம் பூரா உன்னோடு வாழனும்னு தான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன், நீ என்ன இப்படி கேக்குறே”

“எனக்கும் உன் கூட காலம் பூரா வாழனும்னு தான் ஆசை ஆனா இப்ப என்னால உன்னை எங்க வீட்டுல தங்க வைக்க முடியாது புரிஞ்சுகோ, இங்க கல்யாண வயசுல ரெண்டு பொம்பளை புள்ளைங்க இருக்கு, அதுங்களை கட்டிகொடுக்குறவரைக்கும் நான் இங்க இருக்கனும், உன்னையும் என்னோட வச்சுக்க முடியாது ஒன்னு பன்னுறேன் நீ நம்ப வாசு கூட ரூம்ல தங்கிக்கோ, கொஞ்ச நாளுக்கு அப்புறம் என்ன பன்னுறதுனு யோசிக்கலாம்” என்று கூறி தன் நண்பன் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்து சென்று அங்கு அருணை தங்க வைத்தான். இந்த காலகட்டத்தில் அருண் கல்லூரிக்கு செல்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டான்.

அவ்வபொழுது அருணின் அப்பா இவன் இருக்கும் இடம் தேடி வந்து சமாதானம் செய்வது போல செய்து மீண்டும் வீட்டிற்கு கூட்டி செல்வார். போனதும் வேறு ஊருக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு நடக்கும் அதை பற்றி அறிந்ததும் இரவோடு இரவாக அவன் அம்மாவிடம் செற்ப அளவில் பணம் வாங்கிகொண்டு மீண்டும் வாசுவின் அறைக்கே ஓடிவந்துவிடுவான். கடந்த 6 மாதத்தில் இது போல கிட்டதட்ட 15 முறை நடந்திருக்கும்.

எழனுக்கு தனது கல்வியியல் பட்டபடிப்பு முடிந்து அதே கேம்பசில் உள்ள உயர்நிலை பள்ளியில் வேலையும் கிடைத்துவிட்டது. பிறகு அவன் இரண்டு தங்கைக்கும் திருமணம் முடிந்தது. இதற்கு நடுவில் இப்படியே இருந்தால் ஆகாது என்று முடிவெடுத்து அருணிடம் பேசி “இங்க பார் அருண் நீ வீட்டை விட்டு வெளிய வந்துட்டே மறுபடியும் நீ வீட்டுக்கு போனா உன்னை வெளி ஊர் அணுப்ப பிளான் பனுவாங்க அதனால உன் அப்பாவை நம்பவே நம்பாதே. இதோ கொஞ்சம் கடன் இருக்கு அதை மட்டும் 2 மாசத்துல அடைச்சுட்டேன்னா, இனி நானும் உங்கூட வந்து தங்கிடுவேன், அதுவரைக்கும் நீ சும்மா இருக்காம எங்கியாச்சும் வேலைக்கு போலாம் இல்லை”

“படிப்பை ஒழுங்கா முடிக்காம எனக்கு யார் வேலை தருவா?”

சில நிமிடங்கள் யோசித்த எழில் “நாம ஏன் வேலைக்கு போகனும் முதல் போட்டு ஒரு தொழில் தொடங்குனா என்ன?”

“நாம என்ன தொழில் தொடங்க”

“நம்ப படிச்ச காலேஜ்க்குள்ளயும் சரி வெளியவும் சரி சரியான ஜெராக்ஸ் கடை இல்லை, உனக்கு தான் நல்லா கம்பியூட்டர்ல லெப்ட் ரைட் யூ டார்ன் எல்லாம் போடுவியே”

“அது ஏதோ விளையாட்டா பன்னுறது ஒரு தொழில் செய்யுற அளவுக்கு வருமா”

“எல்லாம் கத்துக்கலாம், மொதல்ல நம்ப மேல நம்பிக்கை வைச்சு வேலையை மட்டும் சின்சியரா பாரு அப்புறம் மத்தது எல்லாம் காலத்தோட கையிலயும், நம்ப உழைப்புலையும் தான் இருக்கு” என்று நம்பிகை வார்த்தை கூறி, சிறியதாக ஒரு ஜெராக்ஸ் கடையை அந்த கல்லூரி நிறுவங்கள் எதிரே வைக்க, 15 நாட்களின் கடை பிக்கப் ஆகி கடனாக போட்ட முதல் தொகையை எடுத்துவிட்டனர், கொஞ்சம் கொஞ்சமாக எழிலனின் குடும்ப கடனையும் அடைத்துவிட்டு, அவன் அப்பா அம்மாவிடம் தான் அருணை காதலிப்பதாகவும் வாழ்ந்தால் இனி அவனோடு தான் வாழ்வேன் என்னும், தன்னால் இனி உங்களுக்கும் குடும்பத்துக்கு எந்த அவ பெயரும் வராது என்று கூறிவிட்டு நிரந்தரமாக அருணுடனே வாசு உடன் தங்கிவிட்டான். சில நாட்களில் வாசுவுக்கு அவன் சொந்த ஊரில் வேலை கிடைக்க அங்கு சென்றுவிட்டான். பகல் நேரத்தில் அருண் கடையை பார்த்துக்கொள்வான் எழிலன் பள்ளிக்கு வேலைக்கு செல்வான், மாலை முதல் இரவு நேரம் வரை இருவரும் தங்கள் ஜெராக்ஸ் கடையில் உழைக்க நல்ல முன்னேற்றம் அடைந்தனர், சில வருடத்திலேயே கடையும் விரிவு படுத்தி 2 வேலை ஆட்களை வைத்து சம்பளம் கொடுக்கும் அளவு முன்னேறிவிட்டனர்.

இது சிறிதாக அருனின் அப்பா காதுக்கு சென்றது. அவர் மீண்டும் அருனை பார்த்து பேச முயற்சி செய்ய அவனோ பார்க்கவும் பேசவும் மறுத்துவிட்டான். அவ்வபொழுது எழிலன் அருனிடம் “உன் அப்பா கூப்புடுறாங்க ஆட்டுகுட்டி கூப்புடுறாங்கனு போனா அப்புறம் என்னை நீ பார்க்கவே முடியாது நானும் என் வேலைய பார்த்துட்டு வெளிய பொய்டுவேன் இந்த ஜெராக்ஸ் கடை வித்து உன் பாதிய உன் கிட்ட கொடுத்துட்டு நான் போய் வேற கடை வச்சுக்குவேன் வாழ்க்கையில் என் முகத்துல நீ முழிக்கவே கூடாது”

இதை கேட்ட அருணின் மன உடைந்து “இனி நான் எங்கேயும் போக மாட்டேன் யாரையும் பார்க்கமாட்டேன் என்ற மன உறுதியுடன் இருந்தான்” பிறகு ஒரு நாள் அருனின் அப்பா எழிலன் பள்ளிக்கு சென்றிருக்கும் நேரம் பார்த்து கையில் ஒரு கவருடன் வந்து “இதோ பாரு அருண் உன்னை சமாதானம் பன்னி கூட்டிகிட்டு போக நான் வரலை, இது உனக்கு வந்த தபால், நீ இந்த டிகிரி தான் படிக்கனும்னு ஆசை பட்டு சேந்த டிகிரி, இதை படிச்சு முடிக்க உன் யூனிவர்சிட்டி கொடுத்துஇருக்குற கடைசி வாய்ப்பு, நீ யார் கூடவோ வாழ்ந்துட்டு போ என்ன எழவோ பன்னி தொலை அதேட நீ படிக்கனும்னு ஆசைபட்ட இந்த டிகிரியையும் படிச்சு முடிச்சுடு” என்று கூறீவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் விடுவிடுவென கிளம்பிவிட்டார்.

