ஆயா (தொடர்கதை)
*******
கரு: ஒரு அனாதை இல்லத்தில் பணியாற்றும் ஒரு திருநங்கையின் கதை!
விடியற்காலை 5.20மணி…
அலாரம் இல்லாமலே தினமும் இந்த நேரத்திற்கு எழுவது என் வழக்கம்!படுக்கையிலிருந்து எழுந்து இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்து முகத்தில் ஒற்றிக்கொண்டு கண்விழித்தேன்… எழுந்து பாயவும் தலையணையும் எடுத்து சுருட்டி ஒரு ஓரமாக வைத்துவிட்டு அவிழ்ந்த கூந்தலை கொண்டையாக கட்டிக்கொண்டேன்.. வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து பளீச் பளீச்சென்று முகத்தில் அடித்து முகத்தை கழுவி வாய்கொப்பளித்தேன்… இடுப்பில் சொருகியிருந்த முந்தானையால் முகத்தில் இருந்த தண்ணீரை துடைத்துவிட்டு தியான மண்டபத்திற்கு வரவே… அங்கு தொங்கி கொண்டிருந்த பெரிய கடிகாரமானது அலாரம் அடித்துகொண்டே 5.30மணியை காட்டியது….
அப்பொழுதுதான் “அன்னை” இல்லத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் மற்றும் இங்கு பணியாற்றும் ஊழியர்களும் எழுவார்கள். இந்த இல்லத்தில் எனக்கென்று தனி மரியாதையும் அன்பும் பாசமும் காட்டுவார்கள்… அதற்கு காரணம்… நான் இங்குள்ள குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் விதம்!
“ஏய்! ஓடாதே! நில்லு… எனக்கு மூச்சு வாங்குது!”
“என்னாச்சு மல்லிக்கா!?”
“என்ன ஆச்சா!? எல்லாம் நீங்க கொடுக்குற எடம்… பாரு… குளிக்கமாட்டேனு அடம்புடிங்குதுங்க… சனியன்ங்க…”
“இதோபாரு மல்லிகா…குழந்தைகள போயி சனியன் அப்படி இப்படினு சொல்லாதே!”
“சொல்லாமே… எப்பபாரு… குளிக்கமாட்டேன்… சாப்பிடமாட்டேன்… தியான மண்டபத்திற்கு வரமாட்டேன்… ட்ரெஸ் போடமாட்டேனு சொல்லி சொல்லி என் உசுர வாங்குதுங்க… இதுங்கள போயி கொஞ்ச சொல்றீயா!?”
“எல்லாம் நாம நடந்துகிறத பொறுத்துதான் குழந்தைகளும் நம்மகிட்ட நடந்துக்கும்…நாம அவங்ககிட்ட அன்பா நடந்துகிட்டா.. அவங்களும் பாசமா நம்மகிட்ட நடந்துக்க போறாங்க…”
“அப்படியே அவங்க நடத்திட்டாலும்… இந்தா இந்த டவலை பிடி…உன் பேச்சை தான் அவங்க கேட்பாங்களே!! நீயே அவங்கள உடற்பயிற்சி செய்யவச்சி குளிப்பாட்டி தியான மண்டபத்திற்கு கொண்டு வா!”
என்று என் கையில் டவலை திணித்துவிட்டு சென்றாள், மல்லிகா.
“ஏய்..பாபு…ஆயா சொல்றேன்ல… இங்க வா…”
உடலை நெளித்துகொண்டே என்னிடம் வந்தான்…
“பாபு நல்லபுள்ளையா.? கெட்டபுள்ளயா?”
