என்னுள்ளே ஒளிந்திருக்கும் அந்த இன்னொரு நானே…
நீ என்னில் இருந்து வெளிவராத போது, ஊருக்கு தெரியும் அந்த நானாக நான் இருக்கும் போது, எனக்குள் எழும் சில கேள்விகளைப் பற்றி, உன்னால் எனக்குள் எழும் அந்த கேள்விகளைப் பற்றி பேச நினைக்கிறேன்.
கேள்விக்கு பதில் வேண்டாமா என கேட்கிறாயா?? வேண்டாம், எனக்காய் சில விஷயங்கள் புரிகிறது; அதைப் பற்றி சொல்கிறேன், கேட்கிறாயா??
அந்த செயலியை நான் முதன்முதலில் பதிவிறக்கம் செய்ததற்கான முக்கிய காரணம்… என்னைப் போன்று இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும், நான் தனித்து இல்லை, என்னை போன்ற மானுடர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்கிற எண்ணத்தை ஆழமாக என்னுள் விதைத்துக் கொள்ளவும் தான்!
‘நான் மற்றவர்களைப் போல அல்ல, நான் தனித்தவன்’ என்ற கர்வம் உள்ளே இருந்தாலும், என்னைப் போன்ற மனிதர்களும் இருக்கிறார்கள், நான் தனித்தோ, தனியாவகோ இல்லை என எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொள்ளவும், என்னை நானே ஆசுவாசப் படுத்துக் கொள்ளவும் அந்த செயலிக்கு பெரிதும் உதவியது உண்மை தான். ஆனால், அது அதை மட்டும் தான் செய்ததா என்றால்… இல்லை; இல்லவே இல்லை!!
ஒரு இரண்டாம்கெட்ட மனநிலையை உருவாக்கித் தந்து, பல வகைகளில் எனக்கே என்னை அறிமுகம் செய்த பெருமை நிச்சயம் அந்த செயலியை சேரும்; மாற்றுக் கருத்தில்லை!
இன்று யோசித்துப் பார்க்கையில், எனக்கு அது எதை அறிமுகம் செய்து வைத்தது? எதை அறிமுகம் செய்து வாய்ததின் வாயிலாக, என்னை அறிய செய்தது??
நிச்சயம் உன்னைத் தான் – என் sexual identityஅயும், sexual orientationஅயும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்ள நேர்ந்த போதே, எனக்குள் இருந்த உன்னையும் அறிந்து கொள்ள செய்தது!!
இத்தனை நாட்களாக எனக்கே தெரியாமல் எனக்குள் இருந்த நீ, நிச்சயம் என்னைப் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பாய் என்றே நம்புகிறேன்.
சரி பதில் சொல் – உன்னைப் பற்றி நான் முழுவதுமாக தெரிந்து கொண்டு விட்டேனா?? எனக்குள் இப்படி ஒருவன் இருக்கிறான் என்று நான் உலகிற்கு அறிவிப்பது பிறகு இருக்கட்டும்; முதலில் நான் உ(எ)ன்னை முழுதும் தெரிந்து கொண்டு விட்டேனா?? அந்த செயலியின் மூலம் நான் சந்திக்கும் ஒவ்வொரு நபரும், எனக்குள் இருக்கும் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் பார்த்த அந்த முகத்தை, ‘என்னப் பத்தி தெரிஞ்ச பிறகும், என்கூட சாதாரணமா பேசினது நீ மட்டும் தான்’ ‘அந்த pornல பாத்தது மாதிரி செஞ்சு பாப்போமா’ ‘எனக்கு ஒரு friend தான் தேவ, எப்பவுமே எல்லாத்த பத்தியும் share பண்ற, அப்டி share பண்றப்போ என்ன judge பண்ணாத friend தான் வேணும்’ என வேறு யாரும் என்னிடம் பேசாத வார்தைகளையும், உரையாடல்களையும் நான் கேட்டது, உன் முகம் தரித்துக் கொண்டிருந்த போது தான்!!
மனிதர்கள் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரின் மூலமாகவும், விளைவாகவும், ஒவ்வொரு நொடியிலும் புதிதாக மாறிக் கொண்டே இருப்பது போலவே தான், உன் தோற்றம் கொண்டு நான் சந்திக்கும் ஒவ்வொரு நபரின் மூலமாகவும் உன்னை தெரிந்து கொள்ள போகிறேனா??
இந்த கேள்விக்கு எனக்கு பதில் வேண்டாம்… ஏனெனில் பதிலை என்னாலேயே ஒருவாறு யூகிக்க முடிகிறது. அந்த யூகம் சரியா தவறா என்று என்றேனும் ஒருநாள் நானாகவே கண்டுபிடித்துக்கொள்கிறேன்.
ஆனால், உன்னால் ஒரு விஷயம் எனக்கு நன்றாக புரிந்தது!!
ஒரு மனிதன், தனது Sexual Orientationஅயும், Sexual identityஅயும் அறிந்து கொள்ள முற்படும் போது, அவன் தனக்குள் இருக்கும் இன்னொரு நபரையோ, இல்லை தன்னை முழுவதுமாகவோ, அல்லது அவன் அடைய வேண்டிய முக்கியமான பரிணாம வளர்ச்சியையோ… அவன் முழுதும் புரிந்து கொள்கிறானா என தெரியவில்லை; ஆனால் அறிந்து கொள்கிறான்!!
– பெமுகு