S J Sindu, Marriage of a Thousand Lies, Soho Press 2017

லக்கி என்கிற லக்ஷ்மியும் அவரது கணவர் கிருஷ்ணாவும் தன்பால் ஈர்ப்பாளர்கள். தங்களுடைய அமெரிக்க வாழ் இலங்கை குடும்பத்தினருக்கு இனிமையான தம்பதியாக நடித்தாலும் இருவரும் தனது தன்பால் ஈர்ப்பை குடும்பத்தினருக்குத் தெரியாமல் வாழ்ந்துவருகின்றனர்.  லக்கியின் பாட்டியின் உடல் நிலை காரணமாக லக்கி தன் பிறந்த ஊருக்குச் செல்லும் போது எதிர்பாராவிதமாக தன் பால்ய தோழியும் முதற்காதலியுமான நிஷாவின் திருமணத்திற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்ய நேரிடுகிறது.

 

Vijay Tendulkar, Mitrachi Goshta: A Friend’s Story, Oxford University Press 2001 (translated from Marathi by Gowri Ramnarayan)

மித்ராச்சி கோஷ்தா, விஜய் டென்டுல்கரால் 1981 எழுதப்பட்ட ஒரு மனதை உருக்கும் மராத்தி நாடகம். கூச்ச சுபாவம் கொண்ட ராமுவுக்கும், தலைக்கனம் கொண்ட சுமித்ராவுக்கும், புதிரான நமாவுக்கும் மத்தியிலான ஒரு காதல் கதை இது. பாலியல் உணர்வு தொடர்பாக இந்திய மொழிகளில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க முதற்படைப்பு இது.

 

Benjamin Alire Sáenz, Aristotle and Dante Discover the Secrets of the Universe, Simon & Schuster Books 2012

அரிஸ்டாட்டிலும் தாந்தேவும் நேரெதிர் துருவங்கள். தாந்தே நீந்தத் தெரிந்தவன்; வெண்ணிறத்தோலும் சுய உறுதியும் கொண்டவன். அரிஸ்டாட்டிலுக்கு நீச்சல் தெரியாது; கரிய தோலுடையவன்; மேலும் தன்னுடைய எண்ணங்களை வார்த்தைகளாக உதிர்க்கத் தெரியாதவன். ஒரு நீச்சற்குளத்தில் சந்திக்கையில் இருவரும் தம்மை உணர்கிறார்கள். தடைகள் அனைத்தையும் கடந்து இறுதியில் வெல்கிறார்கள்.

 

  1. Raj Rao, The Boyfriend, Penguin India 2003

இந்தியாவின் மும்பையை அடிப்படையாகக் கொண்ட இந்த நாவல், 1992 கலவரத்தின் பின்னணியில் நகரின் தன்பால் ஈர்ப்பாளர்களைப் பற்றி விவாதிக்கிறது. பத்திரிகையாளர் யூடி-க்கும் அவரை விடவும் வயதில் இளைய தலித் இளைஞன் மிலிந்த்-க்கும் இடையேயான உணர்ச்சிகரமான உறவை விவரிக்கிறது. மோகம், மனவேதனையின் ஆழமான சித்தரிப்புகள் முதல் சாதிவெறி, ஓரினச்சேர்க்கை பற்றிய கடுமையான விமர்சனங்கள் வரை நாவல் அனைத்தையும் விவாதிக்கிறது.

 

Adiba Jaigirdar, Hani and Ishu’s Guide to Fake Dating, Page Street Kids 2021

ஹுமைரா “ஹானி” கான் பள்ளியில் எல்லோராலும் விருபப்படக்கூடிய ஒரு பிரபலமான பெண். ஆனால் அவள் தன் தோழிகளிடம் தன் இருபால் ஈர்ப்பை சொல்லும் போது அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். அதிர்ச்சியடையும் ஹானி, தனது நண்பர்கள் முற்றிலும் வெறுக்கும் இஷிதா “இஷு” டேயுடன் தான் உறவில் இருப்பதாகத் தெரிவிக்கிறார். ஹனிக்கு முற்றிலும் எதிரானவர் இஷு. இஷூ கல்வியில் முதன்மைப் பெண். கல்லூரியின் தலைமை மாணவியாக விரும்பும் அவள் ஹானியின் நெருக்கம் அதற்கு உதவும் என்று நினைத்து அவளுடன் உறவை ஏற்படுத்திக்கொள்கிறாள். பரஸ்பர நன்மையை எதிர்பார்த்து இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் அவர்களுக்கிடையில் மலரும் உணர்வுப்பூர்வமான உறவைப் பற்றிப் பேசுகிறது இந்நாவல்.

