சிசு என்ற அறிமுகத்துடன் இந்த உலகில் வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும் என்ற பேராசையில் என் தாயின் வயிற்றை தள்ளி இப்பூமியில் மெல்ல கால் வைத்தேன்.
நிலமெங்கும் பாதம் பதித்த என்ன மழலைப் பருவம் பாலினம் மறந்தது,
சொப்பு சாமான்களை சூழ்ந்திருந்த என் உலகம் சூதுவாது தெரியாதது, தாய் தந்த கொலுசில் என் கால்கள் குதித்து ஆடியது,
அவள் எனக்கு
இறுக்கிக் கட்டிய உச்சி குடுமியில் நெருக்கி கட்டிய மல்லிகை பூவுக்கு பஞ்சமில்லை,
ஆற்றங்கரையோரம் அழுத்தி தேய்த்து அரைத்த மஞ்சள் அம்மா அவள் முகமெல்லாம் மலர்ந்து நின்றது
ஆசைக்கு நான் மஞ்சளை தொட்டு அப்ப
அதட்டல் நமட்டுச் சிரிப்புடன் கன்னம் கிள்ளினாள், என் உருட்டிய கண்களுக்கு மையும், நெற்றி நிறைய போட்டிருக்கும் ஒரு குறையும் கிடையாது, ஆண்களின் விளையாட்டு கொஞ்சம் ஒவ்வாமை தான், ஆனால் விரும்பி விளையாடினேன் அவள்களுடன்.
இதயம்கொண்ட மனிதர்களே என் கண் நிறைய தெரிந்தார்கள்,
இந்தக் குழந்தையைக்கு அள்ளிக்கொடுக்கும் அவர்களின் கோடி முத்தங்களில்
தனி முத்தமாய்
பெருஞ் சிரிப்பாய்
கொண்டாட்ட குவியலாய்
மழலை மங்கா மானிடம் போற்ற வந்தேனோ
என ஆருடம் கொண்டேன் நான்.
_________
நெடுநெடுவென வளர்ந்து விட்டேன்,
நித்தம் ஒரு முறை சாவுக்கு பெயர் வைக்கிறேன், அன்று அள்ளி அணைத்து
அன்னையவள் இன்று எனக்கு
கட்டிய கொலுசையும்
சூடிய பூவையும் பார்த்து உதட்டை
இழுத்துச் சுழிக்கிறாள்,
அடிக்கொரு முறை அவள் வயிற்றை குறை சொல்லிக் கொள்கிறாள்,
இந்தத் தேவையில்லாத கழிவு அவள் வயிற்றில் ஏதோ பத்து மாதங்கள் தேங்கியிருந்ததாம்.
நளினம் கொண்ட மேனியை நொடிக்கொரு முறை கண்ணாடி பார்த்து கண்டிக்கிறேன்,
என்னை நான் கொண்டாடுவதா..?
இவர்களின் இரைச்சலுக்கு
என் உடல் இரங்கல் செய்திக்கு தயாராவதா..?
உடல்முழுக்க தேங்கியிருந்த பெண்மையும் தனிமையும் கொண்டு தனித்து நிற்கிறேன்.
எங்கே போவேன்,
பிறப்பு பிழையா ..?
அல்லது இவர்களுக்குபிறந்தது பிழையா..?
தவிக்கிறேன் …!
தள்ளி நிற்கிறேன்..!
இனியும் உங்கள் புனிதத்தில் என்னை புதைக்க விரும்பவில்லை,
உங்கள் வர்க்க புத்திகளின் வாசனையை அழிக்க மாட்டேன்,
உங்கள் வார்த்தை வன்முறையில்
எனக்கு வாழ விருப்பமில்லை,
என் தலைமயிரும் , செதுக்கிய புருவமும், வளர்த்த நகமும் உங்கள் கொப்பளிக்கும் எச்சில்களுக்கு இனியும் பயப்படாது
மனம் நொந்து சொல்கிறேன்
உங்களுக்கு என்னவாக பிறந்தேன் என்று தெரியவில்லை ஆனால் ம பெண்ணாக மாற இப்படியே உங்களை விட்டு விடை பெறுகிறேன்.
பெண்ணாகவே வாழ்வேன்.
______
கட்டிவைத்த சிறகு விரித்து
காற்றெங்கும் பெண்மை பாடி
காணாத தூரம் சென்று
பெண்மை சேலை உடுத்த போகிறேன் .
மடிப்பு மங்கா சேலையை மணிக்கொருமுறை சரி பார்ப்பேன்
உடல் முழுக்க பெண்மை கனவுகள்
கரைந்து கிடைக்கிறது.
என் கனவுகளை காட்சிப்படுத்த
ஏதோ ஒரு நாள் என்னை போன்று ஓடிவந்த என் மூத்தோர்கள்
காத்துக் கிடந்தார்கள்.
அன்னையின் அரவணைபை அச்சுப்பிசகாமல் கொடுத்தார்கள்
கலர் கலராய் கண்ணாடி
வளையல்களும்
கொலுசுகளும்
கொஞ்சும் மேனியுடன்
என்பெண்மையை மெருகேற்றியது.
உன் பெண்மைக்கு அணிகலன் மட்டும் போதாது அங்கங்களை சிதைத்து விடு என்றாள் ஒருத்தி.