“நா… சாரதா ஆயாவுக்கு மட்டும்தான் நல்லபுள்ள… மத்தவங்களுக்கு கெட்டபுள்ள”
“அப்படி சொல்லகூடாதுப்பா… எல்லாரும் உனக்கு ஆயா தானே! இல்ல நீங்க மட்டும்தான் என் ஆயா! ”
“இதோ பாரு உன்னமாதிரி எத்தனை பசங்க இருக்காங்க.. எல்லாரையும் நா குளிக்க வச்சிக்கிட்டு இருந்தா சாமிகும்பிட நேரமாகும்தானே… அப்படி நேரமாச்சுன்னா நீ எப்பவும் சொல்வீயே… டாக்டரா ஆகனும்னு…நீ டாக்டராக ஆவதற்கு எப்படி சாமி உதவி செய்வாரு.!?நீ சொல்றபேச்ச கேட்டுதான்… நானும் சாமிகிட்ட உனக்கு உதவிசெய்ய சொல்லுவேன்..ஓகேவா!?”
“ஆமா…ஆமா… நா டாக்டர் ஆகனும்… டாக்டராகி இங்க வந்து உங்களுக்கு மட்டும் மாத்திரை தருவேன்…. மல்லிகா ஆயா, மூர்த்தி அங்கிள், சாந்தி ஆயா எல்லாருக்கும் ஊசி போடுவேன்..”
“சரி…சரி…வா குளிக்கலாம்”என்று சிரித்துக்கொண்டே பாபுவை தூக்கிகொண்டு குளிக்குமிடத்தில் நிப்பாட்டினேன்..
“பாருங்க.. சாரதா… இந்த கொரங்குங்கள… குளிப்பாட்ட வந்தா தண்ணீய எம்மேல ஊத்திட்டு ஓடுறாங்க…”
“விடுங்க சாந்தி.. கொழந்தைங்கனா அப்படித்தான் இருக்கும்… நாமலும் இப்படித்தான் இருந்திருப்போம்…பாபு அடம்புடிக்கிறான்… நா சும்மா ரெண்டு கப்பு தண்ணீ ஊத்திட்டு போறேன் நீங்க பாத்துக்குங்க…”
“சரி சாரதா”
“சாராதாம்மா… சாரதாம்மா…”
“என்ன ஆறுமுக அண்ணா!?”
“காலை உணவு தயாராகி கொண்டிருக்கிறது… எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க”
“ஏண்ணே! ஒரு தடவை பாத்தா பத்தாதா….. தினமும் பாக்கனுமா!?”
“இல்லம்மா… சாரு உங்கிட்ட தினமும் காட்ட சொல்லிருக்காரு…”
“அப்படியா..!?சரி இருங்க தியான மண்டபத்திற்கு போயிட்டு வந்திடுறேன்.”
“சரிம்மா”
தியான மண்டபத்தை நோக்கி போனேன்….
“பொன்னி….பொன்னி..”
“என்ன சாரதாம்மா!?”
“கொழந்தைங்க எல்லாம் தியான மண்டபத்திற்கு வர்றத்துக்குள்ள சாமிபடத்திற்கு மாலைஎடுத்து வையி…பூஜை பொருட்களை எல்லாம் சரிபார்த்து வையி… நா வரும்போது எல்லாம் சரியா இருக்கனும்”
“சரிம்மா..”
“ஆங்….. குத்துவிளக்கில திரி இல்ல பாரு…. அந்த பீரோவுல வச்சிருக்கேன் .. தேடிக்கிட்டு இருக்காம திரிபோட்டு எண்ணெய் ஊத்தி வையி….”
“சரிம்மா”
சமையல் அறையை நோக்கி நடந்தேன்..
“ஆறுமுகஅண்ணே!”
“வாம்மா சாரதா! இட்லி அடுப்புல இருக்கு… சட்னி சாம்பார் வச்சாச்சி.. கேசரி செய்யனும்….”
“சரிண்ணே!” என்று சாம்பாரை… அருகில் இருந்த கரண்டியை எடுத்து கழக்கிவிட்டு கொஞ்சமாக கையில் ஊத்தி குடித்து பாத்தேன்.. நன்றாகவே இருந்தது.. அப்படியே சட்னி பக்கம் திரும்பினேன்… அதையும் ஒரு கரண்டி எடுத்து கழக்கிவிட்டு கொஞ்சமாக கையில் ஊத்தி குடித்தேன்… அதுவும் நல்லா இருந்துச்சி..
