உலக சினிமாக்காரர்களும் உலக சினிமா காதலர்களும் வருடம் ஒரு முறைக் கொண்டாடும் பெரும் திருவிழா தான் ஆஸ்கர் விருது விழா. மாதங்களுக்கு முன்பே சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், ஒப்பனை என 20-க்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கான பரிந்துரைப்பட்டியல் வெளியிடப்பட்டு, அதைச் சுற்றியான பற்பல விவாதங்கள் என களைகட்டி அப்பெருநாளுக்கான காத்திருப்பு நீண்டு அடங்கும் அவ்விரவின் பெருமகிழ்ச்சி ஈடற்றது பலருக்கு. இவ்விருதின்பால் அத்துனை நம்பிக்கை இல்லாத சினிமா ரசிகர்களும் உண்டுதான். ஆனால் அப்படியானோருக்கும் அடுத்த ஓரிரு வாரங்களுக்கான பார்க்க வேண்டியதற்கான பரிந்துரைகள் குவிந்து விடுவதில் பெருமகிழ்ச்சி. ஆக ஏதோவொரு வகையில் பெரும் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பெருவிழா என்பதில் துளி ஐயமில்லை.
2021-க்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் மாதம் நடைபெற்றது. இது 94-ஆவது ஆஸ்கர் விழா என்பது குறிப்பிடத்தக்குது. இதில் பெருங்கவனத்தை ஈர்த்த வில் ஸ்மித் விவகாரத்தைப் புறந்தள்ளி மற்றதை உற்றுநோக்க வேண்டியது அவசியம்.
இந்த முறை சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற திரைப்படம் “CODA: Children Of Disabled Adults” (ஊனமுற்ற பெற்றோர்களின் பிள்ளைகள்). படத்தின் பெயரிலிருந்தே கருவை ஊகித்திருக்க முடியும். காது கேளாத, வாய் பேச முடியாத தாய், தந்தை, தமையனுடன் வாழும் பதின் வயது பெண்ணைச் சுற்றி நிகழும் படம் இது. மீன் பிடி தொழில் செய்து வாழும் குடும்பம் அவர்களுடையது. முதல் காட்சியிலேயே பொருளாதார ரீதியாக அந்தச் சமூகம் எவ்விதமான ஒடுக்குமுறைகளை சந்திக்கிறார்கள் என்பதை விளக்கித்தான் கதைக்குள் நகர்வார்கள். இப்படியாக இவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் படத்தில் ஆங்காங்கே காட்சிகளாக, வசனங்களாக மிக மெலிதாய் படரவிடப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஆயினும் மெச்சி ரசிக்கக்கூடியதாய் இப்படத்தில் பல விடயங்கள் உண்டு.
“CODA: Children Of Disabled Adults”
அத்தம்பதிக்குள் இருக்கும் ஊடல், அக்குடும்பத்தின் பிணைப்பு, மாறி மாறி பொழியும் பேரன்பு, பிறருக்காய் ஒருவர் விட்டுக்கொடுத்துப் போதல் போன்ற சின்னச் சின்ன உணர்வுகளை மிக நேர்த்தியாயும் அழகாயும் காட்டிய ஒரு அற்புதமான படைப்பு இது. இதெல்லாம் எல்லா குடும்பத் திரைப்படங்களிலும் இருப்பது தானே, இதிலென்ன பிரமாதம் என்று கேட்பாராயின்.. ஆம், உண்மைதான். ஆனால் ஊனமுற்ற மக்களின் வலியை காட்டிய படங்களே இங்கு ஏராளம். எல்லோரையும் போல அவர்களுக்கும் ஒரு சாதாரண வாழ்வுண்டு, அவ்வாழ்வில் பேரன்பு, சிறு சோகம், ஊடல், கூடல், காதல், காமம், பாசம் முதலிய அத்தனையும் உண்டு என்பதைக் காட்டும் திரைப்படங்கள் மிக சொற்பம். அச்சொற்பத்தில் மிக முக்கியமானதோர் திரைப்படம் CODA. அப்படியான ஒரு படத்துக்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது பெரும் பாராட்டுக்குரியது.
முத்தாய்ப்பாய், இப்படத்தில் காது கேளாத வாய் பேச முடியாத குடும்பத்தினராய் நடித்த மூவரும் உண்மையிலேயே காது கேளாத வாய் பேச முடியாத சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதனினும் முத்தாய்ப்பாய், தகப்பன் வேடத்தில் நடித்த டிராய் கொட்ஸுர் (Troy Kotsur) சிறந்த துணைநடிக்கருக்கான விருதை வென்றார். இதன்மூலம் இப்பிரிவில் வெற்றி பெற்ற முதல் காது கேளாத நபர், ஒட்டுமொத்தமாக ஆஸ்கர் வென்ற இரண்டாவது காது கேளாத நபர் என்ற பெருமையையும் பெற்றார். அவரின் வெற்றி உரையில் இவ்விருதை ஊனமுற்ற மக்களின் சமுதாயத்திற்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார்.
(Troy Kotsur)
சிறந்த நடிகைக்கான விருதை வென்ற ஜெசிக்கா சஸ்டைன் (Jesicca Chastain), வென்றதற்கான உரை நிகழ்த்தியபோது அவ்விருதை LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்த, தன் பாலினத்தை வெளிக்கொணர்கையில் இச்சமூகத்தின் மேலுள்ள பயத்தால் தற்கொலை செய்துகொண்ட தன் சகோதரிக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.
(Jesicca Chastain)
அமெரிக்காவின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று “தி எலன் டீஜெனெரஸ் ஷோ” (The Ellen Degeneras Show). அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளரான எலன் டீஜெனெரஸ் 90-களின் பிற்பகுதியில் தன்னை தன்பாலீர்ப்பாளராக உலகுக்கு அறிவித்த பொழுது அவர் சந்திக்காத பிரச்சனையே கிடையாது என சொல்லலாம். அவருடைய நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மேடை நகைச்சுவைக் கலைஞரான இவரின் நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. பெரும் போராட்டத்திற்கு பிறகு, இன்றும் அவரது “தி எலன் டீஜெனெரஸ் ஷோ” நிகழ்ச்சியை பெரும் வெற்றியுடன் 19-ஆவது பருவத்தில் நடத்தி வருகிறார். இப்படியான பலரின் பலவிதமான போராட்டங்களின் வயிலாக LGBTQIA+ சமூகம் சற்றே முன்னேறி ஒரு பிரதிநிதித்துவத்தை அடைந்துள்ளது. சமத்துவத்திற்கான பாதை பெருநீளமானதாய் இருப்பினும் இப்படியான சிறு சிறு மைல்கற்கள் மிக முக்கியமானது மட்டுமன்றி, கொண்டாடித் தீர்க்கப்படவேண்டியது.
அப்படி சினிமா துறையிலான ஒரு மைல்கல் இந்த வருட சிறந்த துணை நடிகைக்கான விருது வென்ற அரியானா டிபோஸ். இவர் ஆஸ்கார் விருது வென்ற முதல் இலத்தீன் அமெரிக்க தன்பாலீர்ப்பாளர் ஆவார். உலகப்புகழ் பெற்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கிய “தி வெஸ்ட்சைட் ஸ்டோரி” (The Westside Story) என்ற படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதை இவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் ஒடுக்குமுறைக்கு ஆளான/ ஆளாகிக்கொண்டிருக்கும் கறுப்பின சமூகத்தில் இருந்து, அதனிலும் ஒடுக்கப்பட்ட பெண் இனத்திலிருந்து, அதிலும் இன்னும் ஒடுக்கப்பட்ட LGBTQIA+ சமூகத்திலிருந்து ஒருவர் இவ்விருதை வாங்குவதென்பது சமூகத்திற்கு ஒரு பெரும் உந்துதலாய் இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இவை எல்லாம் பெரும் சுழலின் தொடக்கமே. பிழையென புறந்தள்ளிய கூட்டத்தின் மத்தியில், இருப்பையும் உரிமையையும் உரக்க ஒலித்துக்கொண்டே இருந்த பல LGBTQIA+ போரளிகளுக்கான மிகப்பெரும் வெற்றியின் முதல் புள்ளி. இதன் தாக்கம் தகிக்கும், கனலாய். வீசும் கற்களை முன்னவர்கள் வாங்கி முன்னேறிக்கொண்டே பின்னவர்களுக்கான வழி உருவாக்குவார்கள். அந்தப் பெரும் பாதையின் முற்களைக் கடந்து பூ கிடத்திய முற்றுப்புள்ளியைச் சீக்கிரம் அடைய விழையும் பலருள் ஒருவன்.