LGBTQIA+ சமூகத்தினருக்கான 12 அத்தியாவசிய உரிமைகளை முன்வைத்து, தருமபுரியின் திமுக எம்பி டாக்டர் எஸ் செந்தில் குமார், “LGBTQIA+ நபர்களுக்கான சம உரிமைகள் பாதுகாப்பு மசோதா, 2021” என்ற பெயரில் தனி உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா ஏப்ரல் 1ஆம் தேதி, வெள்ளி அன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது . LGBTQIA+ நபர்களுக்கு தத்தெடுக்கும் உரிமை, பாதுகாவலர், வாடகைத் தாய், LGBTQIA+ ஐ குடும்பங்களாக அங்கீகரித்தல், திருமணம், மகப்பேறு சலுகைகள் மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் உரிமை உள்ளிட்ட 12 உரிமைகளை வழங்குவதற்கு இது முன்மொழிகிறது. இந்த மசோதா பணியிடங்கள் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றில் பாகுபாடு காட்டுவதையும், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பையும், கல்வி நிறுவனங்களில் கொடுமைப்படுத்துவதையும் தடுக்க முயல்கிறது. “பிற பாலினத் தம்பதிகளுக்கு வகுக்கப்பட்ட எந்தவொரு சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், துணைச் சட்டங்கள் அனைத்தும் LGBTQIA+ மக்களுக்கும் பொருந்தும்” என்று அம்மசோதா கூறுகிறது.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 17% பேர் தங்களை LGBTQIA+ சமூகத்தைச் சார்ந்தவராக அடையாளப்படுத்திக்கொள்வதாகும் LGBTQIA+ மக்கள் இன்னும் பல சட்ட மற்றும் சமூகச் சிக்கல்களை எதிர்கொள்வதால் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தனிச் சட்டம் தேவை என்றும் அவர் தனது காரண அறிக்கையில் கூறுகிறார். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், களங்கத்தை அகற்றுவதற்கும் இரண்டு வழிகளை அவர் முன்வைத்துள்ளார். ஒன்று, தற்போதுள்ள தனிப்பட்ட மற்றும் மதச்சார்பற்ற சட்டங்கள் மற்றும் பாலின நடுநிலைமை இல்லாத இடங்களைத் திருத்துவது. இரண்டாவது, LGBTQIA+ நபர்களின் பாதுகாப்பிற்காக புதிய சட்டங்களை உருவாக்குவதும் ஆகும் .
-கிரன் குமார்