ஆசை நாயகர்கள் உன் தொடை இடை(யில் )சுவைப்பார்கள் தேவையற்ற முன்பிண்டம் அதை அழித்து விடு என்றால் ஒருத்தி,
காலு மேல கால போடுவ
காசுக்குப் பஞ்சமில்லை
கனமும் யோசிக்காதே
தொங்கும் தசையை கரைத்து விடு என்றாள் ஒருத்தி.
பெண்மையே என் பேராசை என்றானபின்
உடலுடன் ஒட்டி வந்த அங்கங்களை அழித்து ஒழிக்க ஆயத்தமானேன்.
சிதைந்து சிதறிய அங்கங்களுடன்
ஒரு மாதமும் பத்து நாட்களும்
பதமாய் என் உடலைப் பராமரித்து
புதுமைப் பெண்ணாக பச்சைச்சேலை
உடுத்தி ஆற்றுக்குப் பால் ஊத்தி
பெண்ணே பொறாமை கொள்ளும் பேரழகுப் பெண்ணானேன்..!
அடுத்து என்ன
அடுக்கி கட்டிய மல்லிகைப்பூ என் கூந்தலை மணமணக்கும்,
இழுத்துப் சொருகிய என் சேலையின்
முந்தானை செருக்கு கொள்ளும்,
வளர்ந்த நகங்கள் பளபளக்கும்
செதுக்கிய புருவமும்
அப்பிய உதட்டுச் சாயமும்
என் பெண்மையை பாராட்டப்
பணிவிடை செய்து கொண்டிருக்கும்.
அனைத்துக்கும் நான் அங்கீகாரம் பெற்று விட்டேன்,
தொங்கும் தசையை அறுத்து அழகு பெண்ணாய் மறுபிறவி எடுத்து விட்டேன் அடுத்து என்ன…?
ஆனந்த பெருமூச்சுடன்
அசந்து உட்காருவதற்குள்,
மேனி மெருகேற்றி காம பூசைக்கு தயாராகி கட்சிதமாக கை நிறைய காசு பாரு என்றாள் ஒருத்தி..!
தூக்கி நிற்கும் மார்புகளுடன் கனவான்களை கைக்குள் போட்டு
உன் காமம் விற்று
காசு எந்திரமாகு என்றாள் ஒருத்தி..!
இறுக்கிக் கட்டிய பாவாடை சுருக்கை அவிழ்க்க மனம் இல்லை எனில்
மாய்ந்து விடு என்றாள் ஒருத்தி..!
நீ செத்து எனக்கு என்ன பயன்..?
ஓங்கி அடித்த கைகளுடன் பிச்சை எடு, பெரும்பகுதி எனக்கு கொடு என்றாள் ஒருத்தி..!
குற்ற உணர்வில் நொருங்கினேன்.
நரகல் நக்கியது போன்று நாக்கு கூசியது.
பெருந் தவத்தில் நான்
பெற்ற பெண்மை
தொடைகளுக்கு இடையில் பொருளாதாரம் பேசப் போகிறதா..?
அல்லது பாவப்பிறவி நான் பசிக்கு கையேந்திகிறேன் என கைவிட்டுப் போகிறதா..?
சிதைந்த அங்கத்தின் கீரி வழிந்த ரத்தக் கவர்ச்சி நாத்தம் கூட நிற்கவில்லை அதற்குள்
உடல் விற்பதற்காக…? இல்லை
கையேந்தி காசு காசு கேட்பதற்கா..?
என் பெண்மை
பெண்ணாய் மறுபிறவி எடுத்தது..?
ஆதரவாய் பேசியவர்களில் குரல் அதட்டலாக மாறியது..!
கீறல்களும்
எச்சில்களும்
என் உடலை அளவிட்டது
அளவில்லாமல் கிடைத்தது
உயிர் மீது கொண்ட பயத்தில் அல்லது ஆசையில் அவர்களின் இசைவுக்கு இணைந்து பிச்சை எடுக்க சென்றேன்.
மனம் ஒப்பவில்லை
இரண்டு கைகளை தட்ட இதயம் இணங்கவில்லை.
உழைத்துதான் வாழ முடியும் என்று உள்ளார யோசித்தேன்.
நம்பிக்கையில் சாவிக்கொத்து விற்க்க தயார் ஆனேன்..
அதையும் பார்த்து பொறுத்துக் கொள்ளமுடியா அந்த கொள்ளைக் கூட்டம்.
என்னை ரயிலில் இருந்து தள்ளி விட்டது.
சோர்ந்து விடவில்லை துள்ளி எழுந்தேன்
ஓடினேன்
நடனம்
கற்றேன்..
ஆடினேன்
நாடகம் கற்றேன்
நடித்தேன்…
இரவல் இல்லாமல்
பிச்சை எடுக்காமல்
உடல் விற்க்காமல்
உழைத்து வயிறு நிரப்ப கற்றுக்கொண்டேன்
காதல் கொண்டேன்
கனவுகள் கண்டேன்
ஏமாற்றங்களை மனதுக்குள்
எழுதி விடை தேடினேன்
அவ்வப்போது வரும் தனிமைக்கும் முத்தமிட்டேன்,
தனித்து வாழ்ந்தேன்,
சோர்ந்து விடவில்லை
துணிந்து நடப்பேன்
மீண்டும் விழுவேன்
இருந்தாலும் குறைவில்லாமல் எழுந்து நிற்பேன்,
இன்று உங்கள் முன்
உணவக உரிமையாளராய்
இருக்கிறேன்
நான் உங்கள்
திருநங்கை
ப்ரீத்தி ஷா
-அழகு ஜெகன்