“அண்ணே! எல்லாம் நல்லா இருக்கு…. சட்னிக்கு எப்பவும் புது தேங்காயா போடுங்க… அதே நேரத்தில சட்னிய மட்டும் கடைசியில செய்ங்க…மொதல்லயே செஞ்சி வச்சிட்டா கெட்டு போயிடும்”
“சரிம்மா…சட்னிக்கு புது தேங்காய்தான்ம்மா யூஸ் பண்றேன்”
“சரிண்ணே!”
“சாரதா…சாரதா..”
“என்ன மேரி..”
“நந்தினி அடம்புடிக்கிறா… கிட்ட யாருமே போக முடியால…யாரு போனாலும் கையில கிடக்கிறத எடுத்து வீசுறா….!”
“அய்யய்யோ! எம்மேலதான் கோபமா இருக்கா…!சரி நா வந்து பாத்துக்கிறேன்…”
என்று நந்தினியை பார்க்க கிளம்பும் போது அன்னை இல்லத்தின் உரிமையாளரான ராஜாசார் வந்தார்…
“என்னம்மா சாரதா… எல்லா புள்ளைங்களும் உடற்பயிற்சி செஞ்சிட்டாங்களா!?”
“ம்…செஞ்சிட்டா…சார்… எல்லாரும் குளிச்சிட்டு கிளம்பிகிட்டு இருக்காங்க… இன்னும் கொஞ்ச நேரத்தில தியான மண்டபத்திற்கு வந்திடுவிங்க”
“சாரதாவோட பார்வையில இருக்கிறப்ப எனக்கு என்ன கவல… எல்லாம் சரியான நேரத்திலதான் நடக்கும்னு எனக்கு தெரியும்!”
“ஓகே சார்… நந்தினி அடம்புடிக்கிறாளாம்..நா போயி என்னனு பாத்துட்டு வந்திடுறேன் சார்”
“சரிம்மா…ஏம்மா சாரதா நா எத்தனை தடவ உங்கிட்ட சொல்றது… என்னை சாருனு கூப்பிடாதே அப்பான்னு கூப்பிடுனு”
“இல்ல சார்…அதுவந்து”
“இப்பதானே சொன்னேன்… அப்பான்னு கூப்பிடுன்னு”
சிரிச்சிக்கிட்டே
“சரிங்கப்பா” என்றேன்.
அன்னை இல்லத்திற்கு நான் வந்து ஆறுவருடங்களாகிறது.. இந்த உலகத்தில தெரிந்தவர்களுக்கே வேலை தராத பொழுது… நானொரு திருநங்கை என்று தெரிந்தும்கூட அதை பொருட்படுத்தாமல் எனக்கொரு வேலையும் கொடுத்து எங்கே வேணாலும் எப்ப வேணும்னாலும் நா போயிட்டு வர அனுமதி கொடுத்திருக்கிறார்.. ஆறு வருசத்துக்கு முன்னாடி என்மனசுல பட்ட காயத்துக்கு மருந்து கொடுக்கும் மருத்துவமணையாக இந்த அன்னை இல்லம் எனக்கு இருந்தது.. நா இருந்த நிலைமையை பாத்துட்டு கை கொடுத்தவருதான் ராஜாப்பா! குழந்தை பெத்துக்க முடியாத எனக்கு..இங்கு எத்தனையோ குழந்தைகள்! எல்லா குழந்தைகளும் அன்போடு என்னை “ஆயா” அழைப்பதில் கிடைக்கும் சுகம் வேறு எங்கேயும் எனக்கு கிடைக்காது.. அவருடைய நல்ல மனசுக்கு அவரு ரொம்ப வருசத்துக்கு நல்லா இருக்கனும்…
சரி அது இருக்கட்டும்! அந்த நந்தினி யாரு? அவளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? என்பதை அடுத்த இதழில் பார்க்கலாம்.
ஆயா வருவாள்……..
கவிஞர் கமலி.