ஷோனாலி போஸ் இயக்கத்தில், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) 2014ஆம் ஆண்டு திரையிடப்பட்டு, 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா (Margarita with a straw). ஊனமுற்ற கல்லூரி மாணவியான லைலா, அவருடைய பாலியல்பை ஆராய்ந்து, உணர்ந்து, தன் சுய-அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் பயணமே மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா. இந்தி மொழியில் வெளியான இப்படத்திற்கு, நிலேஷ் மணியாருடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் ஷோனாலி போஸ்.
பெருமூளை வாதம் (cerebral palsy) எனப்படும் நரம்பியல் கோளாறு உடைய லைலா, தில்லி பல்கலைக்கழகத்தில் பயின்றுவருகிறார். அங்கு செயல்படும் ஒரு இசைக்குழுவிற்கு பாடலாசிரியராக இருக்கும் இவர், அக்குழுவின் பாடகர் நிமாவின்பால் காதல் கொள்கிறார். அக்காதலை அவர் நிராகரிக்க, உடைந்துபோகும் லைலாவிற்கு நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் பயில அழைப்பு வர, தன் தாயுடன் அங்கு செல்கிறார். அங்கு படைப்பிலக்கிய (creative writing) வகுப்பில், அவருக்கு எழுதுவதற்கு உதவ நியமிக்கப்படும் ஜாரெடிடம் (Jared) ஈர்ப்புக்கொள்ளும் லைலா, சில நாட்களிலே ஒரு போராட்டத்தில் சந்தித்த பார்வையற்ற பெண் சமூக ஆர்வலரான கானமுடன் (Khanum) காதல் கொள்கிறார். தன் பாலியல்பு மீதான குழப்பத்தில் கானமுடன் இணைந்து இருக்கும்போதே ஜாரெடுடனும் நெருங்கி பழகும் லைலா, வெகு விரைவிலேயே அதை எண்ணி வருத்தமும் கொள்கிறார். சில நாட்களில் கானமுடன் இந்தியா செல்லும் லைலா தன் பாலீர்ப்பு குறித்து தன் பெற்றோரிடம் பேசினாரா, அவரது காதல் என்னாகிறது என்பதே மீதி படம்.
சுய-அடையாளத்திற்கான தேடலுடன் தன் வாழ்வைத் தன் கட்டுக்குள் கொண்டு வர முனையும் ஊனமுற்ற பெண்ணாக, லைலாவின் உணர்வுகளைத் தன் நடிப்பின் வாயில் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார் கல்கி கோச்லின். மகள் விருப்பத்தை நிறைவேற்றி அழகுபார்க்கும் அன்னையாக ரேவதி, துணிச்சலுடன் வாழ்வை அணுகும் பெண்ணான கானம் கதாப்பாத்திரமாக வரும் சயனி குப்தா மற்றும் இன்ன பிற முக்கிய பாத்திரங்கள் தங்களின் யதார்த்தமான நடிப்பால் படம் முழுதும் கவர்கிறார்கள்.
ஊனமுற்ற பெண்ணாக லைலாவின் காதலுக்கான தேடல், பாலீர்ப்பு மீதான குழப்பம் மட்டுமல்லாமல் ஊனமுற்ற மக்களுக்கு ஏதுவாக அமைக்கப்படாத பொது இடங்களில் ஏற்படும் சிரமத்தையும், ஊனத்தைச் சுட்டிக்காட்டி அவர்களின் வெற்றியை மிகைப்படுத்தும் சமூகத்தின் பொது புத்தியையும் இத்திரைப்படம் எடுத்துரைக்கிறது. லைலாவிற்கும் அவள் அன்னைக்கும் இடையேயான உரையாடல்களும், இருவரும் பாடல் பாடி மகிழும் தருணங்களும், லைலாவிற்கு அவள் குடும்பத்துடன் கூடிய பிணைப்பும் காண்போரை ரசிக்க வைக்க, லைலா கானமின் காதலும் எழில் பொங்க காட்சிப்படுத்தப்பட்டிருக்க, இசையும் ஒளிப்பதிவும் இத்திரைப்படத்திற்கு மேலும் இனிமை சேர்க்கிறது.