கிட்டதட்ட 1 மணி நேரம் வரை நன்கு யோசித்தவன் பிறகு சரி டிகிரிய மட்டும் முடிச்சுடலாம் என முடிவு எடுத்து அவன் அப்பாவை பார்க்க வீட்டுக்கு சென்றான் அருண், அவன் அம்மாவுக்கு ஏக சந்தோசம், அப்பாவை பற்றி கேட்டான் “அவர் இப்பெல்லாம் மதிய சாப்பாடு எடுத்துக்கிட்டு பொய்டுறார், இப்ப ஸ்கூல்ல தான் இருப்பார்” என்று பதில் வர. அருண் அவன் அப்பா வேலை பார்க்கும் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளிக்கு சென்றான். அங்கு அவன் அப்பாவை பார்த்து தான் மீண்டும் கல்லூரிக்கு செல்லவிருப்பதாகவும் அதற்க்கு எங்கே எப்படி தொடர்புகொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை கேக்க, எல்லாம் இனி நான் பார்த்துக்குறேன் நான் சொல்லுறப்போ நீ எங்கூட வந்தா போது இப்ப போ, என அனுப்பிவைத்துவிட்டார்.

அருணும் குதுகலமாக பள்ளியை விட்டு கிளம்பிவிட்டான். மதிய உணவு இடைவேளையில் அருணின் அப்பா உடன் வேலை செய்யும் ஆசிரியர் பேச ஆரம்பித்தான் “என்ன வேலாயுதம் சார், வந்துட்டு போறது உங்க பையன் அருண் மாதிரி இருக்கே”

வேலாயுதம் நடந்தவற்றை கூற, “நீங்க சொன்ன திட்டதை 50 ரூபா பிரிண்ட் அவுட்டை அதும் அருண் கடையில எடுத்ததை வச்சே முடிச்சிட்டிங்க, எப்படி யூனிவர்சிட்டியில இருந்தா தபால் வந்துச்சு, நீங்களே ரெடி பன்னினது, எல்லாம் சரி இது எதுக்குங்க படிப்ப இழுத்தீங்க, பேசாம உங்க மனைவிக்கு உடம்பு சரியில்ல, பெரிய பையன் சிவாவுக்கு கல்யாணம்னு எதாச்சும் சொல்லிருக்கலாமே”

“அட போங்க சார் நீங்க விவரம் தெரியாத ஆளா இருக்கீங்க, நீ சொல்லுறமாதிரி பன்னின்னா, விஷஷேசம் முடிஞ்சதும் இல்லை உடம்பு சரியானதும் அவன் பழைய குருடி கதவை திறடினு அந்த எழிலன் கூட ஜெராக்ஸ் கடைக்கே போய்டுவான், உங்களுக்கு என் அருணை பத்தி தெரியாது, அவன் படிப்புனு இறங்கிட்ட சரியான புலி, அவனை மாதிரி சின்சியர் யாரும் இல்லை, அதே மாதிரி ஆசிரியர் சொல் பேச்சு கேட்டு கீழ்படியுற மாணனவனை இந்த ஜில்லாவுலையே பார்க்கமுடியாது, அதுக்கு தான் அவனை திரும்ப காலேஜ்க்கு அனுப்பு மொதல்ல அவனை மாணவனா சொல் பேச்சு கேட்டு கீழ்படிந்து நடக்குற மாணவனா மாத்தீட்டா மத்தது எல்லாம் தன்னாலே நடக்கும் சார்” என்று வேலாயுதம் சார் பேசியது பள்ளியின் சுற்று சுவரை தாண்டி நடந்து கொண்டிருக்கும் அருணுக்கு நன்றாகவே கேட்டது. அவன் அப்பா அட நினைத்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆட அருணும் தயார் ஆகிக்கொண்டு இருக்கிறான் என்று உங்களுக்கும் சொல்லித்தான் புரியவேண்டுமா.

 

-இனியவன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன