ஒரு நொடி அரவணைப்பில் இறுகியிருந்தால் அத்தனை தற்கொலைகளும் இங்கே நிறுத்தி வைக்கபட்டு உலக உயிர்கள் வரலாறு மாற்றம் அடைந்து பல முன்னேற்றங்கள் நடைபெற்று இருக்குமோ என்னவோ ஆனால் அது யாவும் இங்கே ஒரு முடிவை எழுதி முடித்து விட்டு மட்டுமே உதிர்ந்த வார்த்தைகள் ஆகின்றன.
இந்த மனித மனங்களில் எப்பொழுதும் ரோஜாக்கள் மட்டும் வளர்ந்து வரவில்லை அதனுடன் சேர்த்து ரோஜாக்களுடன் கூடிய முட்களும் வளர்ந்து வருகிறது அதனால்தான் என்னவோ அந்த வலிகளை தாங்கமுடியாமல் வன்மங்களாக கக்கி வைக்கின்றோம். பார்க்கும் இடமெல்லாம் அவர்களின் நாற்றம் அடிக்கும் அந்த கக்கல்கள் கொட்டிகிடக்கிறது. அடுத்தவரை சொல்லால் குத்தி கிழிப்பதில் அப்படி ஒரு பேரானந்தம் அந்த வன்மகாரர்களுக்கு.
கொலை செய்தோரை தூக்கிலிடவேண்டும், தண்டணை கடுமையாக இருத்தல் வேண்டும் அப்பொழுது குற்றங்கள் குறையும் இப்படி பல பூமர் பதில்கள் எங்கும் நிறைந்திருக்கும் ஆனாலும் என்னவோ இங்கே வன்மங்களாக அவர்கள் கக்குவது மட்டும் நின்றபாடிலில்லை.
இந்த மனித சமூகம் அனைத்தையும் தூக்கிலிடவே வேண்டும் என்னையும் சேர்த்து தான் .
ஏன் தெரியுமா தெரிந்தோ தெரியாமலோ யாரேனும் ஒருவரை சற்றும் எதிர்பாராத வகையில் புண்படுத்தும் வசியம் நமக்குள் நடந்து விடுகிறது.
ஒவ்வொரு தற்கொலைகளும் நடக்க குறைந்தது ஒருவரது வார்த்தைகள் காரணமாகிறது.அப்படி பார்த்தால் அந்த வார்த்தை உற்பத்தியாளர் தண்டனை அனுபவித்து தானே ஆக வேண்டும் ஆனால் அப்படியா நடக்கிறது.
இன்னும் எத்தனை உயிரை அழிக்க உதிர்க்கிறீர்கள் உங்களது வன்ம வார்த்தைகளை. இந்தியாவின் முதல் திருநம்பி பாடி பில்டர் ஆன ஒரு திருநம்பியையும் உங்களது வன்ம வார்த்தைகளால் இன்று கொன்று புதைத்தீர்கள்.
கேரளாவைச் சேர்ந்த மிஸ்டர் கேரளா போட்டியில் வெற்றி பெற்ற திருநம்பி பிரவீன் காந்த் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் இணையரும் அவரது மனைவியும் கரப்பான் பூச்சி மாத்திரையைத் தின்று தற்கொலைக்கு முயன்றார். தற்போது, தீவிர சிகிச்சையில் உள்ளார்.
போலிசார் விசாரித்ததில் தெரிய வந்த காரணம் அவர்கள் இருவரும் வாழ்க்கை விட்டு பிரிய போகின்றனர், பிரிந்து விட்டனர் இப்படி பரவிய வதந்தி.
பொய்களையும் புரட்டுகளையுமே தினமும் பகிர்ந்து கொண்டு கூடவே வன்ம வார்த்தைகளை அள்ளி தெளித்து கட்டி எழுப்புகிறார்கள் ஒவ்வொரு தற்கொலைகளையும் .

நாதியற்று கிடக்கும் எங்களை திட்டி உங்களது மதத்தையும், கலாச்சாரத்தையும் கட்டி எழுப்புகிறீர்கள்.
எங்களின் அழுகையால் வழிந்தோடும் வெல்லத்தை நக்கி தான் உங்களது வாழ்வு நிகழவேண்டுமா அப்படி வாழ்வதுதான் மனித வாழ்வா எனது அருமையானவர்களே இன்னும் எத்தனை பேரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளீர்கள் உங்களது வன்ம வார்த்தைகளால். சற்று பொறுங்கள் குழிதோண்டி நாங்களே படுத்துகொள்கிறோம் உங்களுக்கு சிரமம் ஏதுமில்லாமல் எனது அன்பானவர்களே.
-டயானா
