புரிதல் இல்லாத இடத்திலே தான் பிரிவினைகள் உண்டாகிறது. புரிதலை உண்டாக்க புரியும் படி எடுத்துக்கூறினால், பிரித்து பார்க்கும் பிரிவினைகள் இல்லாது போய்விடும். இந்த பிரிவினையை நீக்கி புரிதலை மக்களிடத்தில் கொண்டுவரும் முயற்சியை மதுரை திருநர் ஆவண மையம் செய்துவருகிறது.
நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை நாம் உணர்வது போல, மாற்று பாலின மக்களுக்கு உண்டாகும் உடல் மாற்றங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொண்டாலே போதும். ஆனால் இந்த புரிதல் வெறும் வெற்று வார்த்தைகளால் மட்டும் நிகழாது. அறிவியல் ரீதியான, கல்வி வழியாக இந்த அறிவு புகட்டப்படும்போது அவர்களும் சக மனிதர்களே என மனம் மாறும். அப்படிப்பட்ட மாற்றுபாலின மக்கள் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சேகரிக்கும் இடமாக உள்ளது மதுரை திருநர் ஆவண மையம். இவ்விடத்தில் திருநங்கை, திருநம்பி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஒவ்வொன்றும் மிக துல்லியமாக சேகரிக்கப்படுகிறது. இங்கே 140 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கிறது. இதைத்தவிர தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட செய்தித்தாள் பதிவுகள், 200க்கும் மேற்பட்ட வார இதழ், மாத இதழ் மற்றும் திருநங்கைகள் சம்பந்தப்பட்ட அரசாங்க ஆணைகள், நீதிமன்ற தீர்ப்புகள், ஆராய்ச்சி புத்தகங்கள் இந்த மையத்தில் சேகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த மையத்தின் முக்கிய நோக்கமே திருநம்பி, திருநங்கைகளை பற்றிய புரிதலை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக கல்வியின் வழியில் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாற்றுபாலின குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் குழப்பத்தினாலும், பிறரின் கேலி கிண்டலுக்கு உள்ளாகிய நிலையில் செய்யும் கல்வி இடைநிறுத்தத்தை தவிர்க்கவும், விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி வருகிறது.
இதுமட்டுமில்லாமல் LGBTQ மக்களுக்கான விழிப்புணர்வு, வேலைவாய்ப்பு, கல்வி தேவை, பொருளாதார உதவி, அறுவை சிகிச்சை உதவி, வாழ்வாதாரத்திற்கான ஆதரவையும் இம்மையம் தொடர்ந்து கொடுத்து வருகிறது.
கல்லூரிகளில் விழிப்புணர்வு சம்பந்தமாக உரையாடுவதோடு மட்டும் நின்றுவிடாமல் பிலிம் பெஸ்டிவல், கருத்தரங்குகள், மகளிர் தின விழா கொண்டாட்டங்கள், சிறந்த ஆசிரியர்களுக்கான விருது, இலக்கிய விழா, திருநங்கைகளுக்கான கருத்தரங்கு, வாழ்க்கை திறன் வகுப்புகளையும் நடத்தியுள்ளது இம்மையம்.
இதுமட்டுமில்லாமல் திருநங்கைகளுக்கென்று பத்திரிக்கை ஒன்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடங்கியுள்ளது. திருநங்கைகளுக்கான யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கே வந்து பயனடைந்துள்ளனர். கல்லூரிகளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த 23 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன.
இங்கே சேகரிக்கப்படும் ஒவ்வொரு ஆவணமும், நாளை மாற்றம் தரக்கூடிய ஆணையாக அமையும்.
நன்றி
வணக்கம்
-நிவேதா
Jean
13/05/2021 at 1:13 மணி
wow