 

 

Rahul Kanakia, We Are Totally Normal, Harper Teen 2020

நந்தன் தனது இளமைப் பருவத்தை முழுமையாக்குவதற்கான திட்டம் ஒன்றை வைத்திருந்தான், ஆனால் அவனது நண்பன் டேவுடன் இணைந்திருப்பது அதன் ஒரு பகுதியாக இல்லை. குறிப்பாக நந்தன் ஒருபோதும் ஆண்களின் மேல் விருப்பம் கொண்டிருக்கவில்லை. ஆனாலும், நந்தன் அவனுடன் முயற்சித்துப்பார்க்க தயாராக இருக்கிறான். அவனுடைய பாலுணர்வு தனக்கும், அவனுடைய நண்பர்கள் மற்றும் அவனுடைய சமூக வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்பதைப் பற்றிய கவலை பிடிக்கையில் திரும்ப அனைத்தையும் உதறி கடந்த காலத்திற்கு செல்ல விரும்புகிறான். அவனை முழுவதுமாக புரிந்துகொண்ட டேவுடன் முறித்துக் கொள்வது அவன் மீண்டும் “சாதாரணமாக” உணரத் தகுதியானதா என்று குழப்பமடைகிறான்.

 

Devdutt Pattanaik, The Pregnant King, Penguin 2008

 

மன்னன் யுவஷ்ணவன் தவறுதலாக தனது ராணிகளை கருத்தரிக்கச்செய்யும் ஒரு மந்திரக் கஷாயத்தைப் பருகி ஒரு மகனைப் பெற்றெடுக்கிறான். இந்நூல் இந்து புராணங்களிலுள்ள பல பாலியல்-திரவத்தன்மை மற்றும் பாலுணர்வு சார்ந்த நிகழ்வுகளை சித்திரமாக்குகிறது.

 

 

Maia Kobabe, Gender Queer, Oni Press 2019

 

இந்நாவல் ஆசிரியரின் இளமைப்பருவ தன்பால் ஈர்ப்பு, அதனை அவர் எதிர்கொண்ட விதம், எவ்வாறு பெற்றொருக்கும் சமூகத்திற்கும் தன் உணர்வுகளைப் புரிய வைக்கிறார் என்பதைப் பற்றிய ஒரு சுய சரிதை காமிக் நாவல். ஒரு தனிப்பட்ட நபரின் கதை என்பதற்கும் மேலாக இது பாலின அடையாளம் பற்றிய பயனுள்ள வழிகாட்டி.

 

Shelley Parker-Chan, She Who Became the Sun, Tor Books 2021

சீனாவின் மிகச் சிறந்த வரலாற்றுப் பிரமுகர்களில் ஒருவரான மிங் வம்சத்தை நிறுவிய பேரரசர் ஜு யுவான்சாங்கின் மூலக் கதையை பால்புதுமைப் பார்வையில் சொல்லும் கதையே இந்நாவல். இதில் இரண்டு கதைக்களங்கள் உள்ளன. ஒவ்வொரு கதைக்களத்திலும் ஒரு பால்புதுமைப் பாத்திரம் உள்ளது: ஒன்று பெண்ணாக பிறந்து தன்னை அவ்வாறு உணராத பாத்திரம் ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு கொண்டிருக்கிறது. மற்றொன்று ஆணாகப் பிறந்து ஒரு ஆணின் மீது ஈடுபாடு கொண்ட பால்புதுமைப்பாத்திரம்.

 

Alice Oseman, Loveless, HarperCollins Children’s Books 2020

ஆலிஸ் ஒஸ்மேன் ஒரு வினோதமான சிஸ்ஜெண்டர் எழுத்தாளர். தன் சொந்த அனுபவங்களைப் புனைவாக்கிய இந்நாவலில் ஒரு மறக்கமுடியாத பைனரி பாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நாவலில் முதன்மைக் கதாபாத்திரம் தன்பாலின ஈர்ப்பு கொண்ட ஜோர்ஜியா-வாக இருப்பினும், டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பால்புதுமையினர் அமைப்பின் தலைவராக ​​வரும் சுனில் ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரம்.

Britta Lundin, Ship It, Disney-Hyperion 2018

கிளாரி, ‘டெமொன் ஹார்ட்’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மீது தீராத ஈடுபாடு கொண்ட ஒரு பதின்பருவ பெண். ‘டெமொன் ஹார்ட்’-இன் தனக்குப் பிடித்தமான கதாபாத்திரமான ஃபாரஸ்ட்டை ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது சந்திக்கிறாள். எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கையில் ஃபாரஸ்ட்டின் கதாபாத்திரம் தன்பால் ஈர்ப்புகொண்டது என்று கிளாரி பொதுமேடையில் சொன்னதற்கு ஃபாரஸ்ட்-இன் எள்ளல் கிளாரியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

 

-நிவேதிதா

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன