அவள்
ஒரு பெருஞ்சுடர் !
வேள்வியில் இருந்து வந்தவளல்ல
பல கேள்வியிலிருந்து வந்தவள் !
என்ன தான் அப்படி
கேட்டார்கள் ?
ஆம்பளையா நீ என்றார்கள் !
ஆமாம் ஆம்பள
இல்லை தான்.
உங்களுக்கு பதில் தெரிந்திருக்கிறதே !
ஆனால் பொம்பள என்று சொல்லி இருக்கலாம் !
உஸ்சுன்னு சொல்லி
உங்கள் ஆண்மையினை உசுப்பி
விட்டுக்கொள்வதில்
அப்படி என்ன தான்
ஆனந்தமோ ?
எனக்கு ஒரு சந்தேகமும் கூட !
ஆண்குறியில் வழியும்
விந்துகளில் தான்
ஆண்மை அகப்பட்டுள்ளதென
அறிவிப்போரே !
பிறகு என்ன கூந்தலுக்கு
மீசையை முறுக்கி
ஆம்பளடா !
என்ற தனக்குத்தானே
ஒரு ஆராதனை !
மீசையில் விந்து வடியுமோ
உங்களுக்கு !
என்ன விந்தையோ !
பெண்களே !
உங்களுக்கு கர்ப்பப்பை
இல்லையென்றால்
இந்த ஆதிக்க விந்துப் பைகளுக்கு
இங்கென்ன வேலை ?
நல்ல வேளை !
எனக்கு கர்ப்பப்பை இல்லை !
இந்த ஆதிக்க ஆண்மையின்
துளி விந்தினை சுமப்பதற்கு
அவை
இல்லாமலேயே
இருக்கலாம் !
என் புகைப்படத்திற்கு
கருத்துப் பெட்டியில்
வரிசையாக
“ஒன்பது” இருந்தது.
கனவான்களே !
அத்தனை “ஒன்பதுகளையும்”
கூட்டுத்தொகை செய்து
தொகையாக தாருங்களேன் !
என் ஏழ்மை களையும்
உழைக்க வேண்டியது தானே !
பிச்சை எதற்கு ?
பாலியல் தொழில் எதற்கு ?
உனக்கு தான் வாயும்
பற்களும் இருக்கிறதே !
நின்று கொண்டே
காலின் கட்டைவிரல்
நகம் கடி என்பது போல் !
இக்கேள்விக்கு
வாய் திறக்கும் பாழ் சமூகமே !
வாய்ப்பு தருகிறேனென
அதே வாய் சொல்லியிருக்குமானால்
என்றோ உழைத்து தழைத்திருக்குமே !
இன்னும் ஏராளம்
பரவாயில்லை!
அரசே !
திறனுள்ள திருநர்களுக்கு
சட்டம் செய்து
அறம் செய்
பாலீர்ப்பு ஒடுக்குதல் நீங்க அரண் செய் !
எனக்கு ஓர் ஆழ் மகிழ்வு !
இப்போது நான் !
நவநாகரீகப்பெண் !
– அக்னி பிரதீப்
