சட்டங்கள் வேண்டாம்

சடங்குகள் வேண்டாம்

நாம் இணைவதற்கு..

 

நம்மைப் போல் புறக்கணிக்கப்பட்ட

ஒரு ஜீவனை சுவிகரிப்போம்

நம் வாரிசாய்..

 

நம்மை தள்ளி வைக்க

இவர்கள் யார்..?

ஒதுக்கி செல்வோம்

தகுதியற்றவர்களை

தூசி என்ன துச்சமாய்..

 

வழித்தடம்

மறைப்பவர் முன்

வீறு கொண்டு எழுவோம்

புதியபாதை அமைத்திட்டு

வானவில் தோரணம் கட்டி

புதியதோர் உலகம் செய்வோம்

அதில்

வாழ்ந்து காட்டுவோம்..

 

 

மானிட காதல்

 

மானிடராய் பிறப்பது அரிது !

மானிடருள் காதல் பிறப்பது

அரிதிலும் அரிது !

காதல் எல்லாம் காதல் அல்ல..

 

இங்கு

ஆணுக்கும் பெண்ணுக்கும்

வருவது மட்டும் காதல் அல்ல

ஆணோடு  ஆணுக்கும்

பெண்ணோடு  பெண்ணுக்கும்

வருவதும் காதல் தான்..

 

ஓரின ஈர்ப்பாளர் என

ஒதுக்கி ஒதுங்கி செல்லும்

மானிடரே!

சற்றே நில்லுங்கள்,

உற்றுக் கவனியுங்கள்..

 

அவர்களின் உள்ளங்களில்

ஓங்கி தெரியும்

அழகான ஆழமான

காதல் உணர்வுகளை..

 

உணர்ச்சிகளின்

எச்சங்களில்

உருகுவதும் உருவாகுவதும்

அல்ல காதல்

உள்ள உணர்வுகளை மதித்து

உருவாகுவது தான்  காதல்..

 

காதலுக்குத் தேவை

இதயங்கள் மட்டுமே

இனங்கள் அல்ல..

 

இனி

இழிவான பார்வையை

தீயிலிட்டு

சினேகமாய் கை கொடுங்கள்..

 

மானிடராய் பிறந்த யாவரும்

ஏங்கி யாசிப்பது

அன்பை மட்டுமே

அன்பால் அரவணைப்போம்

அன்பே காதல்..

 

கவிதை ஆக்கம் :

முத்துமீனா

(மீனூஸ்_கிறுக்கல்கள்)

 

 

 

கவிதை ஆக்கம்

முத்துமீனா

(மீனூஸ்_கிறுக்கல்ஸ்)

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன